திங்கள், 17 டிசம்பர், 2018

வாழ்க்கை : பிறவிகள், மரணங்கள், அனுபவங்கள் Life : Birth, Death and Experiences

வாழ்க்கை   :  பிறவிகள், மரணங்கள், அனுபவங்கள்  Life, Birth, Death and Experiences

வாழ்க்கை அனுபவங்கள்  - அதில் பிறவிகள் பல.   மரணங்கள்  பல -

வாழ்க்கையில் ஒரு முறை பிறப்பு.   ஒருமுறை மரணம்.   இது தானே அனுபவம்.     

ஒரே வாழ்க்கையில் பல பிறவிகளா,    பல மரணங்களா.  எப்படி? என்று கேட்கிறீர்களா?

தினமும் செத்து  செத்து பிழைக்கிறேன் என்று சிலர் சொல்லக் கேட்டதில்லையா !   

உலகில் மனிதன் முதலில் பிறக்கிறான்.  முதலாவது  பிறவி.    அம்மாவின் வயிற்றில் இருந்து.       வாழ்க்கை என்ற வீட்டின் வாசலில் வந்து பிறந்து விழுகிறான்.   வாழ்க்கையில் முன் தாழ்வாரத்தில்/திண்ணையில்     தவழ்கிறான்.

வாழ்க்கையில் இது மகிழ்ச்சி தரும் மணம்.    வாழ்க்கையில்  புகும் மணம். 

வாழ்க்கை வீட்டினுள்  பிரவேசிக்க அங்கே காத்திருப்பு .  அப்பா, அம்மா, அவர் வழி சொந்தம், பந்தம், நண்பர், சுற்றம்.  படிப்பு. துடிப்பு,  சுதந்திரம்,  விளையாட்டு.  துள்ளிக் குதிக்கும் கன்று போல் குழந்தையாக பின் இருபது களில் காளையாக உலா வரும் காலம்.

சுதந்திர இளைஞனாக ஒரு மரணம்.    மீண்டும்  ஒரு அடுத்த பிறவி

ஒரு துணையின்  கை  பிடித்து நடு வீட்டினுள் பிரவேசம்.  இது இரண்டாவது பிறவி.  மறு  ஜென்மம்.  புதுப்பிறவி.

வாழ்க்கை வீட்டில் இது திருமணம்.

இனி அவன் புது மனிதன். ஒரு புதுப்பிறவி

வாழ்க்கையின் புத்துணர்வு.  அவன் முற்றிலும் புதியவன்.   புது நண்பர்கள், புது உறவுகள்.  புது சொந்தம்,  பந்தம்.  எல்லாம் எல்லாம் புதியன.   வாழ்க்கையில் புது மரியாதை.   சமூக அந்தஸ்து.   நான் என்னும் உயர்வு.

பழைய உறவுகள், நண்பர்கள் பந்தங்கள் வாசலுக்கு வெளியில்.  கூசலின்றி தலைகீழ் மாற்றம்.      பழைய உறவுகள் பொருட்டல்ல.   இன்பம், துன்பம், ஆரவாரம், துயரம், மகிழ்ச்சி. எல்லாம் எல்லாம் புது அனுபவம். 

வண்டிகளில் வயல்களில் பணியெடுக்கும் காளையாய் துணையின் முன் அடங்கிப்போகும் காலம்.

அப்பா அம்மா பின் தாழ்வாரத்துக்கு தள்ளிப் போனார்கள்

சம்பாத்தியம, வறுமை, குழந்தைகள், அப்பா/அம்மா  பதவி.  குடும்பம், அதன் பரிபாலனம், வளர்ச்சி.,வீழ்ச்சி, ஏற்ற இறக்கங்கள்.

குழந்தைகள் பெரியவர்கள்  ஆனார்கள்.    அப்பா அம்மா பின் வாசலில் கால் வைக்கிறார்கள்.

குழந்தைகள் திருமணம்.  அவர்கள் முன் தாழ்வாரத்தில்
இருந்து வீ ட்டினுள்   பிரவேசிக்க இவன் துணையுடன் பின் தட்டில் நுழைவு.

பெயரர்கள் வரவு.     அடுத்த இரண்டாவது மரணம்.

மீண்டும்  இவனுக்கு ஒரு  புது பிறவி..    மூன்றாவது பிறவி.  தாத்தா பதவி.

குதூகலம், மகிழ்ச்சி,  பேரர்கள் . அவருடன் களியாட்டம்.  அவர்கள் வளர வளர இவன்/இவள்  புறவாசல் பிரவேசம்.

வயது அறுபது.  அடுத்த மூன்றாவது மரணம்.

புறக்கட்டு பிரவேசம்.   புதிய அடுத்த பிறவி.      நான்காவது பிறவி.    நாய் போல் குறைத்து வாழும் காலம்.

அறுபதில் ஒரு மணம். அது திருமணம் விடும் மணம்

துணையின் உறவு விடும் மணம். எல்லா உறவுகளும் விடும் மணம்.   பின் தட்டில்/பின் வாசலுக்கு வெளியில்  அவனுக்கு தனிமை.   துணைக்கும் தான்.    முற்றத்து நாய் போல் குரைத்து வாழும் காலம்.

பற்றை, பாசத்தை  ஒழித்தால் நிம்மதி.    பற்றில் ஒட்டி இருந்தால் துன்பம், விரக்தி. பற்றாதிருப்பது, ஒட்டாமலிருப்பது : இதுவே நிம்மதி 

எண்பதுகளை நோக்கி ஆமையாய் நகரும் பயணம்.

துணை விடை பெற்றால்  அடுத்த மரணம்.   இனி அடுத்த புது தனிப்பிறவி.  இது ஐந்தாவது பிறவி.     ஆந்தை போல் அங்குமிங்கும் விழித்து அடங்கிப்போகும். அமைதியின் பக்குவம் காக்கும் காலம்.

வருடங்கள் ஓடும்.     மனம் சிதறும்;  அது அடுத்த மரணத்தை  நாடி ஓடும்.    தளறும் உடல்.  வாட்டும்  நோய்கள்.  அடுத்த மரணம் நெருங்கும் 

படுக்கை பிரவேசம்.  இது ஆறாவது பிறவி. 

எண்ணங்கள் மாறி மாறி வரும்; எண்ணங்கள் மட்டுமே உறவுகளாய் உடன் நிற்கும். 
பழைய நினைவுகள் மாறி மாறி வரும்.
இடையில்  வந்த உறவுகள்  ஒதுங்கி போகும்.   
ஒதுக்கிய பழைய உறவுகளை எண்ணங்கள்  நாடும். 
அந்த உறவுகள் எட்டாமல் போகும்.  
தனிமை வாட்டும் .   முதுமை விரட்டும். 

உணர்வுகள் முதிர்ச்சி பெற்றால்  நிம்மதி.       உணர்வுகள் தளர்ந்து  உணர்ச்சிகள் வளர்ந்தால்  துயரம்.

ஒருவராய் பிறந்து, இருவராய் இணைந்து, பலராய் இன்னும் பலராய் பெருகி களைத்து வெறுத்து  முடிவில் ஒருவராய் கழிக்கும் தனிமை காலம். 

இனி  இறுதி மரணம்.   எல்லாம்  சாந்தம்.    எங்கும் அமைதி.  எங்கும்எதுவுமே இல்லை. 

ஒரு தாயின் வயிற்றில் இன்னுமொரு மறு ஜென்மமா!    யார் அறிவார்? 

வாழ்க்கையின் ஒவ்வொரு பிறவிக்கு பின்னரும் ஆள் மாறாட்டம்.  பழைய ஆள் தொலைந்து போகிறான்.  பழைய உறவுகள் தொலைந்து போகின்றன.

இடையில் வரும் மயக்கம் தரும் புது உறவுகள்.   அடுத்த பிறவியில் கலைந்து போகின்றன.

ஒவ்வொரு பிறவியிலும் பழைய உறவுகள் விலக்கப்படும்

எல்லா பிறவியிலும் தோன்றி தோன்றி மறையும் பாசங்கள்.      பழையதை ஒழித்து  புதிய பாசறைகளை நாடும் புதுப்புது  பாசங்கள்.

 வாழ்க்கையின் எல்லா பிறவியிலும் எஞ்சி நிற்பது சுயநலமே.

இவை எல்லாம் இயற்கைக்கு உட்பட்ட பிறப்புகள்.

இன்னும் செயற்கையாய் பிறக்கிறான் பல முறை.    இன்னும் வித்தியாசமாய். இயற்கைக்கு அப்பாற்பட்டதாய்.

பணம் குவியும்போது ஒரு பிறவி .   தினமும் நாடிய பழைய உறவுகளை விலக் குகிறான்  உடன் பிறந்தோர்க்கும் கதி இதுவே.   தன்  நிலை ஒத்த உறவுகளை ஏற்கிறான்.   பழையன எல்லாம் மறக்கிறான்.   போலியாய் நடிக்கிறான். பொய்யினில் பொய்யாகி  வாழ்கிறான்  அன்பின் அருமையை மறக்கிறான்

இன்னுமொரு  மாற்று  நிலை.

பணமிழந்து ஏழையாக ஒரு பிறவி. 

பழைய உறவுகள் இவனை விலக்கும் .   பணத்துடன் இருந்த போது  இவன் விலக்கிய உறவுகள் மீண்டும் வந்து அணைக்கும் . 

அன்பின் அருமையை உணரும் தருணம்.

மீண்டும் பணம் குவியும்போது ஒரு மரணம். மீண்டும்  ஒரு புதுப்பிறவி.  அனைத்தையும் மறந்து மீண்டும் அகந்தை.  பழைய நிலைக்கு போகிறான்.

இன்னும் பலவித பிறவியும் மணமும் மரணமும். 

இது ஒரு முழு வாழ்க்கை     இடையில் முடியும் குறை வாழ்க்கையும் உண்டு.

பலருக்கும் பலவிதமாய், ஒவ்வொருவருக்கும் வேறு விதமாய் தொடரும்.

மரணங்கள் மனிதனுக்கு எதையும் கற்பிப்பதில்லை.

என்றும் எஞ்சி நிற்பது நான், எனது எனும் சுயநலமே.   

யாரும் விதிவிலக்கல்ல.   நானும் அதில் ஒருவன்.





  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக