செவ்வாய், 25 செப்டம்பர், 2018

Five Elements - Element -1- Eternal Space பஞ்ச பூதங்கள் - பூதம் 1 - ஆகாயம் - அது சிவனா? -

பஞ்ச பூதங்கள்  -  பூதம் 1 -  ஆகாயம்  - அது  சிவனா?

இந்த பிரபஞ்சத்தை பாருங்கள்.  அமைதியாக சிந்தனையை ஓடவிடுங்கள்.

பூமியைப் பார்க்கிறோம்.   பூமியில் உள்ள ஜீவ அஜீவ பொருட்களை பார்க்கிறோம்.   பூமியை போன்ற கிரகங்களை பார்க்கிறோம்.   சூரியன் போன்ற நக்ஷத்திரங்களைப் பார்க்கிறோம். இவை எல்லாம் எத்தகையவை.   சிந்தித்துப் பாருங்கள்.  இவை எல்லாம் மாற்றங்களுக்கும் அழிவுக்கும் உட்பட்ட தன்மையவை.   என்றோ ஒருநாள் இவை ஒவ்வொன்றும் அழிந்துவிடும் என்பதை விஞ்ஞானமே ஒப்புக்கொள்கிறது.   மாற்றம் மட்டுமே இந்த உலகத்தில் நிரந்தரமாக நடந்துகொண்டிருக்கிறது.   அழிவு என்றால் என்ன?   உலகத்தில் நாம் பார்க்கிற பொருட்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து வேறொன்றாக உருத்திரிகின்றன.   ஒன்று அழிந்து வேறு ஒன்றாகவோ பலவாகவோ மாற்றம் அடைகிறது.   உருத்திரிகிறது என்பதே சரியாக இருக்கும்.

நம் பார்க்கிற மற்றும் பார்வைக்கு அப்பாற்பட்ட அனைத்து பொருட்களும் குடிகொள்வது ஆகாயம் என்ற வெட்டவெளியில்.   இந்த வெட்டவெளியை நம்மால் பார்க்க முடிகிறதா?     பார்க்கமுடிவதில்லை.    நாம் பூமியின் மேலாக சுற்றிலும் பார்க்கும்பொழுது நீலநிறமாக தெரிவது  ஆகாயமா  அல்லது ஆகாயத்தின் எல்லையா ?    அது ஆகாயமல்ல.  அதன் எல்லையுமல்ல.   அது நம் கண்களுக்கு வகுக்கப்பட்ட பிரபஞ்ச எல்லை மட்டுமே.  எல்லையின்றி விரிந்து பரந்து கிடக்கும் பிரபஞ்சத்தின் நம் பார்வையின் எல்லை மட்டுமே.  உனக்கு இவ்வளவு போதும் என்ற மட்டில் அமைந்து இருக்கும்  மாய, போலி எல்லை.

பார்க்க முடியாத உணர்ந்து அறியமுடியாத ஆகாயத்தை அது  இருக்கிறது என்பதை நாம் எப்படி அறிகிறோம்.   சூரியன் மற்றும் கிரகங்கள் முதலான அனைத்து பொருட்களும் நிலைகொள்வதால் அவற்றின் இருப்பிடமாக ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை நம்மால் உணர அல்லது ஊகிக்க முடிகிறது.   அந்த உணர்வு உறுதியாக நிஜம் என்பதும் நம் உணர்வுக்கு எட்டுகிறது.    யாரும் இதைப்பற்றி சந்தேகம் கொள்வதோ கேள்வி கேட்பதோ கிடையாது.   அனைவரும் ஆகாயத்தின் உண்மையை உறுதியாக ஒப்புக்கொள்கிறோம்.

இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் ஆகாயமே ஆதாரமாக அமைந்திருக்கிறது.   நாம் ஆகாயம் பஞ்சபூதங்களில் ஒன்று என்று சொல்கிறோம்.   சற்றே சிந்தித்துப் பாருங்கள்.   ஆகாயம் எதனால் ஆனது.    ஆகாயத்தின் உள்ளடக்கம் என்ன?  ஒன்றுமில்லை என்பதை யாராலும் மறுக்கமுடியாது    ஆகாயத்தை வெட்ட முடியாது.    அடிக்க  முடியாது.   சிதைக்க முடியாது.   பிரிக்க முடியாது.   அது அழிவற்றது.   எந்த மாற்றத்துக்கும் உட்பட்டதல்ல. அது பூதங்களின் அடிப்படை.   இயற்கையின் அடிப்படைப் பொருள் ஆகும்.

ஆகாயம் இதுவரை விஞ்ஞானத்தின் ஆய்வுக்கு பிடிகொடுக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை/

ஆகாயம் ஒன்று மட்டுமே அடிப்படையானது.    அது வெறும்வெட்டவெளி மட்டுமே.   ஆகாயம் என்பது பரமாத்மா சம்பந்தப்பட்டது.  இது மற்ற நான்குபூதங்கள் உருவாக எதுவாக அமைகிறது.   நான்கு பூதங்களுக்கு இருப்பிடம்  தருகிறது.   பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருட்களினுள்ளும்  ஆகாயம் இருக்கிறது.  ஒவ்வொரு பொருளும் ஆகாயத்தின் உள்ளே அடங்கி இருக்கிறது.   ஆகாயம் தான் சிவன்.   அதுதான் சிவ வாக்கியர் எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்கனே என்று பாடுகிறார்

இனி மற்ற நான்கு பூதங்களைப் பற்றி விளக்கமாகவும் அவை உருவாக ஆகாயம்  எவ்வாறு காரணமாக அமைகிறது என்பதையும் அதில் அடங்கி இருக்கும் சிவ தத்துவத்தையும் தொடர்ந்து  சிந்தனைக்கு கொண்டு வருவோம்.   தொடர்ந்து படியுங்கள்.     நன்றி.   வணக்கம்.

திங்கள், 24 செப்டம்பர், 2018

Chanting and spiritual uplift - 2 மந்திர உச்சாடனம் : ஆன்மீக உணர்வு -2

Chanting and spiritual uplift - 2  மந்திர உச்சாடனம் : ஆன்மீக உணர்வு -2

ஆத்மாவை உணர்வது என்பது கடவுளை உணர்வது;   அறிவது .

இந்த உணர்வின் அனுபவத்தை உணர்ந்த ஒருவர் இன்னொருவருக்கு சொல்லிக்கொடுத்து அல்லது கற்றுக்கொடுத்து உணரவைக்க இயலாது.  வெறும் காட்சி மட்டும் உணர்வையும் அனுபவத்தையும் ஏற்படுத்திவிடாது.  அதாவது பக்தி என்பது வெறும் காட்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.    காட்சி மனதை ஈர்த்து நம் வசப்படுத்தும்;      நம்மை உணர்ச்சி வயப்படுத்தும்.  மனம் தன்  வயப்படுவது முதல் நிலை.  இறைவன் என்கிற தத்துவத்தை உணர்வதற்கான ஆரம்ப நிலையும்  அதுவே.

 கோவில், விக்ரஹம் வேண்டும்.  இவற்றை பராமரிக்கவேண்டும்.   அலங்கார அபிஷேகங்கள் செய்வதாற்கான பொருட்கள் வேண்டும்.  இவற்றுக் கெல்லாம் பணம் தேவை.    இந்த பக்தி  நிலை பணத்தை அடிப்படையாகக் கொண்டது.      இவற்றை எளிமையாகவும் செய்யலாம் ஆடம்பரமாகவும் செய்யலாம்.   அவரவர் பண வசதியைப் பொறுத்து பிரமாண்டமாகவும் செய்யலாம்.  யாரோ ஒருவர் பணம் செலவழிக்க அநேகம் பேர் அதை அனுபவிக்கலாம்.   ஆனால் பணம் தேவை என்பது அடிப்படை. 

பணமும் அகங்காரமும் சாதாரணமாக இணைந்தே இருக்கும்.  நான் என்னும் உணர்வு  இணைந்தே இருக்கும்.  இந்த உணர்வு தன்னை உயர்த்திக் காட்டுவதாகவும் இருக்கலாம்;  அல்லது தன்னை இறைவனுக்கு அடிமைப்படுத்திக்காட்டுவதாகவும் இருக்கலாம். மிக எளியவனாக தன்னை வெளிப்படுத்தலாம்.   இவை எல்லாமும் 'நான் ' என்பதில் அடக்கம். இந்த நிலையில் சிலர்  விதிவிலக்காகவும்  இருக்கலாம்.

பக்தி என்ற முதல் நிலையிலேயே நீண்ட  நாட்கள் நிலைத்து நிற்பது நான் என்கிற எண்ணத்தை நிலைநிறுத்தும்.   நாட்கள் செல்லுந்தோறும் அஹங்காரம் வளரும்.     மனம் உணர்ச்சி வயப்படும். மனம் உணர்ச்சி வயப்படும் முன்னர் அதனை உணர்வு வழிப்படுத்த வேண்டும் .

இறை வழியில் ஆரம்ப நிலையான பக்திக்கு அப்பாற்பட்ட இரண்டாவதான நிலை என்ன.  ஒளியில் இருந்து ஒளியின் இடத்திற்கு இப்பொழுது வருகிறோம்   ஒலிக்கு அடிப்படை அமைதி.   ஒலி  என்பது மந்திர உச்சாடனம்.

இதற்கு பக்தியின் மூலம் தன்  வயப்பட்ட மனமும் தகுந்த இடமும் நேரமும் மட்டும் போதுமானது.

காட்சிகளால் ஈர்க்கப்பட்டு தன்  வசப்பட்ட மனதை, அடுத்தபடியாக இறைவனை உணருவதற்கு பழக்கப்படுத்த வேண்டும்.  இதற்கு மந்திர உச்சாடனம் பயன்படும்.

மந்திரம் என்றால் என்ன? 

வாயால் உச்சரிக்கும் ஒலி.    அதுவே மந்திரம்

ஒளியும் ஒலியும் இறைவனை உணரும் பாதையில் தவிர்க்க முடியாதவைகள்.  

தீபமாகிய ஒளி முதல் நிலையில் வரும்.  ஒலி  இரண்டாவதும் அதன் அப்புறமான  நிலைகளில் எல்லாம் முதன்மையான இடம் வகிக்கும்.

மந்திரம் என்பது வேதங்களிலிருந்து அல்லது சுலோகங்கள் அல்லது சுலோகங்களிலிருந்து தான் எடுக்கப்படவேண்டும் என்பதில்லை.  அப்படியும் எடுக்கலாம்.   ஒன்றோ இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்களால் மந்திரம் அமையலாம்.   ஓதுபவரால் எளிதில் சிரமமின்றி உச்சரிக்கக் கூடியதாக அமைய வேண்டும் என்பது தான் முக்கியம்.   மனதிற்கு இசைந்த பிடித்தமான  சொல் அல்லது ஓசை ஆக  இருந்தாலே போதுமானது.   ' ம்' என்ற ஒரு எழுத்தாக இருக்கலாம்  ஓம் என்ற இரண்டு எழுத்தாக இருக்கலாம்.   ராம் முதலான நாமங்களில் ஒன்றாக  இருக்கலாம்.

மனம் ஒருநிலையை அடையாமல் ஜெப மாலையை வைத்துக்கொண்டு பலரும் உருவிடுவதை பார்த்திருக்கிறேன்.  வாய் ஜெபிக்கும்.   கை மாலையை உருட்டும்.     மனம் எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருக்கும்.    இதனை அவர்கள் முகம் காட்டிக்கொடுக்கும்.

ஆகையால் மனதை நிலை நிறுத்திப் பழகிய பிறகு மந்திர உச்சாடனம் செய்வதே பயன் தரும்.     இல்லை என்றால் மன அழுத்தம் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கவே ஏதுவாகும்.

மந்திரத்தை  முதலில் சிறிய சப்தத்தில் திரும்பத்  திரும்ப   படித்து மனதில் பதிய வைக்கவேண்டும்.   ஆரம்பத்தில் சிறிய சப்தத்தில் படித்தால் மட்டுமே மனதில் உரைக்கும்.  இல்லை என்றால் மனம் ஏற்காது.   தொடர்ந்து மந்திரம் சிறிய சப்தத்தில் படித்து வர அது  மனதில் நிற்கும்.

இதன் பின்னரே உருவிடல் தொடங்கவேண்டும்.   உருவிடல் என்பது நிதானமாக சிறிய சப்தத்தில் உதட்டளவில் திரும்ப திரும்ப சொல்வது.  சில காலம் பொறுமையாக செய்யவேண்டும். தளராமல் செய்யவேண்டும்.   பலன் கிடைத்ததா என்ற சோதனையில் இறங்கக் கூடாது .    நாட்பட நாட்பட நாம் அறியாமலேயே உணர்வதற்கான எந்த வித முயற்சியும் இல்லாமலேயே பலனை உணரத்தொடங்குவோம்.   [பொறுமையும் முடிந்த வரையில் இடைவிடாது தொடர்ந்து ஈடுபடுவதும்  நல்லது..

தினமும் இதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ளவேண்டும்.  அந்த நேரத்தில் உருவிடல் தினந்தோறும் செய்யவேண்டும்.   என்றென்றும் இக்குறித்த நேரத்தில் செய்யவேண்டும்.  தினமும் காலையில் எழுந்த உடன் பல் தேய்ப்பது போல.   குறிப்பிட்ட நேரங்களில் உணவருந்துவதுபோல.   அன்றாடம் தவறாமல் செய்யவேண்டும்.   ஒரு வேலையை தினமும் குறித்த நேரத்தில் செய்யும்போது,  நம் உடலும் மனமும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகி விடுகிறது.    தினமும் எந்த நேரத்துக்கு சாப்பிடுகிறோமோ அந்த நேரத்துக்கு பசி ஏற்படுவது போல.

தினமும் மந்திரம் உருவிட்டு பழகி வரும்பொழுது அந்த மந்திரம் வெகு இயல்பாக நம் நாவில் இருந்து வெளிப்படுகிறது.    நாளடைவில் இந்த இயல்பான ஓசை வெளிப்பாட்டில் ஒரு ரிதம் (சுருதி) உண்டாகிறது.    இந்த ரிதம் அலை அலையாக ஓங்காரத்தை வெளிப்படுத்துகிறது.   இந்த ஓங்காரம் நம் காதுகளில்  ரீங்காரமிடுகிறது.   காதுகளில் கவனத்தை நிறுத்துங்கள்.   உச்ச்சாடனததை கவனியுங்கள்.   இந்த ரீங்காரம் நமது உடலில் ஒவ்வொரு அங்கத்திலும் நம் உடலில் வாழும் ஒவ்வொரு  நுண் உயிரிலும் அதிர்கிறது.
இந்த அதிர்வுகள் நம் உடலில் ஆத்மாவை உணர்த்துகின்றன.  நம் உயிருக்கும் ஆத்மாவிற்கும் இடைப்பட்ட இடைவெளி குறையத்தொடங்குகிறது.

சில பல மாதங்களில் இந்த மந்திரம் நம்முடன் ஒன்றி விடுகிறது. 

இன்ன நேரம் என்றில்லாமல் நம்மை அறியாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நம் மனதில் உருவிடப்படுகிறது.

அப்படி ஒன்றிப்போன பிறகு பலவாறாக இந்த மந்திரத்தை பயன்படுத்தலாம்.  காலையில் எழுந்தவுடன் ஒரு மூன்று முறை உச்சரிக்கலாம்.   அந்த நாளில் பிரச்சினைகள் எதுவானாலும் சிரமத்தை தராது.     நீங்களோ அல்லது வீட்டில் உள்ள யாராவது வெளியே போகும்பொழுது  நீங்கள் மூன்று முறை உருவிடலாம்.     அதனால் வெளியே போகிறவர்கள் எந்த பிரச்சினைகளையும் நேரிடாமல் தடை செய்யவோ அதன் பாதிப்பை குறைக்கவோ ஏதுவாகும்.  இவ்விதம் உங்கள் உசிதம் போல் தேவைகளுக்கு அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.  நாளடைவில் இந்த மந்திரம் உங்கள் உடலோடு ஒட்டி இருக்கும் ஒரு அங்கமாகவே மாறிவிடும்.

மந்திர உச்சாடனம் செய்யும்பொழுது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது தனியாக இன்னொரு வலைப்பூவில் விபரமாக படிக்கலாம்

தொடர்ந்து படியுங்கள்.   kitturengasamy.blogspot.com என்று கூகுள் மூலம் நுழையலாம்.        நன்றி.         வணக்கம்.



ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

Chanting and spiritual uplift - 1மந்திர உச்சாடனம் : ஆன்மீக உணர்வு -1


மந்திர உச்சாடனம் : ஆன்மீக உணர்வு -1

மணி ஓசைகள்   கொட்டு மேளங்கள் தாரை தப்பட்டைகள் பக்தி பாடல்கள் பஜனை முழக்கங்கள் விக்கிரக அலங்காரங்கள் அபிஷேகங்கள் தூப தீபங்கள் ஆராதனைகள் எல்லாம் ஆலயத்தில் ஏன் நடத்தப்படுகின்றன ?

இவை அனைத்தும் அலைந்து திரியும் மனதை கட்டிக்கொண்டு வருவதற்கான கடிவாளங்கள் தான் .  இதற்காக இந்த ஆராதனைகளில் நம் கண்களையும் காதுகளையும ஈடுபடுத்தவேண்டும்  வேறு எதிலும் கவனம் செலுத்தக்கூடாது.

அதிவேகத்தில் எண்ணங்களில் சஞ்சரித்து கொண்டிருக்கும் மனதை ஒரு சில நிமிடங்களுக்காவது ஒருநிலைப்படுத்தி நிலை  நிறுத்துவதற்காக உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்டவை இவை .  இந்த சப்த கோலாகலங்களுக்கும் தூப தீபங்களுக்கும் கட்டுப்பட்டு ஒருசில நிமிடங்களுக்கு மனதை பிடித்து நிறுத்துவதும் இதை சில காலங்களுக்கு தொடர்ந்து செய்வதும் தான் இறைவன் என்ற தத்துவத்தை உணர்வதற்கான ஆரம்ப நிலை - முதல் படி அதாவது ஆரம்ப பள்ளி.   பள்ளி என்பதே ஆதி காலங்களில் இறை நிலை உணர்வதற்கானதும் முக்தி எய்துவதற்கானதும் ஆன நடைமுறை வழிகளை கற்றுக்கொடுப்பதற்கான கூடங்கள்தான்.

காலப்போக்கில் எந்தவிதமான கோலாகலங்களும் இல்லாமல் சில நிமிடங்களில் மனம் ஒருமுகப்படும் தன்மையை அடையலாம்.  இந்த நிலையை  எட்டிய பிறகு தான் மந்திரங்களும் உச்சாடனங்களும் பயன் தருகின்றன.  இந்த நிலையை எட்டியபோது தான் நாம் இறை வழிபாட்டில் அடுத்த அல்லது இரண்டாவது படியை அல்லது நிலையை  அடைகிறோம் .   இந்த நிலையை அடைந்த பிறகுதான் மந்திர உச்சாடனம் செய்யத் தொடங்க வேண்டும் .

இந்த நிலையில் தான் தீக்ஷை என்பது தரப்படுகிறது.   இந்தக்காலத்தில் தீக்ஷை தரும் தகுதி உள்ளவர்கள் எத்தனை பேர் என்பது வேறு விஷயம் தகுதியானவரிடமிருந்து கிடைக்கும் தீக்ஷை மட்டுமே பலன் தரும் .  எந்த தீக்ஷையும் இல்லாமல் மன உறுதியுடன் மந்திரம் உருவிடலாம்.

ஒருநிலைப்பட்ட  மன நிலையில் மந்திர உச்சாடனம் சலிப்பின்றி தொடர்ந்து சிலபல காலம் செய்வதால் நிச்சயமாக  ஆன்மீகத்தின் அடுத்த படியை அல்லது நிலையை அடையலாம்

மந்திரம் என்றால் என்ன?   அதை எப்படி தேர்ந்தெடுப்பது ,   எப்பொழுது எப்படி உருவிடுவது  எதை எல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும் போன்றவைகள் எல்லாம் மந்திர உச்சாடனம் : ஆன்மீக உணர்வு-2 என்று இன்னும் தொடரும்

இந்த blog ஐ  தொடர்ந்து படியுங்கள் . நன்றி. வணக்கம்

சனி, 22 செப்டம்பர், 2018

Devotion/Bakthi and spiritual uplift - 1 பக்தியும் இறை உணர்வும் - 1 பக்தி என்பது ஆன்மீக எல்லையா?


பக்தியும் இறை உணர்வும் - 1  பக்தி என்பது ஆன்மீக எல்லையா?

ஆரவாரம் பக்திக்கு ஆரம்பம். கோவில், உருவச்சிலை அலங்கார அபிஷேகங்கள்,  மணி ஓசை,  மேளதாளங்கள்,  உடல் உறுப்புகளில் மத சின்னங்கள்,  அடையாளங்கள், தூப தீபங்கள்  போன்றவைகள்,  விழா எடுப்பது,  தெய்வ உருவங்களுக்கு திருமணம் செய்வித்து மகிழ்வது  போன்றவைகள் எல்லாம் ஆரவாரங்கள்.  திருவள்ளுவர் வாக்கில் சொன்னால் இவை எல்லாம் ஆகுல நீர .  இந்த ஆரவாரங்களில் தான் பக்தி உண்டாகி வளர்கிறது.    பக்தி தான் ஆன்மீக அறிவுக்கும் வளர்ச்சிக்கும் முதல் படி.   

பக்தி என்பது உணர்ச்சி பூர்வமானது.    மனதை உணர்ச்சி வசப்படுத்தும்.  பக்தியில் தொடரும் அனுபவம் சில காலங்களில்   சில பல நிமிடங்களுக்கு மனதை ஒருநிலை படுத்தும் பக்குவத்தை ஏற்படுத்தும்.   இந்த நிலை தொடரும்போது காலப்போக்கில் அடுத்த நிலைக்கு போக வேண்டும். பக்தி அதிகரித்து உணர்ச்சிகளிலிருந்து மெல்ல வெளியேறி உணர்வுகளுக்குள் ஆட்பட வேண்டும்.   

இங்குதான் ஒரு சரியான குருவின்  வழிகாட்டுதல் அல்லது அறிவுரை தேவைப்படுகிறது.  பக்தியிலிருந்து அடுத்த நிலைக்கு உயர வேண்டும் என்ற உணர்வை அவர் ஏற்படுத்த வேண்டும்.   ஒருநிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர்த்தி விடுபவரே சரியான குருவாக இருப்பார்.   சீடனை அதே  நிலையில் தொடரவைக்கும் குரு தானும் அடுத்த படியை எட்டாதவராகவே இருக்கமுடியும்.  இம்மாதிரியான குருவின் சீடன் என்றும் சீடனாகவே கடை நிலையிலேயே இருப்பான். 

எந்த குருவின் உதவி இல்லாமலும் ஒருவனால் தானாகவே அடுத்த நிலையை அடையவும்  முடியும்.   வள்ளலாருக்கு எந்த குருவும் இருக்கவில்லை.  சீரடி சாயிக்கு எந்த குருவும் இருக்கவில்லை. அவர்கள் என்ன ஆன்மீக உயர்வினை எட்டவில்லையா?  விடா முயற்சியும் சரியான தெளிவான உணர்வுகளும் வழிகாட்டி ஆன்மீகத்தில் ஒவ்வொரு படியாக மேல் நோக்கி உயர்த்திவிடும்.

 மனதை ஒருமுகப்படுத்தி  நிறுத்துகிற நேரத்தை அதிகப்படுத்தி  ஒருமுகத் தன்மையை அனுபவித்து உணர  வேண்டும்.   அப்படி அனுபவிக்கிறபோது உணர்ச்சிகள் குறைந்து உணர்வுகள் வளரத்தொடங்கும்.   உணர்வுகள் வளரும் போது தானாகவே கொஞ்சம் கொஞ்சமாக ஆரவாரங்களிலிருந்தும் சப்த கோலாகலங்களில் இருந்தும் விடுபட்டு அமைதியின் வழிக்கு வந்து விடுவோம்.    பக்தி என்பது சரியான வழியில் கடைபிடிக்கப்படும்போது  நாட்போக்கில் அது அமைதி அல்லது ஆரவாரமற்ற தன்மையை அடைய வழி கோலும்.   இந்த தன்மை தான் ஆன்மாவைப்பற்றி அறியம்  உணர்வுக்கு அடிப்படையானது.   இந்த இரண்டாவது படியை எட்டாமல் பக்தியாகிய முதல் படியிலேயே நின்றுகொண்டிருந்தால் ஆன்மீகத்தில் உயரங்களை என்றென்றைக்கும் எட்டிப்பிடிக்க முடியாமல் போகும்.    வளர்ச்சி தடைபட்டு விடும்.      

இரண்டாவது நிலையில் தொடரும்போது மனதை ஒருமுகப்படுத்தி நிற்கும் நேரம் கூடிக்கூடி அதிகரித்து வரும்.  கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு குறைந்து வரும்.  தேவை இல்லாமல் பேசுவது குறையும். யாரையும் ஓஹோ என்று புகழ மாட்டார்கள்.   புகழுக்கு வசப்படவோ அடிமைப்படவோ மாட்டார்கள்.    தனிப்பட்ட தேவைகள் குறைந்துவிடும்.   விருப்பு வெறுப்புகள் குறையும். சொந்தபந்தங்களிலும் பிறவற்றிலும்  பற்றற்ற தன்மை ஏற்படும்.  இந்த  காலத்தில் இந்த  அளவிற்கு ஆன்மீக வளர்ச்சி அடைந்தாலே போதுமானது.
இந்த நிலையிலேயே தான் தியானம் கைகூடும்.

அடுத்தபடி மௌனம் பேச்சை படிப்படியாக குறைத்து கடைசியில் அடைவது இது.   இது தற்காலத்தில் எல்லோருக்கும் சித்தியாவது கடினம்.   இந்த நிலை அடைந்து தியானத்தில் தொடர்ந்து மூழ்கும்போது தான் முக்தி அல்லது சம்சார சாகரத்திலிருந்து பிறவி எடுப்பதிலிருந்து விடுதலை கிடைக்கும்.

மனம் ருசி என்ற இரண்டும் ஒரு தன்மையில் ஒத்திருக்கின்றன.  இரண்டையுமே ஒருவரால் சுயமாக உணர்ந்து அனுபவிக்க மட்டுமே முடியும்.  நீங்கள் அருந்திய ஒரு பானத்தின்  அல்லது உணவின் ருசி அல்லது சுவையை  நீங்கள் அனுபவித்த அல்லது உணர்ந்த நிலையில் சுவை இன்ன மாதிரி இருந்தது என்று துல்லியமாக சொல்லி இன்னொருவருக்கு புரிய வைக்க முடியுமா?   நீங்கள் சொல்வதிருந்து நீங்கள் அனுபவித்த அதே ருசியையும் உணர்வுகளையும் அதே நிலையில் அவர்களால் அனுபவித்து உணர முடியுமா ?   நிச்சயமாக முடியாது .   அவரவர் தாமாகவே அருந்தி சுவைத்து  அனுபவிக்கும்போது மட்டுமே உணர முடியும்.  இறை உணர்வை மனதால் அனுபவிக்கிறோம்.   அந்த அனுபவத்தை நாம் அனுபவித்த அதே படி இன்னொருவருக்கு விளக்கமாக சொல்லி புரிய வைத்து அனுபவிக்க வைக்க முடியாது.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எண்ணுவது நல்லகுணம் தான்.   ஆனால் ஆன்மீகத்தை பொறுத்தவரை நீங்கள் பக்தியில் பார்த்து பார்த்து அனுபவித்தவற்றை இன்னொருவருக்கு புகட்ட நினைப்பது வீணாகவே முடியும்.   அடுத்த படியில் உணர்ந்து அனுபவித்த இன்பத்தை இன்னொருவருக்கு புரிய வைப்பது இன்னும் கடினம்.

நாம் கேட்கும் ஆன்மீக கதைகள் ஆன்மீக  புராண சொற்பொழிவுகள் எல்லாம் எந்த அளவிற்கு நமது ஆன்மீகத்தை வளர்க்கும் என்பனவற்றை உணர்வு பூர்வமாக அறிந்து கொள்ள இந்த blog -ஐ follow செய்யுங்கள். நன்றி.  வணக்கம்