செவ்வாய், 25 செப்டம்பர், 2018

Five Elements - Element -1- Eternal Space பஞ்ச பூதங்கள் - பூதம் 1 - ஆகாயம் - அது சிவனா? -

பஞ்ச பூதங்கள்  -  பூதம் 1 -  ஆகாயம்  - அது  சிவனா?

இந்த பிரபஞ்சத்தை பாருங்கள்.  அமைதியாக சிந்தனையை ஓடவிடுங்கள்.

பூமியைப் பார்க்கிறோம்.   பூமியில் உள்ள ஜீவ அஜீவ பொருட்களை பார்க்கிறோம்.   பூமியை போன்ற கிரகங்களை பார்க்கிறோம்.   சூரியன் போன்ற நக்ஷத்திரங்களைப் பார்க்கிறோம். இவை எல்லாம் எத்தகையவை.   சிந்தித்துப் பாருங்கள்.  இவை எல்லாம் மாற்றங்களுக்கும் அழிவுக்கும் உட்பட்ட தன்மையவை.   என்றோ ஒருநாள் இவை ஒவ்வொன்றும் அழிந்துவிடும் என்பதை விஞ்ஞானமே ஒப்புக்கொள்கிறது.   மாற்றம் மட்டுமே இந்த உலகத்தில் நிரந்தரமாக நடந்துகொண்டிருக்கிறது.   அழிவு என்றால் என்ன?   உலகத்தில் நாம் பார்க்கிற பொருட்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து வேறொன்றாக உருத்திரிகின்றன.   ஒன்று அழிந்து வேறு ஒன்றாகவோ பலவாகவோ மாற்றம் அடைகிறது.   உருத்திரிகிறது என்பதே சரியாக இருக்கும்.

நம் பார்க்கிற மற்றும் பார்வைக்கு அப்பாற்பட்ட அனைத்து பொருட்களும் குடிகொள்வது ஆகாயம் என்ற வெட்டவெளியில்.   இந்த வெட்டவெளியை நம்மால் பார்க்க முடிகிறதா?     பார்க்கமுடிவதில்லை.    நாம் பூமியின் மேலாக சுற்றிலும் பார்க்கும்பொழுது நீலநிறமாக தெரிவது  ஆகாயமா  அல்லது ஆகாயத்தின் எல்லையா ?    அது ஆகாயமல்ல.  அதன் எல்லையுமல்ல.   அது நம் கண்களுக்கு வகுக்கப்பட்ட பிரபஞ்ச எல்லை மட்டுமே.  எல்லையின்றி விரிந்து பரந்து கிடக்கும் பிரபஞ்சத்தின் நம் பார்வையின் எல்லை மட்டுமே.  உனக்கு இவ்வளவு போதும் என்ற மட்டில் அமைந்து இருக்கும்  மாய, போலி எல்லை.

பார்க்க முடியாத உணர்ந்து அறியமுடியாத ஆகாயத்தை அது  இருக்கிறது என்பதை நாம் எப்படி அறிகிறோம்.   சூரியன் மற்றும் கிரகங்கள் முதலான அனைத்து பொருட்களும் நிலைகொள்வதால் அவற்றின் இருப்பிடமாக ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை நம்மால் உணர அல்லது ஊகிக்க முடிகிறது.   அந்த உணர்வு உறுதியாக நிஜம் என்பதும் நம் உணர்வுக்கு எட்டுகிறது.    யாரும் இதைப்பற்றி சந்தேகம் கொள்வதோ கேள்வி கேட்பதோ கிடையாது.   அனைவரும் ஆகாயத்தின் உண்மையை உறுதியாக ஒப்புக்கொள்கிறோம்.

இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் ஆகாயமே ஆதாரமாக அமைந்திருக்கிறது.   நாம் ஆகாயம் பஞ்சபூதங்களில் ஒன்று என்று சொல்கிறோம்.   சற்றே சிந்தித்துப் பாருங்கள்.   ஆகாயம் எதனால் ஆனது.    ஆகாயத்தின் உள்ளடக்கம் என்ன?  ஒன்றுமில்லை என்பதை யாராலும் மறுக்கமுடியாது    ஆகாயத்தை வெட்ட முடியாது.    அடிக்க  முடியாது.   சிதைக்க முடியாது.   பிரிக்க முடியாது.   அது அழிவற்றது.   எந்த மாற்றத்துக்கும் உட்பட்டதல்ல. அது பூதங்களின் அடிப்படை.   இயற்கையின் அடிப்படைப் பொருள் ஆகும்.

ஆகாயம் இதுவரை விஞ்ஞானத்தின் ஆய்வுக்கு பிடிகொடுக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை/

ஆகாயம் ஒன்று மட்டுமே அடிப்படையானது.    அது வெறும்வெட்டவெளி மட்டுமே.   ஆகாயம் என்பது பரமாத்மா சம்பந்தப்பட்டது.  இது மற்ற நான்குபூதங்கள் உருவாக எதுவாக அமைகிறது.   நான்கு பூதங்களுக்கு இருப்பிடம்  தருகிறது.   பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருட்களினுள்ளும்  ஆகாயம் இருக்கிறது.  ஒவ்வொரு பொருளும் ஆகாயத்தின் உள்ளே அடங்கி இருக்கிறது.   ஆகாயம் தான் சிவன்.   அதுதான் சிவ வாக்கியர் எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்கனே என்று பாடுகிறார்

இனி மற்ற நான்கு பூதங்களைப் பற்றி விளக்கமாகவும் அவை உருவாக ஆகாயம்  எவ்வாறு காரணமாக அமைகிறது என்பதையும் அதில் அடங்கி இருக்கும் சிவ தத்துவத்தையும் தொடர்ந்து  சிந்தனைக்கு கொண்டு வருவோம்.   தொடர்ந்து படியுங்கள்.     நன்றி.   வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக