பக்தியும் இறை உணர்வும் - 1 பக்தி என்பது ஆன்மீக எல்லையா?
ஆரவாரம் பக்திக்கு ஆரம்பம். கோவில், உருவச்சிலை அலங்கார அபிஷேகங்கள், மணி ஓசை, மேளதாளங்கள், உடல் உறுப்புகளில் மத சின்னங்கள், அடையாளங்கள், தூப தீபங்கள் போன்றவைகள், விழா எடுப்பது, தெய்வ உருவங்களுக்கு திருமணம் செய்வித்து மகிழ்வது போன்றவைகள் எல்லாம் ஆரவாரங்கள். திருவள்ளுவர் வாக்கில் சொன்னால் இவை எல்லாம் ஆகுல நீர . இந்த ஆரவாரங்களில் தான் பக்தி உண்டாகி வளர்கிறது. பக்தி தான் ஆன்மீக அறிவுக்கும் வளர்ச்சிக்கும் முதல் படி.
பக்தி என்பது உணர்ச்சி பூர்வமானது. மனதை உணர்ச்சி வசப்படுத்தும். பக்தியில் தொடரும் அனுபவம் சில காலங்களில் சில பல நிமிடங்களுக்கு மனதை ஒருநிலை படுத்தும் பக்குவத்தை ஏற்படுத்தும். இந்த நிலை தொடரும்போது காலப்போக்கில் அடுத்த நிலைக்கு போக வேண்டும். பக்தி அதிகரித்து உணர்ச்சிகளிலிருந்து மெல்ல வெளியேறி உணர்வுகளுக்குள் ஆட்பட வேண்டும்.
இங்குதான் ஒரு சரியான குருவின் வழிகாட்டுதல் அல்லது அறிவுரை தேவைப்படுகிறது. பக்தியிலிருந்து அடுத்த நிலைக்கு உயர வேண்டும் என்ற உணர்வை அவர் ஏற்படுத்த வேண்டும். ஒருநிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர்த்தி விடுபவரே சரியான குருவாக இருப்பார். சீடனை அதே நிலையில் தொடரவைக்கும் குரு தானும் அடுத்த படியை எட்டாதவராகவே இருக்கமுடியும். இம்மாதிரியான குருவின் சீடன் என்றும் சீடனாகவே கடை நிலையிலேயே இருப்பான்.
எந்த குருவின் உதவி இல்லாமலும் ஒருவனால் தானாகவே அடுத்த நிலையை அடையவும் முடியும். வள்ளலாருக்கு எந்த குருவும் இருக்கவில்லை. சீரடி சாயிக்கு எந்த குருவும் இருக்கவில்லை. அவர்கள் என்ன ஆன்மீக உயர்வினை எட்டவில்லையா? விடா முயற்சியும் சரியான தெளிவான உணர்வுகளும் வழிகாட்டி ஆன்மீகத்தில் ஒவ்வொரு படியாக மேல் நோக்கி உயர்த்திவிடும்.
மனதை ஒருமுகப்படுத்தி நிறுத்துகிற நேரத்தை அதிகப்படுத்தி ஒருமுகத் தன்மையை அனுபவித்து உணர வேண்டும். அப்படி அனுபவிக்கிறபோது உணர்ச்சிகள் குறைந்து உணர்வுகள் வளரத்தொடங்கும். உணர்வுகள் வளரும் போது தானாகவே கொஞ்சம் கொஞ்சமாக ஆரவாரங்களிலிருந்தும் சப்த கோலாகலங்களில் இருந்தும் விடுபட்டு அமைதியின் வழிக்கு வந்து விடுவோம். பக்தி என்பது சரியான வழியில் கடைபிடிக்கப்படும்போது நாட்போக்கில் அது அமைதி அல்லது ஆரவாரமற்ற தன்மையை அடைய வழி கோலும். இந்த தன்மை தான் ஆன்மாவைப்பற்றி அறியம் உணர்வுக்கு அடிப்படையானது. இந்த இரண்டாவது படியை எட்டாமல் பக்தியாகிய முதல் படியிலேயே நின்றுகொண்டிருந்தால் ஆன்மீகத்தில் உயரங்களை என்றென்றைக்கும் எட்டிப்பிடிக்க முடியாமல் போகும். வளர்ச்சி தடைபட்டு விடும்.
இரண்டாவது நிலையில் தொடரும்போது மனதை ஒருமுகப்படுத்தி நிற்கும் நேரம் கூடிக்கூடி அதிகரித்து வரும். கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு குறைந்து வரும். தேவை இல்லாமல் பேசுவது குறையும். யாரையும் ஓஹோ என்று புகழ மாட்டார்கள். புகழுக்கு வசப்படவோ அடிமைப்படவோ மாட்டார்கள். தனிப்பட்ட தேவைகள் குறைந்துவிடும். விருப்பு வெறுப்புகள் குறையும். சொந்தபந்தங்களிலும் பிறவற்றிலும் பற்றற்ற தன்மை ஏற்படும். இந்த காலத்தில் இந்த அளவிற்கு ஆன்மீக வளர்ச்சி அடைந்தாலே போதுமானது.
இந்த நிலையிலேயே தான் தியானம் கைகூடும்.
அடுத்தபடி மௌனம் பேச்சை படிப்படியாக குறைத்து கடைசியில் அடைவது இது. இது தற்காலத்தில் எல்லோருக்கும் சித்தியாவது கடினம். இந்த நிலை அடைந்து தியானத்தில் தொடர்ந்து மூழ்கும்போது தான் முக்தி அல்லது சம்சார சாகரத்திலிருந்து பிறவி எடுப்பதிலிருந்து விடுதலை கிடைக்கும்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எண்ணுவது நல்லகுணம் தான். ஆனால் ஆன்மீகத்தை பொறுத்தவரை நீங்கள் பக்தியில் பார்த்து பார்த்து அனுபவித்தவற்றை இன்னொருவருக்கு புகட்ட நினைப்பது வீணாகவே முடியும். அடுத்த படியில் உணர்ந்து அனுபவித்த இன்பத்தை இன்னொருவருக்கு புரிய வைப்பது இன்னும் கடினம்.
நாம் கேட்கும் ஆன்மீக கதைகள் ஆன்மீக புராண சொற்பொழிவுகள் எல்லாம் எந்த அளவிற்கு நமது ஆன்மீகத்தை வளர்க்கும் என்பனவற்றை உணர்வு பூர்வமாக அறிந்து கொள்ள இந்த blog -ஐ follow செய்யுங்கள். நன்றி. வணக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக