செவ்வாய், 24 டிசம்பர், 2019

பணம் - மனதில் ஏற்படுத்தும் பதிவுகள் - விளைவுகள். manifestations of energy

பணம் - மனதில் ஏற்படுத்தும் பதிவுகள் - விளைவுகள்.   manifestations  of  energy


இயற்கையில் சக்தி பஞ்ச பூதங்களாக பரிணமித்து இயங்குகிறது .இந்த பரிணாமம் மற்றும் இயக்கம் இயற்கையின் கட்டுப்பாட்டில் நடக்கிறது.

மனிதனின் புத்தியின் செயல்பாட்டால் சக்தி செயற்கையாக பல பரிணாமங்கள் எடுக்கிறது.  புத்தியை  ஆள்வது  மனிதன்.  ஆகையால் இந்த பரிணாமங்களை உருவாக்குகிறவனும்  மனிதனே .  அதனால் இந்த பரிணாமங்களின் கட்டுப்பாடு மனிதன் இடம்  தான்  இருக்கிறது.

இயற்கை  சக்திகள்  அழிவையும் ஆக்கத்தையும்  திடீரெனெ எதிர்பாராத சமயங்களில் ஏற்படுத்துகின்றன .  ஏன்,  எப்பொழுது எப்படி என்று  கணிப்பது கடினம்.   ஆனாலும் இப்பொழுது விஞ்ஞான வளர்ச்சியால் அதுவும் சாத்தியமாகி இருக்கிறது.   இயற்கையால்   ஏற்படுகிற  ஆக்கமானாலும் சரி  அழிவானாலும்சரி  மிகவும் கொடூரமானதாகவே  அமைகிறது.

மின்சாரம்  என்பது மனித நிர்மித  சக்தி.   மனிதன் உபயோகிக்கும் இயந்திரங்கள் அனைத்தும் சக்தியின் பல பரிணாமங்களை  செயற்கையாக வெளிக்கொணர்கின்றன. ஆயுதங்கள் மனித நிர்மித  சக்திகள். இவைகள் அனைத்தும் மனிதனுக்கு சுகங்களையும் ஆடம்பரங்களையும்  அள்ளித்தர வல்லவை.   அதே சமயம் இவைகளும்  இயற்கை சக்தி ஏற்படுத்தும்  அழிவிற்கு இணையான அழிவைத்த தரவல்லன.

மனித நிர்மித சக்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள இயலும்.   ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு கைமாறிக்கொள்ளவும் இயலும்.  இங்கு தான் வியாபாரம், பணம் பயன்பாட்டுக்கு வருகிறது.

இந்த வியாபாரம் என்பது எங்கே,  எப்போது,  ஏன் தொடங்கியது?

உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோது,   அல்லது  பூமியில் ஒரு குறிப்பிட்ட இடம் ஒருவனுக்கு தேவை என்று வருகிறபோது,  ஒருவனிடம் இல்லாத பொருளை நிறைய இருப்பவனிடம் இருந்து பெறும்போது கைமாறாக கொடுக்கப்படுவதற்கு  பொதுவான, அனைவருக்கும் சம்மந்தமான ஒரு ஏற்பாட்டின் அடிப்படையில் அதற்காக  ஏற்படுத்தப்பட்டது தான் பணம்.  பண்டமாற்று என்பது இருவரிடம் வேறுபட்ட பொருட்கள் இருக்கும் நிலையில் பரிமாறிக்கொள்வது. ஒருவனிடம் இருக்கும் பொருளை தன்னிடம் மாற்றுவதற்கு பொருள் இல்லாத ஒருவன்  வேறு ஒருவனிடம் இருக்கும் பொருளைபெறுவதற்காக  கைமாறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட மாயத்தன்மை வாய்ந்த ஒரு செயற்கை சக்தி தான் பணம்.   பணம் என்பது மதிப்பேற்றப்பட்ட ஒரு மாய சக்தி.    இதன் மூலம் ஏற்படும் பரிமாற்றம் தான் வியாபாரம் என்பது.

ஆகவே  பணம் என்பது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பரிணாம சக்தி. இது  வித்தியாசமான  ஒருசெயற்கை பரிணாமம்.  செயற்கையான சக்தி பலவிதங்களில் இயற்கையையே கட்டுப்படுத்தும் தன்மையது, அப்படிப் பட்ட  செயற்கை சக்திகளில் மிகவும் சக்தி வாய்ந்தது பணம்.      இது ஒன்று இருந்தால் எல்லா விதமான செயற்கை சக்திகளையும்  உரிமை எடுத்து கையாள முடியும்.   எல்லா விதமான இன்பங்களையும் வசதிகளையும் ஆடம்பரங்களையும் இந்த உலகத்தில் வாங்க முடியும்; அனுபவிக்க முடியும்.

இது மனிதனின் இயற்கை தன்மையையே மாற்ற வல்லது.     இது ஆன்மா, மனம் புத்தி என்ற கட்டுப்பாட்டு நிலையை தலைகீழாக மாற்றும் வல்லமை படைத்தது.     பணம், புத்தி ,மனம், ஆன்மா என்று கட்டுப்பாட்டு வரிசையை  திருப்பிவிடும் வல்லமை உடையது.

மனிதனின் மனதை பக்குவப்படுத்துவது புத்தி அல்லது அறிவு .

மனித மனம்  பதிவுகளை ஏற்று பண்படும் காலம் 5 வயது முதல் 10 வயது வரையிலான காலம் தான்.

சிறு வயதில் களங்கமின்றி சுத்தமாக இருக்கும் புத்தி அல்லது அறிவு   அவன் வளருந்தோறும் வீட்டில் நடப்பதையும் சுற்றுப்புறங்களை பார்த்து அறிந்தும் கல்வி கேள்விகளாலும் அதற்கேற்றாற்போல மனதை பக்குவப்படுத்திக் கொள்கிறது.    மற்றும் சுற்றத்தார் பல பதிவுகளை தன்னிச்சையாக குழந்தைகளின் மனதில் புகுத்துகிறார்கள். இந்த பதிவுகள்  மாற்றமுடியாத அளவுக்கு மனதில் ஆழமாகப்   பதிந்து விடுகின்றன.   இந்த பதிவின் அடிப்படையில் மனம் சிந்தித்து அந்த வழியில் தன்னை பக்குவப்படுத்திக் கொள்கிறது.   மனதின் இந்தப் பதிவின் அடிப்படையிலேயே மனித மனம் பிற்காலங்களில்  சிந்தனை செய்கிறது.   அந்த சிந்தனையின் அடிப்படையிலேயே பின்னர் புத்தி அல்லது அறிவு வேலை செய்கிறது.

 சிறு வயதில்  ஆன்மாவைப்பற்றிய அறிவும் மனத்தைப்பற்றிய உண்மை அறிவும் புத்தியை இயக்க மனதில் பதிய வைக்கப்படுவதில்லை.  அதனால் அந்த அறிவு பிற்காலங்களில் மனத்தால் தன பதிவுகளில் இருந்து புத்திக்கு உணர்த்தப்படுவதில்லை.

நாம் வணங்கும் தெய்வங்களையும் அவர்களுக்கு செய்யப்படும் ஆச்சார ஆடம்பரங்களையும்  திரும்ப திரும்ப பார்த்தும் தொடர்ந்து கேட்டும் நாம் புத்தி மூலமாக மனதில் பதிய வைத்துக்கொள்கிறோம்.    அதுதான் ஆன்மிகம் என்ற தவறான பதிவை மனதில் ஏற்படுத்திக்கொள்கிறோம்.  அதனால் நமக்கு  ஆன்மாவைப்பற்றியோ அல்லது உண்மையான ஆன்மீகத்தைப்பற்றியோ எந்த அறிவும் கிடைப்பதில்லை.   மாறாக இந்த தெய்வங்களை வணங்குவதும் ஆடம்பரங்கள் செய்வதும் தான் ஆன்மிகம் என்கிற  பதிவு மனதில் ஏற்படுகிறது.

அத்துடன்  இந்தக் காலங்களில் தன் வீட்டில் உள்ளவர்களும் பிறரும் பணப் புழக்கத்துக்கு  அடிமை ஆகி  அனுபவிக்கும் வசதிகளையும் ஆடம்பரங் களையும் புத்தி பார்த்து அனுபவித்து மனதில் பதிய வைத்து கொள்கிறது.   சுற்றுப்புறங்களை பார்த்தும் அறிந்தும் கல்வி கேள்விகளாலும் இப்படி தவறான அறிவின் அடிப்படையிலேயே மனம் தன்னை பக்குவப்படுத்திக் கொள்கிறது. இவை எல்லாமே பணத்தையும் அதனால் ஏற்படும் வசதி முதலியவற்றையும்  சம்பந்தப் பட்டவைகளாகவே இருப்பதால் பணத்தை நாடும் அல்லது தேடும் வழிகளையே புத்தி ஆராய்ந்து  சிந்தித்து வாழக் கற்றுக்கொள்கிறது.   இப்படி பக்குவப்பட்ட புத்தி  அந்த வழியிலேயே மனதில் பதிவேற்றுகிறது   அதனால்   பிற்காலங்களில் மனம்  பணத்தின் வழியே சிந்திக்கத்தொடங்குகிறது.

 மனம் எப்படி புத்தியை  இயக்குகிறதோ அது போலவே பணமும் மனித  புத்தியை தன்  கட்டுக்குள் வைக்கும் வல்லமையுடையது.  காரணம் ஆன்மீக அறிவுக்குப் பதிலாக பணம் அதன் ஆதிக்கம் தரும் சுக சௌகரியங்கள் மனதில் பதிவாகி இருக்கின்றன.

குழந்தைப்பருவத்தில் மனதில் ஏற்படுத்திய பதிவுகளை யாராலும் திடீரென மாற்றிவிட முடியாது.  தன்னைத் தவிர வேறு யார் முயன்றாலும் அந்த பதிவை மாற்ற இயலாது.  காரணம் மனது குழந்தைப் பருவத்திற்கு பிறகு வெளியிலிருந்து எந்தப்பதிவையும் புதிதாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பதில்லை.

ஆனால்  மாற்றுக்கருத்துக்கள் அறிவுரைகள் கேட்கும் அல்லது அவற்றை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள்  தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஏற்படும்பொழுது மனதில் ஒரு சலவை ஏற்பட்டு மாற்றங்கள் நிகழ்கின்றன. அல்லது சுய சிந்தனை செய்து தீர்மானங்கள் எடுக்கும் பயிற்சி மனதிற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் மாற்றங்களுக்கு வழி கிடைக்கிறது.

இளமை பருவம் முடியும்வரையில் வசதிகளும் ஆடம்பரங்களும்  என்னவென்று உணராமல் மனம் பக்குவப்பட்டுவிட்டால் பின்னர் புத்தி பணத்தின் வழியே செல்லும்  வாய்ப்பு குறைவு.

இதற்கு பழங்காலத்தில் அமைந்த குருகுல வாசம் பயன்பட்டது.  வீட்டில் இருந்து விலகி இருந்து ஆன்மீக வழியில் மனதை பக்குவப்படுத்தும் கல்வி முறை அது.   வசதிகளையும் ஆடம்பரங்களையும்  அறியாது  அடக்கம் மரியாதை உழைப்பு முதலானவற்றை கற்றுக்கொடுத்த முறை அது.   இந்த வழியில் பக்குவப்பட்ட மனம் பின்னர் இந்த வழியில் இருந்து விடுபடுவது கடினம்.  இந்த வளர்ப்பு முறையில் புத்தி மனதை சரியான வழியில் பக்குவப்படுத்தி அதன் சிந்தனை வழி அறிவுறுத்தல்படி நடக்கும்.

இன்றைய நிலை அதுவல்ல.  எல்லாவிதமான வசதி சௌகரியங்கள் ஆடம்பரங்களை  அனுபவிக்கும் இளைமைக்காலம்.  அல்லது பிறர் அனுபவித்து மகிழ்வதைக் கண்டு வளரும் இளமைக்காலம்.    இளமை காலத்திலேயே விதவிதமான உணவுப்பழக்கங்களுக்கு அடிமைப்பட்டுப் போதல்.   உழைப்பை அறியாமல் வளருகின்ற நிலை.     சிறிது தூரம் நடக்கும் அளவுக்குக்கூட உடல் உழைப்பின்றி வாகனத்தில் பள்ளிக்குப்போகும் நிலை.  பணத்தின் பலம் மனதில் ஆழமாகப்  விடும் நிலை.

உண்மையான ஆன்மீகத்தைப்பற்றியோ மனதின் முக்கியத்துவத்தைப் பற்றியோ எந்தவிதமான கல்வியும் அவர்களுக்கு கிடைப்பதில்லை.    வளரும் ஒவ்வொரு நிலையிலும்  பணத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் உணறுகிறார்கள்.  அதன் தேவையே வாழ்க்கையில் முக்கியம் என்று கொள்கிறார்கள்.    இங்கு புத்தி மனதிற்கு பணத்தின் முக்கியத்துவத்தையும் அதனை தேடும் அவசியத்தையும் எடுத்து சொல்லி அந்த வழியில் அதனை பக்குவப்படுத்துகிறது.

வாழ்வின் வசதிகளும் ஆடம்பரங்களும் இன்பங்களும் அமைய பணம் காரணமாக அமைகிறது.     அதனால் பணம்  புத்தியை  இயக்கி  மனதை தன கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது.  பின்னர் மனம் ஆன்மாவைப்பற்றியே சிந்திப்பதில்லை.   அதனிடமிருந்து விலகி விடுகிறது. பணத்தைப் பெருக்கும் வழிமுறைகளை மட்டுமே சிந்தித்து அதன் வழி நடக்கிறது.

அடிப்படையில் மனம் ஆன்மாவிற்கு கட்டுப்பட்டது.  ஆனாலும்  உடலெடுத்த பிறகு ஆன்மாவிற்கு சுய இயக்கம் இல்லை.   மனம் வழியாகவே ஆன்மா இயங்குகிறது.   ஆனால்  மனம் ஆன்மாவிடமிருந்து( தன் விதியைத்தவிர   வேறு) எந்த பதிவையும் கொண்டு வருவதில்லை.   உலக அனுபவத்தின் அடிப்படையிலேயே பதிவுகள் மனதில் ஏற்படுகின்றன.

நமது கோவில்களில் மனதை சரியான வழியில் பக்குவப்படுத்தும் எந்த போதனைகள் கிடைப்பதில்லை.   வழிபாடுகள் பணத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. வழிபாடுகள் வெறும் சம்பிரதாய சடங்குகளாக மாறிவிட்டன.    இதிகாச, புராணக்கதைகள் நம் மனதில் எந்தவிதமான நேர்மறை  எண்ணங்களையோ  சிந்தனைகளையோ உருவாக்குவதில்லை.   மாறாக மனோதத்துவ அடிப்படையில் ஆழ்  மனதில் எதிர்மறையான பதிவுகளை ஏற்படுத்துகின்றன.  உதாரணத்திற்கு ஒரு புராணக்கதையை ஒரு தெய்வம் தன நோக்கத்தை நிறைவேற்ற தவறான வழியையும் கீழ்த்தர சூழ்ச்சியையும் பயன்படுத்துகிறது என்று வைத்துக்கொள்வோம்.  தெய்வமே பின்பற்றுகிற ஒரு வழியை நாமும் கடைப்பிடிப்பதில் எந்த தவறும் இருக்க முடியாது என்ற பதிவு மனதில் உண்டாகிறது.

 பணத்தின் கட்டுப்பாட்டில் புத்தி இருக்கும் நிலையில் இயங்கும் மனம் அந்த புத்திக்கு இணங்கி நடப்பதற்கு பக்குவப்பட்டுப் போகிறது.    ஆனாலும் தன் மூலதத்துவமாகவும் அடிப்படை இணையாகவும் இருக்கும் ஆன்மாவின் உணர்வும் அடி  மட்டத்தில் பிறவியிலேயே உறைந்து கிடப்பதால் நம்மை அறியாமல் மனதின் அடித்தளத்தில் தொடர்ந்து ஒரு போராட்டம் நடை பெற்றுக்கொண்டே இருக்கிறது..   ஆன்மாவின் கட்டுக்குள் இயங்கி புத்தியை கட்டுப்படுத்துவதா அல்லது பணத்திற்கு அடிமைப்பட்ட புத்தியின் வழியில் செல்வதா என்ற போராட்டம்.    முடிவில் பணமே வெல்லும் .  இயற்கை யிலேயே எதிர்மறை சக்திகளுக்கே வலு அதிகம் என்பதால் பணமே வெல்கிறது.   ஆனாலும் ஆழ்மனப் போராட்டம் தொடரும்;   இது தான் நமது மன இறுக்கத்திற்கு காரணமாக அமைகிறது.

 காரணம் மனம் இயற்கையில்  ஆன்மாவிற்குச்  சொந்த மானது .  அதனால் அந்த தொடர்பில் இருந்து அதனால் முற்றிலுமாக விடுபட முடியாது.   அதனால் மனதில் இறுக்கம் ஏற்பட்டு அதன் பிரதிபலிப்பு உடலில் ஏற்பட்டு நோய்கள் ஏற்பட  காரணமாகி விடுகின்றன.

இந்தக் காலத்தில் பணத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு, வேறுபட்ட நிலைப்பாட்டில் ஓட்டுவனால் வாழ முடியுமா?  எப்படி தாரணம் செய்து வாழ்வது?  மனப் போராட்டத்தை எப்படி குறைப்பது?  இந்த மாதிரியான சிந்தனைகளுடன்  வேறொரு பதிவில் சிந்திப்போம்.    பொறுமையுடன் படித்ததற்கு நன்றி,  வணக்கம்.


ஞாயிறு, 22 டிசம்பர், 2019

ஆத்மாவை உணர்வது எப்போது? எப்படி!

வாழ்வில் ஆத்மாவை உணர்வது எப்போது?   எப்படி!

ஆன்மீகம் என்பது ஆன்மா அல்லது ஆத்மா பற்றிய அறிவு , உணர்வு அல்லது ஞானம்.   மாறாக கடவுள் பற்றிய சிந்தனையோ அறிவோ அல்லது நமது அறிவுக்கு அப்பாற்பட்ட எதோ ஒரு சக்தியை பற்றிய அறிவோ அல்ல ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வோம். வீணாக ஆன்மிகம் என்பதைப்பற்றி ஆலோசித்து வீணாக குழம்பிக்கொண்டிருக்க வேண்டாம்.   நம்மைப்பற்றி,  நமக்கு அடிப்படையாக அமையும் ஆன்மாவைப்  அறிய முற்படும்போது இடைப்படுவது தான் கடவுள் அல்லது நமக்கு அப்பாற்பட்ட சக்திகள் பற்றிய சிந்தனை..  ஆன்மா மனம் முதலானவற்றைப்பற்றி தனியான ஒரு பதிவு கொடுக்கப்பற்றிருக்கிறது.   அதனைப் படித்து அறிந்து கொள்ளவும்.

நாம் ஆர்வத்துடன் படிக்கும் இதிகாசங்களும் புராணங்களும் நமக்கு எதை உணர்த்துகின்றன?  அவைகள் எல்லாம் ஒரு காலத்தில் நடந்த ஒருகதையை, பற்பல காலகட்டங்களில் ஒவ்வொருவர் கற்பனைக்கு ஏற்றவாறும் மக்களின் மன நிலைக் கேற்றவாறு விரிவுபடுத்தியும்  மக்கள் மகிழ்ச்சிக்காக  அழகு படுத்தியும்   செவி வழி வளர்ச்சி பெற்ற கதைகள்.   பிற்காலத்தில் எழுத்து வடிவத்தில் ஆக்கப்பட்டவை.   எழுத்து வடிவம் பெரும்போதும் எழுதியவரின் கற்பனையும் அதில் கலந்தது.   பிற்காலங்களில் பலரும் தங்கள் கருத்துகளையும் தங்கள் விரும்பும்  கருத்துகளையும் இடைச்செருகல்களாக பல சமயங்களில் இணைத்து இணைத்து விரிவாக்கப்பட்டவை.     மூலக்கதையிலும் கருத்துக்களிலும் காலாகாலங்களில் பலரால் மாசு படுத்தப்பட்ட, இன்றும் ஒவ்வொருவர் கற்பனையாலும் மாசு படுத்தப்படுகிற இப்படிப்பட்டஇதிகாசங்களையும் புராணங்களையும் படித்தும் அவற்றை விரிவாக்கி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் கருத்துக்களையும் விளக்கங்களையும் புகுத்தி நடத்தும் கதா காலட்ச்சேபங்களை  கேட்டும்  நாம் அறிவது என்ன?

இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மனதை எந்த அளவிற்கு கெடுக்கின்றனவோ அதற்கு இணையான கெடுதல்களைத்தான் நமது புராண இதிகாசங்கள் தருகின்றன.    அவற்றின்  கதா  பாத்திரங்கள் செய்யும் தவறுகளை எல்லாம் நாம் ஒவ்வொரு காரணத்தை சொல்லி நியாயப்படுத்தி நம் மனங்களை கெடுத்துக்கொண்டு இருக்கிறோம். 

இவற்றை எல்லாம் படிக்கவும் கேட்கவும் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கும் நம்மவர்கள்  ஆன்மா மனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நமது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களை பற்றிய இது போன்ற கட்டுரைகளை படிக்காமல் ஒதுக்குவதை பார்க்கிறோம்.  

கதைகள் அல்ல வாழ்க்கை.    அனுபவங்களே வாழ்க்கை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.    இந்த கட்டுரையை தவிர்க்காமல் கடைசிவரையில் படிக்கவும்.

ஆன்மாவை எப்படி அறிவது ? எப்படி தொடர்பு கொள்வது?  

மனம் வழியாக மட்டுமே நாம் ஆன்மாவைத் தொடர்பு கொள்ள முடியும். அதற்கு தகுந்த முறையில் மனம் பக்குவப்பட வேண்டும்.   அந்த பக்குவம் ஏற்படும்போது மட்டுமே அதனை சாதிக்க முடியும்.

மனம் ஆன்மாவை எட்டுமளவுக்கு பக்குவப்படுவது எப்படி?  எப்போது?

மனம் என்பது ஆன்மாவின் இரட்டை.   ஆன்மாவின் நிழல்.  ஆன்மாவின் பிரதிநிதி.   இந்த வேறுபட்ட நிலை நீங்கி மனம் ஆன்மாவாக மாற வேண்டும்.  இதற்கு மனம் பக்குவப்படவேண்டும்.  மனம் பக்குவப்படுவது என்பது மனம் ஆன்மாவின் நிலையை அடைவது; அதாவது ஆன்மாவும் மனமுமொன்றாக இணைவது.

மனம் பக்குவப்பட முயற்சி தேவை. எப்படிப்பட்ட முயற்சி. அதன் அடிப்படை என்ன.      ஆசை, அன்பு பாசம், உறவு, பற்றுதல் இவற்றில் இருந்து விடுபட வேண்டும்.     அப்படியானால் சன்யாசம் ஏற்க வேண்டுமா?   தேவை இல்லை!

ஒரு மனிதனின் பிறப்பில் இருந்து மரணம் வரையில் அவனுடைய வாழ்க்கையை அலசி சிந்தித்துப் பார்ப்போம். 

நம் வாழ்வின் அடிப்படைத் தத்துவமே ஒவ்வொன்றையும் ஏற்றுக்கொள்ளுதல் பின்னர் அதிலிருந்து விடுபடுதல் ஆகும்.   விடுபடுதல் என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஓரு தொடர் நிகழ்காகவே அமைகிறது.

கருவாகுமுன்னர் அப்பாவாக அல்லது அம்மாவாக மட்டும் இருக்கிறோம்.   கருவாகும்போது அம்மாவின் உடலின் விடுபட முடியாத ஒரு தனி பாகமாக இருக்கிறோம்.

கரு வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவிடமிருந்து பிரிந்து வருவதற்கு தேவை ஆன எல்லாமே உருவாகின்றன.  இந்த செயல்பாடு முடிவடையும்போது தாயிடம் இருந்து வெளியேறி விடுகிறோம்.  தனி உடலாக வேறுபட்டு விடுகிறோம்.    முதலில் உணவிற்காக தாயைச்சார்ந்து இருக்கிறோம்.  பிறகு நிலை மாறி கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவின் தாய்ப்பாலில் இருந்து அம்மா ஊட்டுகிற உணவிற்கு மாறுகிறோம்.   பிறக்க அம்மா தரும் உணவைத்த தானே உண்ணத் தொடங்குகிறோம்.    வளர வளர் தனித்துவம் ஏற்பட்டு வளர்ந்து கொண்டே வருகிறோம்.    உணர்ச்சிகளிலும் உணர்வுகளிலும் எண்ணங்களிலும் நடவடிக்கைகளிலும் அம்மா அப்பாவிடமிருந்து வேறுபடுகிறோம்.

பத்து வயதில் இருந்து வேறுபட்ட சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கைக்கொள்கிறோம்.    

திருமணம் ஆகும்போது நாம் தொண்ணுற்றி ஒன்பது சதவீதமும் அம்மா அப்பா விடமிருந்து வேறுபடுகிறோம்.   அந்த உறவுகளைக்கூட தேவை என்று கருதுகிற போது உதறித்தள்ளிவிடுகிறோம்.   திருமண உறவு,  கணவன் மனைவி உறவு என்பது அம்மா அப்பா உறவு போல (ரத்த )ஓட்டுதல் உள்ளதல்ல என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை.  கட்டாயத் தேவையால் ஏற்படுகிற ஒரு உறவு என்பதை நாம் அனுபவ பூர்வமாக  நம்மால் உணர முடியும்.    கணவன் மனைவி உறவின் அடிப்படை சுயநலம் மட்டுமே.

பின்னர் நம் குழந்தைகள்.  அவர்களுடனானது ரத்த சம்பந்தமான திடமான உறவு.  அந்த உறவும் அவர்கள் திருமணத்தோடு ஆட்டம் காண்கிறது. அற்றுப்போகத்  தொடங்குகிறது.   அதிலிருந்தும்  நாம் வெளி வருகிறோம்.  நம்மைவிட முக்கியத்துவம் அவர்கள் வாழ்க்கைத் துணைக்கு ஏற்பட்டுவிடுகிறது.  இது இயற்கை.

பேரக்குழந்தைகள் வருகிறார்கள்.  நம் பிள்ளைகளின் ரத்த சம்பந்த உறவு.  அவர்கள் ஒட்டுறவு அவர்களின் பெற்றோர் இடம் மட்டுமே மேலிட்டு நிற்கும்.

இந்த மட்டில் நாம் உறவுகளில் இருந்து விடுபட்டு வருகிறோம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் ஒவ்வொன்றிலிருந்தும் விடுபட்டு வந்துகொண்டே இருக்கிறோம்.  முடிவாக  மரணமடையும்போது எல்லாவற்றினின்றும் விடுபடுகிறோம். இது எல்லாம் இயற்கையாக நடக்கிறது.

குடும்பம் அமைக்க அப்பா அம்மா விடம் இருந்து வேறுபடும் நாம் அப்போது மிக சந்தோஷப்படுகிறோம்.  அப்பாவும் அம்மாவும் தான்.   ஆனால் அந்த சமதோஷம் தொடரவேண்டுமானால் அப்பாவும் அம்மாவும் தங்களது ஆசை பாசம், விருப்பு வெறுப்புகளில் விட்டுக்கொடுக்கவேண்டும்.   என்றால் மட்டுமே குடும்பத்தில் மகிழ்ச்சி தொடரும்.  இது நடக்காத பொது மகனானவன் எ[[அப்பா அம்மாவிற்கும் மனைவிக்கும் இடையில் பிரச்னையில் விழுகிறான்.   இது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.  இதுவரையில் இருந்த சுயநலம் அப்பா அம்மாவிடம் இருந்து விலக  வேண்டியது கட்டாயத் தேவை ஆகிறது.  மகனுடைய நலனுக்காக விட்டுக்கொடுக்கவேண்டியது இருக்கிறது.    மகன் தீர்மானங்கள் எடுப்பதில் தவறுகள் ஏற்பட்டால் அது அப்பா அம்மாவின் வளர்ப்பில் ஏற்படும் குறைபாடு.மகனைத் திருத்த முயலலாம்.  கேட்க்காத  போது  ஒதுங்கி விடுவது நல்லது.   மருமகளிடம் குறை இருந்தால் அதனைத் தீர்ப்பது மகனின் வேலை.  அதிலிருந்தும்  ஒதுங்கி விடுவது நல்லது.  அவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளை அவர்களே தீர்த்துக்கொள்ளும்படி விட்டுவிடுவது நல்லது.  நமது ஆசை, பாசம் விருப்பு வெறுப்பு அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடாமலும் சலனத்தை ஏற்படுத்தாமலும் கவனித்துக் கொள்ள வேண்டும்.     இவற்றை எல்லாம் கடைபிடிக்கிறபோது நாம் அவர்களிடம் இருந்து விலகத்தொடங்குகிறோம்.  இந்த விலகல் படிப்படியாக வளர வேண்டும்.இந்த அறுபது வயதில் நாம் சுற்றங்களில் இருந்தும் உறவுகளில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பிக்கவேண்டும்.   இல்லாவிட்டால் நாம் மெதுவாக ஒதுக்கப்படுவோம்.   உறவுகள், பந்தங்கள் பாசங்கள் முதலான அனைத்திலிருந்தும் விடுபட முயல வேண்டும்.  விடுபட வேண்டும்.  இது தான் மனம் ஆன்மாவாக உருத்திரிய முதல் படி.

சுற்றத்தார்:   முதலில் அப்பா அம்மா ஆகியோரின் சுற்றத்தார்.    பிறகு துணையின் சுற்றத்தார்.  பிறகு குழந்தைகளின் மண உறவு சுற்றத்தார். ஒரு சுற்றத்திடம் இருந்து அடுத்த சுற்றத்திற்கு மாறி மாறி வந்து பெயரர்கள் காலத்தில் எல்லா சுற்றங்களில் இருந்தும் விடுபடுகிறோம்.

அப்பா அம்மா சுற்றத்தார் அநேகமாக இந்நிலையில் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை.   மனைவி வழி சுற்றம் அவரவர் மக்கள் வழி போயிருக்கும்.   நம் மக்கள் சுற்றம் அவரவர் மக்கள் வழி போயிருக்கும்.  பெயர்கள் சுற்றம் அவர்கள் மட்டில் ஒதுங்கிவிடும்.    இது தான் அறுபது வயது முதல் எழுபது வயது வரையுள்ள காலகட்டத்தின் முக்கியத்துவம்.

அறுபது முதல் எழுபது வயது காலங்களில் நமது உறவு பந்தம் பாசம் யாருக்கும் பயன்படப்போவதில்லை.   நமது பாசத்திற்கு பெரிய குறிப்பிடத்தக்க அளவில் மதிப்பு கிடைக்கப் போவதில்லை.    ஒதுக்கப்படும்பொழுது அதனைப்பற்றி கவலைப்பட்டால் மன நிம்மதி தொலைந்து போகிறது.   நாமாகவே ஒதுங்கும்போது நாம் ஒதுக்கப்படுவதாக நாம் உணருவதில்லை.  அதைப்பற்றி கவலைப்படப்போவதுமில்லை.   நாமாக ஒதுங்கும்போது அதனால் நமக்கு ஒரு மரியாதை கிடைக்கிறது.   கிடைக்காவிட்டாலும் நாம் அதனைப்பற்றி கவலைப்படப்போவதில்லை என்ற மனப்பக்குவம் நமக்கு வந்திருக்கும்.

இந்த காலத்தில் நாம் நமது  பாசத்தை வெளிப்படுத்தி குடும்ப காரியங்களில் தலையிடுவதும் அபிப்பிராயங்கள் சொல்வதும் பிறர் சுதந்திரத்தில் தலையிடும் விதம் அமைந்து அதன் விளைவுகள் துன்பங்களைத் தரும்.   அதனால் இவற்றை தவிர்க்க வேண்டும்..   இதுபோலத்தான் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும்.    அவற்றை விட்டொழிக்காவிட்டாலும் துன்பங்கள் தொடரும்.

இப்படி அறுபது வயதில் எல்லாவற்றிலிருந்தும் விடுபடப்போவதன் தொடக்கமே அறுபது வயதில் ஒரு கல்யாணமாக அனுசரிக்கப்பட்டது.  முதல் திருமணத்தில் ஒரு குடும்பத்தை உருவாக்க மிக ஆடம்பரமாக கொண்டாடி  நடத்துகிறோம்;   மகிழ்கிறோம்.

அறுபதில் நடக்கும் திருமணம் குடும்பத்தில் இருந்து விடைபெறும் வைபவம்.  ஆர்ப்பாட்டங்களின்றி அமைதியாகநடக்க வேண்டிய வைபவம்.   இதன் பின்னர் குடும்பத்தில் இருந்து அதன் முக்கிய தாரையில் இருந்து ஒதுங்க ஆரம்பிக்க வேண்டும்.

காலப்போக்கில் இது எப்படி மாறிப்போயிருக்கிறது என்பது கண்கூடு.  இதன் பிறகும் தம்பதியர்களாகவே முக்கியத்துவம் பெற்று  பலரும் குடும்பத்தில் தொடர்வதை பார்க்கிறோம்.  இது பிரச்சினைகளுக்கு தொடக்கமாகிற திருமணமாக மாறிப் போயிருக்கிறது.   ஏன் எதற்கு என்று தெரியாமல் ஏதோ தவறான காரணத்தை சொல்லிக்கொண்டு நடத்தும் ஒரு சடங்காக மாறி இருக்கிறது.

ஆசை, பாசம், விருப்பு, வெறுப்பு முதலானவற்றிலிருந்து விடுபடும்போது தான் நம் மனம் ஆன்மாவிடம் நெருங்கத்தொடங்குகிறது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் அறுபது வயதில் மேற்குறிப்பிட்ட நான்கில் இருந்தும் எல்லோரும் சந்தோஷமாகவோ நிறைவுடனோ விடுபடுவதில்லை. நம்மில் பலரும் ஆசை, பாசம், விருப்பு, வெறுப்பு இவற்றை கெட்டியாக பிடித்து வைத்துக்கொண்டு சுயநலத்தை விடாமல் துன்பத்தை உடன் கொண்டு நடக்கிறோம்.   இது ஏன்?

கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். அம்மாவின் வயிற்றில் இருந்து விடுபட்டு வெளியேறி ஐந்து வயது வரும் வரையில் நாம் இயற்கையின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம்.    அம்மா அப்பாவிடம் இருந்து நாம் நம்மை அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுகிறோம்.   சிறுவர் காலத்திலும், இளமைக் காலத்திலும்  நாம் இயற்கையின் வழியில் பெற்றோர் இடமிருந்து விடுபட்டு வளர்கிறோம்.

இளமைக் காலத்தில் தான் நாம் ஆசை, பாசம், விருப்பு வெறுப்பு முதலானவற்றை வளர்த்துக் கொள்கிறோம்.   திருமணம் ஆனதில் இருந்து இவை ஒவ்வொன்றிற்கும் கொஞ்சம் கொஞ்சமாக பங்கம் ஏற்படத் தொடங்குகிறது.  மனைவிக்காக, குழந்தைகளுக்காக தனிப்பட்ட ஆசைகள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், பாசங்கள், உறவுகள் முதலியவற்றை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். கட்டுப்படுத்தாத போது பிரச்னைகள் உருவாகும்.  இந்த கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த கட்டுப்பாடுகள் இயற்கையாக வருபவை என்றும் தவிர்த்தால் பிரச்னைகள் வரும் என்றும் உணர்ந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனப் பக்குவத்தை அடைகிறார்கள்.  அவர்களுக்கு நிம்மதியும் தொடர்கிறது.  ஏற்றுக்கொள்ளாமல் விட்டுக்கொடுக்காமல் வாழ்பவர்கள் மனம் . மனதில் சஞ்சலமும் குழப்பமும் வளர்ந்து நிம்மதி குலைந்து வாழ்கிறார்கள்.   இது தான் இன்று பலருடையவும் நிலை.   இது தொடரும்போது அறுபது வயதில் சந்தோஷமாக குடும்ப வாழ்வில் இருந்து விடுபட்டு வர முடிவதில்லை.

அறுபது வயதில் பக்குவமடைந்து நிற்கும் மனம் ஆன்மாவை நெருங்கும் வழிகளை உணர்தத் தொடங்கும்.   இதற்கு எந்த விதமான வழிகாட்டுதலும் தேவைப்படுவதில்லை.   தானாகவே உணர்வுகள், மனம் தெளிவாக இருப்பதால், ஏற்படும்.  அந்த உணர்வுகள் காட்டும் வழியில்  நடந்தாலே போதுமானது.   எண்பது வயது ஆகும்போது மனம் முழு அளவில் பக்குவம் அடைந்து மனமும் ஆன்மாவும் ஒன்றுபட்டு நிற்கும் நிலை ஏற்பட வேண்டும்.

இந்த முழுமை அடைவதன் அடையாளமே எண்பது வயது திருமணம்.  வாழ்க்கையில் நடக்கும் மூன்று திருமணங்களில் மூன்று விதமான விடுபடுதல் நிகழ்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயர்ந்த நிலைக்கு வழி காட்டுகிறது.

சாதாரணமாக இன்றைய காலத்தில் இரண்டாவது மூன்றாவது திருமணங்கள் வசதியான குடும்பங்களில் மட்டுமே வசதியை வெளிப்படுத்தும் சடங்காக வேறு எந்த குறிக்கோளுமின்றி  நடக்கின்றன.
இரண்டாவது மூன்றாவது  திருமணங்கள் சடங்காக நடத்தப்படவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை.  அந்தந்த கால கட்டத்தில் அந்தந்த விதமான மன வளர்ச்சி ஏற்பட வேண்டியது தான் கட்டாயத் தேவை.

இந்த விதமாக வாழ்வில் ஒவ்வொரு படியையும் எப்படி கடந்து வரவேண்டுமோ அப்படி கடந்து வர முடியாததற்கு முக்கியமான காரணம் என்ன?   குடும்ப வாழ்வில் ஆசைகளை கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக  கட்டுப்படுத்த முடியாத நிலை தான் காரணம்.

ஆசைகளை கட்டுப்படுத்த முடியாமைக்கு என்ன அடிப்படைக் காரணம்.   வாழ்க்கையில் காத்திருக்கும் அநேகம் அநேகம் ஆடம்பரங்கள் வசதிகள், இன்பங்கள்.   இவற்றை அனுபவிக்காத தேவையான பொருளாதாரம் கையில் இருக்கும்போது ஆசையை அடக்குவது கடினமாகிறது.    சாதாரண தேவைக்கும் அதிகமாக பொருளை சேமிக்கும் ஆசையை கட்டுப் படுத்தினால் ஒழிய பிற ஆசைகளை ஒழிக்க இயலாது.  ஆசையை கட்டுப்படுத்திய பின்னர் அடுத்தது சுய விருப்பு, வெறுப்பு,பாசம்.இவற்றை விலக்குவது   எளிது.  அதனால் தான் புத்தர் எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஆசையை முதலில் அகற்ற வேண்டும் என்று போதித்தார்.

இவற்றை எல்லாம் விட வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டிய இன்னும் ஒன்று பிரம்மச்சர்யம்.   அதாவது பாலுணர்வினை பயன்படுத்துவதில் உள்ள கட்டுப்பாடு அல்லது ஒழுக்கம்.  பிரம்மச்சர்யம் என்னும் சமஸ்க்ரித சொல்லை நாம் தவறான அர்த்தத்தில் தவறான புரிதலில் பயன்படுத்தி வருகிறோம்.   பிரமச்சர்யம்  என்பதன் சரியான பொருள் உடல் ஒழுக்கம் என்பதே தவிர பாலுணர்வை முழுவதுமாக அடக்குவது என்பதல்ல. பாலுணர்வை எங்கே எப்போது யாரிடம் எந்த காலகட்டத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும், எப்பொழுது அதிலிருந்து விடுபடவேண்டும் என்கிற ஒழுக்கம் மிக முக்கியம்.  இந்த ஒழுக்கத்தை  சரியாக கடைப்பிடிக்காமல் இருந்தால் குடும்பத்தில் பிரச்சினைகளும் உடல் பராமரிப்பில் பிரச்னைகளும் ஏற்படும்.  இதுவும் மன வளர்ச்சியையும் பக்குவத்தையும் மிகவும் பாதிக்கும்.

எவனொருவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் எதெதிலிருந்தெல்லாம் விடுபட வேண்டுமோ அவற்றிலிருந்தெல்லாம் விடுபட்டுக்கொண்டே வருகிறானோ அவனே மனதை ஆன்மாவில் சேர்க்கும் தன்மை அடைகிறான்.   அதுவே பிறவி மரண சுழற்சியிலிருந்து விடுபடும் வழிமுறை.




சனி, 9 பிப்ரவரி, 2019

மறு பிறவி உண்மையா? தூக்கம், கனவு உணர்த்துவது என்ன ! Impression of Sleep and Dreams

 

 

மறு பிறவி உண்மையா?  தூக்கம் கனவு உணர்த்துவது என்ன !


கனவு என்பது உண்மையின் மறுபுறம்.  அது ஒரு மாயை.   கனவு எவ்வளவுக்கு மாயையோ அவ்வளவுக்கு வாழ்க்கையும் மாயை தான்.

வாழ்க்கையில் இதுவரையில் நடந்தவைகளை நினைத்துப் பாருங்கள். வாழ்க்கை எவ்வளவு மாயை என்பது புரியும்.  தற்போது நடப்பது மட்டுமே நிஜமாகத் தெரியும்.   இன்னும் சில தினங்களில் இந்த நிஜமும் மாயையாக மாறும்.  நீயின்றி நானில்லை என்று என்றோ  சொன்னவர்களின் நம்முடனான இன்றைய உறவு  எப்படி இருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள்.  வாழ்வின் மாயத்தன்மை புரியும்.

வாழ்க்கையின் மாயத்தன்மையை நாம் உணர்வதில்லை.    அதனை நமக்கு உணர்த்துவதற்காகவே கனவுகள் வருகின்றன.

மரணம் நமது சக பயணி.  இந்த உடல் உயிர் பெற்ற  நாளிலிருந்து உடல், உயிர் மரணம் மூவரும் சக பயணிகள்.  ஒன்றாக பிறந்து ஒன்றாக வாழ்ந்து ஒன்றாகவே அழிகின்றன.    நாம் அனைவரும்  (உடலும் உயிருமாய்)  மரணத்துடன் ஒன்றாகவே பயணித்துக் கொண்டிருக்கிறோம்.   எல்லா உயிரினங்களும் அப்படித்தான்.

மரணம்   நம்  கூடவே  இருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் உணர்வது இல்லை.        அதனை நமக்கு தொடர்ந்து உணர்த்துவதற்காகவே தூக்கம் நம் வாழ்வில் இடம் பெறுகிறது.    தூக்கம் என்பது மரணத்தின் நிஜம்.

ஒரு பகல் முடிவடைகிறது.  இரவு வருகிறது.  அடுத்து வருவது தூக்கம்.  நாம் தூங்கியவுடன் தூக்கத்திற்குள் ஒரு அஞ்ஞான உலகில் புகுகிறோம்.  கனவு உண்டாகிறது.   கனவு கலைந்து,  தூக்கம் கலைந்து   பொழுது விடிகிறது.    அடுத்த நாள் தொடங்குகிறது. 

 ஒரு பிறவியில் வாழ்க்கை, பின் மரணம்,  அதன் பின்  நடந்து முடிவடைந்த வாழ்க்கையை எடைபோடும் இடைப்பட்ட காலம்.   பிறகு அடுத்த பிறவி.   இப்படி ஒரு மனிதப் பிறவியுள் நடக்கும் நிகழ்வுகளுக்கு இணையான நிகழ்வுகள்  ஆத்மாவின் பயணத்தில்  வேறொரு பரிமாணத்தில் நிகழ்கின்றனவா?

மரணத்திற்குப் பின் இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர்த்தும் தோற்றம் தான் கனவு.

நிஜ வாழ்வில் நமது எண்ணங்கள், நடவடிக்கைகள் இவற்றின் பிரதிபலிப் பாகவே நமது கனவுகள் அமைகின்றன.  அது போலவே இந்த பிறவியில் இவ்வுலகில் நமது நடவடிக்கைகள் எண்ணங்கள் இவற்றின் பிரதிபலிப்பாகவே நமது அடுத்த பிறவி அமைகிறது.

பகல் என்பது ஒரு பிறவி வாழ்க்கை.   தூக்கம் என்பது மரணம்.  கனவு என்பது மரணத்திற்குப்பின் அஞ்ஞான வாழ்க்கை :  பொழுது விடிதல் என்பது  மீண்டும் உடலெடுப்பது.   அடுத்த நாள் என்பது அடுத்த பிறவி வாழ்க்கை..

உடல் அழிந்து  ஒரு மனித வாழ்வில்  உண்மையாக ஏற்படும் மரணம் எதைக் காட்டுகிறது ?  ஆத்மாவிற்கு உடலெடுப்பதிருந்து முக்தி  கிடைக்கும் என்பதை சூசகமாகக்   காட்டுகிறது.

உயிருக்கு பகல், இரவு,  தூக்கம்,  கனவு, விடிவு, ஒரு நாள் முடிந்து மறுநாள் வருகிறது   பலப்பல நாட்களுக்குப் பின் மரணம் வருகின்றது.   

உயிருக்கு பல நாள் வாழ்கைக்குப் பின்னர் அழிவு/மரணம்.   ஆத்மாவுக்கு பல பிறவிகளுக்குப் பின்னர் முக்தி.

உயிருக்கு  பகலில் உணர்வு நிலையும் இரவில் தூக்க நிலையும் தூக்கத்தில் சொப்பன நிலையும்  தூக்கத்திலிருந்து விழிப்பு நிலையும் மாறி மாறி நடைபெற்று முடிவில் மரணம் ஏற்படுகிறது .   உயிருக்கு முக்தி கிடைக்கிறது,

உயிருக்கு ஒரு  நாள்  என்பது ஆத்மாவிற்கு ஒரு பிறவி/வாழ்க்கைக்கு இணையானது.  ஒரு மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும்   ஆத்ம பயணத்தில் ஒரு பரிணாம இணை அமைகிறது.    உயிருக்கு தூக்கம் என்பது ஆத்மாவிற்கு ஒரு பிறவியின் முடிவு.  அதாவது அந்த பிறவியின் மரணம்.    கனவு என்பது நடந்து முடிந்த பிறவியின் நடவடிக்கைகளின்  பலனை அலசி அடுத்த பிறவியை எதிர்நோக்கி காத்திருக்கும் காலம்.  பொழுது விடிவு என்பது அடுத்த பிறப்பு.  அடுத்த நாள் என்பது அடுத்த பிறவியில் தொடரும் வாழ்க்கை. உயிருக்கு பலப்பல நாட்கள் என்பது ஆத்மாவிற்கு பலப்பல பிறவிகள்.   உயிருக்கு மரணம் என்பது  ஆத்மாவிற்கு முக்தி, மோக்ஷம்  அல்லது
வீ டுபேறு

ஒரு மனிதப் பிறவியில் ஒரு உயிருக்கு ஏற்படும் நிகழ்வுகளுக்கு இணையாக ஆத்மாவிற்கு ஏற்படும் நிகழ்வுகளும் அமைகின்றன.

அண்டம் எனப்படும் சூரிய குடும்பத்தின் அதே அமைப்பில் நிலை கொள்ளும் பிரமாண்டம் (galaxy ) என்பது அண்டத்தின் அடுத்த பரிமாணம் .     அது போல உயிரின் அடுத்த பரிமாணம் ஆத்மா.  உயிரின் ஒருபகல், ஒருஇரவு, தூக்கம், மறுநாள் என்பது ஆத்மாவின்  ஒரு பிறவி மரணம்  மறு பிறவி என்று அமைகிறது.

ஒன்றிற்கொன்று இணையான அமைப்புகளே இந்த பிரபஞ்சத்தில் அமைந்திருக்கின்றன.

நம் வாழ்வின் புதிர்களுக்கான விடைகள் இந்த பிரபஞ்சத்திலேயே,  நம் உணர்வுகளுக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன.  நேரான சிந்தனை நேரான வழியைக்காட்டும்.  உணர்வுகள் வளரும்.  விடைகள் நமக்குள்ளிருந்தே நமக்கு கிடைக்கும்.   எங்கும் தேடி அலையவேண்டியதில்லை.

நல்லதையே நினைப்போம்.   நன்மையையே செய்வோம்.  உறவுகளை மதிப்போம்.  உடலால் வருந்தினாலும் மனதில் ஆனந்தம் பெறுவோம்.  ஆனந்தம் நம்மிடம் தான் இருக்கிறது.   எங்கும் தேடவேண்டாம்.   யாரும் நமக்கு சந்தோசம் தரமாட்டார்கள்.  நமது சந்தோசத்தை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.  சந்தோசம் என்பது ஒரு மன நிலை.   இந்த மனநிலையை நாம் பயிற்சியினால் அடையலாம். இதற்கு நம் மனதை உறுதியான தீர்மானத்துடன் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.

தூக்கத்தின் பின் கனவு.   விழிப்பிற்கு முன்னர் ஒரு காத்திருப்பு.   பின்னர் மறுநாள் காலை விழிப்பு.

மரணத்திற்குப்பின் இனம் புரியாத ஒரு அஞ்ஞான வாழ்க்கை.    அடுத்த பிறவி எடுப்பதற்கான ஆற்றலை வளர்க்கும் ஒரு காத்திருப்பு.   பின்னர் அடுத்த ஜென்மம் ஆரம்பம்.

கனவுகள் அற்ற தூக்கம் நிம்மதியானதாக, அமைதியானதாக சலனமின்றி அமையும்.   அதனால் தூக்கம் நாம் அறியாமலேயே கடந்து போகும்.  புத்துணர்வுடன் உற்சாகத்துடன் அடுத்த நாள் தொடங்கும்.

அழுத்தம், இறுக்கம், துக்கம், பதற்றம் இல்லாத தெளிந்த மனம் கனவுகள்  இல்லாத  நல்ல தூக்கத்தை தரும்.    அது போல  அழுத்தம் இறுக்கம் துக்கம் பதற்றம் இல்லாத தெளிந்த  நன்மைகளையே செய்து நன்மையையே நாடும் வாழ்வு  பிரபஞ்சத்தின் பரந்த ஆகாய வெளியில் நிம்மதியான  ஒரு காத்திருப்பையும் தொடர்ந்து அதிகரித்த ஆற்றலுடன் நன்மை நிறைந்த அடுத்த பிறவியைத் தரும் என்று நம்புவோம்.

நல்லதையே நினைப்போம். நன்மையையே செய்வோம்.  பேதங்கள் இல்லாமல் உறவுகளை மதிப்போம்.  உடலால் வருந்தினாலும் உள்ளத்தில் ஆனந்தம் பெறுவோம்.  ஆனந்தம் நம்மிடம் தான் இருக்கிறது.  எங்கும் தேடவேண்டாம்.   யாரும் நமக்கு சந்தோசம் தரமாட்டார்கள். நமது சந்தோஷத்தை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.  இதற்கு நம் மனதை பக்குவப படுத்திக்க கொள்ளவேண்டும்.



ஞாயிறு, 13 ஜனவரி, 2019

அஷ்டாங்க யோகத்தின் எட்டு நிலைகள். இந்த காலத்துக்கு ஒத்து வருமா? ஓர் விளக்கம்




அஷ்டாங்க யோகத்தின் எட்டு நிலைகள்

வீடு பெறுதல், மோக்ஷம் அல்லது சமாதி  நிலையை அடையும் வழியான அஷ்டாங்க யோகத்தின் எட்டு நிலைகள்  இங்கு விளக்கப்படுகின்றன .     ஆன்மா, மனம், உயிர்,  புத்தி,  சமாதிநிலை - ஓர் விளக்கம் என்னும் இடுகையின் தொடர்ச்சியாக இதனை படிக்கவேண்டும்.  அதனை படிக்காதவர்கள் முதலில் அதனை படித்து அறிந்தபின்னர் இந்த தொடரைப் படிக்கவும்.

யமம்,  நியமம் ஆகியவை  அஷ்டாங்க யோகத்தின் முதல் இரண்டு  அடிப்படை நிலைகள்.          முறையே சமூகத்தில் நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்,  என்பதையும் நம்மில் எதையெல்லாம் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதையும்  குறிக்கின்றன.

இவை மனம் புத்தி ஆகிய  இரண்டையும்  கட்டிப்போடுவதற்கான வழிகள்.

யமம்:  சமூகத்தில் கடைபிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள். இதன் உட் பிரிவுகள் ஐந்து :       அவையாவன:

1.அஹிம்சை :  சக உயிர்களை துன்புறுத்தாமை;  வன்முறையைத்  தவிர்த்தல்.
2.சத்தியம்:  உண்மையாக நடந்து, உண்மையையே பேசி, நம்பகத்தன்மை       யுடன் வாழ்தல், போலித்தனத்தை தவிர்த்தல்.   உண்மை பேசுவதால் இடையூறு ஏற்படும்    சந்தர்ப்பங்களில் உண்மையை தவிர்ப்பதும் இதில் அடங்கும்.
3. அஸ்தேயம்:  பிறர் உடைமைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ          திருடாதிருத்தல்; பிறருடைய  இயலாமையையும்  அறியாமையையும் சுயநலத்துக்காகவும் பொருள் சேர்க்கவும் பயன்படுத்தாமல் இருத்தல், அதாவது களவு தவிர்த்தல்.
4. பிரம்மச்சரியம் : பிரம்மத்தின் அம்சமாகிய உடலை முறையாக தினமும்     உடலொழுக்கத்துடன் பேணி பாதுகாத்தல்:  கட்டுப்பாடான உணவுப் பழக்கவழக்கங்கள், மிதமான  உடற்பயிற்சி மற்றும் மிதமான உடலுறவு ஈடுபாடு பழக்கங்கள்.
5. சுயநலம் இன்மை :  நான் என்னுடையது என்ற உணர்வுகளில் இருந்து             விடுபடுதல்.   பொறாமை,. பேராசை முதலானவைகளைத் தவிர்த்தல்.பிறர் உரிமைகளையும் அவர்கள் சுதந்திரத்தையும் மதித்து நடத்தல் 

நியமம்:   அனுசரிக்க வேண்டிய சுய ஒழுக்கங்கள்.     இதன்  உட் பிரிவுகள்
ஐந்து :       அவையாவன:

1. சௌச்சம் :  உடல் சுத்தம் அல்லது தூய்மை 
2. சந்தோசம்:     மன நிறைவு, எதிலும் திருப்தி அடைதல், மகிழ்ச்சி                              அடைதல்.
3. தபஸ் :   மன உறுதி , வைராக்கியம் இவற்றுடன் தெளிவான  குழப்பமற்ற            மனநிலையுடன் சஞ்சலமின்றி தெளிவுடன் இருப்பது . 
4. ஸ்வாத்யாயம் :   கல்வி கேள்விகள் வழியாக விசாலமான அறிவை வளர்த்துக்கொள்ளுதல் .  உணர்வுகள்  மூலம் ஏற்படும்  சுய விழிப்புணர்வு            அடைதல் 
5. ஈஸ்வர பிரநிதானம்:  எல்லையற்ற  எங்கும் நிறைந்த இறைவனை                      உணர்வுபூர்வமாக பரந்து  விரிந்த தெளிவுடன்   அறிதல்  

இவற்றை நாம் நம்மில் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

மூன்றாவது நிலை ஆசனங்கள் .  அதாவது உடலை கட்டுப்படுத்தி ஆரோக்கியததுடன் அமரும்   முறைகள்.    இவையே இன்று யோக (த்திற்கு  வழி கோலும்) ஆசனங்கள் என்று அறியப்படுகின்றன.     

இறுதி யோகமான சமாதி நிலையை  அடைவதற்கு முன்னோடியாக அமைபவை தான் அடுத்ததாக வரும்  நான்கு நிலைகள். அவற்றை  கடைபிடிக்க    எவ்விதமான மன, உடல் அழுத்தமின்றி  அசையாவண்ணம் தளர்த்திய நிலையில் , இலகுவாக  அமர்வது  அவசியமாகிறது.      இதற்காக ஏற்படுத்தப்பட்ட  ஆசன  அல்லது அமரும்   நிலைகளே இவைகள்.    உடற் பயிற்சிகளின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலை கட்டுக்குள் நிறுத்தி எய்தும் நிலை தான் இலகுநிலை அமர்தல் (யோக ஆசனம் -ஒருங்கிணைந்த நிலை )

நான்காவது   பிராணாயாமம்     அதாவது  பிராண அயமம் என்னும் மூச்சுக்கட்டுப்பாடு.  தொடர்ச்சியான கட்டுக்கோப்பான சீரான முறையில்  
செய்யும் மூச்சு  பயிற்சி.  மூச்சை உள்ளிழுத்தல், வெளியேற்றுதல் ஆகியவற்றை இயல்பான கட்டுக்குள் கொண்டு வந்து சீரமைப்பது.    ஒரு நிமிடத்தில்  நாம் விடும் மூச்சு (ஒரு உள்ளிழுப்பும்  ஒரு வெளியேற்றமும்) சாதாரணமாக அறுபது முதல் எழுபது வரையில் இருக்கும்.   இந்த எண்ணிக்கை குறைந்து வரும்தோறும் ஆரோக்கியம் அதிகரிக்கும்; ஆயுள் அதிகரிக்கும் மனம் நிதானம் மற்றும் தெளிவு அடையும்.   இது   உயிரையும்  புத்தியையும் ஒருங்கிணைத்து  மனதினை  முழுக்கட்டுப்பாட்டில் நிறுத்தி மனதை வலுப்படுத்தும்.

ஐந்தாவது தன்மை பிரத்தியாகாரம்.    இது தியானத்திற்கு  அடிப்படை யான  ஐம்புலன்களை ஆளும் தன்மையை வளர்க்கும். அதாவது  பிராணாயாமம் தொடர்ந்து செய்வதன்மூலம் மனம் வலுப்பெறும்.  மனதின் கட்டுக்குள் உயிர் வரும். உயிரின் கட்டுக்குள் புத்தி வரும்.    ஆக மனதின் கட்டுப்பாட்டுக்குள்  அடங்கும் புத்தியினால் ஐம்புலன்கள் கட்டுப்படும்.   இது புத்தியை  மனதின் கட்டுக்கோப்பில் இருந்து விடுபடாமல், ஆசைக்கு அடிமைப்படாமல்   விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு கட்டுப்படுத்தி வைக்க உதவுகிறது.    புலன்களை அடக்கி உணர்வுகளை உடலுக்குள் மட்டுமே நிலைநிறுத்துவது.     உணர்வுகளை உடலுக்குள் தொடர்ந்து நிறுத்துவது பிரத்தியாகாரம். கடவுள் என்ற நிலையை ஏற்படுத்தும்   உன்னுள்ளே கடந்து செல். அங்கு நிலை கொள். கடவுள்.

ஆறாவது தாரணை.   அதாவது   அசையாத அலைபாயாத உறுதியான தன்மையுடன் பிரத்தியாகாரம் தொடரும்பொழுது உணர்வுகள் தொடர்ந்து உடலுக்குள் வலம் வரும்.  உணர்வுகளை  ஒருநிலைப்படுத்தி தொடர்ந்து உடலுக்குள் அசைவின்றி உறுதியுடன்  நிறுத்துவது தாரணை. .   இதனால் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் இருந்து விடுபட்டு மனதில் நிலைபெறும்.    கடவுள்  என்று உண்மையில் நாம் எதனை கருதுகிறோமோ அதனை உணர வைக்கும்.  இது அடுத்த ஏழாவது நிலையில் கொண்டு சேர்க்கும் 

ஐந்தாவதும் ஆறாவதுமான நிலைகளின் ஒருங்கிணைவே  ஏழாவது நிலையான  தியானம்.    அதாவது புலன்களை கட்டுப்படுத்தி உணர்வுகளை உடலில் தொடர்ந்து உறுதியாக நிறுத்தும் பயிற்சி.   தவம் எனப்படுவதும் இதுவே .   உடலுடன் ஒருநிலைப்பட்ட மனதை விழிப்புணர்வில் தொடர்ந்து நிறுத்துவது.  மனதை கடவுளில் தொடர்ந்து நிறுத்துவது .   இது தொடரும்பொழுது உயிர் மனதுக்குள்ளும்,   தொடர்ந்து மனம் ஆத்மாவுக்குள்ளும் லயித்து நிற்கும்.  மனம் ஆத்மாவில் லயித்த நிலையில்  ஆத்மாவின் தூய்மை எனும் நேர்மறை சக்தி வலுவடையும் .  இந்நிலை தொடர்ந்து இறுதியில்  ஆத்மா பரமாத்மாவுக்குள் லயிக்கிறது.    ஆத்மாவின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் மனம் உடல் எல்லாம் ஒடுங்கி விடும் நிலை .  இதுதான்  எட்டாவது சமாதி நிலை;  ஆத்மாவின் இறுதி நிலை.  பரமாத்மாவுடன் இணைந்த  ஆத்மாவின் இறுதி நிலை.  பரமாத்மாவில் லயித்த  நிலை.

முதல் நிலையிலிருந்து ஒவ்வொரு நிலையையும் முறையாக சிலகாலம் தொடர்ந்து கடைபிடித்தால் அடுத்த நிலை எளிதாக வழங்கும்.   ஓவ்வொரு நிலையம் தொடர்ந்து நம்மை வந்தடையும்.   இறுதி யோக நிலையை அடைய வழி கோலும்

தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி அனுசரித்து வந்தாலே போதுமானது. மரணத்தில் முக்தி அடைய இயலா  விடினும் ஆத்மா மேலும் தூய்மை பெற்று உடலிலிருந்து வெளியேறும்போது உயர்ந்த நிலையில்  வெளியேறும்.   இதன் தொடர்ச்சி அடுத்து வரும்  ஜென்மங்களிலும்  தொடரும்.  உயர்நிலை எய்தி முக்தி  சாத்தியமாகும் வாய்ப்பும் வரும் ஜென்மங்களில் பெறலாம். 

இந்நிலை எய்த அடிப்படையான யமம் , நியமம்  ஆகியவைகளை அனுசரிக்கவேண்டியது மிக முக்கியம்.

இன்றைய கால கட்டத்தில் பரவலாக பேசப்படும்  மற்றும் பயிற்றுவிக்கப்படும் தியானம் அல்லது meditation அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிடும் தியானத்திலிருந்து வேறுபட்டது.     கற்போரும், கற்பிப்போரும் இங்கு யமம் நியமங்களை  பொருட்படுத்துவதில்லை.   இது ஆசனம் மற்றும் பிராணாயாம முறைகளை கற்பதன் மூலம் மனதை அமைதி படுத்தி தெளிந்த நிலையில் நிறுத்துவதற்காக மட்டுமே.  இது புத்திக்கு சக்தி பகரும்.   புத்தி தெளிவடையும். பலன்கள் உயிர் உடல் அளவிலேயே அமையும் ஆனால் மனதையும்  ஆத்மாவையும் ஒண்றிணைக்காது.    பலன்கள் உயிர் உடல் அளவிலேயே அமையும்.
மனம் உயிர் அல்லது புத்தியின் கட்டுக்குள் அடங்கி விடும்.   இப்படிப்பட்ட பயிற்சி யினால் பலனே இல்லை என்று சொல்ல இயலாது.  பலன் பொருளாதார வளர்ச்சிக்கான முறையில் மனதை நல்லதோ கெட்டதோ எந்த வழியிலேனும் செலுத்த முயல்வதில்லை வெற்றி அளிக்கும். அதற்கான மனத்தெளிவை நல்கும்.  மனதை ஆன்மாவிடம் எடுத்து செல்லாது.

யமம், நியமம் ஆகிய இரண்டையும் அனுசரிக்காமல் செய்யக்கூடிய யோகப்பயிற்சிகள் மனதையும் உயிரையும் புத்தியையும் ஒருமுகப்படுத்தும் என்பது உண்மை.    ஆனால்  யமம் என்னும் சமூக ஒழுக்கங்களை கடைபிடிக்காத மனம் இவ்விதம் வலுப்பெறுவதால்,  சமூகத்தில் யமத்தில் தவிர்க்க வேண்டிய தவறுகளை வெற்றிகரமாக தன்னலத்திற்காக செய்யும் தன்மை ஏற்படும்.   நியமங்களை கடைபிடிக்காததால் இறைவனை உணரும் தன்மை இராது.  அப்படியே இருப்பதாக இருந்தாலும் அது தவறான இறை உணர்வாகவே இருக்கும்.    இறை உணர்வுடன் தவறுகளைத் தவிர்க்கும் பயிற்சி இல்லாததால் எதையும் எவரையும் சட்டை செய்யாமல் எந்த தவறையும் துணிந்து தன்னிச்சையாக செய்யும் நிலை ஏற்படும்.   தவறான வழிகளை எதோ ஒரு காரணத்தைக் காட்டி நியாயப்படுத்தி அதனால் தனம் சேர்க்கும் தன்மை வளரும்.   பொருள் சேர்க்கைக்கு உதவும்.

இன்றைய காலகட்டத்தில் கஷ்டம் வரும்வரை எவரும் தியானதை பற்றி சிந்திப்பதில்லை.  வருமானம் தேவையான(?) அளவுக்கு இல்லை என்னும்போது தான் கஷ்டம் உணரப்படுகிறது.   தேவையான அல்லது அதிகமான தனம் இருக்கும் வரையில் கஷ்டத்தை யாரும் பொருட் படுத்துவதில்லை.   பண  தட்டுப்பாடு ஏற்படும் போது  கஷ்டத்தை உணரவோ சிந்திக்கவோ செய்கிறோம்.  அப்போது மட்டுமே இறைவனை நினைப்பதும், தியானத்தை தேடிப்போவதும் இன்று  சகஜமாக  நடக்கிறது.    இதன் மூலம் நிலைமை சீராகி பணத்தட்டுப்பாடு நீங்கி செழிப்பு வரும்போது மீண்டும் பழைய  நிலைக்கு திரும்பி விடுகிறோம்.

இறைமையும், தியானமும் ஒரு இடைக்கால முகாம் ஆக மாறி விட்டது.

இவ்விதமான அடிப்படை அற்ற யோகப் பயிற்சியால் வீடு பெறுதல் என்னும் இறுதி யோக நிலையை எய்துவது என்பது இயலாத  ஒன்று.       அற வழியில் பொருள் தேடி அதனால் அடையும் இன்பத்தைஅனுபவித்து வீடு அடைய வேண்டும் என்பதே  தமிழ் மறைகள் வரிசைப்படுத்தும் அறம், பொருள், இன்பம், வீடு.         இதில் அறம் , பொருள், இன்பம் ஆகிய மூன்றும் யமம் நியமங்களில் அடங்கும்.  அடுத்த ஐந்து நிலைகள் வீடு என்பதனுள் அடங்கும்.

வீடு என்பது பாதுகாப்பான இடம்.   இவ்வுலகில் நாம் வாழும் வீடு உடலுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு தரும் இடம்.   மரணத்திற்குப்பின் வீடு என்பது ஆத்மாவுக்கு பாதுகாப்பு தரும் இடம்.

இறுதியாக ஒரு சந்தேகம்.    இதெல்லாம் இந்த காலத்துக்கு ஒத்து வருமா?

இந்த உலகத்தில் அனுபவிப்பதற்கு என்னவெல்லாம் வசதிகள், உணவுகள்,  ஆடம்பரங்கள்,  இன்பங்கள்  இருக்கிறன்றன.    பணமில்லாமல் இவற்றை எல்லாம் பெறவோ அனுபவிக்கவோ முடியுமா?   ஆசை இல்லாமல் இருந்தால் இவை  எல்லாம் சாத்தியமா?  அடுத்தவனைப்பற்றி கவலைப்பட்டால் நம் கதி என்ன ஆவது?    எது அற வழி?     அற வழியில் யாரையும் ஏமாற்றாமல் துன்புறுத்தாமல் தேவையான அளவுக்கு பொருள் சேர்க்க முடியுமா?   கண் முன் தெரியும் இன்பங்களை தவிர்த்து விட்டு, இருக்கிறதா இல்லையா என்பதே தெரியாத  ஒரு வீடு பேற்றை அடைய நினைத்து ஏமாந்து போய்விட மாட்டோமா?   யமம் , நியமங்களை கடைப்பிடித்தால் தனம்  சேர்ப்பது எப்படி?  பிறர் மதிக்கத்தக்க நிலையில் நாம் வாழ வேண்டாமா?  பொருள் இல்லாதவர்களை யார் மதிக்கிறார்கள்?

பணம் இருந்தால் செய்யக்கூடிய எத்தனையோ பூஜைகள் இருக்கின்றன.  பக்தியுடன்  பூஜைகள் செய்தால் போதாதா?  அதனால் முக்தி கிடைத்து விடாதா?         எத்தனையோ கோவில்கள்,  தெய்வங்கள் இருக்கின்றன.      அங்கெல்லாம் சென்று தொழுதால் மட்டும் போதாதா?  எளிதில் எந்த சிரமமும் இன்றி முக்தி கிடைத்து விடாதா?    இந்த இடத்தில பிறந்தால் முக்தி, இந்த இடத்தில வாழ்ந்தால் முக்தி, இந்த இடத்தில கால் பட்டால் முக்தி என்று எவ்வளவோ இடங்களை  சுட்டிக்காட்டி கதா காலாட்சேபங்களும்  பிரச்சாரங்களும்  நடக்கின்றன.       இவ்வளவு வழிகளும் இருக்கின்றனவே !
பின் என்ன கவலை?     இந்த குறிப்பிட்ட இடங்களில் வாழ்ந்தோ,  மிதித்தோ  முக்தி அடையலாமே !    இப்படி ஓர்  சிந்தனை.

யாருக்கு வேண்டும் இந்த முக்தி?     இந்த உலகத்தில் சந்தோசம் அனுபவித் தால் போதாதா?   இதைவிட வேறு என்ன வேண்டும்!  இப்படியும்  ஒரு எண்ணம்.

மரணத்திற்கு பின்னர் நடக்கப்போவதை யார் பார்த்தார்கள்!.   நம் முற்பிறவியைப்பற்றிய எதையம் நாம் இப்பிறவியில் உணரவில்லையே!    பின்னர் ஏன் அடுத்த பிறவியைப்பற்றிய சிந்தனை.     முற்பிறவியைப்பற்றி ஒன்றுமே அறியாத நிலையில்  அடுத்த பிறவியில் அனுபவிப்பதை உணரவா போகிறோம் ?     அதனால்  இந்த பிறவியில் சுகங்கள் அனுபவிப்பதை ஏன் தவிர்க்க வேண்டும் ?    இப்படியும் ஓர் எண்ண ஓட்டம்.

இந்த கேள்விகளும், இவற்றிற்கான விடைகளும் முடிவுகளும் நம் சிந்தனைக்கு விடப்படுகின்றன.       சிந்திப்போமாக.      அவரவர் மனநிலைக்கேற்ப எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்.

இந்த இடுகையின் நோக்கம் உண்மை நிலைய எடுத்துக்காட்டுவது என்பது மட்டுமே  சிந்திப்பதற்கும் முடிவெடுப்பதற்கும்  ஒரு வழிகாட்டியாக இதனை நினைப்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்.    ஒவ்வொருவருடைய சுதந்திரத்தையும் சிந்திக்கும் சுதந்திரத்தையும் அதன் மூலம் முடிவெடுக்கும் திறனையும் நாம் மதிக்கிறோம்.

 நன்றி.  வணக்கம்.  

வியாழன், 3 ஜனவரி, 2019

ஆன்மா, மனம், உயிர், புத்தி, சமாதி நிலை - ஓர் விளக்கம் Dimensions of Soul and Mind - Samathi

ஆன்மா, மனம், உயிர்,  புத்தி, சமாதி நிலை  -   ஓர் விளக்கம்   Dimensions  of  Soul and Mind

மனிதனின் உடலுக்கு அப்பாற்பட்ட நிலைகள் மூன்று:  ஆத்மா , மனம், உயிர்.

உயிர் உடலுக்குள் இருந்து உடலை இயக்குகிறது.

ஆத்மா உடலுக்கு வெளியில் இருந்து கொண்டு மனதின் வழியாக உடலை இயக்குகிறது.

மனம் ஆத்மாவுக்கும் உயிருக்கும் இடையில் ஒரு ஏஜென்ட் அல்லது ஊடகர் ஆக செயலாற்றுகிறது.  ஆத்மாவையும் உயிரையும் சமநிலையில்  நிறுத்துவது இதன் வேலை.

உயிரை மனமும்,  மனதை ஆத்மாவும் கட்டுப்படுத்துகின்றன.

 மனம் ஆன்மாவிற்கு கட்டுப்பட்டது தான்.   ஆனாலும் அது சிந்திக்கும் தன்மையது.  மனம் ஆத்மாவுக்கு கட்டுப்பட்டு நடந்து உயிரை வழிநடத்தினால்  உடலும் ஆத்மாவும் வலுப்பெறுகின்றன.   உயிர் மனதின் வழி காட்டுதலில் இயங்க வேண்டும்.      உயிர் மனதின் கட்டுப்பாட்டை  மீறி (தன் கடமையை மறந்து) தன்னிச்சையாக செயல்படும்பொழுது உடலும் ஆத்மாவும் வலுவிழக்கின்றன.    இந்நிலையில் மனம் உயிரின் கட்டுக்குள் வந்து விடுகிறது

இது தான் ஆத்மா, மனம் , உயிர் செயல்பாட்டு தத்துவம்.

உயிர் உடல் சம்பந்தப்பட்டது.    புத்தியின்   உதவியுடன் உயிர்  உடலை ஆள்கிறது.  மூளையின் இயக்க சக்தி தான் புத்தி.   புத்தியின் உதவியுடன் உயிர் மூளையின் வாயிலாக உடலை இயக்குகிறது.

உடலின் இன்ப துன்பங்களை உயிர் அனுபவிக்கிறது.  மகிழ்கிறது அல்லது கஷ்டப்படுகிறது.  உயிரும் கட்டுக்குள் மனம் வரும்பொழுது உயிர் மனதை ஆட்டுவிக்கிறது    அதனை  தனக்கு சாதகமாக சிந்திக்கவும் திட்டமிடவும் தூண்டுகிறது

உயிர் உடலின் சுகத்துக்கு ஆசைப்படுகிறது.     உயிருக்குத்தான் ஆசை ஏற்படும்.   காரணம் அது ஆத்மா சம்பந்தப்பட்டது அல்ல.  உயிர்  உடல் சம்பந்தப்பட்டது.  மூளை, உடல் இவை இரண்டின் ஒருங்கிணைந்த இயக்கம் தான் உயிர்மை.      இந்த ஒருங்கிணைப்பு திறன் அல்லது சக்தி தான் உயிர்.  அதனை உருவாக்கியது ஆத்மா.      உடலை பாதுகாத்து ஆத்மாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான  இயக்கங்களை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் அது.   அது மனதின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டது. 

மனம் என்பது உடலின் உபரி தளத்தில் எண்ணங்களாக நிலை பெறுகிறது.

மனம் உயிருக்கு  கொடுக்கும் கட்டளைகளை  உயிர்   புத்தி மூலமாக  மூளை யைக்கொண்டு இயக்கி நிறைவேற்றுகிறது.  புத்தி என்பது மனதின் உதவியாளர்.    புத்தி என்பது மூளையில் அமைகிறது. 

உயிர் உடல் சுகங்களை அனுபவிக்கிறது.    அது மனதிலும் பிரதிபலிக்கிறது.  தொடர்ச்சியாக  உயிர் சுகங்களை அமிதமாக அனுபவிக்கிற பொழுது அது ஒரு விதமான போதைக்கு ஆட் படுகிறது.   போதை மூளையை தாக்குகிறது.  போதை மயக்கத்தில் மூளை திரும்ப திரும்ப சுகத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டு உயிரை மகிழ்விக்கிறது.    மகிழ்ச்சியில் திளைக்கும் உயிர்  மனதின் கட்டுப்பாட்டில் இருந்து தன்னை அறியாமல் விலகி விடுகிறது. அது ஆசைக்கு அடிமைப்படுகிறது.  இதன் தாக்கம் மனதில் பிரதிபலிக்கிறது.   

உயிரும் மூளையும் தன்னிச்சையாக செயல்படும் நிலையை  அடைந்தவர்கள் தம் நடவடிக்கைகளை  நியாயப்படுத்து வதற்காக கடவுளையும்,  தர்மங்களையும் தவறாக வியாக்யானிக்கிறார்கள்.   சுயநலத்துக்காக ஒவ்வொன்றையும் திரித்து கூறி திரிபே நேர் என்று எல்லோரும் நம்பும் நிலையை உருவாக்கி விடுகிறார்கள்.  மேலோட்டமான உணர்ச்சிகளுக்கு தாம் அடிமைப்படுவது மட்டுமின்றி சாமர்த்தியமான பேச்சினால் பிறரையும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படுத்துகிறார்கள்.   சிந்தனை சக்தியும் உணர்வுகளும் அற்றுப்போய் விடுகின்றன.   யார் தங்களை நியாயப்படுத்தி சொல்கிறார்களோ அவர்களை, எந்த சிந்தனையும் இல்லாமல்  கூட்டம் கூட்டமாக பின்பற்றும் நிலை உருவாகிறது.     மனதில் இருக்கும் அடிப்படை மூல்யங்களுக்கு உயிரையும் புத்தியையும் எட்டமுடியாத நிலை உண்டாகிறது.   அதனால் தான் சிந்திக்கும் திறன் அற்றுப்போகிறது.    சுகத்தை அனுபவிக்க பணம் தேவை.   அதனை எவ்விதத்திலாவது தேடுவது  என்பது மட்டுமே வாழ்க்கையின் நோக்கமாக மாறிவிடுகிறது.

இந்த வேளைகளில் ஆத்மா விற்கும்  உயிருக்கும் இடையிலான மனதின்  தொடர்பு அற்று போகிறது. மனதின் இயக்கம் வழி மாறி விடுகிறது ; இயல்பிற்கு மாறுபட்டு  இயங்குகிறது  ஆத்மாவின் தொடர்பில் இருந்து தான் விடுபட்டு இயங்குவதை உணர்கிறது. அதனால் அது சோர்வடைகிறது..    .  இதனால் மனதில் ஏற்படும் பதற்றமே மனதின் இறுக்கமாக மாறி விடும்.  மனதின் இறுக்கம்  தொடரும் பொழுது அது ஒருவிதமான விறைப்புத் தன்மையை அடைகிறது .   இதனால்  மனது மந்தமடைகிறது.  அதன் இயக்கத்தில் சோர்வு ஏற்பட்டு   மனதால்  ஆத்மாவிற்கு அனுசரணையாக இயங்க முடிவதில்லை.    நாளடைவில் மனத்தால் ஆத்மாவின் அறிவுறுத் தல்களை உயிருக்கு முறையாக ஒழுங்கான முறையில் எடுத்து செல்லமுடிவதில்லை.  அதனால் ஆத்மாவிற்கும்  உயிருக்கும் உள்ள தொடர்பு குறைந்து புத்தி தன்னிச்சையாக செயல்படும் நிலை தொடர்ந்து ஏற்படுகிறது.      அது உயிரையும் அதன் மூலம் உடலையும் சுயமாக இயக்குகிறது.

இந்த இடத்தில ஸ்ரீமத் பாகவதத்தில்  இருந்து கலி காலத்தின் நிலை பற்றிய சில குறிப்பிட்ட சுலோகங்களின் சில பாகங்களை  மேற்கோள் காட்டுவது உசிதமாக இருக்கும்.    அவையாவன:   

புற அடையாளங்களால் அதாவது உடலில் அணியும் (மத) சின்னங்களால்  மட்டுமே  ஒருவன்  ஆன்மீக வாதியாக கருதப் படுவான்.   சாமர்த்தியமான  வார்த்தைகளால்  கவர்ச்சிகரமாக பேசுபவனே அறிஞனாக  கருதப்படுவான்    ஸ்ரீமத் பாகவதம் 12.2.4

போலித்தனமே நல்லொழுக்கமாக கருதப்படும் -  ஸ்ரீமத் பாகவதம் 12.2.5

மதத்தைப்பற்றி தெரியாதவர்கள் அதன் அமைப்பு மையங்களில் தலைமை இடங்களில் அமர்வார்கள்;    மத தத்துவங்களை போதிப்பதாக நடிப்பார்கள் - ஸ்ரீமத் பாகவதம் 12.3.38

அர்ச்சகர்கள், அறிஞர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் வித விதமான உணவுப்பழக்கங்களுக்கும் சிற்றின்பத்திற்கும் அடிமைப்படுவார்கள்  -  ஸ்ரீமத் பாகவதம் 12.3.32

பணம், சொத்து சம்பாத்தியம் நற்பிறவியின் அடையாளமாக கருதப்படும்.  ஸ்ரீமத் பாகவதம் 12.2.2

வஞ்சகமும், ஏமாற்றுதலுமே வணிகத்தின் அடிப்படையாக கொள்ளப்படும்  ஸ்ரீமத் பாகவதம் 12.2.3

இது தான் இன்றைய காலகட்டத்தின் நிலை:

 அதாவது உடலுக்கு இன்பத்தை தரும் வசதிகள்  இன்பங்களில் திளைக்க முற்படுதலும், அதற்கு தேவை பணம் என்பதால் அதனை தேட வேண்டும் என்ற குறிக்கோளும் முன்னிட்டு நிற்கிற காலம் இது. அதாவது பலவிதமான ஆசைகள் முன்னிற்கிற காலம்.  மிதமாக பணத்தை தேடுவதற்காக எந்த தீங்கையும் செய்வதற்கு அஞ்சாமல் வேறு யாரைப்பற்றியும் எவரைப் பற்றியும் கவலைப்படாமல் எல்லோரும் வாழத்துணிகின்ற காலம்  இது. அதனால் நம் மனமானது. ஆத்மாவின் தொடர்பை மீறி நடக்கிற காலம்.  
 ஆன்மீக சிந்தனைகளும் கோட்பாடுகளும்  சுயநலத்துடன் திரித்து விளக்கப்படுகின்றன.     கடவுளையே  தவறாக சித்திகரிக்கப்படும் ஒரு கால கட்டம் இது/

இதுவே யோகத்திற்கு மாறான நிலை.

புத்திக்கு கட்டுப்பட்டு இயங்குகிற  உடல் சுகத்தை மட்டுமே நாடுகிறது.

அழிவற்ற ஆத்மாவின்  வளர்ச்சிக்கு   அது உயர்ந்த  நிலையை அடைவதற்கு,  உடல்  அதன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம்.      உடலுடன் அழியும் புத்திக்கு உடல் சுகம் மட்டும்தான் லட்சியம் .       அது உடலின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப் படுவதில்லை.  அதனால் உடல் அமித சுக போகங்களால் மனதின் கட்டுப் பாட்டை இழந்து நோய்வாய்ப் படுகிறது.  இந்நிலை தொடர்ந்தால்   நாளடைவில் ஆத்மாவின் குறிக்கோள்  நிறைவு பெற   இயலாத நிலையில்  உடல் மரணமடைய நேர்கிறது. 

மனதின் வலுவான இயக்கத்திற்கு வலுவான உடல் தேவை.   ஆரோக்கியமான உடல் இருந்தால் மட்டுமே மனத்தால் சுயமாக ஆத்மாவிற்கு கட்டுப்பட்டு இயங்கி உயிரை கட்டுக்குள் நிறுத்த முடியும்.

மனக்கட்டுப்பாட்டில் உயிர் இருந்தால் மட்டுமே ஆத்மா வலுப்படும்;   அதன் சக்தி வளர்ச்சி பெரும்.

ஆத்மாவின் வளர்ச்சிக்கு உடல் ஆரோக்கியமும் கட்டுப்பாடும் மிக மிக முக்கியம்.

ஆத்மாவின் வளர்ச்சியின் நோக்கம் சமாதி அதாவது முக்தி அல்லது யோகம் அடைவது.     இங்கு யோகம் என்பது ஆத்மா இயற்கையுடன் இணைவது.    இதுவே முக்தி.      இதுவே யோகம்.

இந்த நிலையை அடைவதற்கு வழி காட்டியாக அமைவதே அஷ்டாங்க யோகம்.     இதைப்பற்றி ஒரு தனி இடுகையாக விளக்கப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக அதனை படிக்கவும்.