ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

Chanting and spiritual uplift - 1மந்திர உச்சாடனம் : ஆன்மீக உணர்வு -1


மந்திர உச்சாடனம் : ஆன்மீக உணர்வு -1

மணி ஓசைகள்   கொட்டு மேளங்கள் தாரை தப்பட்டைகள் பக்தி பாடல்கள் பஜனை முழக்கங்கள் விக்கிரக அலங்காரங்கள் அபிஷேகங்கள் தூப தீபங்கள் ஆராதனைகள் எல்லாம் ஆலயத்தில் ஏன் நடத்தப்படுகின்றன ?

இவை அனைத்தும் அலைந்து திரியும் மனதை கட்டிக்கொண்டு வருவதற்கான கடிவாளங்கள் தான் .  இதற்காக இந்த ஆராதனைகளில் நம் கண்களையும் காதுகளையும ஈடுபடுத்தவேண்டும்  வேறு எதிலும் கவனம் செலுத்தக்கூடாது.

அதிவேகத்தில் எண்ணங்களில் சஞ்சரித்து கொண்டிருக்கும் மனதை ஒரு சில நிமிடங்களுக்காவது ஒருநிலைப்படுத்தி நிலை  நிறுத்துவதற்காக உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்டவை இவை .  இந்த சப்த கோலாகலங்களுக்கும் தூப தீபங்களுக்கும் கட்டுப்பட்டு ஒருசில நிமிடங்களுக்கு மனதை பிடித்து நிறுத்துவதும் இதை சில காலங்களுக்கு தொடர்ந்து செய்வதும் தான் இறைவன் என்ற தத்துவத்தை உணர்வதற்கான ஆரம்ப நிலை - முதல் படி அதாவது ஆரம்ப பள்ளி.   பள்ளி என்பதே ஆதி காலங்களில் இறை நிலை உணர்வதற்கானதும் முக்தி எய்துவதற்கானதும் ஆன நடைமுறை வழிகளை கற்றுக்கொடுப்பதற்கான கூடங்கள்தான்.

காலப்போக்கில் எந்தவிதமான கோலாகலங்களும் இல்லாமல் சில நிமிடங்களில் மனம் ஒருமுகப்படும் தன்மையை அடையலாம்.  இந்த நிலையை  எட்டிய பிறகு தான் மந்திரங்களும் உச்சாடனங்களும் பயன் தருகின்றன.  இந்த நிலையை எட்டியபோது தான் நாம் இறை வழிபாட்டில் அடுத்த அல்லது இரண்டாவது படியை அல்லது நிலையை  அடைகிறோம் .   இந்த நிலையை அடைந்த பிறகுதான் மந்திர உச்சாடனம் செய்யத் தொடங்க வேண்டும் .

இந்த நிலையில் தான் தீக்ஷை என்பது தரப்படுகிறது.   இந்தக்காலத்தில் தீக்ஷை தரும் தகுதி உள்ளவர்கள் எத்தனை பேர் என்பது வேறு விஷயம் தகுதியானவரிடமிருந்து கிடைக்கும் தீக்ஷை மட்டுமே பலன் தரும் .  எந்த தீக்ஷையும் இல்லாமல் மன உறுதியுடன் மந்திரம் உருவிடலாம்.

ஒருநிலைப்பட்ட  மன நிலையில் மந்திர உச்சாடனம் சலிப்பின்றி தொடர்ந்து சிலபல காலம் செய்வதால் நிச்சயமாக  ஆன்மீகத்தின் அடுத்த படியை அல்லது நிலையை அடையலாம்

மந்திரம் என்றால் என்ன?   அதை எப்படி தேர்ந்தெடுப்பது ,   எப்பொழுது எப்படி உருவிடுவது  எதை எல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும் போன்றவைகள் எல்லாம் மந்திர உச்சாடனம் : ஆன்மீக உணர்வு-2 என்று இன்னும் தொடரும்

இந்த blog ஐ  தொடர்ந்து படியுங்கள் . நன்றி. வணக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக