திங்கள், 17 டிசம்பர், 2018

வாழ்க்கை : பிறவிகள், மரணங்கள், அனுபவங்கள் Life : Birth, Death and Experiences

வாழ்க்கை   :  பிறவிகள், மரணங்கள், அனுபவங்கள்  Life, Birth, Death and Experiences

வாழ்க்கை அனுபவங்கள்  - அதில் பிறவிகள் பல.   மரணங்கள்  பல -

வாழ்க்கையில் ஒரு முறை பிறப்பு.   ஒருமுறை மரணம்.   இது தானே அனுபவம்.     

ஒரே வாழ்க்கையில் பல பிறவிகளா,    பல மரணங்களா.  எப்படி? என்று கேட்கிறீர்களா?

தினமும் செத்து  செத்து பிழைக்கிறேன் என்று சிலர் சொல்லக் கேட்டதில்லையா !   

உலகில் மனிதன் முதலில் பிறக்கிறான்.  முதலாவது  பிறவி.    அம்மாவின் வயிற்றில் இருந்து.       வாழ்க்கை என்ற வீட்டின் வாசலில் வந்து பிறந்து விழுகிறான்.   வாழ்க்கையில் முன் தாழ்வாரத்தில்/திண்ணையில்     தவழ்கிறான்.

வாழ்க்கையில் இது மகிழ்ச்சி தரும் மணம்.    வாழ்க்கையில்  புகும் மணம். 

வாழ்க்கை வீட்டினுள்  பிரவேசிக்க அங்கே காத்திருப்பு .  அப்பா, அம்மா, அவர் வழி சொந்தம், பந்தம், நண்பர், சுற்றம்.  படிப்பு. துடிப்பு,  சுதந்திரம்,  விளையாட்டு.  துள்ளிக் குதிக்கும் கன்று போல் குழந்தையாக பின் இருபது களில் காளையாக உலா வரும் காலம்.

சுதந்திர இளைஞனாக ஒரு மரணம்.    மீண்டும்  ஒரு அடுத்த பிறவி

ஒரு துணையின்  கை  பிடித்து நடு வீட்டினுள் பிரவேசம்.  இது இரண்டாவது பிறவி.  மறு  ஜென்மம்.  புதுப்பிறவி.

வாழ்க்கை வீட்டில் இது திருமணம்.

இனி அவன் புது மனிதன். ஒரு புதுப்பிறவி

வாழ்க்கையின் புத்துணர்வு.  அவன் முற்றிலும் புதியவன்.   புது நண்பர்கள், புது உறவுகள்.  புது சொந்தம்,  பந்தம்.  எல்லாம் எல்லாம் புதியன.   வாழ்க்கையில் புது மரியாதை.   சமூக அந்தஸ்து.   நான் என்னும் உயர்வு.

பழைய உறவுகள், நண்பர்கள் பந்தங்கள் வாசலுக்கு வெளியில்.  கூசலின்றி தலைகீழ் மாற்றம்.      பழைய உறவுகள் பொருட்டல்ல.   இன்பம், துன்பம், ஆரவாரம், துயரம், மகிழ்ச்சி. எல்லாம் எல்லாம் புது அனுபவம். 

வண்டிகளில் வயல்களில் பணியெடுக்கும் காளையாய் துணையின் முன் அடங்கிப்போகும் காலம்.

அப்பா அம்மா பின் தாழ்வாரத்துக்கு தள்ளிப் போனார்கள்

சம்பாத்தியம, வறுமை, குழந்தைகள், அப்பா/அம்மா  பதவி.  குடும்பம், அதன் பரிபாலனம், வளர்ச்சி.,வீழ்ச்சி, ஏற்ற இறக்கங்கள்.

குழந்தைகள் பெரியவர்கள்  ஆனார்கள்.    அப்பா அம்மா பின் வாசலில் கால் வைக்கிறார்கள்.

குழந்தைகள் திருமணம்.  அவர்கள் முன் தாழ்வாரத்தில்
இருந்து வீ ட்டினுள்   பிரவேசிக்க இவன் துணையுடன் பின் தட்டில் நுழைவு.

பெயரர்கள் வரவு.     அடுத்த இரண்டாவது மரணம்.

மீண்டும்  இவனுக்கு ஒரு  புது பிறவி..    மூன்றாவது பிறவி.  தாத்தா பதவி.

குதூகலம், மகிழ்ச்சி,  பேரர்கள் . அவருடன் களியாட்டம்.  அவர்கள் வளர வளர இவன்/இவள்  புறவாசல் பிரவேசம்.

வயது அறுபது.  அடுத்த மூன்றாவது மரணம்.

புறக்கட்டு பிரவேசம்.   புதிய அடுத்த பிறவி.      நான்காவது பிறவி.    நாய் போல் குறைத்து வாழும் காலம்.

அறுபதில் ஒரு மணம். அது திருமணம் விடும் மணம்

துணையின் உறவு விடும் மணம். எல்லா உறவுகளும் விடும் மணம்.   பின் தட்டில்/பின் வாசலுக்கு வெளியில்  அவனுக்கு தனிமை.   துணைக்கும் தான்.    முற்றத்து நாய் போல் குரைத்து வாழும் காலம்.

பற்றை, பாசத்தை  ஒழித்தால் நிம்மதி.    பற்றில் ஒட்டி இருந்தால் துன்பம், விரக்தி. பற்றாதிருப்பது, ஒட்டாமலிருப்பது : இதுவே நிம்மதி 

எண்பதுகளை நோக்கி ஆமையாய் நகரும் பயணம்.

துணை விடை பெற்றால்  அடுத்த மரணம்.   இனி அடுத்த புது தனிப்பிறவி.  இது ஐந்தாவது பிறவி.     ஆந்தை போல் அங்குமிங்கும் விழித்து அடங்கிப்போகும். அமைதியின் பக்குவம் காக்கும் காலம்.

வருடங்கள் ஓடும்.     மனம் சிதறும்;  அது அடுத்த மரணத்தை  நாடி ஓடும்.    தளறும் உடல்.  வாட்டும்  நோய்கள்.  அடுத்த மரணம் நெருங்கும் 

படுக்கை பிரவேசம்.  இது ஆறாவது பிறவி. 

எண்ணங்கள் மாறி மாறி வரும்; எண்ணங்கள் மட்டுமே உறவுகளாய் உடன் நிற்கும். 
பழைய நினைவுகள் மாறி மாறி வரும்.
இடையில்  வந்த உறவுகள்  ஒதுங்கி போகும்.   
ஒதுக்கிய பழைய உறவுகளை எண்ணங்கள்  நாடும். 
அந்த உறவுகள் எட்டாமல் போகும்.  
தனிமை வாட்டும் .   முதுமை விரட்டும். 

உணர்வுகள் முதிர்ச்சி பெற்றால்  நிம்மதி.       உணர்வுகள் தளர்ந்து  உணர்ச்சிகள் வளர்ந்தால்  துயரம்.

ஒருவராய் பிறந்து, இருவராய் இணைந்து, பலராய் இன்னும் பலராய் பெருகி களைத்து வெறுத்து  முடிவில் ஒருவராய் கழிக்கும் தனிமை காலம். 

இனி  இறுதி மரணம்.   எல்லாம்  சாந்தம்.    எங்கும் அமைதி.  எங்கும்எதுவுமே இல்லை. 

ஒரு தாயின் வயிற்றில் இன்னுமொரு மறு ஜென்மமா!    யார் அறிவார்? 

வாழ்க்கையின் ஒவ்வொரு பிறவிக்கு பின்னரும் ஆள் மாறாட்டம்.  பழைய ஆள் தொலைந்து போகிறான்.  பழைய உறவுகள் தொலைந்து போகின்றன.

இடையில் வரும் மயக்கம் தரும் புது உறவுகள்.   அடுத்த பிறவியில் கலைந்து போகின்றன.

ஒவ்வொரு பிறவியிலும் பழைய உறவுகள் விலக்கப்படும்

எல்லா பிறவியிலும் தோன்றி தோன்றி மறையும் பாசங்கள்.      பழையதை ஒழித்து  புதிய பாசறைகளை நாடும் புதுப்புது  பாசங்கள்.

 வாழ்க்கையின் எல்லா பிறவியிலும் எஞ்சி நிற்பது சுயநலமே.

இவை எல்லாம் இயற்கைக்கு உட்பட்ட பிறப்புகள்.

இன்னும் செயற்கையாய் பிறக்கிறான் பல முறை.    இன்னும் வித்தியாசமாய். இயற்கைக்கு அப்பாற்பட்டதாய்.

பணம் குவியும்போது ஒரு பிறவி .   தினமும் நாடிய பழைய உறவுகளை விலக் குகிறான்  உடன் பிறந்தோர்க்கும் கதி இதுவே.   தன்  நிலை ஒத்த உறவுகளை ஏற்கிறான்.   பழையன எல்லாம் மறக்கிறான்.   போலியாய் நடிக்கிறான். பொய்யினில் பொய்யாகி  வாழ்கிறான்  அன்பின் அருமையை மறக்கிறான்

இன்னுமொரு  மாற்று  நிலை.

பணமிழந்து ஏழையாக ஒரு பிறவி. 

பழைய உறவுகள் இவனை விலக்கும் .   பணத்துடன் இருந்த போது  இவன் விலக்கிய உறவுகள் மீண்டும் வந்து அணைக்கும் . 

அன்பின் அருமையை உணரும் தருணம்.

மீண்டும் பணம் குவியும்போது ஒரு மரணம். மீண்டும்  ஒரு புதுப்பிறவி.  அனைத்தையும் மறந்து மீண்டும் அகந்தை.  பழைய நிலைக்கு போகிறான்.

இன்னும் பலவித பிறவியும் மணமும் மரணமும். 

இது ஒரு முழு வாழ்க்கை     இடையில் முடியும் குறை வாழ்க்கையும் உண்டு.

பலருக்கும் பலவிதமாய், ஒவ்வொருவருக்கும் வேறு விதமாய் தொடரும்.

மரணங்கள் மனிதனுக்கு எதையும் கற்பிப்பதில்லை.

என்றும் எஞ்சி நிற்பது நான், எனது எனும் சுயநலமே.   

யாரும் விதிவிலக்கல்ல.   நானும் அதில் ஒருவன்.





  

செவ்வாய், 4 டிசம்பர், 2018

பிரம்மச்சர்யம் - ஒரு உண்மை பொதிந்த எளிய விளக்கம் Genuine Simple and Realistic Explanation of Celibacy .


பிரம்மச்சர்யம்  - ஒரு  உண்மை பொதிந்த எளிய விளக்கம் Genuine Simple and Realistic  Explanation  of  Celibacy  .


பிரம்மம் என்பது பொதுவாக material அல்லது பொருளை குறிப்பிடும் சொல்.  இங்கே அதனை உடல் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். சர்ய (charya ) என்பதற்கு  ஒழுக்கம் அல்லது அனுசரணை என்று பொருள்.    உடலை ஒழுக்கத்துடன் பாதுகாப்பது தான் பிரம்மச்சர்யம் எனப்படும்

இதுவே இதன் எளிமையான விளக்கம்.  

ஆகவே உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பதையே பிரம்மச்சர்யம் என்கிறோம்.  பிரம்மச்சர்யம் என்கிற வடமொழி சொல்லுக்கு தமிழில் உடல் ஒழுக்கம் என்பதே பொருந்தும்.

வார்த்தைகளுக்கு அர்த்தம் எடுப்பதில்  இங்கு சிக்கல் எதுவும்  இல்லை.

 உடலை ஆரோக்யமாக பாதுகாப்பதற்கு என்னென்ன ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டுமோ அந்த ஒழுக்கங்களை கடைபிடித்து உடலை சீராக பாதுகாப்பது என்பது தான் இதனால் உணரப்படுகிறது.

இதனையே  ஆண் பெண் தொடர்பு  அறவே இல்லாமல் இருப்பது தான் பிரம்மச்சர்யம் என்று  தவறாக வியாக்யானித்து குழப்பி விட்டிருக்கிறார்கள்.  ஆண் பெண் தொடர்பே ஆகாது என்பது அதன் பொருள் அல்ல.   

மனித இனத்துக்கு அடிப்படையே ஆண் பெண் தொடர்பு  தானே.    எதற்காக ஆணும் பெண்ணும் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.    இன  வளர்ச்சிக்கு அடிப்படையே உடல் தொடர்பு தானே.    அதனை தவறான ஒன்றாக எப்படி கருத முடியும்.

ஒழுக்கம் எதற்காக கடைபிடிக்கிறோம்.    சிக்கல்கள் இடைஞ்சல்கள் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காகவே ஒழுக்கத்தை கடைபிடிக்கிறோம்.   திருமண அல்லது குடும்ப வாழ்க்கை என்பது ஆண் பெண் உறவினால் ஏற்படும் சச்சரவுகளையும் பிரச்சினைகளையும் தவிர்ப்பதற்காக ஏற்பட்ட ஒழுக்க முறைதான்.     தேவை இல்லாத நேரங்களில் பாலியல் உணர்ச்சிகள் ஏற்பட்டு அசம்பாவிதங்கள் உண்டாவதை  தவிர்க்க ஏற்பட்ட ஒழுக்கமுறை தான் ஆடை அணிவது. 

உடலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உடல்  உறுதிக்கும் எந்தவித  இடைஞ்சலும் ஏற்படாமல் இருக்க வேண்டும்.     அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் ஒழுக்கத்துடன் செய்ய வேண்டும். இவ்விதம் உடலை பேணி பாதுகாக்கவேண்டும்.   இந்தவிதமான ஒழுக்க முறைதான் பிரம்மச்சர்யம் அல்லது உடல் ஒழுக்கம்.

பஞ்ச பூதங்களால் ஆனது உடல்.    அன்றாட இயக்கத்தால் உடலில் ஐம்பூதங்களின் இழப்பு ஏற்படுகிறது.     உடலுக்கு தேவையான நேரத்தில் தேவையான அளவுக்கு அவற்றின் குறைவு  நிறைவு செய்யப்பட வேண்டும். உடலின் அன்றாட இயக்கங்களை முறைப்படுத்தி ஐம்பூதங்கள் உடலில் தேக்கமடையால் பார்த்துக்கொள்ள வேண்டும்.   தொடர்ச்சியான தேக்கம் உடலில் இறுக்கத்தை ஏற்படுத்தும்.      நாளைடைவில் உடல் இயக்கம் பாதிக்கப்பட்டு நோய் ஏற்பட ஏதுவாகும்.

 நிலத்தின் அம்சம் உணவு.    அதில் எது தேவையோ  எப்பொழுது தேவையோ அப்பொழுது அதனை தேவைக்கேற்ப உணவாகஉட்கொள்ளவேண்டும்.

நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடைக்காமல் வெட்ட வெளியில் தேவைக் கேற்ப வெயில் கொள்ளவேண்டும்.    வெளிச்சமும் சூடும் நெருப்பின் அம்சம். 

தேவையான அளவிற்கு சுத்தமான காற்றை உட்கொள்ளவேண்டும்.  காற்றோட்டமான இடத்தில அமரவேண்டும்.      நம் உடலின் மேற்புறத்தில் காற்று தழுவிச் செல்லவேண்டும்.   அதனை நாம் அனுபவிக்கவேண்டும்.

தேவைக்கு அவ்வப்போது  நீர் அருந்தவேண்டும்.  இது உடலின் நீர்  இழப்பை சரி செய்யும்.        குளிர்ந்த நீரில் அனுபவித்து நீராடவேண்டும்.     இது உடலின் சூட்டின் தேக்கத்தை மட்டுப் படுத்தும்.

இவ்விதமாக நம் உடலில்   நிலம், நெருப்பு, காற்று, நீர் என்கிற நான்கு பூதங்களின் இருப்பை சமநிலையில் நிலை நிறுத்துகிறோம்

ஐம்பூதங்களில் இன்னும் ஒன்று மீதம் இருக்கிறது.

ஆகாயம்.   சூன்யம்.    இல்லை என்று நிற்கும் ஒன்று.    இன்னதென்று அறிய முடியாத ஒன்று.    அதன் அம்சம் தான் நம் மனம்.   அதுவும் இல்லை என்று நிற்கும் ஒன்றுதான்.   இன்னதென்று அறிய முடியாத ஒன்றுதான்.   

மனதின் இயக்கத்திற்கு சக்தி தேவை.   இயக்கத்தினால்  குறையும் சக்தி நிரப்பப்பட வேண்டும்.     அப்பொழுது தான் மனம் புத்துணர்வு பெறும்.    ஆகாயமும் சக்தியும் இணையும்போது தான்  மற்ற நான்கு பூதங்களும் பிறக்கின்றன.  சக்தியுடன்  இணையும்போது தான் ஆகாயம் ஆற்றல் பெறுகிறது.

மேற்சொன்ன அடிப்படையில் மனம் ஆற்றல் பெற்று புத்துணர்வு பெற ஆணும் பெண்ணும் இணைய வேண்டும் .    இதனையே காமம் என்கிறோம்.  

உடல் உறவின்போது இன  விருத்திக்கு அப்பாற்பட்டு,  சக்தி அடிப்படையில் என்ன நடக்கிறது ?

ஆணின் உபரிதளத்தில் எஞ்சி நிற்கும் நேர்மறை சக்தியும் பெண்ணின் உபரிதளத்தில் எஞ்சி நிற்கும் எதிர்மறை  சக்தியும் தம்மில் இணைந்து  இருவரின் உபரி தளத்திலும் சக்தி சமநிலை ஏற்படுகிறது.   அதாவது. மனதில் சமநிலை ஏற்படுகிறது.  மனதின் பலமே அதன் சம நிலைதான்.  உடல்களின் உரசலில் இந்த சக்திகள் கலப்பு நிகழ்கிறது.   அதிலே மனது புத்துணர்வு அடைகிறது.

உணவுக்கு பசி, நீருக்கு தாகம்,   காமத்துக்கு வேட்கை.    இவை எல்லாம் இயற்கை.       ஆக இந்த இணைவு ஒரு கட்டாய தேவை.   மனம் குறைவற்ற  ஆற்றலுடன் இருந்தால் மட்டுமே பிற நான்கு பூதங்களால் அமைந்த உடல் சமநிலை பெற்று ஆற்றலுடன் இயங்க இயலும். 

மிதமான ஆண் பெண் உடலிணைவு,  உடலுறவு மனதின் ஆற்றலை வளர்த்து உடலின் பஞ்சபூத சமநிலையை மேம்படுத்தும்.  ஆகாயத்தின் அம்சமாகிய மனமே உடலில் பிற பூதங்களின்  அம்சங்களின் இயக்கத்தை கட்டுப் படுத்துகிறது.    ஆகவே  மனதின் சமநிலை அடிப்படை தேவை ஆகிறது.  

அமிதமான உணவு, அமிதமான காற்று,அமிதமான வெயில் அல்லது சூடு,
அமிதமான நீர் என்று அமிதமான அளவில் நாம் உட்கொள்ளும் அனைத்துமே நம் உடலுக்கு நோயைத்தரும்.  சமநிலைக்கு ஊறு விளைவிக்கும்.   உடல் இயங்க முடியாத ஒரு தேக்கநிலையை ஏற்படுத்தும்.

அமிதமான உடலுறவு ஈடுபாடு மனதின் ஆற்றலை அழிக்கும்.   உடலின் பஞ்சபூத சமநிலையை   தகர்க்கும் .  அதனால் உடல் இயக்கத்தில்  தேக்கம் உண்டாகும்.  மூளையின் இயக்கத்திலும் தேக்கம் ஏற்படும்.    எனவே உடலுறவு கட்டுப்பாடு ஆரோக்யமான உடலுக்கு  பிறவற்றைவிட மிக மிக முக்கியம் என்பது தெளிவாகிறது.

உட ல்  வலுவிழக்கும்  அளவிற்கு உடல் உறவில் அமித ஈடுபாடு ஆகாது என்பது தான் விளக்கம்.

நைஷ்டிக பிரம்மச்சர்யம்  என்பது குறிப்பிட்ட  சில நிஷ்டைகளுடன்  சுயகட்டுப்பாடுகளுடன்  பிரம்மச்சர்யத்தை அனுசரிப்பது என்பது பொருள்.  அதாவது குறிப்பிட்ட சில ஒழுக்கங்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்து பிரம்மச்சர்யம் அனுசரிப்பது என்பது தான் விளக்கம்.   உதாரணத்திற்கு குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்பது,      குறிப்பிட்ட இடத்தில மட்டும்  வசிப்பது,   ஏகபத்தினி தாம்பத்யம் மிதமாக அனுபவிப்பது,   அல்லது மனைவியருடன் மட்டும் தாம்பத்யம் நடத்துவது  முதலான குறிப்பிடும் படியான ஒழுக்கங்கள்.

பிரம்மா நாரதரிடம் ஸ்ரீ கிருஷ்ணர் நைஷ்டிக பிரமச்சாரி என்று  சொன்னதன் 
காரணத்தை துர்வாசர் பின் வருமாறு  விளக்குக்கிறார்.      

ஸ்ரீ கிருஷ்ணர் ராதையுடன் எவ்வளவு நெருக்கமாக பழகினாலும் அவர்களிடையே உடல் சம்பந்தமான உறவு இருக்கவில்லை.     அந்த அளவுக்கு அவரிடம்  பிரம்மச்சர்யத்தில் நிஷ்டை அல்லது ஒழுக்கம் இருந்தது என்று அவர் நாரதரிடம் விளக்குகிறார்.    

தவிர்க்க இயலாத சூழ்நிலை ஏற்பட்ட போதும்  அவர் மனைவியர் அல்லாத இன்னொரு பெண்ணிடம் நெருக்கமாக இருந்தும் கூட உடலுறவில் ஈடுபடவில்லை  என்பது சிறப்பாக குறிப்பிடப்படுகிறது.   இது ராதைக்கும் கிருஷ்ணருக்கும்  பொருந்தும்.   

ஆண் பெண் உடல் உறவைத் தவிர்த்த ஒரு பிரம்மச்சர்யம் பூரணமான பிரம்மச்சர்யம் ஆகாது.      பிரம்மச்சர்யத்தில் ஆண் பெண் உறவு ஒரு தவிர்க்கக்கூடாத அம்சமே.                                                                                            

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

தெய்வம் - கடவுள் : என்ன வேறுபாடு - ஓர் விளக்கம் Deity - God : An Explanation



தெய்வம்  - கடவுள்   :   என்ன வேறுபாடு.  ஓர் விளக்கம்  Deity - God   An Explanation

ஆத்மா தன் வளத்தை அல்லது சக்தியை அதிகரித்து வலுப்படுவதற்காகவே உடலெடுக்கிறது. அது வளப்படும்பொழுது அதன் சக்தி அதிகரிக்கிறது.    ஆத்மா வலுவிழக்கிறபொழுது அதன் சக்தி குறைகிறது.   ஆத்மா வலுப்பெற வலுப்பெற அதன் சக்தி அதிகரிக்க அதிகரிக்க பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து அது கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுகிறது. 

ஜென்மம் ஜென்மமாக ஒரு ஆத்மா தான் எடுக்கும் ஒவ்வொரு உடலில் இருந்து  ஒவ்வொரு முறையும் வலுப்பெற்று   வெளியேறுந்தோறும் அது இந்த பூமியின் உபரி தளத்தில் இருந்து விலகி விலகிச் செல்கிறது.   இப்படி ஆத்மா முற்றிலுமாக பூமியின் ஈர்ப்பு சக்தியில் இருந்து விடுபட்டு அப்பால் செல்லும்பொழுது அது பிறவி எடுப்பதிலிருந்து விடுபடுகிறது .  அந்த ஆத்மா தெய்வத்தன்மை அடைகிறது.  அது தெய்வமாக மாறுகிறது.   தெய்வங்கள் வாழ்கின்ற புவி ஈர்ப்பு விசைக்கு அப்பாற்பட்ட இந்த  இடம் தான்  விண்ணுலகம். 

பூமி என்பது மண்ணுலகம்.

பிறவி எடுப்பதிலிருந்து விடுபட்ட இந்த ஆத்மாக்களைத்தான் நாம் கோவிலில் சிலைகளாக உருவகப்படுத்தி தெய்வங்கள் ஆக வழிபடுகிறோம்.

ஒன்றை கவனிக்கவும்.     நாம் கோவில்களில் தெய்வம் இருப்பதாகத்தான் சொல்கிறோமே தவிர கடவுள் இருப்பதாக சொல்கிற வழக்கமில்லை.  அதாவது இங்கு கடவுள் என்ற வார்த்தையை ப யன்படுத்துகிற வழக்கம்  இல்லை.   அதாவது கோவிலில் இருப்பது தெய்வம் என்கிற உணர்வு பழையகாலத்தில் இருந்தே நம் உணர்வில் இருந்து வந்திருக்கிறது என்பது தான் உண்மை.  தெய்வம் என்கிற வார்த்தையை நாம் இன்று பயன் படுத்தினாலும் அந்த உணர்விலிருந்து  நாம் தற்போது விடுபட்டு குழப்ப மடைந்த நிலையில் இருக்கிறோம்.      தவறுதலான புரிதலுக்கு உட்பட்டு  இருக்கிறோம்.

வழிபடுகிறோம் என்கிற வார்த்தையை நன்றாக கவனிக்கவும்.   அதன் பொருள்  என்ன?   ஆராதிக்கிறோம் என்பது வேறு.   வழிபடுகிறோம் என்பது வேறு.   நீ எவ்வழி நானும் அவ்வழி  என்பது தான் வழிபடுகிறோம் என்பதன் பொருள்.    நீ எந்த வழியில் செயல்பட்டு பூமியில்  பிறவி எடுப்பதில் இருந்து விடுபட்டாயோ  அந்த வழியை நானும் பின்பற்றி செயல்பட்டு முக்தி பெற முயல்கிறேன் என்பதுவே இதன் விளக்கம்.


கடவுள்:  நம் கட்டுக்குள் அடங்காத ஒன்று.   

கடவுள்:  நம் உணர்வுக்கு அடங்காத ஒன்று.     

கடவுள்: நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்று. 

ஆனால்  கடவுள் என்கிற ஒரு சக்தியின் கட்டுக்குள் நாம்அடங்கி இருக்கிறோம் என்பது தான் உண்மை.

கடவுள் என்கிற சக்தியை நம்மால் பிடித்து அடக்க இயலாது.  அது இந்த பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்து இருக்கின்றது.   அதனை பார்க்க இயலாது. உணர மட்டுமே இயலும்.  அதனை உணர நாம் உள் (முகமாக )கடந்து செல்லவேண்டும். இந்த பிரபஞ்சத்தின் உள்ளே கடந்து செல்லவேண்டும். இந்த பிரபஞ்சத்தில் உள்ளடங்கியிருக்கும் ஒவ்வொன்றினுள்ளும் கடந்து செல்லவேண்டும்.   இந்த பிரபஞ்சத்தின் தனிப்பிரதியாக அமைந்திருக்கும் நம் உடலினுள் கடந்து செல்லவேண்டும்.   நம் உடலினுள் நாம் கடந்து செல்லுந் தோறும்  நாம் கடவுளை உணர்ந்து கொள்ள  இயலும்.

கட  உள் .    உட்புறமாக கடந்து சென்றால் அப்பொழுது  நாம் கடவுளை உணர்ந்து கொள்ளலாம்

கடவுளை உணர்ந்து கொள்ள தெய்வங்கள்  வழிகாட்டும்.   தெய்வங்களுடன் உணர்ச்சி பூர்வமாக  ஈடுபடாமல்  உணர்வு லயத்துடன் வழிபடுங்கள் .  உணர்ச்சிகள் வெறியூட்டும்.       உணர்வுகள் வழிகாட்டும்.   வெறும் அர்ச்சனைகள்  ஆராதனைகள் பூஜை புரஸ்காரங்கள் எல்லாம் நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடே. தெய்வங்களுக்கு திருமணம் நடத்தி  வைப்பது உட்பட.    இதனால் எல்லாம் எந்த ஆன்மீக வளர்ச்சியும் உயர்வும் ஏற்படப்போவதில்லை.

மனதை ஒருமுகப்படுத்த உடலின் உள்முகமாக பார்வையை தளராது செலுத்துங்கள்.  உங்களால் அப்பொழுது மட்டுமே கடவுளை உணர்ந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் மிக மிக பழைய காலகாலங்களில் சமண கோட்ப்பாடுகள் தான் பழக்கத்தில் இருந்தன.    அதனை ஒரு மதம் என்று கூற முடியாது.  அது அன்றைய வாழ்க்கை கலாச்சாரம்.  எப்படி வாழவேண்டும் என்ற வழிமுறைகள் தான் அவைகள்.    ஆத்மாவைப்பற்றிய அறிவு தான் அடிப்படையாக இருந்தது.     ஆத்மாவை பிறப்பு இறப்பு என்கிற சுழற்சியில் இருந்து  விடுவித்தல் என்பதுதான் நோக்கமாக  இருந்தது.    பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்ட ஆத்மாக்கள் தான் சித்தர்கள்.    சித்தர்கள் தான் வழிகாட்டும் தெய்வங்களாக கோவில்களில் சிலைகளாக உருவகப்படுத்தப்  பட்டிருக்கிறார்கள்.

சித்தர்கள் சமண வழி வந்த, ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைந்தவர்கள் மக்களுக்கு நல்வழி காட்டியவர்கள்.  மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு சொன்னவர்கள்.   அவர்களது நோய்க்கு மருந்து கண்டவர்கள்.  இவர்கள் சமணர் வழி வந்த புண்ணிய ஆத்மாக்கள்.








ஞாயிறு, 18 நவம்பர், 2018

மனம், எண்ணங்கள், மனதின் வேறுபட்ட நிலைகள், ஆன்மா, ஆன்மீகம், பிறவி, தெய்வங்கள்

ஆன்மீகம் என்பது என்ன.?

பலரும் பலவிதமாக விளக்குகிறார்கள்.ஒவ்வொருவரும் மாறுபட்ட விளக்கங்களை தருகிறார்கள்.  எந்த விஷயத்தையும் இது சரிதானா என்று எண்ணிப்பார்த்து முடிவெடுப்பவர்கள் குழப்பத்துக்கே ஆளாகிறார்கள்.

இதறகு சரியான விளக்கம் என்ன .

இந்த உலகத்தில் மனோ தத்துவம் முதன்முதலில் உணரப்பட்டது இந்தியாவில் தான்.   அந்த அடிப்படையிலேயே ஆதி காலம் முதலாக வாழ்க்கை முறை அமைந்து இருந்தது.

மனித உடல் ஒரு இயந்திரமா?  ஆம்.

அது உள்ளிருந்தே இயக்கப்படுகிற ஒரு இயந்திரம் தான்.  எல்லா உயரின ங்களும் அப்படித்தான்.  எல்லாவற்றிற்கும் உள்ளிலிருந்தே இயக்கப்படும் இயக்கம் இருக்கிறது.

இந்த இயக்கம் எப்படி நடக்கிறது.

மனிதனை பொறுத்தவரையில் மனம் தான் உடலை இயக்குகிறது.   உடலின் நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது.   எல்லோருடைய மனமும் ஒரே மாதிரி இயங்குவதில்லை.   ஒவ்வொருவருடைய மனமும் ஒவ்வொரு விதமாக வித்தியாசமான முறையில் இயங்குகிறது.   என்ன காரணம்?

உடலை இயக்கும் மனதை  இயக்குவது யார் அல்லது எது? 

நமது இயக்கத்தை கவனித்தால் ஒன்றை  புரிந்து கொள்ளலாம்.  எண்ணங்களே மனதை இயக்குகின்றன என்பதே அது.

எண்ணங்கள் எப்படிப்பட்டவை ?

எண்ணங்கள் இரட்டை தன்மை உடையவை.    ஒரே விஷயத்தைப்பற்றி இரண்டு விதமான சிந்தனைகள் தான் எப்பொழுதும் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.   ஒன்று உடல் அல்லது பொருள் சம்பந்தப்பட்டது.   இன்னொன்று சரி, தவறு பார்க்கும் சரியான சிந்தனை.   இது பொருட் தன்மைக்கு அப்பாற்பட்டது.   உடல் சம்பந்தப்பட்ட சிந்தனை எப்பொழுதும் பொருள் தழுவியதாகவே இருக்கும்.   இன்னொரு சிந்தனை பொருள் அல்லாது உடல் சம்பந்தப்படாதது.  அதற்கு அப்பாற்பட்டது.    அல்லது அதற்கு அதீதமானது என்று சொல்லலாம்.

இரண்டு விதமான எண்ணங்களை தோற்றுவிக்கும் மனமும் இரட்டைத் தன்மையது தான்.    ஒன்று உடல் அல்லது பொருள் அல்லது உடல் இன்பம் சம்பந்தப்பட்டு இயங்கும் மனம்.  இது உள் மனம்.     வேறொன்று இவற்றிற்கு அப்பாற்பட்ட சிந்தனைத் தன்மை  உடையது.    இது அதனுள் இருக்கும் பதிவுகளின் அடிப்படையில் இயங்குகிறது.   இது வெளி அல்லது ஆழ் மனம்.      ஒரு மனம் உடலுக்குள் இருந்து இயங்குகிறது.   மற்றொன்று உடலுக்கு வெளியில் இருந்து இயங்குகிறது. 

உடலும் உள்மனமும் ஒருமுகமாக இணைந்து இயங்குவது யோகத்தின் முதல்படி.   ஆழ் (வெளி) மனமும் உள் மனமும் ஒருமுகமாக இணைந்து இயங்குவது யோகத்தின் அடுத்த நிலை.   இன்றைய காலத்தில் யோகம் என்பது ஆங்கிலப்  படுத்தப்பட்டு  யோகா என்றும் யோகா என்பது உடற்பயிற்சி  என்றும் பரவலாக அறியப்படுகிறது.

உண்மையில் யோகம் என்பது இணக்கம் என்று பொருள்படும்.   அதாவது அனைத்தும் ஒருங்கிணைந்த நிலை.

உள்  மனம் ஆனது வெளி மனதிற்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டும்.   காரணம் உள்மனம் உடலுடன் அழியக்கூடியது.   வெளி அல்லது ஆழ் மனம் பிரபஞ்ச சம்பந்தமுடையது.   அதற்கும் அதன் பதிவுகளுக்கும்  அழிவில்லை.   அது எல்லாப் பிறவிகளிலும் தொடரும்.

அதனைத்தான் நாம் ஆன்மா என்கிறோம்.

இந்த உலகத்தில் எல்லாமே இரட்டை நிலை பெற்றிருக்கின்றன.   இரவு-பகல், ஆண் -பெண்,  இருட்டு-வெளிச்சம்.    இது போல மனதிற்கும் இரட்டைத் தன்மை இருக்கவேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடு தான் ஆன்மா  என்ற மனதின் இன்னொரு நிலை அல்லது பகுதி..   இந்த அறிவு தான் மனோதத்துவத்தின் அடிப்படை.   இதற்கு வித்திட்டதே இந்தியா தான்.

இது தான் ஆன்மீகத்தின் ஆரம்பம் .  ஆன்மாவைப்பற்றிய அறிவே ஆன்மீகம் என்பது.   இனி நாம் உள் மனதை மனம் என்றும் ஆழ் மனதை ஆன்மா என்றும் குறிப்பிடுவோம்.

நம் மனம் என்பது உடல் சம்பந்தப்பட்டது.   அது தன வழியே போனால் உடல் சுகத்துக்கான வழிகளையே தேடும்.   வாய்க்கு ருசி, உடலுக்கு இன்பம், அதற்கு தேவையான பொருள், அதைத் தேடும் வழிகள் ஆகிய வழிகளிலூடேயே அது பயணிக்கும்.   இந்த பயணத்தின் பலன் இந்த உடலுக்கு கிடைக்கவேண்டும்.    இந்த அளவிலேயே நம் மனதின் போக்கு அமையும்.

தானாக இயங்கினாலும் இந்த மனம் ஆழ் மனமான ஆன்மாவுக்கு கட்டுப்பட்டது தான்.     மனதின் செயல் பாடுகள் அனைத்தும் ஆன்மாவில் பதிவாகிக்கொண்டிருக்கும்.  ஆன்மா உடலுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளை உடையது.   அதனுள் பதிவாகும் செயல்பாடுகளை ஆன்மா தன ஆய்வுக்கு உட்படுத்தும்.

மனம் உடல் சம்பந்தப்பட்டது மாதிரி ஆன்மா பிரபஞ்சம் சம்பந்தப்பட்டது.  அதன் செயல்பாடுகள் பிரபஞ்ச நிலையிலேயே இருக்கும். 

பிரபஞ்சத்துக்கும்  ஆன்மா என்ற ஆற்றலுக்குமிடையிலான வேறுபாடு தான் என்ன? 

பிரபஞ்சம் என்பது பரிபூரணமான ஆற்றல்,   ஆன்மா என்பது குறையுள்ள , நிறைவற்ற, பலம் குறைந்த ஆற்றல். 

ஆன்மா பூரணத்துவம் அடைவதற் காகவே  ஒரு உடலெடுக்கிறது.  ஆன்மா  தனது  ஆற்றல் அதிகரிப்புக்குத் தேவையான உணர்வுகளை நம் மனதிற்கு தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கும்.

நம் மனதிற்கு பலவிதமான நிலைகள் இருக்கின்றன.   மனதின் அதிர்வுகளின் அளவிற்கேற்ப அதன் நிலைகள் மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.   அதிர்வுகள் மிக குறைந்து இருக்கும்போதுஉடல் தூக்கத்துக்கு உட்படும்.  மனம் ஒரு குறிப்பிட்ட  அலை வரிசை அதிர்வுகளின் இருக்கும்போது மட்டுமே ஆன்மாவின் உணர்வுகள் நம் மனதில் பதியும்.   இந்த நிலையில் ஏற்கப்படும் உணர்வுகள் அடிப்படையில் மனம் செயல்படும்போது தான்  அது நேரான நேர்மறையான வழியில் செயல்படும்.   இந்த செயல்பாடு உடலின் சுகத்தையோ பந்த பாசங்களையோ வளர்க்காது.   அதனால் பொருளாதார வளர்ச்சியின் வழியே செல்லாது.

மனதின் அதிர்வுகள் கூடிய அலைவரிசைகளில் அமைந்து  அதிர்வுகள்  அதிகமாகும்போது நமது மனம் எப்பொழுதும் பொருளாதார வளர்ச்சிக்கான சிந்தனைகளில் ஈடுபடும்.. 

இந்த சமயங்களில் நம் மனம் ஆன்மாவின் தொடர்பிலிருந்து  விடுபட்டு வேறுபட்ட நிலையில் செயல்படும்.   இந்த எதிர்மறையான செயல்பாடுகள் ஆன்மாவில் பதிவாகும்போது,  அங்கு இருக்கும் நேர்மறை ஆற்றலுடன் சேரும்போது, நேர்மறை ஆற்றல் குறைந்துகொண்டே வரும். 

இதன் விளைவாக  உடல் அழியும்போதுஆன்மாவின் ஆற்றல் மிகவும் குறைந்து இருந்தால்  மீண்டும்  ஒரு உடல் எடுக்கும் சக்தி அதற்கு இருப்பதில்லை.   ஆன்மாவில் நேர்மறை ஆற்றல் குறைந்த பக்ஷ அளவையும் விட குறையும்போது அது பிரபஞ்ச வெளியில் நிலை கொள்கிறது.   இந்த நிலையில் தான் ஆன்மா ஆவி என்று அழைக்கப்படுகிறது.    பிரபஞ்ச வெளியில் அது கொஞ்சம் கொஞ்சமாக சில பல காலங்களாக தனது ஆற்றலை வளர்த்து மீண்டும் உடலெடுக்கிறது.

பிரபஞ்ச வெளியில் ஆன்மா தனக்கென்று ஒரு உடலும் மனமும் அற்ற நிலையில் எப்படி தன சக்தியை வளர்க்கிறது ?

உடலுடன் வாழும் ஏதாவது ஒரு ஆன்மாவின் சக்தி மண்டலத்தில் இதற்காக தஞ்சம் புகுகிறது.  சில சமயங்களில் நமது சக்தி மண்டலத்தில் இது போன்ற பல ஆன்மாக்கள் தஞ்சம் பெற்று நிலை கொள்கின்றன.  சில சந்தர்ப்பங்களில்
நம்மில் சிலர் மனதளவில் இரட்டை ஆளுமைக்கு உட்படுவதற்கு இது தான் காரணம்.   எதாவது காரணத்தால் உள்மனம் தளரும்பொழுது சக்தி மண்டலத்தில் இருப்பவைகளில் பலமுள்ள ஓர் ஆன்மா அந்த மனதை மேலாண்மை கொள்கிறது.   தளரும் மனம் மீண்டும் வலுவடையும் போது அது பின் வாங்குகிறது.   நம் சக்தி மண்டலத்தில் நிலை கொள்ளும் ஆவிகள் ஒட்டுண்ணிகள் மாதிரி.   அண்டி இருந்து சக்தியை உறுஞ்சுவன.


மனம் முற்றிலும் ஆன்மாவின் கட்டுக்குள் வரும்போது,  இரண்டும் முற்றிலும் இணைந்து செயல்படும்போது, அதாவது நாம் யோக நிலையை அடையும்போது  ஆன்மாவில் எதிர்மறை சக்தி வெளியேறி  முற்றிலும் நேர்மறை சக்தி நிறையும்.    நேர்மறை சக்தி கூடுந்தோறும் ஆத்மாவின் எடை  குறையும்.   எடை குறையுந்தோறும் ஆன்மா பூமியிலிருந்து மேல் நோக்கி நகரத்தொடங்கும். நேர்மறை சக்தி அதிகம் பெறும்  தோறும் ஆன்மா
அந்த அளவிற்கு எடை குறையப்பெறும்.   இந்நிலையில்  உடலிலிருந்து வெளியேறும்  சுதந்திர ஆன்மாவானது பூமியின் ஈர்ப்பிலிருந்து விடுபட்டு  மேல்நோக்கி சென்று கொண்டே இருக்கும்.   ஆன்மா முற்றிலும் நேர்மறை சக்தியாகும் போது எடையே இல்லாத நிலையை அடையும்.   அப்போது பூமியின் ஈர்ப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டு பிரபஞ்சத்தில் ( அநேகமாக ஈதர் ஆக) இணையும்.   இதுவே முக்தி.

இப்படி முற்றிலும் நேர்மறை சக்தி பெற்று பூமியின் ஈர்ப்பு சக்திக்கு அப்பாற்பட்ட பிரபஞ்சத்தை   அடையப்பெற்ற ஆன்மாக்களே தெய்வங்கள் என்று நம்மிடையே அறியப்பெறுகிறார்கள்.   இவர்கள் நிலைகொள்ளும் பூமியின் ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட பிரபஞ்ச பகுதியையே நாம் விண்ணுலகம் என்று அழைக்கிறோம்.  இதுவே சமணக்  கோட்ப்பாடு.  இது தான் இன்றும் நம் பழக்கத்தில் இருந்து வருகிறது.     நாம் இறைவனையும் தெய்வத்தையும் வேறுபாடு தெரியாமல் குழப்பிக்கொண்டிருக்கிறோம்.    தெய்வங்கள் நம்மிடையே பிறந்து வளர்ந்து இறைத்தன்மையை அடைந்தவர்கள். இறைவன் பிண்ட, அண்ட , பிரம்மாண்டங்களுக்கு அப்பாற்பட்டவன்.   இதை நாம் உணர வேண்டும்.






வியாழன், 1 நவம்பர், 2018

பிண்டம், அண்டம், பிரமாண்டம் என்றால் என்ன? இவற்றுள் என்ன ஒற்றுமை ? இறைவனை எங்கே தேடுவது? Similarity between Matter, Universe and Galaxy, the presence of a God, How and where to find Him

பிரபஞ்சம் எவ்விதம் உருவானது?  நாம் எப்படி உடலெடுத்தோம்?

ஒரு ஆத்மா என்கிற சக்திக்கட்டுஅல்லது வீரியக்குவியல் (energy packet) ஒரு மனித உடலெடுக்க எண்ணுகிறது.  அது    ஒரு மனித  ஆத்மாவை    தேர்ந்தெடுத்து  அதனுள் அதாவது அந்த தேர்ந்தெடுத்த ஆத்மாவுக்குள் அதன் சக்தி மண்டலத்தில்   புகுந்து  அதன் உடலினுள் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தி ஒரு மனித விதையை  உருவாக்குகிறது.  வேறொரு உடலினுள்  விதையை  செலுத்துமாறு அந்த உடலைதூண்டுகிறது. அதன் பேரில் அவ்வுடல் வேறொரு உடலுடன் இதற்காக இணைந்துவிதையை அந்த உடலினுள் பீய்ச்சுகிறது.  வித்து மறு உடலின் கருவறைக்குள் சீறிப்பாய்கிறது.  மறு வுடலில் தன்னை ஒத்த நிலையில்  உருவான உப   வித்தான வேறொன்றுடன்  கலக்கிறது.    கற்பனைக்குஎட்டாத சக்தியடன்  இணைந்து ஒன்றுபட்டு கருவாகிறது.  ஒரு வளர்ந்து முதிர்ந்த உடலினுள் வேறொரு உடல் கருவாக உருவாகிற முறை இப்படித்தான்.

தன்னுள் உருவான கருவை சுமக்கும் உடலும் உடனே  இதை அறிவதில்லை . கருவும், தான் உருவான இடத்தையும்  அதனை சுமக்கும் உடலையும் அறியாமலேயே  உருவானது.  அது ஒரு செல் ஆக உருத்திரிகிறது. இந்த நிலையில் உடலெடுக்க முனைந்த அந்த ஆத்மாவானது அந்த கரு வளரும் (தாய்)  உடலின் சக்தி மண்டலத்தில் புகுந்து இருந்துகொண்டு செயலாற்றத் தொடங்குகிறது.  அதன் விளைவாக இணை கருவினுள் ஒரு உயிர் உருவாகிறது.  ஒரு செல் பல இணை செல்களாகவும், அவை இணைந்து பலப்பல நுண்ணுயிர்களாகவும் பெருகிவர அனைத்தையும் கோர்த்து அவற்றை  உட்கொள்ளும் அளவிற்கு உடலாக உருவாக்கி உடலை படிப்படியாக  விரிவடையச் செய்கிறது.   செயல் படுவதற்கு தேவையான உறுப்புகளையும் சாவதானமாக உருவாக்கி மேலும் உடல் விரிவடைகிறது.

இந்நிலையில் உடலெடுக்க முனையும் ஆத்மா தாயின் சக்தி மண்டலத்தில்  இருந்து இடம் பெயர்ந்து   அந்த வளரும் (குழந்தையின் )உடலில்  புகுந்து கொள்கிறது. தன பணியை மேலும் தொடர்கிறது.

அதில் ஒரு மூளையை உருவாக்குகிறது.  மூளையையும் அதன் செயல் பாட்டையும் கட்டுப்படுத்தி தன்  நோக்கத்தை நடைமுறைப் படுத்த தனக்கு நிகரானஇன்னொரு சக்தியாக மனது என்கிற  தன்  பிரதிநிதியை  உருவாக்கி தனக்கும் தன்னுடலுக்கும் இடையில் அமைக்கிறது.

உடல் முழுமை அடைந்து தேவையான அளவிற்கு பூரண வளர்ச்சி பெற்று இயங்கத்  தொடங்கியவுடன் தான் உருவான இடத்தில் இருந்து வெளியேறு கிறது.

இது தான் ஒரு மனிதன் என்கிற பிண்டம் உருவாகும்  விதம்

பற்பல ஜீவிகளாகிய பிண்டங்களும் இவ்விதமாகவே உடலெடுக்கின்றன.

இந்த மனித உடலில் மூளை ஆகாயம்.  கண்கள் நெருப்பு.  கை  கால்கள் காற்று.  தசைகள் எலும்புகள் பூமி.  இரத்தம், நிணம் இவை நீர்.   இவை உடலின் பஞ்ச பூத அம்சங்கள். 

கோடிக்கணக்கான எண்ணிக்கையில் விதவிதமான (நுண்) ஜீவிகள் இந்த உடலினுள் வாழ்கின்றன.  இவைகள் எல்லாம் இந்த உடலை பாதுகாக்கின்றன.   அதன் இயக்கங்களுக்கு உதவுகின்றன.  இவற்றிற்கும் பிறப்பும் மரணமும் உண்டு.  நம் உடலினுள் தினந்தோறும் பிறப்புகளும் மரணங்களும் நடைபெறுகின்றன.   பல ஜீவிகளுக்கும் பலவிதமான ஆயுட் காலங்கள்.  

பிண்டத்திற்குள் ஒரு மினி அண்டம் செயல் படுகிறது.

நமக்கு நூறு வருடங்கள் என்றால் நம்மில் வாழும் ஜீவிகளுக்கு  ஒரு சில மணிக்கூறுகள் அல்லது நாட்கள் தான் ஆயுள்.  ஆனால் அவைகளை பொறுத்த வரையில் நமக்கு நூறு வருடங்கள் போலவே அவர்கள் உணர்வளவில் ஆயுள் அவ்வளவுக்கு நீண்டவைதான்.   இந்த உடலினுள் வாழும் எந்த ஜீவியையும் நாம் அறிவதில்லை.  அவர்களில் பிறப்பையும் இறப்பையும் உணர்வுகளையும் இன்ப துன்பங்களையும் நாம் அறிவதில்லை;  உணர்வதில்லை.  தங்களால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெரியதான ( நமது) உடலினுள்  தாம் இருப்பதை அவைகளும்  அறிவதில்லை.   தம்மை  அகப்படுத்திய உடல்  ஒரு பிரபஞ்சத்தில் பற்பல இன்பத்துன்பங்களை அனுபவித்து ஜீவனுடன் வாழும்  ஒரு இயங்கு சக்தியாக இருப்பதை அவை உணர்வதில்லை.  அந்த உடலின் ஆரோக்கியத்துக்கும், இயக்கத்துக்கும்  நிர்ணாயகமாக இருப்பதையும்  அதற்கான  அவைகளின் பங்கு என்ன என்பதையும் அவைகள் அறிய மாட்டா .  

 தன்னிச்சையாக இந்த இயக்கங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

இது தான் பிண்ட தத்துவம்.

பரவெளி மண்டலம்  அல்லது அண்டம் (galaxy )எப்படி உருவாகிறது?

பிரபஞ்சம் என்கிற பிரமாண்டத்தினுள் அண்டங்கள் உருவாகின்றன,   நிலை கொள்கின்றன,  அழிகின்றன.   அது போல அண்டத்தினுள்,  பிண்டங்கள் உருவாகின்றன,  நிலை கொள்கின்றன,  அழிகின்றன.

ஒரு பிண்டம் வழியாகவே இன்னொரு பிண்டம் உருவாகிறது. 

அது போலவே ஒரு அண்டம் மூலமாகவே இன்னொரு அண்டமும் உருவாகிறது.

அண்டத்தினுள்  அமைந்திருக்கும் ஆகாய வெளியில்  இனம் புரியாத தாக்கத்தால் வீரியத்துடன் ஈர்க்கப்பட்டு ஒரு துகள்கூட்டம்  ஒரு சுழி போன்ற குழியினுள் வந்து சீரிப் பாய்ந்து சேர்ந்து அகப்பட்டு பல மாற்றங்களுக்கு உட்பட்டு அந்தக்கரு உரு ஆகிறது.   மெதுவாக அது விரிவடையத் தொடங்கி தொடர்ந்து பல கோடிக்கணக்கான வருடங்களாக விரிவடைந்து ஆகாயமாக வளர்ந்து  பெரியதாகி தனி அண்டமாக மாறி இயங்க தொடங்குகிறது.    இதற்கான எண்ணமும் தூண்டுதலும் இதற்கு அப்பாற்பட்ட நிலையான பிரமாண்டத்தில்  உருவாகிறது.   இனம் புரியாத தாக்கத்தை ஏற்படுத்துவதும் பிரமாண்டமே.    அந்த சுழி அல்லது குழியே கருவறை.  அங்கு தான் நட்சத்திரங்களும் கிரகங்களும் பிற பூதங்களும் உருவாகின்றன.

இதனை இப்படியும் விளக்கலாம்:

பரம ஆத்மா (பிரம்மாண்டத்தில் புதைந்துகிடக்கும் சக்தி ) ஒரு கருவறை ஏற்படுத்தி ஒரு ஆகாயத்தை (உயிரை ) உருவாக்குகிறது.    நட்சத்திரங்களை (மூளையை) யும்,  சந்திரன் (மனது),  பூமி (உடல் )உட்பட்ட  கிரகங்களையும் உருவாக்குகிறது.   அவற்றை பயன்படுத்தி காற்று, நெருப்பு, நீர் என்ற பிற பூதங்களையும் உருவாக்குகிறது.    சக்தியை உபயோகித்து பூதங்களின் இயக்கங்களில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி கட்டுப்படுத்துகிறது.

தொடர்ந்து  நட்சத்திர மண்டலத்தில் ஒன்றோ அதற்கு மேற்பட்ட  கிரகங்களிலோ (நாம் அறியோம்) எத்தனையோ கோடிக்கணக்கான எண்ணிக்கையில் விதவிதமான ஜீவிகள் உருவாக்கப்படுகின்றன.  ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான ஆயுள்;   அமைப்புமுறை.   நமக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்றால் அவற்றிற்கு பல கோடிக்கணக்கான வருடங்கள்.   பிறப்பும் இறப்பும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே                  இருக்கின்றன.        இவை எல்லாமே தன்னிச்சையாக நடந்துகொண்டே இருக்கின்றன.

நாம் உட்பட்ட எந்த ஜீவியும் தன்னை உள்ளடக்கி இருக்கும் அண்டத்தின் முழுஅமைப்பை  அறிவதில்லை;  உணருவதில்லை.    அதுபோலவே அண்டம்  தன்னுள் வாழும் ஜீவிகளைப்பற்றி தனித்தனியாக எந்த அறிவையும் உணர்வையும் கவனிப்பதில்லை.   அது வகுத்த நியதிப்படி எல்லாம் இயங்கி கொண்டே இருக்கின்றன.   அவ்வளவு தான்.

இது தான்  அண்டத்தின் தத்துவம்.

ஒரு அண்டத்திற்குள் பல நட்சத்திர வெளிகளும் அதன் சுற்றும் பிறவும்   உருவாவதும் இம்முறையிலான உப தத்துவத்தின் அடிப்படையில் தான்..

அண்ட தத்துவமும்  பிண்ட (ஜீவ ) தத்துவமும்   உருவான விதத்தாலும்,  வளர்ச்சி பெற்ற முறையாலும், இயக்கத்தாலும் அடிப்படையில் ஒன்றை யொன்று  ஒத்தவை என்பது தெளிவு.

இது தான் ஆத்மா பரமாத்மா தத்துவத்தின்  அடிப்படை.  பிண்டத்தின் அடிப்படை சக்தி ஆத்மா.   அண்டத்தின்அடிப்படை சக்தி பரமாத்மா..

 பரமாத்மா வகுத்த நியதிப்படி அண்டமும்   ஆத்மா வகுத்த நியதிப்படி நாமும் (பிற பிண்டங்களும்) இயங்கி வருகிறோம்.    ஒவ்வொரு பிண்டமும்   இந்த அண்டம்  இயங்கவும்  ஆரோக்கியமாக  நிலைபெறவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

 இதே அடிப்படையில் பிரமாண்டமும் , அதற்கு மேலாக  பரப்பிரம்மாண்டமும் அதற்கும் அப்பால் இன்னும் பலவும் ஒன்றைவிட ஒன்று பிரமாண்டமாய் பெரிதாக உருவாகி நிலைபெற்று அழிகின்ற எத்தனையோஅண்டாண்டங்கள் இருக்கலாம் எனறு  சிந்திப்பதில்  தவறு இருக்க முடியாது அல்லவா?

இவ்வளவு அமைப்புகளுக்கும் இடையில்,  ஒப்பிடும்பொழுது ஒன்றுமே இல்லாத,  கணக்கிலேயே  எடுத்துக்கொள்ள இயலாத negligible அளவுக்குள்  அடங்கிப்போகும் ஒரு மனித உருவில் ஒரு இறைவனை உருவகப்படுத்தி தேடினால் எங்கே தேடிக் காணமுடியும்? 

இத்தனைக்குமிடையில் ஒன்றுமில்லாமல் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் அல்லது ஒப்பிடுகையில் காணாமல் போகும் மனித வடிவில் ஒரு இறைவன் இருக்க முடியுமா?

பலஜீவிகள் தத்துவங்கள் ஒருங்கிணைப்பால் நாம், சில வரம்புகளுக்கு உட்பட்டு, ஒரு தனி அமைப்பாக  சுதந்திரமாக இயங்கி கொண்டிருக்கிறோம். இது போல சில பல அண்டங்கள் பிரம்மாண்டங்கள் ஒருங்கிணைந்த   ஒரு சுதந்திரமாக சுயமாக  தனித்து   இயங்குகிற,  நம்மைவிட உடல் பலத்திலும் மன, அறிவு பலத்திலும் எத்தனையோ மடங்கு உயர்ந்த ஒரு தனி அமைப்பு இருக்கலாம்.    அதற்கு அடுத்த அடுக்கிலும் அதனைவிட பல மடங்கு உயர்ந்த வேறொரு தனி அமைப்பு இருக்கலாம்.    இந்த சுற்று மென்மேலும் அடுக்கடுக்காக வளர்ந்துகொண்டே போகலாம்.     இந்த ஒவ்வொரு தனி அமைப்பும் நம்மை விட பல மடங்கு புத்தி சக்திகளில் மிக மிக உன்னத நிலையில் இருக்கலாம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலே எல்லா அடுக்குகளுக்கும் மேலாக இதற்கெல்லாம்  ஆரம்பம் குறிக்கும் ஒரு அமைப்பு நிச்சயம் இருக்கும் அல்லவா?   இதைத்தான் ஒருவேளை திருவள்ளுவர் ஆதிபகவன் என்று குறிப்பிட்டிருப்பாரோ ?

இத்தனைக்கும் இடையில் மிக அடித்தளத்தில் இருக்கும் நாம்,  நம்மை மிக உயர்வாக நினைத்து அகங்காரம் கொள்வதும்,  இறைவன் என்கிற ஒரு உன்னத நிலை பெற்ற அமைப்பை நம் கற்பனையில் நம்முடைய மிக மிக மிகச் சிறிய நிலைக்கு இறக்கி கொண்டு வருவதும்  முறையா என்பது நமது சிந்தனைக்கு உட்படுத்தி பார்க்கவேண்டிய விஷயம்.

அப்படியானால் நாம் இறைவனை எங்கே தேடுவது?    எந்த வடிவில்?    எந்த உருவில்?   எந்த அளவில்? 

எல்லாமே தன்னிச்சையாக,  எதுவும் எதைப்பற்றியும் கவலைப்படாமல், எதுவும் எதிலும் குறுக்கிடாமல் ஒரு நியதிப்படி இயங்குகிற  ஏதோ (நாம்) அறியாத ஒன்றினுள் வாழும் நாம்,  அந்த நியதிக்கு உட்பட்டு வாழ்வதை உணர்ந்த பின்னரும்  ஒரு தேடலில் ஈடுபட வேண்டுமா? அது தேவைதானா?

நாம் கடைபிடிக்கும் இறை தத்துவமும்,  அதன் பெயரில் நாம் ஏற்படுத்தும் போட்டிகளும் வேற்றுமைகளும் சண்டை சச்சரவுகளும்  வெறித்தனமான நிலைப்பாடுகளும்  நியாயமானவை தானா ?   நம் உள்ளுணர்வுக்கு இடம் கொடுத்து உணர்ச்சி வசப்படாமல் சிந்திப்போமா?

எந்த தர்க்கங்களாலும் வாதங்களாலும் நாம் எந்த  முடிவையும் எட்டப் போவதில்லை.    வாதங்களும் தர்க்களும் எந்த முடிவையும் தரமாட்டாமால் நீண்டுபோகும்.   சொல் திறமையும் மேலாண்மையும் வெற்றி பெரும். உண்மை வெற்றி பெறாது.   உணர்ச்சிகளுக்கு முன்னால் உள் உணர்வு கட்டுப்பட்டுவிடும்.   உண்மை பின்வாங்கிவிடும்.

முடிவை அவரவர் சிந்தனைக்கும் உள்ளுணர்வுக்கும்  விட்டு விடுவோம் .  எந்த முடிவையும் யாரிடமும் திணிக்க முயல்வது தவறு.  ஒவ்வொரு வருக்கும் சிந்திக்கும் சக்தி இருக்கிறது.    விருப்பையோ, வெறுப்பையோ முன்விதியாக  அடிப்படையாக்காமல் சிந்திபவர்களுக்கு  சரியான முடிவு  கிடைக்கும்.   இவ்விதம் எடுக்கும் எந்த முடிவும் யாரையும் எவ்விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. 

எல்லாமே எதையும் கண்டு கொள்ளாமல் பரமாத்மா வகுத்த நியதிப்படி நடந்துகொண்டே இருக்கும்.

பரமாத்மாவை தியானிப்போம்.   இது தான் பரம சத்தியம்.  நன்றி.












ஞாயிறு, 14 அக்டோபர், 2018

Chanting and Spiritual uplift -3-How to select a manthra and practice மந்திர உச்சாடனம்: ஆன்மீக உணர்வு -3- மந்திரத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?

Chanting and Spiritual uplift -3-How to select a manthra and practice  மந்திர உச்சாடனம்: ஆன்மீக உணர்வு -3-   மந்திரத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?

நம் சக்தி மண்டலம் அதிர்வுகளால் உருவாகும்  அலை வடிவில் இருக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருப்பது ஓம் என்னும் ஓங்காரமாகிய ஓசை தான்.  காற்று ஓங்கி வீசும்போதும் மழை பொழியும்போதும் கடலில் அலைகள் ஓங்கி எழுந்து அமரும்போதும் நெருப்பு வேகமாகப் பரவும்போதும் ஓம் என்னும் ஓங்காரமே மிஞ்சி நிற்கிறது.   இந்த ஓங்காரத்தின் பிரதிபலிப்பை நமது சக்திமண்டலத்தில் கொண்டுவந்து நிறுத்தப் பழகுவதற்கு மந்திர உச்சாடனம் பயன்படுகிறது.   நமது சக்தி மண்டலத்தில் ஓம் நிலை நிறுத்தப் படும் போது தான் நாம் முக்தி அடைகிறோம்.

எளியமுறையில் ஜபம் எப்படி பழகுவது?   ஒரு குருவைத்தேடி அவரிடம் ஒரு மந்திரம் தீக்ஷை பெற்று அதை உட்க்கொள்ள சிரமப்பட்டு முயன்று தோற்கும் போதும், பின்னர் மனம் தளர்ந்து இது இவ்வளவு கஷ்டமா என்று நொந்து இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று தீர்மானிக்கும் போதும்  வருத்தத் துடன் விலகிக்கொள்வதா?

இந்த கட்டுரையை முழுவதுமாக கடைசிவரையில் படியுங்கள்.   இறுதியில் தான் இதன் நோக்கத்தையும் உங்களுக்கு ஏற்படும் பயனையும் உணர முடியும்.          தொடர்ந்து படிக்க இந்த  வலைத்தளத்தை 'பின்தொடர் ' என்பதில் கிளிக் செய்து follow செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இதற்காக நாம் எந்த வேதத்தையோ புராணத்தையோ  சித்தாந்தத்தையோ கற்கவோ கேட்கவோ செய்து மனதை குழப்பிக்கொள்ளத் தேவை இல்லை.
இவை எல்லாம் நம் மனதில் குழப்பத்தையே ஏற்படுத்தும்.

ஒரு குரு என்பவர் ஆன்மீகத்தில் உன்னத நிலையை எய்தியவராக இருக்க வேண்டும்.    அவரை சுற்றி திறம்பட்ட சக்தி மண்டலம் அமைந்து தன் முன் நிற்பவரின் சக்தி மண்டலத்தில் ஊடுருவி சலனத்தை ஏற்படுத்தும் நிலையை எட்டியவராக அவர்  இருக்கவேண்டும்.    அப்பொழுது தான் நாம் தீக்ஷை பெற்ற மாத்திரத்தில் தீக்ஷை பெற்ற மந்திரத்தை நம்  சக்திமண்டலத்தில் நிறுவப்பெறுகிறோம்.   அதன் பின்னர் எந்த சிரமமும் இல்லாமல் நம்மால் மந்திர உச்சாடனம் செய்ய்ய முடியும்.      இப்படியான நிலையை எய்திய ஒரு குரு இந்த காலத்தில் கிடைப்பது என்பது கடினம்;  அரிதினும் அரிது .   அப்படிப் பட்ட ஒரு குருவை அடைய நாம் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.   அணிந்திருக்கும் பக்தி சின்னங்களால் அல்லது வெளிட்டதோற்றத்தால் அல்லது பேச்சால் அல்லது வேஷத்தால் ஒரு திறம்பட்ட  குருவை அடையாளம் காண்பது அரிது.   எங்கும் போலிகள்நிறைந்து இருக்கும் காலம் இது. 

இதற்கு நாம் என்ன செய்யவேண்டும். 

நம் உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதிலும் நிதானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.   மனதை நிலை நிறுத்திப்  பழகவேண்டும். எதற்காகவும் ஒருபொழுதும் உணர்ச்சி வசப்படக்கூடாது.     உணர்ச்சி வசப்படுதல் நம்மை தவறான வழியில் நடத்திச் சென்று நம்முள் ஒரு வெறித்தனத்தை ஏற்படுத்திவிடும்;  ஒரு விதமான விகாரத்தை ஏற்படுத்திவிடும்.  பக்தியின் வெளிப்பாடாக இந்த மாதிரியான வெறித்
தனமான விளைவைத்தான் நாம் மக்களிடம் பார்த்துவருகிறோம்.   இது நம்மை ஆன்மீக அதாவது ஆத்மாவை உணர்வதற்கான நம் முயற்சி அல்லது வழியிலிருந்து வெகுதூரம் விலக்கி விடும்.    காலா காலங்களில்  தவறான விளக்கங்களுடன் தவறான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட சம்பிரதாயங் களையும் பழக்கவழக்கங்களையும் இறுகப்பற்றிக்கொண்டு நாம் ஆன்மீகத்தில் எந்த வளர்ச்சியையும் அடைய இயலாது.   எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதற்கு இணங்க எதையுமே சிந்தித்து நம் மனதிற்கு சரி எனப்பட்ட தீர்மானத்தையே எடுக்கவேண்டும்.  மாற்றம் வளர்ச்சிக்கு அறிகுறி.   எது சரி என்று எப்போது தோன்றுகிறதோ அப்பொழுதே தேவையான மாற்றத்தை நம் சிந்தனை ஓட்டத்திலும் நடவடிக்கைகளிலும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.    யாரிடமும் அடிமையாக சேர்ந்துவிடக்கூடாது.    உபதேசங்களை அமைதியாக கேட்டுக்கொள்ளலாம்.   சுயமாக சிந்தித்து உணர்வு பூர்வமாக தேவையான மாற்றங்களுடனோ அல்லாமலோ ஏற்றுக்கொள்ளவோ தள்ளவோ செய்யலாம்.    அதற்குரிய பக்குவம் நிச்சயமாக உங்களுக்கு  பழக்கத்துக்கு வந்து விடும்.

மிக மிக எளிமையாக மந்திர உச்சாடனத்தை தொடங்கலாம்.   ஒரே ஒரு மெய் எழுத்து மூலமாக.   ஒருவருக்கு வலி வேதனை வரும்பொழுது தாங்க முடியாத நிலையில் வலிக்குதே என்று சொல்லி  ம்...............  என்று முனங்குகிறார்.   இது இயற்கையாக ஏற்படுகிறது,   இந்த முணக்கத்தில் ஒரு கணம் வேதனை மட்டுப்படுகிறது.   இந்த ம்......... என்கிற ஓசை அவரது சக்தி மண்டலத்தில் ஏற்படுத்துகிற ஒரு மாற்றமே இதற்கு காரணம்.   உச்சரித்த நொடியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய இந்த மெய்த்தொடர் முழக்கம்  தொடர்ந்து பழகி வரும்பொழுது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவு.     உச்சாடனத்தின் அதிர்வுகளை உங்கள் உடலின் ஒவ்வொரு புள்ளியிலும் உணரமுடியும்

வாயை நன்றாக மூடிக்கொண்டு ம்.............என்று தொடர்ந்து ஒலி  எழுப்பும் பொழுது அந்த ஓசை மூக்கு வழியாக வெளிவருகின்றது.   அத்துடன் நாம் சுவாசித்து உட்கொண்ட காற்றும் வெளியேறுகிறது    முடிந்தவரை தொடர்ந்து இப்படி உச்சரிக்கும்போது நமது நுரையீரலில் இருந்து அசுத்த காற்று முழுவதுமாக வெளியேற்றப்படுவதால்  நமது நுரையீரல்  முழுவதுமாக காலி ஆகிறது.   உடன் நமது மார்பு சுருங்குகிறது.    தொடர்ந்து ம்............... என்று நாம் உச்சரிக்கவேண்டுமானால் தேவையான அளவுக்கு நுரையீரல் முழுவதும் நிறையும் அளவுக்கு காற்று சுவாசித்து உள்ளிழுக்க வேண்டும்.    ம் ...............
என்று கூடுதல் நேரம் உச்சரிக்கவேண்டுமானால் கூடுதல் நேரம் மூச்சுக் காற்று  வெளியேற வேண்டும்.   கூடுதல் காற்று வெளியேற வேண்டுமானால் கூடுதல் காற்று உள்ளிழுக்கப்படுதல் அவசியம். ஆகவே நாம் கூடுதல் காற்றை உள்ளுக்கு இழுப்போம்.    நமது மார்பு அந்த அளவிற்கு விரிவடையும்.  பயிற்சியின்போது மார்பு நன்றாக சுருங்கி விரியும்.     மூச்சு வெளியேறி அடுத்த மூச்சு உள்ளிழுக்க ஒன்றிரண்டு நொடிகள் அவகாசம் கொடுங்கள்.    இந்த நொடிகளில் நுறையீரல் அடுத்த சுவாசத்தை கிரகிக்க  தயாராகி விடும். நுரையீரல் மிகவும் நிதானமாக இயங்கக்கூடிய, இயங்கவேண்டிய  உறுப்பு.    இது உடல் ஆரோக்கியத்திற்கு குறிப்பாக இருதயத்திற்கு நல்லது.

ஆரம்பத்தில் அமைதியாக ஒரு காற்றோட்டமான இடத்தில்  அமர்ந்து   ஒன்றிரண்டு  நிமிடங்கள் செய்யலாம்.  எந்தவித முயற்சியோ சிரமமோ எடுக்காமல் மேற்கொள்ளவேண்டும்.  மூச்சு திணறும் வரையில் நீட்டக்கூடாது.    படிப்படியாக உச்சரிக்கும் நேரத்தை அதிகரிக்கலாம்.
ம்....... என்று நிதானமாக பதட்டம் திடுக்கமின்றி உச்சரிக்கும்போது நம்மை அறியாமல் காற்று மெதுவாக நிதானமாக வெளியேறுகிறது. காற்று வெளியேறி தீரும் பொழுது உச்சரிப்பை நிறுத்தி காற்றை மெதுவாக நிதானமாக உள்ளிழுக்கவேண்டும்.  இங்கு நாம் அறியாமலேயே ஒரு மூச்சுப்பயிற்சிக்கு உட்படுகிறோம்.     மூச்சுப்பயிற்சி நம்முடைய எந்த முயற்சியும் இன்றி சரியான முறையில் சீராக நடக்கும்.  இது தான் பிராணாயாமப்  பயிற்சி.    படிப்படியாக நேரத்தை கூடுதலாகி 15 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரையில் செய்வது நல்லது.    தொடர்ந்து செய்துவரும்போது உச்சரிக்கும் நேரம் அதாவது மூச்சை வெளியேற்றும் நேரம் அதிகரித்துக்கொண்டே வரும்.       அதனால் நாம் உள்ளிழுக்கும் காற்றின் அளவும் அதிகரிக்கும்.   ஒருநிமிடத்தில் நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும்.    நீங்கள் அநேகமாக அறிந்திருப்பீர்கள்: ஒரு நிமிடத்தில் நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை குறையும்தோறும் நம் ஆரோக்கியம் பலமடைந்து ஆயுள் அதிகரிக்கும்.

தொடர்ந்து சிலபல நாட்கள் மாதங்கள் பழகிவரும்போது,  ம்............. எனும் உச்சாடனம் மிகச் சாதாரணமாக எப்பொழுது வேண்டுமானாலும் உங்களுக்கு வரும்.  சும்மா அமர்ந்து இருக்கும்பொழுது வரலாம். கார் ஓட்டும்போது வரலாம். மகிழ்ச்சியாக இருக்கும்போது வரலாம்.   நீண்ட தூர பயணத்தின் போது வரலாம்.    எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் பயிற்சி செய்யலாம்.   ஒலியை சற்று குறைத்துக் கொள்ளலாம்.     தொடர்ந்து நீங்கள் உச்சரிக்கும் போது மகிழ்ச்சியும் இணைந்தே வரும் என்பதை உணரலாம். உச்சரிக்கும் போது ஓசையில் இசையும் வரும்   இசையோடு ரசித்து உச்சரிக்கும் போது ஓம் என்னும் ஓசை உங்களைச்சுற்றி ரீங்காரமிடும்.  அதீதமான உணர்வுக்கு ஆளாவீர்கள்.   சொல்லி உணர்த்த இயலாது.   ஆனால் அனுபவித்து உணர்ந்துகொள்வீர்கள்.       இப்பொழுது ஆன்மீகத்தில்  அதாவது ஆத்மாவை உணரும் முயற்சியில் முதல் படியைத் தாண்டிவிடுவீர்கள்.

இப்பொழுது மெய் எழுத்தை உயிர்முதல் எழுத்தாக அ .......................... என்று மாற்றிக்கொள்ளலாம்.      இப்பொழுது நாம் ஆன்மீகத்தில் மேல் நோக்கி உயரத் தொடங்குகிறோம்.     அ ..............என்று உச்சாடனம் செய்யும்பொழுது உங்கள் உணர்வில் இந்த மாற்றம் புலப்படும்.

இது இந்த விஷயத்தின் முடிவல்ல.     இன்னும் நிறைய இருக்கின்றன.  இதன் தொடர்ச்சி இன்னும் வளரும்.     தொடர்ந்து பார்ப்போம்.   நன்றி வணக்கம்,






சனி, 13 அக்டோபர், 2018

Chanting and Spiritual uplift - Manthras மந்திர ஜபம் எப்படி பலன் தரும் - அதன்அடிப்படை என்ன?

மந்திர ஜபம் எப்படி பலன் தரும்- அதன் அடிப்படை என்ன?

ஒலி அல்லது ஓசை என்பது நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று என்பது சொல்லித்தெறியவேண்டியதில்லை..     ஆனால் ஒலி  என்றால் என்ன ?    இந்த  கேள்விக்கு எப்படி பதில் சொல்வது .   யோசித்துப் பாருங்கள்.  இதனை பார்க்க முடியாது.   கேட்க மட்டுமே முடியும் .இதற்காகவே நமக்கு இரண்டு காதுகள் அமையப்பெற்றிருக்கின்றன.  நமது கருத்து பரிமாற்றங்களுக்கு ஓசையின் வித்தியாசங்கள் அடிப்படையில் அமையும் பேச்சு தான் பயன்படுகிறது.

ஒரு பொருள் அதிரும்பொழுது அது  காற்றில் ஏற்படுத்துகிற அலைகள்  நமது காதுகளின் உள்ளே அமைந்துள்ள செவிப்பறையில் தட்டி அதிர்வை பகிர்கிறது.  அதை ஏற்று நம் செவிப்பறை அதிர்கிறது.   நரம்புகள் மூலமாக இந்த அதிர்வுகள் நம் மூளையை எட்டுகிறது.    அங்கே  ஒலி அடையாளம் காணப்படுகின்றது .  சப்தம் நம் மூளையில் ஒலிக்கிறது.     நன்றாக கவனிக்கவும் அதிர்வு முதலில் எங்கே உண்டானதோ அங்கே ஓசை ஒலிக்கவில்லை.     ஆனால் நம் மூளையில் தான் ஒலிக்கிறது.    இன்னும் தெளிவாகச் சொன்னால் நம்மை சுற்றி அமைந்திருக்கும் நம்முடைய சக்தி மண்டலம் முழுவதிலும்  ஒலிக்கிறது.     அதாவது நமது ஆத்மாவில் ஒலிக்கின்றது என்று சொல்வதே சரியாக இருக்கும். 

முதலில் அதிர்வு உண்டான இடத்தில் அல்லது புள்ளியில் எந்தவிதமான ஓசையும்   உண்டாகவில்லை  என்பது  தான் இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று.

அதாவது நாம் கேட்கும் ஒவ்வொரு ஒலி யும் நமது சக்தி மண்டலத்தில் மட்டுமே ஒலிக்கின்றது;   சலனத்தை உண்டாக்குகிறது.    இந்த சலனம் நம் உடல் முழுவதிலும் உணரப்பட்டு அதன் பாதிப்பு நமது மனதில் ஏற்படுகிறது.  வெவ்வேறான ஓசைகள் அல்லது சப்தங்கள் நம் மனதில் வெவ்வேறான உணர்வுகளை ஏற்படுத்துகின்றன.    இது முதன் முதலில் நமது சக்தி மண்டலத்திலேயே ஏற்படுகிறது.   அதன் விளைவுகளை அதன் பின்னரே நாம் அனுபவிக்கிறோம்.

நம்  சக்தி மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் நமது உடலிலும் மனதிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை.

இந்த அடிப்படையில் தான் மந்திர ஜபம் பயன் தருகிறது.

அதிர்வுகள் ஓசைக்கு காரணமாகின்றன.   ஓசையில் அடிப்படையானது ஓங்காரம்.   வாயு, நெருப்பு,  நீர் ஆகிய மூன்று பூதங்களும் அசையும் தன்மையன.    காற்று வீசும்பொழுது ஓம் என்னும் ஓங்காரம் உண்டாகிறது.   நெருப்பு ஓங்கும்பொழுதும் அதே  ஓம் என்னும் ஓங்காரம் ஒலிக்கிறது.   கடல் நீர் ஆர்ப்பாரிக்கும்பொழுது அதே ஓங்காரம் கேட்கிறது .   ஆகவே ஓங்காரம் என்பது இயற்கையின் ஓசை.   பிரபஞ்சம் எங்கும் எப்பொழுதும் நிறைந்து ஒலிக்கும் ஓசை. 

நம் சக்தி மண்டலத்தில் ஓங்காரத்தை நிலையாக ஒலிக்கச் செய்தால் அது இயற்கையுடன்  இணையும். அது ஓங்காரத்தால் நிறையும்பொழுது  முக்தி அல்லது பிறவி எடுப்பதிலிருந்து விமோசனம் கிடைக்கிறது.    இயற்கையின் ஓசை முழுவதுமாக  நம் சக்தி மண்டலத்தில் நிறையும்பொழுது நாம் முழுவதுமாக நிரந்தரமாக இயற்கையோடு ஒன்றி விடுகிறோம்.    இதுவே முக்தி அல்லது மோக்ஷம் .  இதுவே சொர்க்கம்   சொர்க்கம் என்பது வடமொழிச்சொல்.   அதாவது ஸ்வ வர்க்கம் சொர்க்கம் ஆனது.    நாம் எந்த வர்க்கத்திலிருந்து வந்தோமோ அது தான் ஸ்வ வர்க்கம்.

மந்திரம் பழகிய பிறகு,  வெகு இயல்பாக நாம் உச்சரிக்கும் பொழுது உண்டாகிற ரிதம் அல்லது சுருதி நம் சக்தி மண்டலத்தில் ஓங்கார அலைகளை ஏற்படுத்துகிறது. சக்தி மண்டலத்தில் ஓங்காரம் நிலைபெறும்பொழுது அதன் அதிர்வுகள் அல்லது படபடப்பு குறைகிறது.   இது மனதில் நிதானம் ஏற்படக்காரணமாக அமைகிறது.  தியான நிலைக்கு இது தான் அடிப்படை.

மனது நிதானத்திற்கு வரும்பொழுது நம் மனது நமக்குள் நிறுத்தப்படுகிறது .  நமது சுவாசம் ஒழுங்கு படுத்தப்படுகிறது.    சுவாசம் ஒழுங்காக நடை பெறும்பொழுது அசுத்தக்காற்று முழுவதுமாக நுரையீரலிலிருந்து வெளியேறி தேவையான அளவுக்கு பிராண வாயு அங்கு பிரவேசிக்கிறது.   இரத்தம்  சரியான முறையில் சுத்தம் செய்யப்பட்டு உடல் முழுவதும் சீரான முறையில் ஓடுகிறது.  இவ்விதம் நமது ஆரோக்கியம் சீர் செய்யப்படுகிறது.

நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்பொழுது நம் சக்தி மண்டலம் நேர் நிலையில் அமைகிறது.    இல்லாதபோது சிதறுபடுகிறது .   உடல் அசுத்தம்  சக்தி மண்டலத்தையும் அசுத்தப்படுத்துகிறது.

நாம் ஒரு ஒலியை உண்டாக்குகிறபொழுது மூச்சை வெளியே விடுகிறோம் .
அடுத்த ஒசையை  நாம் ஒலிப்பதற்குள் நாம் அறியாமலேயே காற்றை உள்ளே இழுத்துக்கொள்கிறோம்     அடுத்த உச்சரிப்பின்போது மீண்டும் காற்று வெளியேறுகிறது.   ஒரே சொல், ஓசை அல்லது மந்திரத்தை திரும்பத்திரும்ப சொல்லும்பொழுது மூச்சு ஒரே சீராக நடைபெறுகிறது . சரியாக சொன்னால் ஒரு பிராணாயாமம் பயிற்சி நடக்கிறது.

இதன் காரணமாகவே நம் சக்தி மண்டலம் சீராகிறது.   தொடர்ந்து  ஜபம் அல்லது உச்சாடனம்  அல்லது அதே ஓசையை மீண்டும் மீண்டும் சிறிது  நேரத்திற்கு  எழுப்புகிற பொழுது  உச்சாடனம் நிறுத்திய பிறகும் தொடர்ந்து  சக்தி மண்டலம் சீரான நிலையில் குறிப்பிட்ட நேரம் வரையில்  நிலைகொள்கிறது.

இது காலை நேரங்களில் தொடர்ந்து  பழகி வரும்பொழுது நமது அன்றாட வேலைகளில் கவனம் சிதறாமல் ஈடுபடவும் நிதானமாக எதையும் பதட்டப்படாமல் எதிர்கொள்ளவும் தீர்மானங்கள் எடுக்கவும் உதவியாக இருக்கும்.         

நன்றி.     வணக்கம்





Five Elements -other elements இதர பஞ்ச பூதங்கள் - உடல் ஆரோக்கியத்துக்கு பயன்படுத்துவது எப்படி ?



Five  Elements -other elements     இதர பஞ்ச பூதங்கள்  - உடல் ஆரோக்கியத்துக்கு பயன்படுத்துவது எப்படி ?

நம் வாழ்க்கையில்  பயனுள்ளதும் தெரிந்து கொள்ளவேண்டியதும் உடல் மனம் ஆரோக்கியத்துக்கு வழிகோலுவதுமான நிறைய விஷயங்கள் இந்த தொடர்களில் விளக்கப்படுகின்றன.    இதனை படிப்பதற்காக சிறிது நேரம் ஒதுக்கி முழுவதுமாக இறுதி வரை படித்து பயன் அடையுங்கள்.   ஆங்கிலத்தில் இருந்தால் மிகவும் அடியில் Tamil என்பதில் கிளிக் செய்தால் தமிழில் படிக்கலாம்.

இந்த தொடரை பின்  தொடருங்கள்.    அதற்காக  இந்தப்பக்கத்தின் வலப்புறம் மேல்பகுதியில்  காணப்படும் "பின்தொடர் " என்பதில் கிளிக் செய்யவும்.   இந்த தொடரில் வரும் அனைத்து கட்டுரைகளையும் அப்பொழுது தான் உங்களுக்கு விடாமல் படிக்க முடியும்.

ஆகாயத்தைப் பற்றி விளக்கமாக முன்னர் ஒரு கட்டுரையில் பார்த்தோம். தொடர்ந்து பிற பூதங்களைப்பற்றியும்  நாம் இப்போது பார்க்கலாம்.


ஆகாயம் இது தான் அடிப்படையான பூதம்.  பூதம் என்பது இங்கு (இயங்கும்) பொருள் என்ற அர்த்தத்தில் தான் கையாளப்படுகிறது.   பேய் பிசாசு என்ற அர்த்தத்தில் அல்ல என்பதை கவனிக்கவும்.    இது இல்லை என்று இருக்கும் ஒன்று.      மற்ற நான்கு பூதங்களும் உருவாக இதுவே காரணமாக அமைகிறது   ஆகாயம் என்பது சிவம்(ன்) என்றும் நாம் முன்னர் விளக்கினோம்.

ஆகாயம் என்பது சீவன். அதாவது உயிர் .   இந்த உயிர் ஆனது  சக்தி என்ற உடலுடன்  இணைகிறபொழுது தான் பிற பூதங்கள் உண்டாகின்றன.

ஆகாயம் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கிறது.   ஆகாயம் என்பதே பிரபஞ்சம்.    ஆகாயம் முழுவதும் சக்தியால்  நிறைந்து இருக்கிறது    சக்தி என்பது இருவகைப்படும் .   ஒன்று நேர்மறை. மற்றது எதிர்மறை  (Positive charge and negative charge), எலக்ட்ரோன் மற்றும் புரோட்டோன்கள்  (electrons and  protons)

அடுத்த பூதம் காற்று.   ஆகாயத்திலே முதலில் உருவான பூதம்  காற்று அல்லது  வாயு  தான்.

எப்படி?

 பிரபஞ்சத்தில்  அடிப்படையானபொருள் அணு.  எல்லாப்பொருட்களும் அடிப்படையில் அணுக்களால் ஆனது.  அணு நியூட்ரோன், புரோட்டோன், எலக்ட்ரோன் ஆகிய மூன்று மின் காந்தக்கூறுகளால் ஆனது. குவார்க் மற்றும்
 லெப்டன் என்பன இவை உருவாகக்  காரணமாக அமைந்தன.

பிரபஞ்சத்தில் முதலில்  உண்டான அடிப்படைப் பொருள் அணுதான்.  பிரபஞ்சம் உண்டான சில  நிமிடங்களில் ஹைட்ரஜன் வாயுவும் தொடர்ந்து ஹீலியம் வாயுவும் உண்டாயின.    அதீதமான சக்தியால் ஈர்க்கப்பட்டு மின் காந்தக்கூறுகள் ஆகாயத்தில் ஒன்றிணைந்து இவை உருவாகின.

பிரபஞ்சம் ஏற்பட்டு இருபது கோடி வருடங்களுக்கு பிறகு நட்சத்திரங்கள் ஒவ் வொன்றாக உருவாயின.  அப்போது தான் முதன் முதலாக ஒளி அல்லது நெருப்பு உண்டானது .    அப்படி உண்டான ஒரு நட்சத்திரம் தான் சூரியன்.  கற்பனைக்கு எட்டாத அளவிலான எல்லையற்ற ஈர்ப்பு சக்தி உருவாகி ஹைட்ரஜன் அணுக்களை கூட்டத்த்தோடு ஒரு புள்ளியில் குவியச்செய்து அவை கற்பனைக்கு எட்டாத அளவிலான எல்லையற்ற அழுத்தத்தால் மின் காந்தக்கூறுகளாக சிதறுபட்டு  மின் காந்தக்க்கூறுகள்  வேறொரு விகிதத்தில் இணைந்து ஹீலியம் என்ற இன்னொரு வாயுவாக மாறுகிறது.     ஈர்க்கப்பட்ட ஹைட்ரஜன் அணுக்கள் அசுர வேகத்தில் ஒரு புள்ளியில் குவியும்பொழுது ஏற்பட்ட வெடித்து சிதறலில் தான் பூமி மற்றும் கிரகங்கள்  தொலைவில் தெறித்து விழுந்து உருவாயின.    ஹைட்ரஜன் ஹீலியமாக உருத்திரியும்   இந்த செயல் தொடர்ந்து நடக்கிற ஒரு மாபெரும் புள்ளி தான் ஒரு நட்சத்திரம்.  ஹைட்ரஜன் அணு சிதறும்பொழுது அபரிமிதமான சூடும் வெளிச்சமும் உண்டாகிறது.     நட்சத்திரத்தில் குவிந்திருக்கும் அனைத்து ஹைட்ரஜன் அணுக்களும் சிதறி முடியும் பொழுது நட்சத்திரம் அழிந்து விடும்.   சூரியனும் ஒரு நட்சத்திரம் தான்.  அதுவும் ஒருநாள் அழிந்துவிடும்.    ஒரு புழுதி அல்லது மேக மண்டலத்தின் சுழற்சியாகவே ஒவ்வொரு நட்சத்திரமும் -சூரியன் உட்பட - தோற்றமளிக்கும். 

நமது சூரியன் தோன்றி சுமார் நானூற்று ஐம்பது அல்லது நானூற்று அறுபது  கோடி வருடங்கள் ஆகின்றன.

இனி சுமார் ஐநூறு கோடி வருடங்களில் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் அனைத்தும் சிதறி தீரும்.   அப்பொழுது சூரியன் என்ற மாபெரும் புள்ளி வெறும் தீக்கனலாக மாறி அதிக வெப்பத்துடன் வெடித்து விரிவடையத்தொடங்கும் ;  சூடு ஆறி மிக மிக மெதுவாக குளிரத்தொடங்கும்.     இது பல கோடிக் கணக்கான  வருடங்கள் நடைபெறும்.    சூரியன் விரிவடையத்தொடங்கி குளிரும் செயல் நடக்கும்பொழுது அது முதலில் புதன் சுக்கிரன் ஆகிய கிரகங்களையும் பின்னர் பூமியையும் தன்னுடைய வெப்ப வளையத்தினுள் விழுங்கும்.     இதற்கு எத்தனையோ வருடங்களுக்கு முன்னரே விரிந்து பரவும் சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாமல் பூமியில் உயிரினங்கள் அழிந்து விடும்.

சூரியன் உருவானபொழுது,  ஈர்க்கப்பட்ட ஹைட்ரஜன் அணுக்கள் அசுர வேகத்தில் ஒரு புள்ளியில் குவியும்பொழுது ஏற்பட்ட வெடித்து சிதறலில் தொலைவில் தெறித்து விழுந்து தான் பூமி மற்றும் கிரகங்கள்  உருவாயின. சூரியன் உருவான ஒருசில நிமிடங்களில் சூரியனில் இருந்து வெடித்து சிதறி  தெறித்து தான் பூமி உருவானது.  பிற கிரகங்களும் இப்படித்தான் உருவாகின.  இவை சூரியனின் ஈர்ப்பு மண்டலத்தினுள் இருப்பதால் சுழற்சியில் இருக்கும் புகை மேக மண்டலமான சூரியனின் சுழற்சியுடன் இணைந்து அதனைச் சுற்றி வருகின்றன.

கடும் வெப்பத்துடன் சூரியனில் இருந்து தெறித்து எறியப்பட்ட பூமி மெதுவாக குளிரத்தொடங்கியது.   அவ்வப்போது ஆங்காங்கே பூமி வெடித்து வெளியேறிய வாயுக்களால் காற்று மண்டலமும் பின்னர் வெப்பமான காற்றில் உருவான வேதியியல் மாற்றங்களால் ஏற்பட்ட  சக்தியால் மின் காந்தகூறுகள் சிதறிப் பிரிந்து இணைந்து குளிர்ந்து மழையாகப் பெய்து நீரும்அதனால் நிறையப்பெற்று கடலும்  உண்டாயின.     இது தான் பஞ்ச பூதங்கள் உண்டான வழி.

மொத்தத்தில் இந்த  பிரபஞ்சம் முழுவதும் ஆகாயம் வாயு நெருப்பு (சூரியன் முதலான நட்சத்திரங்கள் )பூமி (முதலான கிரகங்கள்) இவைகளால் நிறைந்து இருக்கின்றன.

ஆகாயம் பிரபஞ்சம் முழுவதும் எங்கும் நிறைந்து காணப்படுகிறது    வாயுவும் மிகப்பெரிய அளவில்ஹைட்ரஜன் அணுக்களாகவும் சிறிய அளவில் ஹீலியம் அணுக்களாகவும் எங்கும் நிறைந்து இருக்கின்றன.   நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை சுற்றி இவை வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு வாயு அல்லது காற்றுவெளி மண்டலமாக பல்வேறு விதமான வாயுக்களுடன்   நிலைபெறுகின்றன.

ஒவ்வொரு நட்சத்திரத்தை சுற்றியும் நெருப்பும் ஒரு மிகப்பெரிய வட்டத்துக்கு அதன் ஒளியும் அதனால் ஏற்படும் வெப்பமும் நிறைந்து இருக்கின்றன.

பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அடிப்படையில் இந்த ஐந்து பூதங்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

நம் உடலை எடுத்துக்கொள்வோம்.    ஆகாயத்தின் அம்சம் ஆன வெட்ட வெளியான பகுதி  நம் உடலுக்குள் இருக்கிறது. அது நம் உயிராகவும் இருக்கிறது. 

வாயுவின் அம்சமான பிராண வாயு நம் உடல் முழுவதும் நிறைந்து இருக்கிறது.  நமது இரத்தத்திலும் தசைகளிலும் இதன் அளவு சாதாரணமாக 95 சதவீதத்துக்கு குறையாமல் இருக்கவேண்டும்.    அப்பொழுது தான்  சுவாசம் சீராக நடைபெறும்.     90 சதவீதத்துக்கு குறைகிற பொழுது மூச்சு திணறல் ஏற்படும்.  மிகக்குறையும் பொழுது உயிருக்கே ஆபத்தாக முடியும்.

இரத்தம் , நிணநீர் முதலானவைகள் நீரின் அம்சமாக இருக்கின்றன.

வாயு மண்டலத்தை விட அதிகமான வெப்பம் எப்பொழுதும் நம் உடலில் நிலைகொள்கிறது.   இதில் ஏற்படும் கூடுதல் குறைவுகள் ஆரோக்கியத்துக்கு ஊறு  விளைவிக்கவோ ஆபத்தாக முடியவோ செய்கிறது.

அதாவது பஞ்சபூதங்களின்  அம்சம் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவில்-விகிதத்தில்  நம் உடலில் தேவைப்படுகிறது.  எது எது குறைகிறதோ அதை நிறைவு செய்ய வேண்டியதிருக்கிறது.  எதெது தேவைக்கு அதிகரிக்கிறதோ அதை குறைவு செய்யவேண்டியதிருக்கிறது.

நமது அன்றாட செயல்பாடுகளால் நம் உடலில் பஞ்சபூத அம்சங்களில் குறைவு ஏற்படுகிறது.  இந்த குறைபாடுகளை நாம் எவ்வாறு நிறைவு செய்கிறோம்?

உடல் உழைப்பினால் பூமியின் அம்சம் குறைகிறது. இதை நிறைவு செய்ய அன்றாடம் பூமியிலிருந்து உருவான உணவுகளை தேவையான அளவிற்கு உடலுக்குள் எடுத்துக்கொள்கிறோம்.

உடலுக்குள் இருக்கும் வெப்பத்தை கட்டுப்படுத்த வெயில் உபயோகப் படுகிறது.    இது இயற்கையாகவே நாம் அறியாமலே நடக்கிறது.   இதற்காக நம் உடலில் வெயில் பட வேண்டியதிருக்கிறது.

காற்றும் நீரும் நம் உடல் பராமரிப்பில் பெரும் பங்கு வகிக்கிறது.   இதனை நம்மில் பெரும்பாலானோர் உணருவதில்லை.  இவற்றிற்கு தேவையான அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.   இவை ஒவ்வொன்றும் நமது உடலை உள்ளும் புறமும் சுத்தப்படுத்தும் முக்கிய பணி ஆற்றுகின்றன.

நாம் உட் சுவாசிக்கும் காற்று பிராண வாயுவை உடசெலுத்தி இரத்தத்தின் மூலமாக  உடலில் உள்ள நுண்ணுயிர் செல்களை சுத்தப்படுத்துகின்றன.  இதற்கு தேவையான அளவுக்கு நாம் பிராண வாயுவை உடகொண்டு செல்களிலிருந்து அழுக்குகளை சேகரித்துவரும் கரியமில வாயுவை முழுவதுமாக வெளியேற்ற வேண்டும்.   இதனை நாம் சீராக நடைபெற அனுமதிக்கிறோமா?  அது மட்டுமல்ல.  நம்முடலில் தோலில் உள்ள நுண் துவாரங்கள் வழியாகவும் நம் உடலுக்குள் பிராண வாயு பிரவேசிக்கிறது.
எந்த அளவிற்கு இரத்தம் மூலமாக பிராண வாயு உடலுக்கு தேவையோ அந்த அளவுக்கு தோல் வழியாகவும் பிராண வாயு நம் உடலுக்கு தேவைப்படுகிறது.

அடுத்தபடியாக நீர்.    நமது உடல் உழைப்பால் வெப்பம் அதிகரிக்கிறது. அப்பொழுது உடலில் உள்ள நீர் அந்த வெப்பத்தை உள்வாங்கி வியர்வையாக வெளியேற்றுகிறது.  அவ்வாறு வெளியேற்றும்பொழுது செல்களின் கழிவுகளையும் சேகரித்து சிறுநீரகவும் வியர்வையாகவும் வெளியேற்றுகிறது.    இதற்கு தேவையான அளவிற்கு நாம் தினமும் நீர் பருக வேண்டும்.     உடலின் வெளிப்புறமாகவும் நீரின் தேவை இருக்கிறது.  தொழில் உள்ள நுண் துவாரங்களை அழுக்கு நீக்கி சுத்தம் செய்கிறது.     இதற்காக நாம் குளிக்கிறோம்.

நாம் குளிப்பதன் பலன் இது மட்டுமல்ல. இது உடல் வெப்பத்தை தணிப்பதுடன் உடலின் வெளிப்புறமாக அமைந்திருக்கும் நம் சக்தி மண்டலத்தில் மன எண்ணங்களால் அல்லது எண்ணச்சிதறல்களால் உருவாகும் வெப்பத்தையும் கட்டுப்படுத்துகிறது.   இது நம் மனதின் வெப்பத்தை தணிக்கிறது.  சக்தி மண்டலம் அல்லது மனம் வெப்பமடையும்பொழுது அதன் செயல்படும் சக்தி குறைகிறது; தளர்வு ஏற்படுகிறது.    குளிப்பது இதை சீராக்குகிறது. மனதிற்கு செயல்படும் திறன் அதிகரிக்கிறது.   சரியான முறையில் குளிப்பதால் மட்டுமே நல்ல பலன் ஏற்படும்.    இது எப்படி ?   சரியாக முறையாக குளிப்பது எப்படி? சரியாக வாயுவை உட்க்கொள்வது எப்படி?    விளக்கம் இனி வரும் .

நம் உயிர் ஆகாயத்தின் அம்சம்.   இது மனதின் தியானப்பயிற்சியின் மூலம் உடல் அழியும்வரையில் சீறாகப் பாதுகாக்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்.  நன்றி வணக்கம்.









செவ்வாய், 25 செப்டம்பர், 2018

Five Elements - Element -1- Eternal Space பஞ்ச பூதங்கள் - பூதம் 1 - ஆகாயம் - அது சிவனா? -

பஞ்ச பூதங்கள்  -  பூதம் 1 -  ஆகாயம்  - அது  சிவனா?

இந்த பிரபஞ்சத்தை பாருங்கள்.  அமைதியாக சிந்தனையை ஓடவிடுங்கள்.

பூமியைப் பார்க்கிறோம்.   பூமியில் உள்ள ஜீவ அஜீவ பொருட்களை பார்க்கிறோம்.   பூமியை போன்ற கிரகங்களை பார்க்கிறோம்.   சூரியன் போன்ற நக்ஷத்திரங்களைப் பார்க்கிறோம். இவை எல்லாம் எத்தகையவை.   சிந்தித்துப் பாருங்கள்.  இவை எல்லாம் மாற்றங்களுக்கும் அழிவுக்கும் உட்பட்ட தன்மையவை.   என்றோ ஒருநாள் இவை ஒவ்வொன்றும் அழிந்துவிடும் என்பதை விஞ்ஞானமே ஒப்புக்கொள்கிறது.   மாற்றம் மட்டுமே இந்த உலகத்தில் நிரந்தரமாக நடந்துகொண்டிருக்கிறது.   அழிவு என்றால் என்ன?   உலகத்தில் நாம் பார்க்கிற பொருட்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து வேறொன்றாக உருத்திரிகின்றன.   ஒன்று அழிந்து வேறு ஒன்றாகவோ பலவாகவோ மாற்றம் அடைகிறது.   உருத்திரிகிறது என்பதே சரியாக இருக்கும்.

நம் பார்க்கிற மற்றும் பார்வைக்கு அப்பாற்பட்ட அனைத்து பொருட்களும் குடிகொள்வது ஆகாயம் என்ற வெட்டவெளியில்.   இந்த வெட்டவெளியை நம்மால் பார்க்க முடிகிறதா?     பார்க்கமுடிவதில்லை.    நாம் பூமியின் மேலாக சுற்றிலும் பார்க்கும்பொழுது நீலநிறமாக தெரிவது  ஆகாயமா  அல்லது ஆகாயத்தின் எல்லையா ?    அது ஆகாயமல்ல.  அதன் எல்லையுமல்ல.   அது நம் கண்களுக்கு வகுக்கப்பட்ட பிரபஞ்ச எல்லை மட்டுமே.  எல்லையின்றி விரிந்து பரந்து கிடக்கும் பிரபஞ்சத்தின் நம் பார்வையின் எல்லை மட்டுமே.  உனக்கு இவ்வளவு போதும் என்ற மட்டில் அமைந்து இருக்கும்  மாய, போலி எல்லை.

பார்க்க முடியாத உணர்ந்து அறியமுடியாத ஆகாயத்தை அது  இருக்கிறது என்பதை நாம் எப்படி அறிகிறோம்.   சூரியன் மற்றும் கிரகங்கள் முதலான அனைத்து பொருட்களும் நிலைகொள்வதால் அவற்றின் இருப்பிடமாக ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை நம்மால் உணர அல்லது ஊகிக்க முடிகிறது.   அந்த உணர்வு உறுதியாக நிஜம் என்பதும் நம் உணர்வுக்கு எட்டுகிறது.    யாரும் இதைப்பற்றி சந்தேகம் கொள்வதோ கேள்வி கேட்பதோ கிடையாது.   அனைவரும் ஆகாயத்தின் உண்மையை உறுதியாக ஒப்புக்கொள்கிறோம்.

இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் ஆகாயமே ஆதாரமாக அமைந்திருக்கிறது.   நாம் ஆகாயம் பஞ்சபூதங்களில் ஒன்று என்று சொல்கிறோம்.   சற்றே சிந்தித்துப் பாருங்கள்.   ஆகாயம் எதனால் ஆனது.    ஆகாயத்தின் உள்ளடக்கம் என்ன?  ஒன்றுமில்லை என்பதை யாராலும் மறுக்கமுடியாது    ஆகாயத்தை வெட்ட முடியாது.    அடிக்க  முடியாது.   சிதைக்க முடியாது.   பிரிக்க முடியாது.   அது அழிவற்றது.   எந்த மாற்றத்துக்கும் உட்பட்டதல்ல. அது பூதங்களின் அடிப்படை.   இயற்கையின் அடிப்படைப் பொருள் ஆகும்.

ஆகாயம் இதுவரை விஞ்ஞானத்தின் ஆய்வுக்கு பிடிகொடுக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை/

ஆகாயம் ஒன்று மட்டுமே அடிப்படையானது.    அது வெறும்வெட்டவெளி மட்டுமே.   ஆகாயம் என்பது பரமாத்மா சம்பந்தப்பட்டது.  இது மற்ற நான்குபூதங்கள் உருவாக எதுவாக அமைகிறது.   நான்கு பூதங்களுக்கு இருப்பிடம்  தருகிறது.   பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருட்களினுள்ளும்  ஆகாயம் இருக்கிறது.  ஒவ்வொரு பொருளும் ஆகாயத்தின் உள்ளே அடங்கி இருக்கிறது.   ஆகாயம் தான் சிவன்.   அதுதான் சிவ வாக்கியர் எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்கனே என்று பாடுகிறார்

இனி மற்ற நான்கு பூதங்களைப் பற்றி விளக்கமாகவும் அவை உருவாக ஆகாயம்  எவ்வாறு காரணமாக அமைகிறது என்பதையும் அதில் அடங்கி இருக்கும் சிவ தத்துவத்தையும் தொடர்ந்து  சிந்தனைக்கு கொண்டு வருவோம்.   தொடர்ந்து படியுங்கள்.     நன்றி.   வணக்கம்.

திங்கள், 24 செப்டம்பர், 2018

Chanting and spiritual uplift - 2 மந்திர உச்சாடனம் : ஆன்மீக உணர்வு -2

Chanting and spiritual uplift - 2  மந்திர உச்சாடனம் : ஆன்மீக உணர்வு -2

ஆத்மாவை உணர்வது என்பது கடவுளை உணர்வது;   அறிவது .

இந்த உணர்வின் அனுபவத்தை உணர்ந்த ஒருவர் இன்னொருவருக்கு சொல்லிக்கொடுத்து அல்லது கற்றுக்கொடுத்து உணரவைக்க இயலாது.  வெறும் காட்சி மட்டும் உணர்வையும் அனுபவத்தையும் ஏற்படுத்திவிடாது.  அதாவது பக்தி என்பது வெறும் காட்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.    காட்சி மனதை ஈர்த்து நம் வசப்படுத்தும்;      நம்மை உணர்ச்சி வயப்படுத்தும்.  மனம் தன்  வயப்படுவது முதல் நிலை.  இறைவன் என்கிற தத்துவத்தை உணர்வதற்கான ஆரம்ப நிலையும்  அதுவே.

 கோவில், விக்ரஹம் வேண்டும்.  இவற்றை பராமரிக்கவேண்டும்.   அலங்கார அபிஷேகங்கள் செய்வதாற்கான பொருட்கள் வேண்டும்.  இவற்றுக் கெல்லாம் பணம் தேவை.    இந்த பக்தி  நிலை பணத்தை அடிப்படையாகக் கொண்டது.      இவற்றை எளிமையாகவும் செய்யலாம் ஆடம்பரமாகவும் செய்யலாம்.   அவரவர் பண வசதியைப் பொறுத்து பிரமாண்டமாகவும் செய்யலாம்.  யாரோ ஒருவர் பணம் செலவழிக்க அநேகம் பேர் அதை அனுபவிக்கலாம்.   ஆனால் பணம் தேவை என்பது அடிப்படை. 

பணமும் அகங்காரமும் சாதாரணமாக இணைந்தே இருக்கும்.  நான் என்னும் உணர்வு  இணைந்தே இருக்கும்.  இந்த உணர்வு தன்னை உயர்த்திக் காட்டுவதாகவும் இருக்கலாம்;  அல்லது தன்னை இறைவனுக்கு அடிமைப்படுத்திக்காட்டுவதாகவும் இருக்கலாம். மிக எளியவனாக தன்னை வெளிப்படுத்தலாம்.   இவை எல்லாமும் 'நான் ' என்பதில் அடக்கம். இந்த நிலையில் சிலர்  விதிவிலக்காகவும்  இருக்கலாம்.

பக்தி என்ற முதல் நிலையிலேயே நீண்ட  நாட்கள் நிலைத்து நிற்பது நான் என்கிற எண்ணத்தை நிலைநிறுத்தும்.   நாட்கள் செல்லுந்தோறும் அஹங்காரம் வளரும்.     மனம் உணர்ச்சி வயப்படும். மனம் உணர்ச்சி வயப்படும் முன்னர் அதனை உணர்வு வழிப்படுத்த வேண்டும் .

இறை வழியில் ஆரம்ப நிலையான பக்திக்கு அப்பாற்பட்ட இரண்டாவதான நிலை என்ன.  ஒளியில் இருந்து ஒளியின் இடத்திற்கு இப்பொழுது வருகிறோம்   ஒலிக்கு அடிப்படை அமைதி.   ஒலி  என்பது மந்திர உச்சாடனம்.

இதற்கு பக்தியின் மூலம் தன்  வயப்பட்ட மனமும் தகுந்த இடமும் நேரமும் மட்டும் போதுமானது.

காட்சிகளால் ஈர்க்கப்பட்டு தன்  வசப்பட்ட மனதை, அடுத்தபடியாக இறைவனை உணருவதற்கு பழக்கப்படுத்த வேண்டும்.  இதற்கு மந்திர உச்சாடனம் பயன்படும்.

மந்திரம் என்றால் என்ன? 

வாயால் உச்சரிக்கும் ஒலி.    அதுவே மந்திரம்

ஒளியும் ஒலியும் இறைவனை உணரும் பாதையில் தவிர்க்க முடியாதவைகள்.  

தீபமாகிய ஒளி முதல் நிலையில் வரும்.  ஒலி  இரண்டாவதும் அதன் அப்புறமான  நிலைகளில் எல்லாம் முதன்மையான இடம் வகிக்கும்.

மந்திரம் என்பது வேதங்களிலிருந்து அல்லது சுலோகங்கள் அல்லது சுலோகங்களிலிருந்து தான் எடுக்கப்படவேண்டும் என்பதில்லை.  அப்படியும் எடுக்கலாம்.   ஒன்றோ இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்களால் மந்திரம் அமையலாம்.   ஓதுபவரால் எளிதில் சிரமமின்றி உச்சரிக்கக் கூடியதாக அமைய வேண்டும் என்பது தான் முக்கியம்.   மனதிற்கு இசைந்த பிடித்தமான  சொல் அல்லது ஓசை ஆக  இருந்தாலே போதுமானது.   ' ம்' என்ற ஒரு எழுத்தாக இருக்கலாம்  ஓம் என்ற இரண்டு எழுத்தாக இருக்கலாம்.   ராம் முதலான நாமங்களில் ஒன்றாக  இருக்கலாம்.

மனம் ஒருநிலையை அடையாமல் ஜெப மாலையை வைத்துக்கொண்டு பலரும் உருவிடுவதை பார்த்திருக்கிறேன்.  வாய் ஜெபிக்கும்.   கை மாலையை உருட்டும்.     மனம் எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருக்கும்.    இதனை அவர்கள் முகம் காட்டிக்கொடுக்கும்.

ஆகையால் மனதை நிலை நிறுத்திப் பழகிய பிறகு மந்திர உச்சாடனம் செய்வதே பயன் தரும்.     இல்லை என்றால் மன அழுத்தம் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கவே ஏதுவாகும்.

மந்திரத்தை  முதலில் சிறிய சப்தத்தில் திரும்பத்  திரும்ப   படித்து மனதில் பதிய வைக்கவேண்டும்.   ஆரம்பத்தில் சிறிய சப்தத்தில் படித்தால் மட்டுமே மனதில் உரைக்கும்.  இல்லை என்றால் மனம் ஏற்காது.   தொடர்ந்து மந்திரம் சிறிய சப்தத்தில் படித்து வர அது  மனதில் நிற்கும்.

இதன் பின்னரே உருவிடல் தொடங்கவேண்டும்.   உருவிடல் என்பது நிதானமாக சிறிய சப்தத்தில் உதட்டளவில் திரும்ப திரும்ப சொல்வது.  சில காலம் பொறுமையாக செய்யவேண்டும். தளராமல் செய்யவேண்டும்.   பலன் கிடைத்ததா என்ற சோதனையில் இறங்கக் கூடாது .    நாட்பட நாட்பட நாம் அறியாமலேயே உணர்வதற்கான எந்த வித முயற்சியும் இல்லாமலேயே பலனை உணரத்தொடங்குவோம்.   [பொறுமையும் முடிந்த வரையில் இடைவிடாது தொடர்ந்து ஈடுபடுவதும்  நல்லது..

தினமும் இதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ளவேண்டும்.  அந்த நேரத்தில் உருவிடல் தினந்தோறும் செய்யவேண்டும்.   என்றென்றும் இக்குறித்த நேரத்தில் செய்யவேண்டும்.  தினமும் காலையில் எழுந்த உடன் பல் தேய்ப்பது போல.   குறிப்பிட்ட நேரங்களில் உணவருந்துவதுபோல.   அன்றாடம் தவறாமல் செய்யவேண்டும்.   ஒரு வேலையை தினமும் குறித்த நேரத்தில் செய்யும்போது,  நம் உடலும் மனமும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகி விடுகிறது.    தினமும் எந்த நேரத்துக்கு சாப்பிடுகிறோமோ அந்த நேரத்துக்கு பசி ஏற்படுவது போல.

தினமும் மந்திரம் உருவிட்டு பழகி வரும்பொழுது அந்த மந்திரம் வெகு இயல்பாக நம் நாவில் இருந்து வெளிப்படுகிறது.    நாளடைவில் இந்த இயல்பான ஓசை வெளிப்பாட்டில் ஒரு ரிதம் (சுருதி) உண்டாகிறது.    இந்த ரிதம் அலை அலையாக ஓங்காரத்தை வெளிப்படுத்துகிறது.   இந்த ஓங்காரம் நம் காதுகளில்  ரீங்காரமிடுகிறது.   காதுகளில் கவனத்தை நிறுத்துங்கள்.   உச்ச்சாடனததை கவனியுங்கள்.   இந்த ரீங்காரம் நமது உடலில் ஒவ்வொரு அங்கத்திலும் நம் உடலில் வாழும் ஒவ்வொரு  நுண் உயிரிலும் அதிர்கிறது.
இந்த அதிர்வுகள் நம் உடலில் ஆத்மாவை உணர்த்துகின்றன.  நம் உயிருக்கும் ஆத்மாவிற்கும் இடைப்பட்ட இடைவெளி குறையத்தொடங்குகிறது.

சில பல மாதங்களில் இந்த மந்திரம் நம்முடன் ஒன்றி விடுகிறது. 

இன்ன நேரம் என்றில்லாமல் நம்மை அறியாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நம் மனதில் உருவிடப்படுகிறது.

அப்படி ஒன்றிப்போன பிறகு பலவாறாக இந்த மந்திரத்தை பயன்படுத்தலாம்.  காலையில் எழுந்தவுடன் ஒரு மூன்று முறை உச்சரிக்கலாம்.   அந்த நாளில் பிரச்சினைகள் எதுவானாலும் சிரமத்தை தராது.     நீங்களோ அல்லது வீட்டில் உள்ள யாராவது வெளியே போகும்பொழுது  நீங்கள் மூன்று முறை உருவிடலாம்.     அதனால் வெளியே போகிறவர்கள் எந்த பிரச்சினைகளையும் நேரிடாமல் தடை செய்யவோ அதன் பாதிப்பை குறைக்கவோ ஏதுவாகும்.  இவ்விதம் உங்கள் உசிதம் போல் தேவைகளுக்கு அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.  நாளடைவில் இந்த மந்திரம் உங்கள் உடலோடு ஒட்டி இருக்கும் ஒரு அங்கமாகவே மாறிவிடும்.

மந்திர உச்சாடனம் செய்யும்பொழுது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது தனியாக இன்னொரு வலைப்பூவில் விபரமாக படிக்கலாம்

தொடர்ந்து படியுங்கள்.   kitturengasamy.blogspot.com என்று கூகுள் மூலம் நுழையலாம்.        நன்றி.         வணக்கம்.



ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

Chanting and spiritual uplift - 1மந்திர உச்சாடனம் : ஆன்மீக உணர்வு -1


மந்திர உச்சாடனம் : ஆன்மீக உணர்வு -1

மணி ஓசைகள்   கொட்டு மேளங்கள் தாரை தப்பட்டைகள் பக்தி பாடல்கள் பஜனை முழக்கங்கள் விக்கிரக அலங்காரங்கள் அபிஷேகங்கள் தூப தீபங்கள் ஆராதனைகள் எல்லாம் ஆலயத்தில் ஏன் நடத்தப்படுகின்றன ?

இவை அனைத்தும் அலைந்து திரியும் மனதை கட்டிக்கொண்டு வருவதற்கான கடிவாளங்கள் தான் .  இதற்காக இந்த ஆராதனைகளில் நம் கண்களையும் காதுகளையும ஈடுபடுத்தவேண்டும்  வேறு எதிலும் கவனம் செலுத்தக்கூடாது.

அதிவேகத்தில் எண்ணங்களில் சஞ்சரித்து கொண்டிருக்கும் மனதை ஒரு சில நிமிடங்களுக்காவது ஒருநிலைப்படுத்தி நிலை  நிறுத்துவதற்காக உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்டவை இவை .  இந்த சப்த கோலாகலங்களுக்கும் தூப தீபங்களுக்கும் கட்டுப்பட்டு ஒருசில நிமிடங்களுக்கு மனதை பிடித்து நிறுத்துவதும் இதை சில காலங்களுக்கு தொடர்ந்து செய்வதும் தான் இறைவன் என்ற தத்துவத்தை உணர்வதற்கான ஆரம்ப நிலை - முதல் படி அதாவது ஆரம்ப பள்ளி.   பள்ளி என்பதே ஆதி காலங்களில் இறை நிலை உணர்வதற்கானதும் முக்தி எய்துவதற்கானதும் ஆன நடைமுறை வழிகளை கற்றுக்கொடுப்பதற்கான கூடங்கள்தான்.

காலப்போக்கில் எந்தவிதமான கோலாகலங்களும் இல்லாமல் சில நிமிடங்களில் மனம் ஒருமுகப்படும் தன்மையை அடையலாம்.  இந்த நிலையை  எட்டிய பிறகு தான் மந்திரங்களும் உச்சாடனங்களும் பயன் தருகின்றன.  இந்த நிலையை எட்டியபோது தான் நாம் இறை வழிபாட்டில் அடுத்த அல்லது இரண்டாவது படியை அல்லது நிலையை  அடைகிறோம் .   இந்த நிலையை அடைந்த பிறகுதான் மந்திர உச்சாடனம் செய்யத் தொடங்க வேண்டும் .

இந்த நிலையில் தான் தீக்ஷை என்பது தரப்படுகிறது.   இந்தக்காலத்தில் தீக்ஷை தரும் தகுதி உள்ளவர்கள் எத்தனை பேர் என்பது வேறு விஷயம் தகுதியானவரிடமிருந்து கிடைக்கும் தீக்ஷை மட்டுமே பலன் தரும் .  எந்த தீக்ஷையும் இல்லாமல் மன உறுதியுடன் மந்திரம் உருவிடலாம்.

ஒருநிலைப்பட்ட  மன நிலையில் மந்திர உச்சாடனம் சலிப்பின்றி தொடர்ந்து சிலபல காலம் செய்வதால் நிச்சயமாக  ஆன்மீகத்தின் அடுத்த படியை அல்லது நிலையை அடையலாம்

மந்திரம் என்றால் என்ன?   அதை எப்படி தேர்ந்தெடுப்பது ,   எப்பொழுது எப்படி உருவிடுவது  எதை எல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும் போன்றவைகள் எல்லாம் மந்திர உச்சாடனம் : ஆன்மீக உணர்வு-2 என்று இன்னும் தொடரும்

இந்த blog ஐ  தொடர்ந்து படியுங்கள் . நன்றி. வணக்கம்

சனி, 22 செப்டம்பர், 2018

Devotion/Bakthi and spiritual uplift - 1 பக்தியும் இறை உணர்வும் - 1 பக்தி என்பது ஆன்மீக எல்லையா?


பக்தியும் இறை உணர்வும் - 1  பக்தி என்பது ஆன்மீக எல்லையா?

ஆரவாரம் பக்திக்கு ஆரம்பம். கோவில், உருவச்சிலை அலங்கார அபிஷேகங்கள்,  மணி ஓசை,  மேளதாளங்கள்,  உடல் உறுப்புகளில் மத சின்னங்கள்,  அடையாளங்கள், தூப தீபங்கள்  போன்றவைகள்,  விழா எடுப்பது,  தெய்வ உருவங்களுக்கு திருமணம் செய்வித்து மகிழ்வது  போன்றவைகள் எல்லாம் ஆரவாரங்கள்.  திருவள்ளுவர் வாக்கில் சொன்னால் இவை எல்லாம் ஆகுல நீர .  இந்த ஆரவாரங்களில் தான் பக்தி உண்டாகி வளர்கிறது.    பக்தி தான் ஆன்மீக அறிவுக்கும் வளர்ச்சிக்கும் முதல் படி.   

பக்தி என்பது உணர்ச்சி பூர்வமானது.    மனதை உணர்ச்சி வசப்படுத்தும்.  பக்தியில் தொடரும் அனுபவம் சில காலங்களில்   சில பல நிமிடங்களுக்கு மனதை ஒருநிலை படுத்தும் பக்குவத்தை ஏற்படுத்தும்.   இந்த நிலை தொடரும்போது காலப்போக்கில் அடுத்த நிலைக்கு போக வேண்டும். பக்தி அதிகரித்து உணர்ச்சிகளிலிருந்து மெல்ல வெளியேறி உணர்வுகளுக்குள் ஆட்பட வேண்டும்.   

இங்குதான் ஒரு சரியான குருவின்  வழிகாட்டுதல் அல்லது அறிவுரை தேவைப்படுகிறது.  பக்தியிலிருந்து அடுத்த நிலைக்கு உயர வேண்டும் என்ற உணர்வை அவர் ஏற்படுத்த வேண்டும்.   ஒருநிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர்த்தி விடுபவரே சரியான குருவாக இருப்பார்.   சீடனை அதே  நிலையில் தொடரவைக்கும் குரு தானும் அடுத்த படியை எட்டாதவராகவே இருக்கமுடியும்.  இம்மாதிரியான குருவின் சீடன் என்றும் சீடனாகவே கடை நிலையிலேயே இருப்பான். 

எந்த குருவின் உதவி இல்லாமலும் ஒருவனால் தானாகவே அடுத்த நிலையை அடையவும்  முடியும்.   வள்ளலாருக்கு எந்த குருவும் இருக்கவில்லை.  சீரடி சாயிக்கு எந்த குருவும் இருக்கவில்லை. அவர்கள் என்ன ஆன்மீக உயர்வினை எட்டவில்லையா?  விடா முயற்சியும் சரியான தெளிவான உணர்வுகளும் வழிகாட்டி ஆன்மீகத்தில் ஒவ்வொரு படியாக மேல் நோக்கி உயர்த்திவிடும்.

 மனதை ஒருமுகப்படுத்தி  நிறுத்துகிற நேரத்தை அதிகப்படுத்தி  ஒருமுகத் தன்மையை அனுபவித்து உணர  வேண்டும்.   அப்படி அனுபவிக்கிறபோது உணர்ச்சிகள் குறைந்து உணர்வுகள் வளரத்தொடங்கும்.   உணர்வுகள் வளரும் போது தானாகவே கொஞ்சம் கொஞ்சமாக ஆரவாரங்களிலிருந்தும் சப்த கோலாகலங்களில் இருந்தும் விடுபட்டு அமைதியின் வழிக்கு வந்து விடுவோம்.    பக்தி என்பது சரியான வழியில் கடைபிடிக்கப்படும்போது  நாட்போக்கில் அது அமைதி அல்லது ஆரவாரமற்ற தன்மையை அடைய வழி கோலும்.   இந்த தன்மை தான் ஆன்மாவைப்பற்றி அறியம்  உணர்வுக்கு அடிப்படையானது.   இந்த இரண்டாவது படியை எட்டாமல் பக்தியாகிய முதல் படியிலேயே நின்றுகொண்டிருந்தால் ஆன்மீகத்தில் உயரங்களை என்றென்றைக்கும் எட்டிப்பிடிக்க முடியாமல் போகும்.    வளர்ச்சி தடைபட்டு விடும்.      

இரண்டாவது நிலையில் தொடரும்போது மனதை ஒருமுகப்படுத்தி நிற்கும் நேரம் கூடிக்கூடி அதிகரித்து வரும்.  கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு குறைந்து வரும்.  தேவை இல்லாமல் பேசுவது குறையும். யாரையும் ஓஹோ என்று புகழ மாட்டார்கள்.   புகழுக்கு வசப்படவோ அடிமைப்படவோ மாட்டார்கள்.    தனிப்பட்ட தேவைகள் குறைந்துவிடும்.   விருப்பு வெறுப்புகள் குறையும். சொந்தபந்தங்களிலும் பிறவற்றிலும்  பற்றற்ற தன்மை ஏற்படும்.  இந்த  காலத்தில் இந்த  அளவிற்கு ஆன்மீக வளர்ச்சி அடைந்தாலே போதுமானது.
இந்த நிலையிலேயே தான் தியானம் கைகூடும்.

அடுத்தபடி மௌனம் பேச்சை படிப்படியாக குறைத்து கடைசியில் அடைவது இது.   இது தற்காலத்தில் எல்லோருக்கும் சித்தியாவது கடினம்.   இந்த நிலை அடைந்து தியானத்தில் தொடர்ந்து மூழ்கும்போது தான் முக்தி அல்லது சம்சார சாகரத்திலிருந்து பிறவி எடுப்பதிலிருந்து விடுதலை கிடைக்கும்.

மனம் ருசி என்ற இரண்டும் ஒரு தன்மையில் ஒத்திருக்கின்றன.  இரண்டையுமே ஒருவரால் சுயமாக உணர்ந்து அனுபவிக்க மட்டுமே முடியும்.  நீங்கள் அருந்திய ஒரு பானத்தின்  அல்லது உணவின் ருசி அல்லது சுவையை  நீங்கள் அனுபவித்த அல்லது உணர்ந்த நிலையில் சுவை இன்ன மாதிரி இருந்தது என்று துல்லியமாக சொல்லி இன்னொருவருக்கு புரிய வைக்க முடியுமா?   நீங்கள் சொல்வதிருந்து நீங்கள் அனுபவித்த அதே ருசியையும் உணர்வுகளையும் அதே நிலையில் அவர்களால் அனுபவித்து உணர முடியுமா ?   நிச்சயமாக முடியாது .   அவரவர் தாமாகவே அருந்தி சுவைத்து  அனுபவிக்கும்போது மட்டுமே உணர முடியும்.  இறை உணர்வை மனதால் அனுபவிக்கிறோம்.   அந்த அனுபவத்தை நாம் அனுபவித்த அதே படி இன்னொருவருக்கு விளக்கமாக சொல்லி புரிய வைத்து அனுபவிக்க வைக்க முடியாது.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எண்ணுவது நல்லகுணம் தான்.   ஆனால் ஆன்மீகத்தை பொறுத்தவரை நீங்கள் பக்தியில் பார்த்து பார்த்து அனுபவித்தவற்றை இன்னொருவருக்கு புகட்ட நினைப்பது வீணாகவே முடியும்.   அடுத்த படியில் உணர்ந்து அனுபவித்த இன்பத்தை இன்னொருவருக்கு புரிய வைப்பது இன்னும் கடினம்.

நாம் கேட்கும் ஆன்மீக கதைகள் ஆன்மீக  புராண சொற்பொழிவுகள் எல்லாம் எந்த அளவிற்கு நமது ஆன்மீகத்தை வளர்க்கும் என்பனவற்றை உணர்வு பூர்வமாக அறிந்து கொள்ள இந்த blog -ஐ follow செய்யுங்கள். நன்றி.  வணக்கம்