ஞாயிறு, 22 டிசம்பர், 2019

ஆத்மாவை உணர்வது எப்போது? எப்படி!

வாழ்வில் ஆத்மாவை உணர்வது எப்போது?   எப்படி!

ஆன்மீகம் என்பது ஆன்மா அல்லது ஆத்மா பற்றிய அறிவு , உணர்வு அல்லது ஞானம்.   மாறாக கடவுள் பற்றிய சிந்தனையோ அறிவோ அல்லது நமது அறிவுக்கு அப்பாற்பட்ட எதோ ஒரு சக்தியை பற்றிய அறிவோ அல்ல ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வோம். வீணாக ஆன்மிகம் என்பதைப்பற்றி ஆலோசித்து வீணாக குழம்பிக்கொண்டிருக்க வேண்டாம்.   நம்மைப்பற்றி,  நமக்கு அடிப்படையாக அமையும் ஆன்மாவைப்  அறிய முற்படும்போது இடைப்படுவது தான் கடவுள் அல்லது நமக்கு அப்பாற்பட்ட சக்திகள் பற்றிய சிந்தனை..  ஆன்மா மனம் முதலானவற்றைப்பற்றி தனியான ஒரு பதிவு கொடுக்கப்பற்றிருக்கிறது.   அதனைப் படித்து அறிந்து கொள்ளவும்.

நாம் ஆர்வத்துடன் படிக்கும் இதிகாசங்களும் புராணங்களும் நமக்கு எதை உணர்த்துகின்றன?  அவைகள் எல்லாம் ஒரு காலத்தில் நடந்த ஒருகதையை, பற்பல காலகட்டங்களில் ஒவ்வொருவர் கற்பனைக்கு ஏற்றவாறும் மக்களின் மன நிலைக் கேற்றவாறு விரிவுபடுத்தியும்  மக்கள் மகிழ்ச்சிக்காக  அழகு படுத்தியும்   செவி வழி வளர்ச்சி பெற்ற கதைகள்.   பிற்காலத்தில் எழுத்து வடிவத்தில் ஆக்கப்பட்டவை.   எழுத்து வடிவம் பெரும்போதும் எழுதியவரின் கற்பனையும் அதில் கலந்தது.   பிற்காலங்களில் பலரும் தங்கள் கருத்துகளையும் தங்கள் விரும்பும்  கருத்துகளையும் இடைச்செருகல்களாக பல சமயங்களில் இணைத்து இணைத்து விரிவாக்கப்பட்டவை.     மூலக்கதையிலும் கருத்துக்களிலும் காலாகாலங்களில் பலரால் மாசு படுத்தப்பட்ட, இன்றும் ஒவ்வொருவர் கற்பனையாலும் மாசு படுத்தப்படுகிற இப்படிப்பட்டஇதிகாசங்களையும் புராணங்களையும் படித்தும் அவற்றை விரிவாக்கி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் கருத்துக்களையும் விளக்கங்களையும் புகுத்தி நடத்தும் கதா காலட்ச்சேபங்களை  கேட்டும்  நாம் அறிவது என்ன?

இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மனதை எந்த அளவிற்கு கெடுக்கின்றனவோ அதற்கு இணையான கெடுதல்களைத்தான் நமது புராண இதிகாசங்கள் தருகின்றன.    அவற்றின்  கதா  பாத்திரங்கள் செய்யும் தவறுகளை எல்லாம் நாம் ஒவ்வொரு காரணத்தை சொல்லி நியாயப்படுத்தி நம் மனங்களை கெடுத்துக்கொண்டு இருக்கிறோம். 

இவற்றை எல்லாம் படிக்கவும் கேட்கவும் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கும் நம்மவர்கள்  ஆன்மா மனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நமது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களை பற்றிய இது போன்ற கட்டுரைகளை படிக்காமல் ஒதுக்குவதை பார்க்கிறோம்.  

கதைகள் அல்ல வாழ்க்கை.    அனுபவங்களே வாழ்க்கை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.    இந்த கட்டுரையை தவிர்க்காமல் கடைசிவரையில் படிக்கவும்.

ஆன்மாவை எப்படி அறிவது ? எப்படி தொடர்பு கொள்வது?  

மனம் வழியாக மட்டுமே நாம் ஆன்மாவைத் தொடர்பு கொள்ள முடியும். அதற்கு தகுந்த முறையில் மனம் பக்குவப்பட வேண்டும்.   அந்த பக்குவம் ஏற்படும்போது மட்டுமே அதனை சாதிக்க முடியும்.

மனம் ஆன்மாவை எட்டுமளவுக்கு பக்குவப்படுவது எப்படி?  எப்போது?

மனம் என்பது ஆன்மாவின் இரட்டை.   ஆன்மாவின் நிழல்.  ஆன்மாவின் பிரதிநிதி.   இந்த வேறுபட்ட நிலை நீங்கி மனம் ஆன்மாவாக மாற வேண்டும்.  இதற்கு மனம் பக்குவப்படவேண்டும்.  மனம் பக்குவப்படுவது என்பது மனம் ஆன்மாவின் நிலையை அடைவது; அதாவது ஆன்மாவும் மனமுமொன்றாக இணைவது.

மனம் பக்குவப்பட முயற்சி தேவை. எப்படிப்பட்ட முயற்சி. அதன் அடிப்படை என்ன.      ஆசை, அன்பு பாசம், உறவு, பற்றுதல் இவற்றில் இருந்து விடுபட வேண்டும்.     அப்படியானால் சன்யாசம் ஏற்க வேண்டுமா?   தேவை இல்லை!

ஒரு மனிதனின் பிறப்பில் இருந்து மரணம் வரையில் அவனுடைய வாழ்க்கையை அலசி சிந்தித்துப் பார்ப்போம். 

நம் வாழ்வின் அடிப்படைத் தத்துவமே ஒவ்வொன்றையும் ஏற்றுக்கொள்ளுதல் பின்னர் அதிலிருந்து விடுபடுதல் ஆகும்.   விடுபடுதல் என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஓரு தொடர் நிகழ்காகவே அமைகிறது.

கருவாகுமுன்னர் அப்பாவாக அல்லது அம்மாவாக மட்டும் இருக்கிறோம்.   கருவாகும்போது அம்மாவின் உடலின் விடுபட முடியாத ஒரு தனி பாகமாக இருக்கிறோம்.

கரு வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவிடமிருந்து பிரிந்து வருவதற்கு தேவை ஆன எல்லாமே உருவாகின்றன.  இந்த செயல்பாடு முடிவடையும்போது தாயிடம் இருந்து வெளியேறி விடுகிறோம்.  தனி உடலாக வேறுபட்டு விடுகிறோம்.    முதலில் உணவிற்காக தாயைச்சார்ந்து இருக்கிறோம்.  பிறகு நிலை மாறி கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவின் தாய்ப்பாலில் இருந்து அம்மா ஊட்டுகிற உணவிற்கு மாறுகிறோம்.   பிறக்க அம்மா தரும் உணவைத்த தானே உண்ணத் தொடங்குகிறோம்.    வளர வளர் தனித்துவம் ஏற்பட்டு வளர்ந்து கொண்டே வருகிறோம்.    உணர்ச்சிகளிலும் உணர்வுகளிலும் எண்ணங்களிலும் நடவடிக்கைகளிலும் அம்மா அப்பாவிடமிருந்து வேறுபடுகிறோம்.

பத்து வயதில் இருந்து வேறுபட்ட சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கைக்கொள்கிறோம்.    

திருமணம் ஆகும்போது நாம் தொண்ணுற்றி ஒன்பது சதவீதமும் அம்மா அப்பா விடமிருந்து வேறுபடுகிறோம்.   அந்த உறவுகளைக்கூட தேவை என்று கருதுகிற போது உதறித்தள்ளிவிடுகிறோம்.   திருமண உறவு,  கணவன் மனைவி உறவு என்பது அம்மா அப்பா உறவு போல (ரத்த )ஓட்டுதல் உள்ளதல்ல என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை.  கட்டாயத் தேவையால் ஏற்படுகிற ஒரு உறவு என்பதை நாம் அனுபவ பூர்வமாக  நம்மால் உணர முடியும்.    கணவன் மனைவி உறவின் அடிப்படை சுயநலம் மட்டுமே.

பின்னர் நம் குழந்தைகள்.  அவர்களுடனானது ரத்த சம்பந்தமான திடமான உறவு.  அந்த உறவும் அவர்கள் திருமணத்தோடு ஆட்டம் காண்கிறது. அற்றுப்போகத்  தொடங்குகிறது.   அதிலிருந்தும்  நாம் வெளி வருகிறோம்.  நம்மைவிட முக்கியத்துவம் அவர்கள் வாழ்க்கைத் துணைக்கு ஏற்பட்டுவிடுகிறது.  இது இயற்கை.

பேரக்குழந்தைகள் வருகிறார்கள்.  நம் பிள்ளைகளின் ரத்த சம்பந்த உறவு.  அவர்கள் ஒட்டுறவு அவர்களின் பெற்றோர் இடம் மட்டுமே மேலிட்டு நிற்கும்.

இந்த மட்டில் நாம் உறவுகளில் இருந்து விடுபட்டு வருகிறோம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் ஒவ்வொன்றிலிருந்தும் விடுபட்டு வந்துகொண்டே இருக்கிறோம்.  முடிவாக  மரணமடையும்போது எல்லாவற்றினின்றும் விடுபடுகிறோம். இது எல்லாம் இயற்கையாக நடக்கிறது.

குடும்பம் அமைக்க அப்பா அம்மா விடம் இருந்து வேறுபடும் நாம் அப்போது மிக சந்தோஷப்படுகிறோம்.  அப்பாவும் அம்மாவும் தான்.   ஆனால் அந்த சமதோஷம் தொடரவேண்டுமானால் அப்பாவும் அம்மாவும் தங்களது ஆசை பாசம், விருப்பு வெறுப்புகளில் விட்டுக்கொடுக்கவேண்டும்.   என்றால் மட்டுமே குடும்பத்தில் மகிழ்ச்சி தொடரும்.  இது நடக்காத பொது மகனானவன் எ[[அப்பா அம்மாவிற்கும் மனைவிக்கும் இடையில் பிரச்னையில் விழுகிறான்.   இது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.  இதுவரையில் இருந்த சுயநலம் அப்பா அம்மாவிடம் இருந்து விலக  வேண்டியது கட்டாயத் தேவை ஆகிறது.  மகனுடைய நலனுக்காக விட்டுக்கொடுக்கவேண்டியது இருக்கிறது.    மகன் தீர்மானங்கள் எடுப்பதில் தவறுகள் ஏற்பட்டால் அது அப்பா அம்மாவின் வளர்ப்பில் ஏற்படும் குறைபாடு.மகனைத் திருத்த முயலலாம்.  கேட்க்காத  போது  ஒதுங்கி விடுவது நல்லது.   மருமகளிடம் குறை இருந்தால் அதனைத் தீர்ப்பது மகனின் வேலை.  அதிலிருந்தும்  ஒதுங்கி விடுவது நல்லது.  அவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளை அவர்களே தீர்த்துக்கொள்ளும்படி விட்டுவிடுவது நல்லது.  நமது ஆசை, பாசம் விருப்பு வெறுப்பு அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடாமலும் சலனத்தை ஏற்படுத்தாமலும் கவனித்துக் கொள்ள வேண்டும்.     இவற்றை எல்லாம் கடைபிடிக்கிறபோது நாம் அவர்களிடம் இருந்து விலகத்தொடங்குகிறோம்.  இந்த விலகல் படிப்படியாக வளர வேண்டும்.இந்த அறுபது வயதில் நாம் சுற்றங்களில் இருந்தும் உறவுகளில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பிக்கவேண்டும்.   இல்லாவிட்டால் நாம் மெதுவாக ஒதுக்கப்படுவோம்.   உறவுகள், பந்தங்கள் பாசங்கள் முதலான அனைத்திலிருந்தும் விடுபட முயல வேண்டும்.  விடுபட வேண்டும்.  இது தான் மனம் ஆன்மாவாக உருத்திரிய முதல் படி.

சுற்றத்தார்:   முதலில் அப்பா அம்மா ஆகியோரின் சுற்றத்தார்.    பிறகு துணையின் சுற்றத்தார்.  பிறகு குழந்தைகளின் மண உறவு சுற்றத்தார். ஒரு சுற்றத்திடம் இருந்து அடுத்த சுற்றத்திற்கு மாறி மாறி வந்து பெயரர்கள் காலத்தில் எல்லா சுற்றங்களில் இருந்தும் விடுபடுகிறோம்.

அப்பா அம்மா சுற்றத்தார் அநேகமாக இந்நிலையில் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை.   மனைவி வழி சுற்றம் அவரவர் மக்கள் வழி போயிருக்கும்.   நம் மக்கள் சுற்றம் அவரவர் மக்கள் வழி போயிருக்கும்.  பெயர்கள் சுற்றம் அவர்கள் மட்டில் ஒதுங்கிவிடும்.    இது தான் அறுபது வயது முதல் எழுபது வயது வரையுள்ள காலகட்டத்தின் முக்கியத்துவம்.

அறுபது முதல் எழுபது வயது காலங்களில் நமது உறவு பந்தம் பாசம் யாருக்கும் பயன்படப்போவதில்லை.   நமது பாசத்திற்கு பெரிய குறிப்பிடத்தக்க அளவில் மதிப்பு கிடைக்கப் போவதில்லை.    ஒதுக்கப்படும்பொழுது அதனைப்பற்றி கவலைப்பட்டால் மன நிம்மதி தொலைந்து போகிறது.   நாமாகவே ஒதுங்கும்போது நாம் ஒதுக்கப்படுவதாக நாம் உணருவதில்லை.  அதைப்பற்றி கவலைப்படப்போவதுமில்லை.   நாமாக ஒதுங்கும்போது அதனால் நமக்கு ஒரு மரியாதை கிடைக்கிறது.   கிடைக்காவிட்டாலும் நாம் அதனைப்பற்றி கவலைப்படப்போவதில்லை என்ற மனப்பக்குவம் நமக்கு வந்திருக்கும்.

இந்த காலத்தில் நாம் நமது  பாசத்தை வெளிப்படுத்தி குடும்ப காரியங்களில் தலையிடுவதும் அபிப்பிராயங்கள் சொல்வதும் பிறர் சுதந்திரத்தில் தலையிடும் விதம் அமைந்து அதன் விளைவுகள் துன்பங்களைத் தரும்.   அதனால் இவற்றை தவிர்க்க வேண்டும்..   இதுபோலத்தான் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும்.    அவற்றை விட்டொழிக்காவிட்டாலும் துன்பங்கள் தொடரும்.

இப்படி அறுபது வயதில் எல்லாவற்றிலிருந்தும் விடுபடப்போவதன் தொடக்கமே அறுபது வயதில் ஒரு கல்யாணமாக அனுசரிக்கப்பட்டது.  முதல் திருமணத்தில் ஒரு குடும்பத்தை உருவாக்க மிக ஆடம்பரமாக கொண்டாடி  நடத்துகிறோம்;   மகிழ்கிறோம்.

அறுபதில் நடக்கும் திருமணம் குடும்பத்தில் இருந்து விடைபெறும் வைபவம்.  ஆர்ப்பாட்டங்களின்றி அமைதியாகநடக்க வேண்டிய வைபவம்.   இதன் பின்னர் குடும்பத்தில் இருந்து அதன் முக்கிய தாரையில் இருந்து ஒதுங்க ஆரம்பிக்க வேண்டும்.

காலப்போக்கில் இது எப்படி மாறிப்போயிருக்கிறது என்பது கண்கூடு.  இதன் பிறகும் தம்பதியர்களாகவே முக்கியத்துவம் பெற்று  பலரும் குடும்பத்தில் தொடர்வதை பார்க்கிறோம்.  இது பிரச்சினைகளுக்கு தொடக்கமாகிற திருமணமாக மாறிப் போயிருக்கிறது.   ஏன் எதற்கு என்று தெரியாமல் ஏதோ தவறான காரணத்தை சொல்லிக்கொண்டு நடத்தும் ஒரு சடங்காக மாறி இருக்கிறது.

ஆசை, பாசம், விருப்பு, வெறுப்பு முதலானவற்றிலிருந்து விடுபடும்போது தான் நம் மனம் ஆன்மாவிடம் நெருங்கத்தொடங்குகிறது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் அறுபது வயதில் மேற்குறிப்பிட்ட நான்கில் இருந்தும் எல்லோரும் சந்தோஷமாகவோ நிறைவுடனோ விடுபடுவதில்லை. நம்மில் பலரும் ஆசை, பாசம், விருப்பு, வெறுப்பு இவற்றை கெட்டியாக பிடித்து வைத்துக்கொண்டு சுயநலத்தை விடாமல் துன்பத்தை உடன் கொண்டு நடக்கிறோம்.   இது ஏன்?

கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். அம்மாவின் வயிற்றில் இருந்து விடுபட்டு வெளியேறி ஐந்து வயது வரும் வரையில் நாம் இயற்கையின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம்.    அம்மா அப்பாவிடம் இருந்து நாம் நம்மை அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுகிறோம்.   சிறுவர் காலத்திலும், இளமைக் காலத்திலும்  நாம் இயற்கையின் வழியில் பெற்றோர் இடமிருந்து விடுபட்டு வளர்கிறோம்.

இளமைக் காலத்தில் தான் நாம் ஆசை, பாசம், விருப்பு வெறுப்பு முதலானவற்றை வளர்த்துக் கொள்கிறோம்.   திருமணம் ஆனதில் இருந்து இவை ஒவ்வொன்றிற்கும் கொஞ்சம் கொஞ்சமாக பங்கம் ஏற்படத் தொடங்குகிறது.  மனைவிக்காக, குழந்தைகளுக்காக தனிப்பட்ட ஆசைகள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், பாசங்கள், உறவுகள் முதலியவற்றை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். கட்டுப்படுத்தாத போது பிரச்னைகள் உருவாகும்.  இந்த கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த கட்டுப்பாடுகள் இயற்கையாக வருபவை என்றும் தவிர்த்தால் பிரச்னைகள் வரும் என்றும் உணர்ந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனப் பக்குவத்தை அடைகிறார்கள்.  அவர்களுக்கு நிம்மதியும் தொடர்கிறது.  ஏற்றுக்கொள்ளாமல் விட்டுக்கொடுக்காமல் வாழ்பவர்கள் மனம் . மனதில் சஞ்சலமும் குழப்பமும் வளர்ந்து நிம்மதி குலைந்து வாழ்கிறார்கள்.   இது தான் இன்று பலருடையவும் நிலை.   இது தொடரும்போது அறுபது வயதில் சந்தோஷமாக குடும்ப வாழ்வில் இருந்து விடுபட்டு வர முடிவதில்லை.

அறுபது வயதில் பக்குவமடைந்து நிற்கும் மனம் ஆன்மாவை நெருங்கும் வழிகளை உணர்தத் தொடங்கும்.   இதற்கு எந்த விதமான வழிகாட்டுதலும் தேவைப்படுவதில்லை.   தானாகவே உணர்வுகள், மனம் தெளிவாக இருப்பதால், ஏற்படும்.  அந்த உணர்வுகள் காட்டும் வழியில்  நடந்தாலே போதுமானது.   எண்பது வயது ஆகும்போது மனம் முழு அளவில் பக்குவம் அடைந்து மனமும் ஆன்மாவும் ஒன்றுபட்டு நிற்கும் நிலை ஏற்பட வேண்டும்.

இந்த முழுமை அடைவதன் அடையாளமே எண்பது வயது திருமணம்.  வாழ்க்கையில் நடக்கும் மூன்று திருமணங்களில் மூன்று விதமான விடுபடுதல் நிகழ்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயர்ந்த நிலைக்கு வழி காட்டுகிறது.

சாதாரணமாக இன்றைய காலத்தில் இரண்டாவது மூன்றாவது திருமணங்கள் வசதியான குடும்பங்களில் மட்டுமே வசதியை வெளிப்படுத்தும் சடங்காக வேறு எந்த குறிக்கோளுமின்றி  நடக்கின்றன.
இரண்டாவது மூன்றாவது  திருமணங்கள் சடங்காக நடத்தப்படவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை.  அந்தந்த கால கட்டத்தில் அந்தந்த விதமான மன வளர்ச்சி ஏற்பட வேண்டியது தான் கட்டாயத் தேவை.

இந்த விதமாக வாழ்வில் ஒவ்வொரு படியையும் எப்படி கடந்து வரவேண்டுமோ அப்படி கடந்து வர முடியாததற்கு முக்கியமான காரணம் என்ன?   குடும்ப வாழ்வில் ஆசைகளை கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக  கட்டுப்படுத்த முடியாத நிலை தான் காரணம்.

ஆசைகளை கட்டுப்படுத்த முடியாமைக்கு என்ன அடிப்படைக் காரணம்.   வாழ்க்கையில் காத்திருக்கும் அநேகம் அநேகம் ஆடம்பரங்கள் வசதிகள், இன்பங்கள்.   இவற்றை அனுபவிக்காத தேவையான பொருளாதாரம் கையில் இருக்கும்போது ஆசையை அடக்குவது கடினமாகிறது.    சாதாரண தேவைக்கும் அதிகமாக பொருளை சேமிக்கும் ஆசையை கட்டுப் படுத்தினால் ஒழிய பிற ஆசைகளை ஒழிக்க இயலாது.  ஆசையை கட்டுப்படுத்திய பின்னர் அடுத்தது சுய விருப்பு, வெறுப்பு,பாசம்.இவற்றை விலக்குவது   எளிது.  அதனால் தான் புத்தர் எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஆசையை முதலில் அகற்ற வேண்டும் என்று போதித்தார்.

இவற்றை எல்லாம் விட வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டிய இன்னும் ஒன்று பிரம்மச்சர்யம்.   அதாவது பாலுணர்வினை பயன்படுத்துவதில் உள்ள கட்டுப்பாடு அல்லது ஒழுக்கம்.  பிரம்மச்சர்யம் என்னும் சமஸ்க்ரித சொல்லை நாம் தவறான அர்த்தத்தில் தவறான புரிதலில் பயன்படுத்தி வருகிறோம்.   பிரமச்சர்யம்  என்பதன் சரியான பொருள் உடல் ஒழுக்கம் என்பதே தவிர பாலுணர்வை முழுவதுமாக அடக்குவது என்பதல்ல. பாலுணர்வை எங்கே எப்போது யாரிடம் எந்த காலகட்டத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும், எப்பொழுது அதிலிருந்து விடுபடவேண்டும் என்கிற ஒழுக்கம் மிக முக்கியம்.  இந்த ஒழுக்கத்தை  சரியாக கடைப்பிடிக்காமல் இருந்தால் குடும்பத்தில் பிரச்சினைகளும் உடல் பராமரிப்பில் பிரச்னைகளும் ஏற்படும்.  இதுவும் மன வளர்ச்சியையும் பக்குவத்தையும் மிகவும் பாதிக்கும்.

எவனொருவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் எதெதிலிருந்தெல்லாம் விடுபட வேண்டுமோ அவற்றிலிருந்தெல்லாம் விடுபட்டுக்கொண்டே வருகிறானோ அவனே மனதை ஆன்மாவில் சேர்க்கும் தன்மை அடைகிறான்.   அதுவே பிறவி மரண சுழற்சியிலிருந்து விடுபடும் வழிமுறை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக