ஞாயிறு, 13 ஜனவரி, 2019

அஷ்டாங்க யோகத்தின் எட்டு நிலைகள். இந்த காலத்துக்கு ஒத்து வருமா? ஓர் விளக்கம்




அஷ்டாங்க யோகத்தின் எட்டு நிலைகள்

வீடு பெறுதல், மோக்ஷம் அல்லது சமாதி  நிலையை அடையும் வழியான அஷ்டாங்க யோகத்தின் எட்டு நிலைகள்  இங்கு விளக்கப்படுகின்றன .     ஆன்மா, மனம், உயிர்,  புத்தி,  சமாதிநிலை - ஓர் விளக்கம் என்னும் இடுகையின் தொடர்ச்சியாக இதனை படிக்கவேண்டும்.  அதனை படிக்காதவர்கள் முதலில் அதனை படித்து அறிந்தபின்னர் இந்த தொடரைப் படிக்கவும்.

யமம்,  நியமம் ஆகியவை  அஷ்டாங்க யோகத்தின் முதல் இரண்டு  அடிப்படை நிலைகள்.          முறையே சமூகத்தில் நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்,  என்பதையும் நம்மில் எதையெல்லாம் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதையும்  குறிக்கின்றன.

இவை மனம் புத்தி ஆகிய  இரண்டையும்  கட்டிப்போடுவதற்கான வழிகள்.

யமம்:  சமூகத்தில் கடைபிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள். இதன் உட் பிரிவுகள் ஐந்து :       அவையாவன:

1.அஹிம்சை :  சக உயிர்களை துன்புறுத்தாமை;  வன்முறையைத்  தவிர்த்தல்.
2.சத்தியம்:  உண்மையாக நடந்து, உண்மையையே பேசி, நம்பகத்தன்மை       யுடன் வாழ்தல், போலித்தனத்தை தவிர்த்தல்.   உண்மை பேசுவதால் இடையூறு ஏற்படும்    சந்தர்ப்பங்களில் உண்மையை தவிர்ப்பதும் இதில் அடங்கும்.
3. அஸ்தேயம்:  பிறர் உடைமைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ          திருடாதிருத்தல்; பிறருடைய  இயலாமையையும்  அறியாமையையும் சுயநலத்துக்காகவும் பொருள் சேர்க்கவும் பயன்படுத்தாமல் இருத்தல், அதாவது களவு தவிர்த்தல்.
4. பிரம்மச்சரியம் : பிரம்மத்தின் அம்சமாகிய உடலை முறையாக தினமும்     உடலொழுக்கத்துடன் பேணி பாதுகாத்தல்:  கட்டுப்பாடான உணவுப் பழக்கவழக்கங்கள், மிதமான  உடற்பயிற்சி மற்றும் மிதமான உடலுறவு ஈடுபாடு பழக்கங்கள்.
5. சுயநலம் இன்மை :  நான் என்னுடையது என்ற உணர்வுகளில் இருந்து             விடுபடுதல்.   பொறாமை,. பேராசை முதலானவைகளைத் தவிர்த்தல்.பிறர் உரிமைகளையும் அவர்கள் சுதந்திரத்தையும் மதித்து நடத்தல் 

நியமம்:   அனுசரிக்க வேண்டிய சுய ஒழுக்கங்கள்.     இதன்  உட் பிரிவுகள்
ஐந்து :       அவையாவன:

1. சௌச்சம் :  உடல் சுத்தம் அல்லது தூய்மை 
2. சந்தோசம்:     மன நிறைவு, எதிலும் திருப்தி அடைதல், மகிழ்ச்சி                              அடைதல்.
3. தபஸ் :   மன உறுதி , வைராக்கியம் இவற்றுடன் தெளிவான  குழப்பமற்ற            மனநிலையுடன் சஞ்சலமின்றி தெளிவுடன் இருப்பது . 
4. ஸ்வாத்யாயம் :   கல்வி கேள்விகள் வழியாக விசாலமான அறிவை வளர்த்துக்கொள்ளுதல் .  உணர்வுகள்  மூலம் ஏற்படும்  சுய விழிப்புணர்வு            அடைதல் 
5. ஈஸ்வர பிரநிதானம்:  எல்லையற்ற  எங்கும் நிறைந்த இறைவனை                      உணர்வுபூர்வமாக பரந்து  விரிந்த தெளிவுடன்   அறிதல்  

இவற்றை நாம் நம்மில் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

மூன்றாவது நிலை ஆசனங்கள் .  அதாவது உடலை கட்டுப்படுத்தி ஆரோக்கியததுடன் அமரும்   முறைகள்.    இவையே இன்று யோக (த்திற்கு  வழி கோலும்) ஆசனங்கள் என்று அறியப்படுகின்றன.     

இறுதி யோகமான சமாதி நிலையை  அடைவதற்கு முன்னோடியாக அமைபவை தான் அடுத்ததாக வரும்  நான்கு நிலைகள். அவற்றை  கடைபிடிக்க    எவ்விதமான மன, உடல் அழுத்தமின்றி  அசையாவண்ணம் தளர்த்திய நிலையில் , இலகுவாக  அமர்வது  அவசியமாகிறது.      இதற்காக ஏற்படுத்தப்பட்ட  ஆசன  அல்லது அமரும்   நிலைகளே இவைகள்.    உடற் பயிற்சிகளின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலை கட்டுக்குள் நிறுத்தி எய்தும் நிலை தான் இலகுநிலை அமர்தல் (யோக ஆசனம் -ஒருங்கிணைந்த நிலை )

நான்காவது   பிராணாயாமம்     அதாவது  பிராண அயமம் என்னும் மூச்சுக்கட்டுப்பாடு.  தொடர்ச்சியான கட்டுக்கோப்பான சீரான முறையில்  
செய்யும் மூச்சு  பயிற்சி.  மூச்சை உள்ளிழுத்தல், வெளியேற்றுதல் ஆகியவற்றை இயல்பான கட்டுக்குள் கொண்டு வந்து சீரமைப்பது.    ஒரு நிமிடத்தில்  நாம் விடும் மூச்சு (ஒரு உள்ளிழுப்பும்  ஒரு வெளியேற்றமும்) சாதாரணமாக அறுபது முதல் எழுபது வரையில் இருக்கும்.   இந்த எண்ணிக்கை குறைந்து வரும்தோறும் ஆரோக்கியம் அதிகரிக்கும்; ஆயுள் அதிகரிக்கும் மனம் நிதானம் மற்றும் தெளிவு அடையும்.   இது   உயிரையும்  புத்தியையும் ஒருங்கிணைத்து  மனதினை  முழுக்கட்டுப்பாட்டில் நிறுத்தி மனதை வலுப்படுத்தும்.

ஐந்தாவது தன்மை பிரத்தியாகாரம்.    இது தியானத்திற்கு  அடிப்படை யான  ஐம்புலன்களை ஆளும் தன்மையை வளர்க்கும். அதாவது  பிராணாயாமம் தொடர்ந்து செய்வதன்மூலம் மனம் வலுப்பெறும்.  மனதின் கட்டுக்குள் உயிர் வரும். உயிரின் கட்டுக்குள் புத்தி வரும்.    ஆக மனதின் கட்டுப்பாட்டுக்குள்  அடங்கும் புத்தியினால் ஐம்புலன்கள் கட்டுப்படும்.   இது புத்தியை  மனதின் கட்டுக்கோப்பில் இருந்து விடுபடாமல், ஆசைக்கு அடிமைப்படாமல்   விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு கட்டுப்படுத்தி வைக்க உதவுகிறது.    புலன்களை அடக்கி உணர்வுகளை உடலுக்குள் மட்டுமே நிலைநிறுத்துவது.     உணர்வுகளை உடலுக்குள் தொடர்ந்து நிறுத்துவது பிரத்தியாகாரம். கடவுள் என்ற நிலையை ஏற்படுத்தும்   உன்னுள்ளே கடந்து செல். அங்கு நிலை கொள். கடவுள்.

ஆறாவது தாரணை.   அதாவது   அசையாத அலைபாயாத உறுதியான தன்மையுடன் பிரத்தியாகாரம் தொடரும்பொழுது உணர்வுகள் தொடர்ந்து உடலுக்குள் வலம் வரும்.  உணர்வுகளை  ஒருநிலைப்படுத்தி தொடர்ந்து உடலுக்குள் அசைவின்றி உறுதியுடன்  நிறுத்துவது தாரணை. .   இதனால் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் இருந்து விடுபட்டு மனதில் நிலைபெறும்.    கடவுள்  என்று உண்மையில் நாம் எதனை கருதுகிறோமோ அதனை உணர வைக்கும்.  இது அடுத்த ஏழாவது நிலையில் கொண்டு சேர்க்கும் 

ஐந்தாவதும் ஆறாவதுமான நிலைகளின் ஒருங்கிணைவே  ஏழாவது நிலையான  தியானம்.    அதாவது புலன்களை கட்டுப்படுத்தி உணர்வுகளை உடலில் தொடர்ந்து உறுதியாக நிறுத்தும் பயிற்சி.   தவம் எனப்படுவதும் இதுவே .   உடலுடன் ஒருநிலைப்பட்ட மனதை விழிப்புணர்வில் தொடர்ந்து நிறுத்துவது.  மனதை கடவுளில் தொடர்ந்து நிறுத்துவது .   இது தொடரும்பொழுது உயிர் மனதுக்குள்ளும்,   தொடர்ந்து மனம் ஆத்மாவுக்குள்ளும் லயித்து நிற்கும்.  மனம் ஆத்மாவில் லயித்த நிலையில்  ஆத்மாவின் தூய்மை எனும் நேர்மறை சக்தி வலுவடையும் .  இந்நிலை தொடர்ந்து இறுதியில்  ஆத்மா பரமாத்மாவுக்குள் லயிக்கிறது.    ஆத்மாவின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் மனம் உடல் எல்லாம் ஒடுங்கி விடும் நிலை .  இதுதான்  எட்டாவது சமாதி நிலை;  ஆத்மாவின் இறுதி நிலை.  பரமாத்மாவுடன் இணைந்த  ஆத்மாவின் இறுதி நிலை.  பரமாத்மாவில் லயித்த  நிலை.

முதல் நிலையிலிருந்து ஒவ்வொரு நிலையையும் முறையாக சிலகாலம் தொடர்ந்து கடைபிடித்தால் அடுத்த நிலை எளிதாக வழங்கும்.   ஓவ்வொரு நிலையம் தொடர்ந்து நம்மை வந்தடையும்.   இறுதி யோக நிலையை அடைய வழி கோலும்

தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி அனுசரித்து வந்தாலே போதுமானது. மரணத்தில் முக்தி அடைய இயலா  விடினும் ஆத்மா மேலும் தூய்மை பெற்று உடலிலிருந்து வெளியேறும்போது உயர்ந்த நிலையில்  வெளியேறும்.   இதன் தொடர்ச்சி அடுத்து வரும்  ஜென்மங்களிலும்  தொடரும்.  உயர்நிலை எய்தி முக்தி  சாத்தியமாகும் வாய்ப்பும் வரும் ஜென்மங்களில் பெறலாம். 

இந்நிலை எய்த அடிப்படையான யமம் , நியமம்  ஆகியவைகளை அனுசரிக்கவேண்டியது மிக முக்கியம்.

இன்றைய கால கட்டத்தில் பரவலாக பேசப்படும்  மற்றும் பயிற்றுவிக்கப்படும் தியானம் அல்லது meditation அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிடும் தியானத்திலிருந்து வேறுபட்டது.     கற்போரும், கற்பிப்போரும் இங்கு யமம் நியமங்களை  பொருட்படுத்துவதில்லை.   இது ஆசனம் மற்றும் பிராணாயாம முறைகளை கற்பதன் மூலம் மனதை அமைதி படுத்தி தெளிந்த நிலையில் நிறுத்துவதற்காக மட்டுமே.  இது புத்திக்கு சக்தி பகரும்.   புத்தி தெளிவடையும். பலன்கள் உயிர் உடல் அளவிலேயே அமையும் ஆனால் மனதையும்  ஆத்மாவையும் ஒண்றிணைக்காது.    பலன்கள் உயிர் உடல் அளவிலேயே அமையும்.
மனம் உயிர் அல்லது புத்தியின் கட்டுக்குள் அடங்கி விடும்.   இப்படிப்பட்ட பயிற்சி யினால் பலனே இல்லை என்று சொல்ல இயலாது.  பலன் பொருளாதார வளர்ச்சிக்கான முறையில் மனதை நல்லதோ கெட்டதோ எந்த வழியிலேனும் செலுத்த முயல்வதில்லை வெற்றி அளிக்கும். அதற்கான மனத்தெளிவை நல்கும்.  மனதை ஆன்மாவிடம் எடுத்து செல்லாது.

யமம், நியமம் ஆகிய இரண்டையும் அனுசரிக்காமல் செய்யக்கூடிய யோகப்பயிற்சிகள் மனதையும் உயிரையும் புத்தியையும் ஒருமுகப்படுத்தும் என்பது உண்மை.    ஆனால்  யமம் என்னும் சமூக ஒழுக்கங்களை கடைபிடிக்காத மனம் இவ்விதம் வலுப்பெறுவதால்,  சமூகத்தில் யமத்தில் தவிர்க்க வேண்டிய தவறுகளை வெற்றிகரமாக தன்னலத்திற்காக செய்யும் தன்மை ஏற்படும்.   நியமங்களை கடைபிடிக்காததால் இறைவனை உணரும் தன்மை இராது.  அப்படியே இருப்பதாக இருந்தாலும் அது தவறான இறை உணர்வாகவே இருக்கும்.    இறை உணர்வுடன் தவறுகளைத் தவிர்க்கும் பயிற்சி இல்லாததால் எதையும் எவரையும் சட்டை செய்யாமல் எந்த தவறையும் துணிந்து தன்னிச்சையாக செய்யும் நிலை ஏற்படும்.   தவறான வழிகளை எதோ ஒரு காரணத்தைக் காட்டி நியாயப்படுத்தி அதனால் தனம் சேர்க்கும் தன்மை வளரும்.   பொருள் சேர்க்கைக்கு உதவும்.

இன்றைய காலகட்டத்தில் கஷ்டம் வரும்வரை எவரும் தியானதை பற்றி சிந்திப்பதில்லை.  வருமானம் தேவையான(?) அளவுக்கு இல்லை என்னும்போது தான் கஷ்டம் உணரப்படுகிறது.   தேவையான அல்லது அதிகமான தனம் இருக்கும் வரையில் கஷ்டத்தை யாரும் பொருட் படுத்துவதில்லை.   பண  தட்டுப்பாடு ஏற்படும் போது  கஷ்டத்தை உணரவோ சிந்திக்கவோ செய்கிறோம்.  அப்போது மட்டுமே இறைவனை நினைப்பதும், தியானத்தை தேடிப்போவதும் இன்று  சகஜமாக  நடக்கிறது.    இதன் மூலம் நிலைமை சீராகி பணத்தட்டுப்பாடு நீங்கி செழிப்பு வரும்போது மீண்டும் பழைய  நிலைக்கு திரும்பி விடுகிறோம்.

இறைமையும், தியானமும் ஒரு இடைக்கால முகாம் ஆக மாறி விட்டது.

இவ்விதமான அடிப்படை அற்ற யோகப் பயிற்சியால் வீடு பெறுதல் என்னும் இறுதி யோக நிலையை எய்துவது என்பது இயலாத  ஒன்று.       அற வழியில் பொருள் தேடி அதனால் அடையும் இன்பத்தைஅனுபவித்து வீடு அடைய வேண்டும் என்பதே  தமிழ் மறைகள் வரிசைப்படுத்தும் அறம், பொருள், இன்பம், வீடு.         இதில் அறம் , பொருள், இன்பம் ஆகிய மூன்றும் யமம் நியமங்களில் அடங்கும்.  அடுத்த ஐந்து நிலைகள் வீடு என்பதனுள் அடங்கும்.

வீடு என்பது பாதுகாப்பான இடம்.   இவ்வுலகில் நாம் வாழும் வீடு உடலுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு தரும் இடம்.   மரணத்திற்குப்பின் வீடு என்பது ஆத்மாவுக்கு பாதுகாப்பு தரும் இடம்.

இறுதியாக ஒரு சந்தேகம்.    இதெல்லாம் இந்த காலத்துக்கு ஒத்து வருமா?

இந்த உலகத்தில் அனுபவிப்பதற்கு என்னவெல்லாம் வசதிகள், உணவுகள்,  ஆடம்பரங்கள்,  இன்பங்கள்  இருக்கிறன்றன.    பணமில்லாமல் இவற்றை எல்லாம் பெறவோ அனுபவிக்கவோ முடியுமா?   ஆசை இல்லாமல் இருந்தால் இவை  எல்லாம் சாத்தியமா?  அடுத்தவனைப்பற்றி கவலைப்பட்டால் நம் கதி என்ன ஆவது?    எது அற வழி?     அற வழியில் யாரையும் ஏமாற்றாமல் துன்புறுத்தாமல் தேவையான அளவுக்கு பொருள் சேர்க்க முடியுமா?   கண் முன் தெரியும் இன்பங்களை தவிர்த்து விட்டு, இருக்கிறதா இல்லையா என்பதே தெரியாத  ஒரு வீடு பேற்றை அடைய நினைத்து ஏமாந்து போய்விட மாட்டோமா?   யமம் , நியமங்களை கடைப்பிடித்தால் தனம்  சேர்ப்பது எப்படி?  பிறர் மதிக்கத்தக்க நிலையில் நாம் வாழ வேண்டாமா?  பொருள் இல்லாதவர்களை யார் மதிக்கிறார்கள்?

பணம் இருந்தால் செய்யக்கூடிய எத்தனையோ பூஜைகள் இருக்கின்றன.  பக்தியுடன்  பூஜைகள் செய்தால் போதாதா?  அதனால் முக்தி கிடைத்து விடாதா?         எத்தனையோ கோவில்கள்,  தெய்வங்கள் இருக்கின்றன.      அங்கெல்லாம் சென்று தொழுதால் மட்டும் போதாதா?  எளிதில் எந்த சிரமமும் இன்றி முக்தி கிடைத்து விடாதா?    இந்த இடத்தில பிறந்தால் முக்தி, இந்த இடத்தில வாழ்ந்தால் முக்தி, இந்த இடத்தில கால் பட்டால் முக்தி என்று எவ்வளவோ இடங்களை  சுட்டிக்காட்டி கதா காலாட்சேபங்களும்  பிரச்சாரங்களும்  நடக்கின்றன.       இவ்வளவு வழிகளும் இருக்கின்றனவே !
பின் என்ன கவலை?     இந்த குறிப்பிட்ட இடங்களில் வாழ்ந்தோ,  மிதித்தோ  முக்தி அடையலாமே !    இப்படி ஓர்  சிந்தனை.

யாருக்கு வேண்டும் இந்த முக்தி?     இந்த உலகத்தில் சந்தோசம் அனுபவித் தால் போதாதா?   இதைவிட வேறு என்ன வேண்டும்!  இப்படியும்  ஒரு எண்ணம்.

மரணத்திற்கு பின்னர் நடக்கப்போவதை யார் பார்த்தார்கள்!.   நம் முற்பிறவியைப்பற்றிய எதையம் நாம் இப்பிறவியில் உணரவில்லையே!    பின்னர் ஏன் அடுத்த பிறவியைப்பற்றிய சிந்தனை.     முற்பிறவியைப்பற்றி ஒன்றுமே அறியாத நிலையில்  அடுத்த பிறவியில் அனுபவிப்பதை உணரவா போகிறோம் ?     அதனால்  இந்த பிறவியில் சுகங்கள் அனுபவிப்பதை ஏன் தவிர்க்க வேண்டும் ?    இப்படியும் ஓர் எண்ண ஓட்டம்.

இந்த கேள்விகளும், இவற்றிற்கான விடைகளும் முடிவுகளும் நம் சிந்தனைக்கு விடப்படுகின்றன.       சிந்திப்போமாக.      அவரவர் மனநிலைக்கேற்ப எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்.

இந்த இடுகையின் நோக்கம் உண்மை நிலைய எடுத்துக்காட்டுவது என்பது மட்டுமே  சிந்திப்பதற்கும் முடிவெடுப்பதற்கும்  ஒரு வழிகாட்டியாக இதனை நினைப்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்.    ஒவ்வொருவருடைய சுதந்திரத்தையும் சிந்திக்கும் சுதந்திரத்தையும் அதன் மூலம் முடிவெடுக்கும் திறனையும் நாம் மதிக்கிறோம்.

 நன்றி.  வணக்கம்.  

வியாழன், 3 ஜனவரி, 2019

ஆன்மா, மனம், உயிர், புத்தி, சமாதி நிலை - ஓர் விளக்கம் Dimensions of Soul and Mind - Samathi

ஆன்மா, மனம், உயிர்,  புத்தி, சமாதி நிலை  -   ஓர் விளக்கம்   Dimensions  of  Soul and Mind

மனிதனின் உடலுக்கு அப்பாற்பட்ட நிலைகள் மூன்று:  ஆத்மா , மனம், உயிர்.

உயிர் உடலுக்குள் இருந்து உடலை இயக்குகிறது.

ஆத்மா உடலுக்கு வெளியில் இருந்து கொண்டு மனதின் வழியாக உடலை இயக்குகிறது.

மனம் ஆத்மாவுக்கும் உயிருக்கும் இடையில் ஒரு ஏஜென்ட் அல்லது ஊடகர் ஆக செயலாற்றுகிறது.  ஆத்மாவையும் உயிரையும் சமநிலையில்  நிறுத்துவது இதன் வேலை.

உயிரை மனமும்,  மனதை ஆத்மாவும் கட்டுப்படுத்துகின்றன.

 மனம் ஆன்மாவிற்கு கட்டுப்பட்டது தான்.   ஆனாலும் அது சிந்திக்கும் தன்மையது.  மனம் ஆத்மாவுக்கு கட்டுப்பட்டு நடந்து உயிரை வழிநடத்தினால்  உடலும் ஆத்மாவும் வலுப்பெறுகின்றன.   உயிர் மனதின் வழி காட்டுதலில் இயங்க வேண்டும்.      உயிர் மனதின் கட்டுப்பாட்டை  மீறி (தன் கடமையை மறந்து) தன்னிச்சையாக செயல்படும்பொழுது உடலும் ஆத்மாவும் வலுவிழக்கின்றன.    இந்நிலையில் மனம் உயிரின் கட்டுக்குள் வந்து விடுகிறது

இது தான் ஆத்மா, மனம் , உயிர் செயல்பாட்டு தத்துவம்.

உயிர் உடல் சம்பந்தப்பட்டது.    புத்தியின்   உதவியுடன் உயிர்  உடலை ஆள்கிறது.  மூளையின் இயக்க சக்தி தான் புத்தி.   புத்தியின் உதவியுடன் உயிர் மூளையின் வாயிலாக உடலை இயக்குகிறது.

உடலின் இன்ப துன்பங்களை உயிர் அனுபவிக்கிறது.  மகிழ்கிறது அல்லது கஷ்டப்படுகிறது.  உயிரும் கட்டுக்குள் மனம் வரும்பொழுது உயிர் மனதை ஆட்டுவிக்கிறது    அதனை  தனக்கு சாதகமாக சிந்திக்கவும் திட்டமிடவும் தூண்டுகிறது

உயிர் உடலின் சுகத்துக்கு ஆசைப்படுகிறது.     உயிருக்குத்தான் ஆசை ஏற்படும்.   காரணம் அது ஆத்மா சம்பந்தப்பட்டது அல்ல.  உயிர்  உடல் சம்பந்தப்பட்டது.  மூளை, உடல் இவை இரண்டின் ஒருங்கிணைந்த இயக்கம் தான் உயிர்மை.      இந்த ஒருங்கிணைப்பு திறன் அல்லது சக்தி தான் உயிர்.  அதனை உருவாக்கியது ஆத்மா.      உடலை பாதுகாத்து ஆத்மாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான  இயக்கங்களை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் அது.   அது மனதின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டது. 

மனம் என்பது உடலின் உபரி தளத்தில் எண்ணங்களாக நிலை பெறுகிறது.

மனம் உயிருக்கு  கொடுக்கும் கட்டளைகளை  உயிர்   புத்தி மூலமாக  மூளை யைக்கொண்டு இயக்கி நிறைவேற்றுகிறது.  புத்தி என்பது மனதின் உதவியாளர்.    புத்தி என்பது மூளையில் அமைகிறது. 

உயிர் உடல் சுகங்களை அனுபவிக்கிறது.    அது மனதிலும் பிரதிபலிக்கிறது.  தொடர்ச்சியாக  உயிர் சுகங்களை அமிதமாக அனுபவிக்கிற பொழுது அது ஒரு விதமான போதைக்கு ஆட் படுகிறது.   போதை மூளையை தாக்குகிறது.  போதை மயக்கத்தில் மூளை திரும்ப திரும்ப சுகத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டு உயிரை மகிழ்விக்கிறது.    மகிழ்ச்சியில் திளைக்கும் உயிர்  மனதின் கட்டுப்பாட்டில் இருந்து தன்னை அறியாமல் விலகி விடுகிறது. அது ஆசைக்கு அடிமைப்படுகிறது.  இதன் தாக்கம் மனதில் பிரதிபலிக்கிறது.   

உயிரும் மூளையும் தன்னிச்சையாக செயல்படும் நிலையை  அடைந்தவர்கள் தம் நடவடிக்கைகளை  நியாயப்படுத்து வதற்காக கடவுளையும்,  தர்மங்களையும் தவறாக வியாக்யானிக்கிறார்கள்.   சுயநலத்துக்காக ஒவ்வொன்றையும் திரித்து கூறி திரிபே நேர் என்று எல்லோரும் நம்பும் நிலையை உருவாக்கி விடுகிறார்கள்.  மேலோட்டமான உணர்ச்சிகளுக்கு தாம் அடிமைப்படுவது மட்டுமின்றி சாமர்த்தியமான பேச்சினால் பிறரையும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படுத்துகிறார்கள்.   சிந்தனை சக்தியும் உணர்வுகளும் அற்றுப்போய் விடுகின்றன.   யார் தங்களை நியாயப்படுத்தி சொல்கிறார்களோ அவர்களை, எந்த சிந்தனையும் இல்லாமல்  கூட்டம் கூட்டமாக பின்பற்றும் நிலை உருவாகிறது.     மனதில் இருக்கும் அடிப்படை மூல்யங்களுக்கு உயிரையும் புத்தியையும் எட்டமுடியாத நிலை உண்டாகிறது.   அதனால் தான் சிந்திக்கும் திறன் அற்றுப்போகிறது.    சுகத்தை அனுபவிக்க பணம் தேவை.   அதனை எவ்விதத்திலாவது தேடுவது  என்பது மட்டுமே வாழ்க்கையின் நோக்கமாக மாறிவிடுகிறது.

இந்த வேளைகளில் ஆத்மா விற்கும்  உயிருக்கும் இடையிலான மனதின்  தொடர்பு அற்று போகிறது. மனதின் இயக்கம் வழி மாறி விடுகிறது ; இயல்பிற்கு மாறுபட்டு  இயங்குகிறது  ஆத்மாவின் தொடர்பில் இருந்து தான் விடுபட்டு இயங்குவதை உணர்கிறது. அதனால் அது சோர்வடைகிறது..    .  இதனால் மனதில் ஏற்படும் பதற்றமே மனதின் இறுக்கமாக மாறி விடும்.  மனதின் இறுக்கம்  தொடரும் பொழுது அது ஒருவிதமான விறைப்புத் தன்மையை அடைகிறது .   இதனால்  மனது மந்தமடைகிறது.  அதன் இயக்கத்தில் சோர்வு ஏற்பட்டு   மனதால்  ஆத்மாவிற்கு அனுசரணையாக இயங்க முடிவதில்லை.    நாளடைவில் மனத்தால் ஆத்மாவின் அறிவுறுத் தல்களை உயிருக்கு முறையாக ஒழுங்கான முறையில் எடுத்து செல்லமுடிவதில்லை.  அதனால் ஆத்மாவிற்கும்  உயிருக்கும் உள்ள தொடர்பு குறைந்து புத்தி தன்னிச்சையாக செயல்படும் நிலை தொடர்ந்து ஏற்படுகிறது.      அது உயிரையும் அதன் மூலம் உடலையும் சுயமாக இயக்குகிறது.

இந்த இடத்தில ஸ்ரீமத் பாகவதத்தில்  இருந்து கலி காலத்தின் நிலை பற்றிய சில குறிப்பிட்ட சுலோகங்களின் சில பாகங்களை  மேற்கோள் காட்டுவது உசிதமாக இருக்கும்.    அவையாவன:   

புற அடையாளங்களால் அதாவது உடலில் அணியும் (மத) சின்னங்களால்  மட்டுமே  ஒருவன்  ஆன்மீக வாதியாக கருதப் படுவான்.   சாமர்த்தியமான  வார்த்தைகளால்  கவர்ச்சிகரமாக பேசுபவனே அறிஞனாக  கருதப்படுவான்    ஸ்ரீமத் பாகவதம் 12.2.4

போலித்தனமே நல்லொழுக்கமாக கருதப்படும் -  ஸ்ரீமத் பாகவதம் 12.2.5

மதத்தைப்பற்றி தெரியாதவர்கள் அதன் அமைப்பு மையங்களில் தலைமை இடங்களில் அமர்வார்கள்;    மத தத்துவங்களை போதிப்பதாக நடிப்பார்கள் - ஸ்ரீமத் பாகவதம் 12.3.38

அர்ச்சகர்கள், அறிஞர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் வித விதமான உணவுப்பழக்கங்களுக்கும் சிற்றின்பத்திற்கும் அடிமைப்படுவார்கள்  -  ஸ்ரீமத் பாகவதம் 12.3.32

பணம், சொத்து சம்பாத்தியம் நற்பிறவியின் அடையாளமாக கருதப்படும்.  ஸ்ரீமத் பாகவதம் 12.2.2

வஞ்சகமும், ஏமாற்றுதலுமே வணிகத்தின் அடிப்படையாக கொள்ளப்படும்  ஸ்ரீமத் பாகவதம் 12.2.3

இது தான் இன்றைய காலகட்டத்தின் நிலை:

 அதாவது உடலுக்கு இன்பத்தை தரும் வசதிகள்  இன்பங்களில் திளைக்க முற்படுதலும், அதற்கு தேவை பணம் என்பதால் அதனை தேட வேண்டும் என்ற குறிக்கோளும் முன்னிட்டு நிற்கிற காலம் இது. அதாவது பலவிதமான ஆசைகள் முன்னிற்கிற காலம்.  மிதமாக பணத்தை தேடுவதற்காக எந்த தீங்கையும் செய்வதற்கு அஞ்சாமல் வேறு யாரைப்பற்றியும் எவரைப் பற்றியும் கவலைப்படாமல் எல்லோரும் வாழத்துணிகின்ற காலம்  இது. அதனால் நம் மனமானது. ஆத்மாவின் தொடர்பை மீறி நடக்கிற காலம்.  
 ஆன்மீக சிந்தனைகளும் கோட்பாடுகளும்  சுயநலத்துடன் திரித்து விளக்கப்படுகின்றன.     கடவுளையே  தவறாக சித்திகரிக்கப்படும் ஒரு கால கட்டம் இது/

இதுவே யோகத்திற்கு மாறான நிலை.

புத்திக்கு கட்டுப்பட்டு இயங்குகிற  உடல் சுகத்தை மட்டுமே நாடுகிறது.

அழிவற்ற ஆத்மாவின்  வளர்ச்சிக்கு   அது உயர்ந்த  நிலையை அடைவதற்கு,  உடல்  அதன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம்.      உடலுடன் அழியும் புத்திக்கு உடல் சுகம் மட்டும்தான் லட்சியம் .       அது உடலின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப் படுவதில்லை.  அதனால் உடல் அமித சுக போகங்களால் மனதின் கட்டுப் பாட்டை இழந்து நோய்வாய்ப் படுகிறது.  இந்நிலை தொடர்ந்தால்   நாளடைவில் ஆத்மாவின் குறிக்கோள்  நிறைவு பெற   இயலாத நிலையில்  உடல் மரணமடைய நேர்கிறது. 

மனதின் வலுவான இயக்கத்திற்கு வலுவான உடல் தேவை.   ஆரோக்கியமான உடல் இருந்தால் மட்டுமே மனத்தால் சுயமாக ஆத்மாவிற்கு கட்டுப்பட்டு இயங்கி உயிரை கட்டுக்குள் நிறுத்த முடியும்.

மனக்கட்டுப்பாட்டில் உயிர் இருந்தால் மட்டுமே ஆத்மா வலுப்படும்;   அதன் சக்தி வளர்ச்சி பெரும்.

ஆத்மாவின் வளர்ச்சிக்கு உடல் ஆரோக்கியமும் கட்டுப்பாடும் மிக மிக முக்கியம்.

ஆத்மாவின் வளர்ச்சியின் நோக்கம் சமாதி அதாவது முக்தி அல்லது யோகம் அடைவது.     இங்கு யோகம் என்பது ஆத்மா இயற்கையுடன் இணைவது.    இதுவே முக்தி.      இதுவே யோகம்.

இந்த நிலையை அடைவதற்கு வழி காட்டியாக அமைவதே அஷ்டாங்க யோகம்.     இதைப்பற்றி ஒரு தனி இடுகையாக விளக்கப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக அதனை படிக்கவும்.


திங்கள், 17 டிசம்பர், 2018

வாழ்க்கை : பிறவிகள், மரணங்கள், அனுபவங்கள் Life : Birth, Death and Experiences

வாழ்க்கை   :  பிறவிகள், மரணங்கள், அனுபவங்கள்  Life, Birth, Death and Experiences

வாழ்க்கை அனுபவங்கள்  - அதில் பிறவிகள் பல.   மரணங்கள்  பல -

வாழ்க்கையில் ஒரு முறை பிறப்பு.   ஒருமுறை மரணம்.   இது தானே அனுபவம்.     

ஒரே வாழ்க்கையில் பல பிறவிகளா,    பல மரணங்களா.  எப்படி? என்று கேட்கிறீர்களா?

தினமும் செத்து  செத்து பிழைக்கிறேன் என்று சிலர் சொல்லக் கேட்டதில்லையா !   

உலகில் மனிதன் முதலில் பிறக்கிறான்.  முதலாவது  பிறவி.    அம்மாவின் வயிற்றில் இருந்து.       வாழ்க்கை என்ற வீட்டின் வாசலில் வந்து பிறந்து விழுகிறான்.   வாழ்க்கையில் முன் தாழ்வாரத்தில்/திண்ணையில்     தவழ்கிறான்.

வாழ்க்கையில் இது மகிழ்ச்சி தரும் மணம்.    வாழ்க்கையில்  புகும் மணம். 

வாழ்க்கை வீட்டினுள்  பிரவேசிக்க அங்கே காத்திருப்பு .  அப்பா, அம்மா, அவர் வழி சொந்தம், பந்தம், நண்பர், சுற்றம்.  படிப்பு. துடிப்பு,  சுதந்திரம்,  விளையாட்டு.  துள்ளிக் குதிக்கும் கன்று போல் குழந்தையாக பின் இருபது களில் காளையாக உலா வரும் காலம்.

சுதந்திர இளைஞனாக ஒரு மரணம்.    மீண்டும்  ஒரு அடுத்த பிறவி

ஒரு துணையின்  கை  பிடித்து நடு வீட்டினுள் பிரவேசம்.  இது இரண்டாவது பிறவி.  மறு  ஜென்மம்.  புதுப்பிறவி.

வாழ்க்கை வீட்டில் இது திருமணம்.

இனி அவன் புது மனிதன். ஒரு புதுப்பிறவி

வாழ்க்கையின் புத்துணர்வு.  அவன் முற்றிலும் புதியவன்.   புது நண்பர்கள், புது உறவுகள்.  புது சொந்தம்,  பந்தம்.  எல்லாம் எல்லாம் புதியன.   வாழ்க்கையில் புது மரியாதை.   சமூக அந்தஸ்து.   நான் என்னும் உயர்வு.

பழைய உறவுகள், நண்பர்கள் பந்தங்கள் வாசலுக்கு வெளியில்.  கூசலின்றி தலைகீழ் மாற்றம்.      பழைய உறவுகள் பொருட்டல்ல.   இன்பம், துன்பம், ஆரவாரம், துயரம், மகிழ்ச்சி. எல்லாம் எல்லாம் புது அனுபவம். 

வண்டிகளில் வயல்களில் பணியெடுக்கும் காளையாய் துணையின் முன் அடங்கிப்போகும் காலம்.

அப்பா அம்மா பின் தாழ்வாரத்துக்கு தள்ளிப் போனார்கள்

சம்பாத்தியம, வறுமை, குழந்தைகள், அப்பா/அம்மா  பதவி.  குடும்பம், அதன் பரிபாலனம், வளர்ச்சி.,வீழ்ச்சி, ஏற்ற இறக்கங்கள்.

குழந்தைகள் பெரியவர்கள்  ஆனார்கள்.    அப்பா அம்மா பின் வாசலில் கால் வைக்கிறார்கள்.

குழந்தைகள் திருமணம்.  அவர்கள் முன் தாழ்வாரத்தில்
இருந்து வீ ட்டினுள்   பிரவேசிக்க இவன் துணையுடன் பின் தட்டில் நுழைவு.

பெயரர்கள் வரவு.     அடுத்த இரண்டாவது மரணம்.

மீண்டும்  இவனுக்கு ஒரு  புது பிறவி..    மூன்றாவது பிறவி.  தாத்தா பதவி.

குதூகலம், மகிழ்ச்சி,  பேரர்கள் . அவருடன் களியாட்டம்.  அவர்கள் வளர வளர இவன்/இவள்  புறவாசல் பிரவேசம்.

வயது அறுபது.  அடுத்த மூன்றாவது மரணம்.

புறக்கட்டு பிரவேசம்.   புதிய அடுத்த பிறவி.      நான்காவது பிறவி.    நாய் போல் குறைத்து வாழும் காலம்.

அறுபதில் ஒரு மணம். அது திருமணம் விடும் மணம்

துணையின் உறவு விடும் மணம். எல்லா உறவுகளும் விடும் மணம்.   பின் தட்டில்/பின் வாசலுக்கு வெளியில்  அவனுக்கு தனிமை.   துணைக்கும் தான்.    முற்றத்து நாய் போல் குரைத்து வாழும் காலம்.

பற்றை, பாசத்தை  ஒழித்தால் நிம்மதி.    பற்றில் ஒட்டி இருந்தால் துன்பம், விரக்தி. பற்றாதிருப்பது, ஒட்டாமலிருப்பது : இதுவே நிம்மதி 

எண்பதுகளை நோக்கி ஆமையாய் நகரும் பயணம்.

துணை விடை பெற்றால்  அடுத்த மரணம்.   இனி அடுத்த புது தனிப்பிறவி.  இது ஐந்தாவது பிறவி.     ஆந்தை போல் அங்குமிங்கும் விழித்து அடங்கிப்போகும். அமைதியின் பக்குவம் காக்கும் காலம்.

வருடங்கள் ஓடும்.     மனம் சிதறும்;  அது அடுத்த மரணத்தை  நாடி ஓடும்.    தளறும் உடல்.  வாட்டும்  நோய்கள்.  அடுத்த மரணம் நெருங்கும் 

படுக்கை பிரவேசம்.  இது ஆறாவது பிறவி. 

எண்ணங்கள் மாறி மாறி வரும்; எண்ணங்கள் மட்டுமே உறவுகளாய் உடன் நிற்கும். 
பழைய நினைவுகள் மாறி மாறி வரும்.
இடையில்  வந்த உறவுகள்  ஒதுங்கி போகும்.   
ஒதுக்கிய பழைய உறவுகளை எண்ணங்கள்  நாடும். 
அந்த உறவுகள் எட்டாமல் போகும்.  
தனிமை வாட்டும் .   முதுமை விரட்டும். 

உணர்வுகள் முதிர்ச்சி பெற்றால்  நிம்மதி.       உணர்வுகள் தளர்ந்து  உணர்ச்சிகள் வளர்ந்தால்  துயரம்.

ஒருவராய் பிறந்து, இருவராய் இணைந்து, பலராய் இன்னும் பலராய் பெருகி களைத்து வெறுத்து  முடிவில் ஒருவராய் கழிக்கும் தனிமை காலம். 

இனி  இறுதி மரணம்.   எல்லாம்  சாந்தம்.    எங்கும் அமைதி.  எங்கும்எதுவுமே இல்லை. 

ஒரு தாயின் வயிற்றில் இன்னுமொரு மறு ஜென்மமா!    யார் அறிவார்? 

வாழ்க்கையின் ஒவ்வொரு பிறவிக்கு பின்னரும் ஆள் மாறாட்டம்.  பழைய ஆள் தொலைந்து போகிறான்.  பழைய உறவுகள் தொலைந்து போகின்றன.

இடையில் வரும் மயக்கம் தரும் புது உறவுகள்.   அடுத்த பிறவியில் கலைந்து போகின்றன.

ஒவ்வொரு பிறவியிலும் பழைய உறவுகள் விலக்கப்படும்

எல்லா பிறவியிலும் தோன்றி தோன்றி மறையும் பாசங்கள்.      பழையதை ஒழித்து  புதிய பாசறைகளை நாடும் புதுப்புது  பாசங்கள்.

 வாழ்க்கையின் எல்லா பிறவியிலும் எஞ்சி நிற்பது சுயநலமே.

இவை எல்லாம் இயற்கைக்கு உட்பட்ட பிறப்புகள்.

இன்னும் செயற்கையாய் பிறக்கிறான் பல முறை.    இன்னும் வித்தியாசமாய். இயற்கைக்கு அப்பாற்பட்டதாய்.

பணம் குவியும்போது ஒரு பிறவி .   தினமும் நாடிய பழைய உறவுகளை விலக் குகிறான்  உடன் பிறந்தோர்க்கும் கதி இதுவே.   தன்  நிலை ஒத்த உறவுகளை ஏற்கிறான்.   பழையன எல்லாம் மறக்கிறான்.   போலியாய் நடிக்கிறான். பொய்யினில் பொய்யாகி  வாழ்கிறான்  அன்பின் அருமையை மறக்கிறான்

இன்னுமொரு  மாற்று  நிலை.

பணமிழந்து ஏழையாக ஒரு பிறவி. 

பழைய உறவுகள் இவனை விலக்கும் .   பணத்துடன் இருந்த போது  இவன் விலக்கிய உறவுகள் மீண்டும் வந்து அணைக்கும் . 

அன்பின் அருமையை உணரும் தருணம்.

மீண்டும் பணம் குவியும்போது ஒரு மரணம். மீண்டும்  ஒரு புதுப்பிறவி.  அனைத்தையும் மறந்து மீண்டும் அகந்தை.  பழைய நிலைக்கு போகிறான்.

இன்னும் பலவித பிறவியும் மணமும் மரணமும். 

இது ஒரு முழு வாழ்க்கை     இடையில் முடியும் குறை வாழ்க்கையும் உண்டு.

பலருக்கும் பலவிதமாய், ஒவ்வொருவருக்கும் வேறு விதமாய் தொடரும்.

மரணங்கள் மனிதனுக்கு எதையும் கற்பிப்பதில்லை.

என்றும் எஞ்சி நிற்பது நான், எனது எனும் சுயநலமே.   

யாரும் விதிவிலக்கல்ல.   நானும் அதில் ஒருவன்.





  

செவ்வாய், 4 டிசம்பர், 2018

பிரம்மச்சர்யம் - ஒரு உண்மை பொதிந்த எளிய விளக்கம் Genuine Simple and Realistic Explanation of Celibacy .


பிரம்மச்சர்யம்  - ஒரு  உண்மை பொதிந்த எளிய விளக்கம் Genuine Simple and Realistic  Explanation  of  Celibacy  .


பிரம்மம் என்பது பொதுவாக material அல்லது பொருளை குறிப்பிடும் சொல்.  இங்கே அதனை உடல் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். சர்ய (charya ) என்பதற்கு  ஒழுக்கம் அல்லது அனுசரணை என்று பொருள்.    உடலை ஒழுக்கத்துடன் பாதுகாப்பது தான் பிரம்மச்சர்யம் எனப்படும்

இதுவே இதன் எளிமையான விளக்கம்.  

ஆகவே உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பதையே பிரம்மச்சர்யம் என்கிறோம்.  பிரம்மச்சர்யம் என்கிற வடமொழி சொல்லுக்கு தமிழில் உடல் ஒழுக்கம் என்பதே பொருந்தும்.

வார்த்தைகளுக்கு அர்த்தம் எடுப்பதில்  இங்கு சிக்கல் எதுவும்  இல்லை.

 உடலை ஆரோக்யமாக பாதுகாப்பதற்கு என்னென்ன ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டுமோ அந்த ஒழுக்கங்களை கடைபிடித்து உடலை சீராக பாதுகாப்பது என்பது தான் இதனால் உணரப்படுகிறது.

இதனையே  ஆண் பெண் தொடர்பு  அறவே இல்லாமல் இருப்பது தான் பிரம்மச்சர்யம் என்று  தவறாக வியாக்யானித்து குழப்பி விட்டிருக்கிறார்கள்.  ஆண் பெண் தொடர்பே ஆகாது என்பது அதன் பொருள் அல்ல.   

மனித இனத்துக்கு அடிப்படையே ஆண் பெண் தொடர்பு  தானே.    எதற்காக ஆணும் பெண்ணும் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.    இன  வளர்ச்சிக்கு அடிப்படையே உடல் தொடர்பு தானே.    அதனை தவறான ஒன்றாக எப்படி கருத முடியும்.

ஒழுக்கம் எதற்காக கடைபிடிக்கிறோம்.    சிக்கல்கள் இடைஞ்சல்கள் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காகவே ஒழுக்கத்தை கடைபிடிக்கிறோம்.   திருமண அல்லது குடும்ப வாழ்க்கை என்பது ஆண் பெண் உறவினால் ஏற்படும் சச்சரவுகளையும் பிரச்சினைகளையும் தவிர்ப்பதற்காக ஏற்பட்ட ஒழுக்க முறைதான்.     தேவை இல்லாத நேரங்களில் பாலியல் உணர்ச்சிகள் ஏற்பட்டு அசம்பாவிதங்கள் உண்டாவதை  தவிர்க்க ஏற்பட்ட ஒழுக்கமுறை தான் ஆடை அணிவது. 

உடலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உடல்  உறுதிக்கும் எந்தவித  இடைஞ்சலும் ஏற்படாமல் இருக்க வேண்டும்.     அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் ஒழுக்கத்துடன் செய்ய வேண்டும். இவ்விதம் உடலை பேணி பாதுகாக்கவேண்டும்.   இந்தவிதமான ஒழுக்க முறைதான் பிரம்மச்சர்யம் அல்லது உடல் ஒழுக்கம்.

பஞ்ச பூதங்களால் ஆனது உடல்.    அன்றாட இயக்கத்தால் உடலில் ஐம்பூதங்களின் இழப்பு ஏற்படுகிறது.     உடலுக்கு தேவையான நேரத்தில் தேவையான அளவுக்கு அவற்றின் குறைவு  நிறைவு செய்யப்பட வேண்டும். உடலின் அன்றாட இயக்கங்களை முறைப்படுத்தி ஐம்பூதங்கள் உடலில் தேக்கமடையால் பார்த்துக்கொள்ள வேண்டும்.   தொடர்ச்சியான தேக்கம் உடலில் இறுக்கத்தை ஏற்படுத்தும்.      நாளைடைவில் உடல் இயக்கம் பாதிக்கப்பட்டு நோய் ஏற்பட ஏதுவாகும்.

 நிலத்தின் அம்சம் உணவு.    அதில் எது தேவையோ  எப்பொழுது தேவையோ அப்பொழுது அதனை தேவைக்கேற்ப உணவாகஉட்கொள்ளவேண்டும்.

நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடைக்காமல் வெட்ட வெளியில் தேவைக் கேற்ப வெயில் கொள்ளவேண்டும்.    வெளிச்சமும் சூடும் நெருப்பின் அம்சம். 

தேவையான அளவிற்கு சுத்தமான காற்றை உட்கொள்ளவேண்டும்.  காற்றோட்டமான இடத்தில அமரவேண்டும்.      நம் உடலின் மேற்புறத்தில் காற்று தழுவிச் செல்லவேண்டும்.   அதனை நாம் அனுபவிக்கவேண்டும்.

தேவைக்கு அவ்வப்போது  நீர் அருந்தவேண்டும்.  இது உடலின் நீர்  இழப்பை சரி செய்யும்.        குளிர்ந்த நீரில் அனுபவித்து நீராடவேண்டும்.     இது உடலின் சூட்டின் தேக்கத்தை மட்டுப் படுத்தும்.

இவ்விதமாக நம் உடலில்   நிலம், நெருப்பு, காற்று, நீர் என்கிற நான்கு பூதங்களின் இருப்பை சமநிலையில் நிலை நிறுத்துகிறோம்

ஐம்பூதங்களில் இன்னும் ஒன்று மீதம் இருக்கிறது.

ஆகாயம்.   சூன்யம்.    இல்லை என்று நிற்கும் ஒன்று.    இன்னதென்று அறிய முடியாத ஒன்று.    அதன் அம்சம் தான் நம் மனம்.   அதுவும் இல்லை என்று நிற்கும் ஒன்றுதான்.   இன்னதென்று அறிய முடியாத ஒன்றுதான்.   

மனதின் இயக்கத்திற்கு சக்தி தேவை.   இயக்கத்தினால்  குறையும் சக்தி நிரப்பப்பட வேண்டும்.     அப்பொழுது தான் மனம் புத்துணர்வு பெறும்.    ஆகாயமும் சக்தியும் இணையும்போது தான்  மற்ற நான்கு பூதங்களும் பிறக்கின்றன.  சக்தியுடன்  இணையும்போது தான் ஆகாயம் ஆற்றல் பெறுகிறது.

மேற்சொன்ன அடிப்படையில் மனம் ஆற்றல் பெற்று புத்துணர்வு பெற ஆணும் பெண்ணும் இணைய வேண்டும் .    இதனையே காமம் என்கிறோம்.  

உடல் உறவின்போது இன  விருத்திக்கு அப்பாற்பட்டு,  சக்தி அடிப்படையில் என்ன நடக்கிறது ?

ஆணின் உபரிதளத்தில் எஞ்சி நிற்கும் நேர்மறை சக்தியும் பெண்ணின் உபரிதளத்தில் எஞ்சி நிற்கும் எதிர்மறை  சக்தியும் தம்மில் இணைந்து  இருவரின் உபரி தளத்திலும் சக்தி சமநிலை ஏற்படுகிறது.   அதாவது. மனதில் சமநிலை ஏற்படுகிறது.  மனதின் பலமே அதன் சம நிலைதான்.  உடல்களின் உரசலில் இந்த சக்திகள் கலப்பு நிகழ்கிறது.   அதிலே மனது புத்துணர்வு அடைகிறது.

உணவுக்கு பசி, நீருக்கு தாகம்,   காமத்துக்கு வேட்கை.    இவை எல்லாம் இயற்கை.       ஆக இந்த இணைவு ஒரு கட்டாய தேவை.   மனம் குறைவற்ற  ஆற்றலுடன் இருந்தால் மட்டுமே பிற நான்கு பூதங்களால் அமைந்த உடல் சமநிலை பெற்று ஆற்றலுடன் இயங்க இயலும். 

மிதமான ஆண் பெண் உடலிணைவு,  உடலுறவு மனதின் ஆற்றலை வளர்த்து உடலின் பஞ்சபூத சமநிலையை மேம்படுத்தும்.  ஆகாயத்தின் அம்சமாகிய மனமே உடலில் பிற பூதங்களின்  அம்சங்களின் இயக்கத்தை கட்டுப் படுத்துகிறது.    ஆகவே  மனதின் சமநிலை அடிப்படை தேவை ஆகிறது.  

அமிதமான உணவு, அமிதமான காற்று,அமிதமான வெயில் அல்லது சூடு,
அமிதமான நீர் என்று அமிதமான அளவில் நாம் உட்கொள்ளும் அனைத்துமே நம் உடலுக்கு நோயைத்தரும்.  சமநிலைக்கு ஊறு விளைவிக்கும்.   உடல் இயங்க முடியாத ஒரு தேக்கநிலையை ஏற்படுத்தும்.

அமிதமான உடலுறவு ஈடுபாடு மனதின் ஆற்றலை அழிக்கும்.   உடலின் பஞ்சபூத சமநிலையை   தகர்க்கும் .  அதனால் உடல் இயக்கத்தில்  தேக்கம் உண்டாகும்.  மூளையின் இயக்கத்திலும் தேக்கம் ஏற்படும்.    எனவே உடலுறவு கட்டுப்பாடு ஆரோக்யமான உடலுக்கு  பிறவற்றைவிட மிக மிக முக்கியம் என்பது தெளிவாகிறது.

உட ல்  வலுவிழக்கும்  அளவிற்கு உடல் உறவில் அமித ஈடுபாடு ஆகாது என்பது தான் விளக்கம்.

நைஷ்டிக பிரம்மச்சர்யம்  என்பது குறிப்பிட்ட  சில நிஷ்டைகளுடன்  சுயகட்டுப்பாடுகளுடன்  பிரம்மச்சர்யத்தை அனுசரிப்பது என்பது பொருள்.  அதாவது குறிப்பிட்ட சில ஒழுக்கங்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்து பிரம்மச்சர்யம் அனுசரிப்பது என்பது தான் விளக்கம்.   உதாரணத்திற்கு குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்பது,      குறிப்பிட்ட இடத்தில மட்டும்  வசிப்பது,   ஏகபத்தினி தாம்பத்யம் மிதமாக அனுபவிப்பது,   அல்லது மனைவியருடன் மட்டும் தாம்பத்யம் நடத்துவது  முதலான குறிப்பிடும் படியான ஒழுக்கங்கள்.

பிரம்மா நாரதரிடம் ஸ்ரீ கிருஷ்ணர் நைஷ்டிக பிரமச்சாரி என்று  சொன்னதன் 
காரணத்தை துர்வாசர் பின் வருமாறு  விளக்குக்கிறார்.      

ஸ்ரீ கிருஷ்ணர் ராதையுடன் எவ்வளவு நெருக்கமாக பழகினாலும் அவர்களிடையே உடல் சம்பந்தமான உறவு இருக்கவில்லை.     அந்த அளவுக்கு அவரிடம்  பிரம்மச்சர்யத்தில் நிஷ்டை அல்லது ஒழுக்கம் இருந்தது என்று அவர் நாரதரிடம் விளக்குகிறார்.    

தவிர்க்க இயலாத சூழ்நிலை ஏற்பட்ட போதும்  அவர் மனைவியர் அல்லாத இன்னொரு பெண்ணிடம் நெருக்கமாக இருந்தும் கூட உடலுறவில் ஈடுபடவில்லை  என்பது சிறப்பாக குறிப்பிடப்படுகிறது.   இது ராதைக்கும் கிருஷ்ணருக்கும்  பொருந்தும்.   

ஆண் பெண் உடல் உறவைத் தவிர்த்த ஒரு பிரம்மச்சர்யம் பூரணமான பிரம்மச்சர்யம் ஆகாது.      பிரம்மச்சர்யத்தில் ஆண் பெண் உறவு ஒரு தவிர்க்கக்கூடாத அம்சமே.                                                                                            

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

தெய்வம் - கடவுள் : என்ன வேறுபாடு - ஓர் விளக்கம் Deity - God : An Explanation



தெய்வம்  - கடவுள்   :   என்ன வேறுபாடு.  ஓர் விளக்கம்  Deity - God   An Explanation

ஆத்மா தன் வளத்தை அல்லது சக்தியை அதிகரித்து வலுப்படுவதற்காகவே உடலெடுக்கிறது. அது வளப்படும்பொழுது அதன் சக்தி அதிகரிக்கிறது.    ஆத்மா வலுவிழக்கிறபொழுது அதன் சக்தி குறைகிறது.   ஆத்மா வலுப்பெற வலுப்பெற அதன் சக்தி அதிகரிக்க அதிகரிக்க பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து அது கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுகிறது. 

ஜென்மம் ஜென்மமாக ஒரு ஆத்மா தான் எடுக்கும் ஒவ்வொரு உடலில் இருந்து  ஒவ்வொரு முறையும் வலுப்பெற்று   வெளியேறுந்தோறும் அது இந்த பூமியின் உபரி தளத்தில் இருந்து விலகி விலகிச் செல்கிறது.   இப்படி ஆத்மா முற்றிலுமாக பூமியின் ஈர்ப்பு சக்தியில் இருந்து விடுபட்டு அப்பால் செல்லும்பொழுது அது பிறவி எடுப்பதிலிருந்து விடுபடுகிறது .  அந்த ஆத்மா தெய்வத்தன்மை அடைகிறது.  அது தெய்வமாக மாறுகிறது.   தெய்வங்கள் வாழ்கின்ற புவி ஈர்ப்பு விசைக்கு அப்பாற்பட்ட இந்த  இடம் தான்  விண்ணுலகம். 

பூமி என்பது மண்ணுலகம்.

பிறவி எடுப்பதிலிருந்து விடுபட்ட இந்த ஆத்மாக்களைத்தான் நாம் கோவிலில் சிலைகளாக உருவகப்படுத்தி தெய்வங்கள் ஆக வழிபடுகிறோம்.

ஒன்றை கவனிக்கவும்.     நாம் கோவில்களில் தெய்வம் இருப்பதாகத்தான் சொல்கிறோமே தவிர கடவுள் இருப்பதாக சொல்கிற வழக்கமில்லை.  அதாவது இங்கு கடவுள் என்ற வார்த்தையை ப யன்படுத்துகிற வழக்கம்  இல்லை.   அதாவது கோவிலில் இருப்பது தெய்வம் என்கிற உணர்வு பழையகாலத்தில் இருந்தே நம் உணர்வில் இருந்து வந்திருக்கிறது என்பது தான் உண்மை.  தெய்வம் என்கிற வார்த்தையை நாம் இன்று பயன் படுத்தினாலும் அந்த உணர்விலிருந்து  நாம் தற்போது விடுபட்டு குழப்ப மடைந்த நிலையில் இருக்கிறோம்.      தவறுதலான புரிதலுக்கு உட்பட்டு  இருக்கிறோம்.

வழிபடுகிறோம் என்கிற வார்த்தையை நன்றாக கவனிக்கவும்.   அதன் பொருள்  என்ன?   ஆராதிக்கிறோம் என்பது வேறு.   வழிபடுகிறோம் என்பது வேறு.   நீ எவ்வழி நானும் அவ்வழி  என்பது தான் வழிபடுகிறோம் என்பதன் பொருள்.    நீ எந்த வழியில் செயல்பட்டு பூமியில்  பிறவி எடுப்பதில் இருந்து விடுபட்டாயோ  அந்த வழியை நானும் பின்பற்றி செயல்பட்டு முக்தி பெற முயல்கிறேன் என்பதுவே இதன் விளக்கம்.


கடவுள்:  நம் கட்டுக்குள் அடங்காத ஒன்று.   

கடவுள்:  நம் உணர்வுக்கு அடங்காத ஒன்று.     

கடவுள்: நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்று. 

ஆனால்  கடவுள் என்கிற ஒரு சக்தியின் கட்டுக்குள் நாம்அடங்கி இருக்கிறோம் என்பது தான் உண்மை.

கடவுள் என்கிற சக்தியை நம்மால் பிடித்து அடக்க இயலாது.  அது இந்த பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்து இருக்கின்றது.   அதனை பார்க்க இயலாது. உணர மட்டுமே இயலும்.  அதனை உணர நாம் உள் (முகமாக )கடந்து செல்லவேண்டும். இந்த பிரபஞ்சத்தின் உள்ளே கடந்து செல்லவேண்டும். இந்த பிரபஞ்சத்தில் உள்ளடங்கியிருக்கும் ஒவ்வொன்றினுள்ளும் கடந்து செல்லவேண்டும்.   இந்த பிரபஞ்சத்தின் தனிப்பிரதியாக அமைந்திருக்கும் நம் உடலினுள் கடந்து செல்லவேண்டும்.   நம் உடலினுள் நாம் கடந்து செல்லுந் தோறும்  நாம் கடவுளை உணர்ந்து கொள்ள  இயலும்.

கட  உள் .    உட்புறமாக கடந்து சென்றால் அப்பொழுது  நாம் கடவுளை உணர்ந்து கொள்ளலாம்

கடவுளை உணர்ந்து கொள்ள தெய்வங்கள்  வழிகாட்டும்.   தெய்வங்களுடன் உணர்ச்சி பூர்வமாக  ஈடுபடாமல்  உணர்வு லயத்துடன் வழிபடுங்கள் .  உணர்ச்சிகள் வெறியூட்டும்.       உணர்வுகள் வழிகாட்டும்.   வெறும் அர்ச்சனைகள்  ஆராதனைகள் பூஜை புரஸ்காரங்கள் எல்லாம் நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடே. தெய்வங்களுக்கு திருமணம் நடத்தி  வைப்பது உட்பட.    இதனால் எல்லாம் எந்த ஆன்மீக வளர்ச்சியும் உயர்வும் ஏற்படப்போவதில்லை.

மனதை ஒருமுகப்படுத்த உடலின் உள்முகமாக பார்வையை தளராது செலுத்துங்கள்.  உங்களால் அப்பொழுது மட்டுமே கடவுளை உணர்ந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் மிக மிக பழைய காலகாலங்களில் சமண கோட்ப்பாடுகள் தான் பழக்கத்தில் இருந்தன.    அதனை ஒரு மதம் என்று கூற முடியாது.  அது அன்றைய வாழ்க்கை கலாச்சாரம்.  எப்படி வாழவேண்டும் என்ற வழிமுறைகள் தான் அவைகள்.    ஆத்மாவைப்பற்றிய அறிவு தான் அடிப்படையாக இருந்தது.     ஆத்மாவை பிறப்பு இறப்பு என்கிற சுழற்சியில் இருந்து  விடுவித்தல் என்பதுதான் நோக்கமாக  இருந்தது.    பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்ட ஆத்மாக்கள் தான் சித்தர்கள்.    சித்தர்கள் தான் வழிகாட்டும் தெய்வங்களாக கோவில்களில் சிலைகளாக உருவகப்படுத்தப்  பட்டிருக்கிறார்கள்.

சித்தர்கள் சமண வழி வந்த, ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைந்தவர்கள் மக்களுக்கு நல்வழி காட்டியவர்கள்.  மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு சொன்னவர்கள்.   அவர்களது நோய்க்கு மருந்து கண்டவர்கள்.  இவர்கள் சமணர் வழி வந்த புண்ணிய ஆத்மாக்கள்.








ஞாயிறு, 18 நவம்பர், 2018

மனம், எண்ணங்கள், மனதின் வேறுபட்ட நிலைகள், ஆன்மா, ஆன்மீகம், பிறவி, தெய்வங்கள்

ஆன்மீகம் என்பது என்ன.?

பலரும் பலவிதமாக விளக்குகிறார்கள்.ஒவ்வொருவரும் மாறுபட்ட விளக்கங்களை தருகிறார்கள்.  எந்த விஷயத்தையும் இது சரிதானா என்று எண்ணிப்பார்த்து முடிவெடுப்பவர்கள் குழப்பத்துக்கே ஆளாகிறார்கள்.

இதறகு சரியான விளக்கம் என்ன .

இந்த உலகத்தில் மனோ தத்துவம் முதன்முதலில் உணரப்பட்டது இந்தியாவில் தான்.   அந்த அடிப்படையிலேயே ஆதி காலம் முதலாக வாழ்க்கை முறை அமைந்து இருந்தது.

மனித உடல் ஒரு இயந்திரமா?  ஆம்.

அது உள்ளிருந்தே இயக்கப்படுகிற ஒரு இயந்திரம் தான்.  எல்லா உயரின ங்களும் அப்படித்தான்.  எல்லாவற்றிற்கும் உள்ளிலிருந்தே இயக்கப்படும் இயக்கம் இருக்கிறது.

இந்த இயக்கம் எப்படி நடக்கிறது.

மனிதனை பொறுத்தவரையில் மனம் தான் உடலை இயக்குகிறது.   உடலின் நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது.   எல்லோருடைய மனமும் ஒரே மாதிரி இயங்குவதில்லை.   ஒவ்வொருவருடைய மனமும் ஒவ்வொரு விதமாக வித்தியாசமான முறையில் இயங்குகிறது.   என்ன காரணம்?

உடலை இயக்கும் மனதை  இயக்குவது யார் அல்லது எது? 

நமது இயக்கத்தை கவனித்தால் ஒன்றை  புரிந்து கொள்ளலாம்.  எண்ணங்களே மனதை இயக்குகின்றன என்பதே அது.

எண்ணங்கள் எப்படிப்பட்டவை ?

எண்ணங்கள் இரட்டை தன்மை உடையவை.    ஒரே விஷயத்தைப்பற்றி இரண்டு விதமான சிந்தனைகள் தான் எப்பொழுதும் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.   ஒன்று உடல் அல்லது பொருள் சம்பந்தப்பட்டது.   இன்னொன்று சரி, தவறு பார்க்கும் சரியான சிந்தனை.   இது பொருட் தன்மைக்கு அப்பாற்பட்டது.   உடல் சம்பந்தப்பட்ட சிந்தனை எப்பொழுதும் பொருள் தழுவியதாகவே இருக்கும்.   இன்னொரு சிந்தனை பொருள் அல்லாது உடல் சம்பந்தப்படாதது.  அதற்கு அப்பாற்பட்டது.    அல்லது அதற்கு அதீதமானது என்று சொல்லலாம்.

இரண்டு விதமான எண்ணங்களை தோற்றுவிக்கும் மனமும் இரட்டைத் தன்மையது தான்.    ஒன்று உடல் அல்லது பொருள் அல்லது உடல் இன்பம் சம்பந்தப்பட்டு இயங்கும் மனம்.  இது உள் மனம்.     வேறொன்று இவற்றிற்கு அப்பாற்பட்ட சிந்தனைத் தன்மை  உடையது.    இது அதனுள் இருக்கும் பதிவுகளின் அடிப்படையில் இயங்குகிறது.   இது வெளி அல்லது ஆழ் மனம்.      ஒரு மனம் உடலுக்குள் இருந்து இயங்குகிறது.   மற்றொன்று உடலுக்கு வெளியில் இருந்து இயங்குகிறது. 

உடலும் உள்மனமும் ஒருமுகமாக இணைந்து இயங்குவது யோகத்தின் முதல்படி.   ஆழ் (வெளி) மனமும் உள் மனமும் ஒருமுகமாக இணைந்து இயங்குவது யோகத்தின் அடுத்த நிலை.   இன்றைய காலத்தில் யோகம் என்பது ஆங்கிலப்  படுத்தப்பட்டு  யோகா என்றும் யோகா என்பது உடற்பயிற்சி  என்றும் பரவலாக அறியப்படுகிறது.

உண்மையில் யோகம் என்பது இணக்கம் என்று பொருள்படும்.   அதாவது அனைத்தும் ஒருங்கிணைந்த நிலை.

உள்  மனம் ஆனது வெளி மனதிற்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டும்.   காரணம் உள்மனம் உடலுடன் அழியக்கூடியது.   வெளி அல்லது ஆழ் மனம் பிரபஞ்ச சம்பந்தமுடையது.   அதற்கும் அதன் பதிவுகளுக்கும்  அழிவில்லை.   அது எல்லாப் பிறவிகளிலும் தொடரும்.

அதனைத்தான் நாம் ஆன்மா என்கிறோம்.

இந்த உலகத்தில் எல்லாமே இரட்டை நிலை பெற்றிருக்கின்றன.   இரவு-பகல், ஆண் -பெண்,  இருட்டு-வெளிச்சம்.    இது போல மனதிற்கும் இரட்டைத் தன்மை இருக்கவேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடு தான் ஆன்மா  என்ற மனதின் இன்னொரு நிலை அல்லது பகுதி..   இந்த அறிவு தான் மனோதத்துவத்தின் அடிப்படை.   இதற்கு வித்திட்டதே இந்தியா தான்.

இது தான் ஆன்மீகத்தின் ஆரம்பம் .  ஆன்மாவைப்பற்றிய அறிவே ஆன்மீகம் என்பது.   இனி நாம் உள் மனதை மனம் என்றும் ஆழ் மனதை ஆன்மா என்றும் குறிப்பிடுவோம்.

நம் மனம் என்பது உடல் சம்பந்தப்பட்டது.   அது தன வழியே போனால் உடல் சுகத்துக்கான வழிகளையே தேடும்.   வாய்க்கு ருசி, உடலுக்கு இன்பம், அதற்கு தேவையான பொருள், அதைத் தேடும் வழிகள் ஆகிய வழிகளிலூடேயே அது பயணிக்கும்.   இந்த பயணத்தின் பலன் இந்த உடலுக்கு கிடைக்கவேண்டும்.    இந்த அளவிலேயே நம் மனதின் போக்கு அமையும்.

தானாக இயங்கினாலும் இந்த மனம் ஆழ் மனமான ஆன்மாவுக்கு கட்டுப்பட்டது தான்.     மனதின் செயல் பாடுகள் அனைத்தும் ஆன்மாவில் பதிவாகிக்கொண்டிருக்கும்.  ஆன்மா உடலுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளை உடையது.   அதனுள் பதிவாகும் செயல்பாடுகளை ஆன்மா தன ஆய்வுக்கு உட்படுத்தும்.

மனம் உடல் சம்பந்தப்பட்டது மாதிரி ஆன்மா பிரபஞ்சம் சம்பந்தப்பட்டது.  அதன் செயல்பாடுகள் பிரபஞ்ச நிலையிலேயே இருக்கும். 

பிரபஞ்சத்துக்கும்  ஆன்மா என்ற ஆற்றலுக்குமிடையிலான வேறுபாடு தான் என்ன? 

பிரபஞ்சம் என்பது பரிபூரணமான ஆற்றல்,   ஆன்மா என்பது குறையுள்ள , நிறைவற்ற, பலம் குறைந்த ஆற்றல். 

ஆன்மா பூரணத்துவம் அடைவதற் காகவே  ஒரு உடலெடுக்கிறது.  ஆன்மா  தனது  ஆற்றல் அதிகரிப்புக்குத் தேவையான உணர்வுகளை நம் மனதிற்கு தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கும்.

நம் மனதிற்கு பலவிதமான நிலைகள் இருக்கின்றன.   மனதின் அதிர்வுகளின் அளவிற்கேற்ப அதன் நிலைகள் மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.   அதிர்வுகள் மிக குறைந்து இருக்கும்போதுஉடல் தூக்கத்துக்கு உட்படும்.  மனம் ஒரு குறிப்பிட்ட  அலை வரிசை அதிர்வுகளின் இருக்கும்போது மட்டுமே ஆன்மாவின் உணர்வுகள் நம் மனதில் பதியும்.   இந்த நிலையில் ஏற்கப்படும் உணர்வுகள் அடிப்படையில் மனம் செயல்படும்போது தான்  அது நேரான நேர்மறையான வழியில் செயல்படும்.   இந்த செயல்பாடு உடலின் சுகத்தையோ பந்த பாசங்களையோ வளர்க்காது.   அதனால் பொருளாதார வளர்ச்சியின் வழியே செல்லாது.

மனதின் அதிர்வுகள் கூடிய அலைவரிசைகளில் அமைந்து  அதிர்வுகள்  அதிகமாகும்போது நமது மனம் எப்பொழுதும் பொருளாதார வளர்ச்சிக்கான சிந்தனைகளில் ஈடுபடும்.. 

இந்த சமயங்களில் நம் மனம் ஆன்மாவின் தொடர்பிலிருந்து  விடுபட்டு வேறுபட்ட நிலையில் செயல்படும்.   இந்த எதிர்மறையான செயல்பாடுகள் ஆன்மாவில் பதிவாகும்போது,  அங்கு இருக்கும் நேர்மறை ஆற்றலுடன் சேரும்போது, நேர்மறை ஆற்றல் குறைந்துகொண்டே வரும். 

இதன் விளைவாக  உடல் அழியும்போதுஆன்மாவின் ஆற்றல் மிகவும் குறைந்து இருந்தால்  மீண்டும்  ஒரு உடல் எடுக்கும் சக்தி அதற்கு இருப்பதில்லை.   ஆன்மாவில் நேர்மறை ஆற்றல் குறைந்த பக்ஷ அளவையும் விட குறையும்போது அது பிரபஞ்ச வெளியில் நிலை கொள்கிறது.   இந்த நிலையில் தான் ஆன்மா ஆவி என்று அழைக்கப்படுகிறது.    பிரபஞ்ச வெளியில் அது கொஞ்சம் கொஞ்சமாக சில பல காலங்களாக தனது ஆற்றலை வளர்த்து மீண்டும் உடலெடுக்கிறது.

பிரபஞ்ச வெளியில் ஆன்மா தனக்கென்று ஒரு உடலும் மனமும் அற்ற நிலையில் எப்படி தன சக்தியை வளர்க்கிறது ?

உடலுடன் வாழும் ஏதாவது ஒரு ஆன்மாவின் சக்தி மண்டலத்தில் இதற்காக தஞ்சம் புகுகிறது.  சில சமயங்களில் நமது சக்தி மண்டலத்தில் இது போன்ற பல ஆன்மாக்கள் தஞ்சம் பெற்று நிலை கொள்கின்றன.  சில சந்தர்ப்பங்களில்
நம்மில் சிலர் மனதளவில் இரட்டை ஆளுமைக்கு உட்படுவதற்கு இது தான் காரணம்.   எதாவது காரணத்தால் உள்மனம் தளரும்பொழுது சக்தி மண்டலத்தில் இருப்பவைகளில் பலமுள்ள ஓர் ஆன்மா அந்த மனதை மேலாண்மை கொள்கிறது.   தளரும் மனம் மீண்டும் வலுவடையும் போது அது பின் வாங்குகிறது.   நம் சக்தி மண்டலத்தில் நிலை கொள்ளும் ஆவிகள் ஒட்டுண்ணிகள் மாதிரி.   அண்டி இருந்து சக்தியை உறுஞ்சுவன.


மனம் முற்றிலும் ஆன்மாவின் கட்டுக்குள் வரும்போது,  இரண்டும் முற்றிலும் இணைந்து செயல்படும்போது, அதாவது நாம் யோக நிலையை அடையும்போது  ஆன்மாவில் எதிர்மறை சக்தி வெளியேறி  முற்றிலும் நேர்மறை சக்தி நிறையும்.    நேர்மறை சக்தி கூடுந்தோறும் ஆத்மாவின் எடை  குறையும்.   எடை குறையுந்தோறும் ஆன்மா பூமியிலிருந்து மேல் நோக்கி நகரத்தொடங்கும். நேர்மறை சக்தி அதிகம் பெறும்  தோறும் ஆன்மா
அந்த அளவிற்கு எடை குறையப்பெறும்.   இந்நிலையில்  உடலிலிருந்து வெளியேறும்  சுதந்திர ஆன்மாவானது பூமியின் ஈர்ப்பிலிருந்து விடுபட்டு  மேல்நோக்கி சென்று கொண்டே இருக்கும்.   ஆன்மா முற்றிலும் நேர்மறை சக்தியாகும் போது எடையே இல்லாத நிலையை அடையும்.   அப்போது பூமியின் ஈர்ப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டு பிரபஞ்சத்தில் ( அநேகமாக ஈதர் ஆக) இணையும்.   இதுவே முக்தி.

இப்படி முற்றிலும் நேர்மறை சக்தி பெற்று பூமியின் ஈர்ப்பு சக்திக்கு அப்பாற்பட்ட பிரபஞ்சத்தை   அடையப்பெற்ற ஆன்மாக்களே தெய்வங்கள் என்று நம்மிடையே அறியப்பெறுகிறார்கள்.   இவர்கள் நிலைகொள்ளும் பூமியின் ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட பிரபஞ்ச பகுதியையே நாம் விண்ணுலகம் என்று அழைக்கிறோம்.  இதுவே சமணக்  கோட்ப்பாடு.  இது தான் இன்றும் நம் பழக்கத்தில் இருந்து வருகிறது.     நாம் இறைவனையும் தெய்வத்தையும் வேறுபாடு தெரியாமல் குழப்பிக்கொண்டிருக்கிறோம்.    தெய்வங்கள் நம்மிடையே பிறந்து வளர்ந்து இறைத்தன்மையை அடைந்தவர்கள். இறைவன் பிண்ட, அண்ட , பிரம்மாண்டங்களுக்கு அப்பாற்பட்டவன்.   இதை நாம் உணர வேண்டும்.