திங்கள், 17 டிசம்பர், 2018

வாழ்க்கை : பிறவிகள், மரணங்கள், அனுபவங்கள் Life : Birth, Death and Experiences

வாழ்க்கை   :  பிறவிகள், மரணங்கள், அனுபவங்கள்  Life, Birth, Death and Experiences

வாழ்க்கை அனுபவங்கள்  - அதில் பிறவிகள் பல.   மரணங்கள்  பல -

வாழ்க்கையில் ஒரு முறை பிறப்பு.   ஒருமுறை மரணம்.   இது தானே அனுபவம்.     

ஒரே வாழ்க்கையில் பல பிறவிகளா,    பல மரணங்களா.  எப்படி? என்று கேட்கிறீர்களா?

தினமும் செத்து  செத்து பிழைக்கிறேன் என்று சிலர் சொல்லக் கேட்டதில்லையா !   

உலகில் மனிதன் முதலில் பிறக்கிறான்.  முதலாவது  பிறவி.    அம்மாவின் வயிற்றில் இருந்து.       வாழ்க்கை என்ற வீட்டின் வாசலில் வந்து பிறந்து விழுகிறான்.   வாழ்க்கையில் முன் தாழ்வாரத்தில்/திண்ணையில்     தவழ்கிறான்.

வாழ்க்கையில் இது மகிழ்ச்சி தரும் மணம்.    வாழ்க்கையில்  புகும் மணம். 

வாழ்க்கை வீட்டினுள்  பிரவேசிக்க அங்கே காத்திருப்பு .  அப்பா, அம்மா, அவர் வழி சொந்தம், பந்தம், நண்பர், சுற்றம்.  படிப்பு. துடிப்பு,  சுதந்திரம்,  விளையாட்டு.  துள்ளிக் குதிக்கும் கன்று போல் குழந்தையாக பின் இருபது களில் காளையாக உலா வரும் காலம்.

சுதந்திர இளைஞனாக ஒரு மரணம்.    மீண்டும்  ஒரு அடுத்த பிறவி

ஒரு துணையின்  கை  பிடித்து நடு வீட்டினுள் பிரவேசம்.  இது இரண்டாவது பிறவி.  மறு  ஜென்மம்.  புதுப்பிறவி.

வாழ்க்கை வீட்டில் இது திருமணம்.

இனி அவன் புது மனிதன். ஒரு புதுப்பிறவி

வாழ்க்கையின் புத்துணர்வு.  அவன் முற்றிலும் புதியவன்.   புது நண்பர்கள், புது உறவுகள்.  புது சொந்தம்,  பந்தம்.  எல்லாம் எல்லாம் புதியன.   வாழ்க்கையில் புது மரியாதை.   சமூக அந்தஸ்து.   நான் என்னும் உயர்வு.

பழைய உறவுகள், நண்பர்கள் பந்தங்கள் வாசலுக்கு வெளியில்.  கூசலின்றி தலைகீழ் மாற்றம்.      பழைய உறவுகள் பொருட்டல்ல.   இன்பம், துன்பம், ஆரவாரம், துயரம், மகிழ்ச்சி. எல்லாம் எல்லாம் புது அனுபவம். 

வண்டிகளில் வயல்களில் பணியெடுக்கும் காளையாய் துணையின் முன் அடங்கிப்போகும் காலம்.

அப்பா அம்மா பின் தாழ்வாரத்துக்கு தள்ளிப் போனார்கள்

சம்பாத்தியம, வறுமை, குழந்தைகள், அப்பா/அம்மா  பதவி.  குடும்பம், அதன் பரிபாலனம், வளர்ச்சி.,வீழ்ச்சி, ஏற்ற இறக்கங்கள்.

குழந்தைகள் பெரியவர்கள்  ஆனார்கள்.    அப்பா அம்மா பின் வாசலில் கால் வைக்கிறார்கள்.

குழந்தைகள் திருமணம்.  அவர்கள் முன் தாழ்வாரத்தில்
இருந்து வீ ட்டினுள்   பிரவேசிக்க இவன் துணையுடன் பின் தட்டில் நுழைவு.

பெயரர்கள் வரவு.     அடுத்த இரண்டாவது மரணம்.

மீண்டும்  இவனுக்கு ஒரு  புது பிறவி..    மூன்றாவது பிறவி.  தாத்தா பதவி.

குதூகலம், மகிழ்ச்சி,  பேரர்கள் . அவருடன் களியாட்டம்.  அவர்கள் வளர வளர இவன்/இவள்  புறவாசல் பிரவேசம்.

வயது அறுபது.  அடுத்த மூன்றாவது மரணம்.

புறக்கட்டு பிரவேசம்.   புதிய அடுத்த பிறவி.      நான்காவது பிறவி.    நாய் போல் குறைத்து வாழும் காலம்.

அறுபதில் ஒரு மணம். அது திருமணம் விடும் மணம்

துணையின் உறவு விடும் மணம். எல்லா உறவுகளும் விடும் மணம்.   பின் தட்டில்/பின் வாசலுக்கு வெளியில்  அவனுக்கு தனிமை.   துணைக்கும் தான்.    முற்றத்து நாய் போல் குரைத்து வாழும் காலம்.

பற்றை, பாசத்தை  ஒழித்தால் நிம்மதி.    பற்றில் ஒட்டி இருந்தால் துன்பம், விரக்தி. பற்றாதிருப்பது, ஒட்டாமலிருப்பது : இதுவே நிம்மதி 

எண்பதுகளை நோக்கி ஆமையாய் நகரும் பயணம்.

துணை விடை பெற்றால்  அடுத்த மரணம்.   இனி அடுத்த புது தனிப்பிறவி.  இது ஐந்தாவது பிறவி.     ஆந்தை போல் அங்குமிங்கும் விழித்து அடங்கிப்போகும். அமைதியின் பக்குவம் காக்கும் காலம்.

வருடங்கள் ஓடும்.     மனம் சிதறும்;  அது அடுத்த மரணத்தை  நாடி ஓடும்.    தளறும் உடல்.  வாட்டும்  நோய்கள்.  அடுத்த மரணம் நெருங்கும் 

படுக்கை பிரவேசம்.  இது ஆறாவது பிறவி. 

எண்ணங்கள் மாறி மாறி வரும்; எண்ணங்கள் மட்டுமே உறவுகளாய் உடன் நிற்கும். 
பழைய நினைவுகள் மாறி மாறி வரும்.
இடையில்  வந்த உறவுகள்  ஒதுங்கி போகும்.   
ஒதுக்கிய பழைய உறவுகளை எண்ணங்கள்  நாடும். 
அந்த உறவுகள் எட்டாமல் போகும்.  
தனிமை வாட்டும் .   முதுமை விரட்டும். 

உணர்வுகள் முதிர்ச்சி பெற்றால்  நிம்மதி.       உணர்வுகள் தளர்ந்து  உணர்ச்சிகள் வளர்ந்தால்  துயரம்.

ஒருவராய் பிறந்து, இருவராய் இணைந்து, பலராய் இன்னும் பலராய் பெருகி களைத்து வெறுத்து  முடிவில் ஒருவராய் கழிக்கும் தனிமை காலம். 

இனி  இறுதி மரணம்.   எல்லாம்  சாந்தம்.    எங்கும் அமைதி.  எங்கும்எதுவுமே இல்லை. 

ஒரு தாயின் வயிற்றில் இன்னுமொரு மறு ஜென்மமா!    யார் அறிவார்? 

வாழ்க்கையின் ஒவ்வொரு பிறவிக்கு பின்னரும் ஆள் மாறாட்டம்.  பழைய ஆள் தொலைந்து போகிறான்.  பழைய உறவுகள் தொலைந்து போகின்றன.

இடையில் வரும் மயக்கம் தரும் புது உறவுகள்.   அடுத்த பிறவியில் கலைந்து போகின்றன.

ஒவ்வொரு பிறவியிலும் பழைய உறவுகள் விலக்கப்படும்

எல்லா பிறவியிலும் தோன்றி தோன்றி மறையும் பாசங்கள்.      பழையதை ஒழித்து  புதிய பாசறைகளை நாடும் புதுப்புது  பாசங்கள்.

 வாழ்க்கையின் எல்லா பிறவியிலும் எஞ்சி நிற்பது சுயநலமே.

இவை எல்லாம் இயற்கைக்கு உட்பட்ட பிறப்புகள்.

இன்னும் செயற்கையாய் பிறக்கிறான் பல முறை.    இன்னும் வித்தியாசமாய். இயற்கைக்கு அப்பாற்பட்டதாய்.

பணம் குவியும்போது ஒரு பிறவி .   தினமும் நாடிய பழைய உறவுகளை விலக் குகிறான்  உடன் பிறந்தோர்க்கும் கதி இதுவே.   தன்  நிலை ஒத்த உறவுகளை ஏற்கிறான்.   பழையன எல்லாம் மறக்கிறான்.   போலியாய் நடிக்கிறான். பொய்யினில் பொய்யாகி  வாழ்கிறான்  அன்பின் அருமையை மறக்கிறான்

இன்னுமொரு  மாற்று  நிலை.

பணமிழந்து ஏழையாக ஒரு பிறவி. 

பழைய உறவுகள் இவனை விலக்கும் .   பணத்துடன் இருந்த போது  இவன் விலக்கிய உறவுகள் மீண்டும் வந்து அணைக்கும் . 

அன்பின் அருமையை உணரும் தருணம்.

மீண்டும் பணம் குவியும்போது ஒரு மரணம். மீண்டும்  ஒரு புதுப்பிறவி.  அனைத்தையும் மறந்து மீண்டும் அகந்தை.  பழைய நிலைக்கு போகிறான்.

இன்னும் பலவித பிறவியும் மணமும் மரணமும். 

இது ஒரு முழு வாழ்க்கை     இடையில் முடியும் குறை வாழ்க்கையும் உண்டு.

பலருக்கும் பலவிதமாய், ஒவ்வொருவருக்கும் வேறு விதமாய் தொடரும்.

மரணங்கள் மனிதனுக்கு எதையும் கற்பிப்பதில்லை.

என்றும் எஞ்சி நிற்பது நான், எனது எனும் சுயநலமே.   

யாரும் விதிவிலக்கல்ல.   நானும் அதில் ஒருவன்.





  

செவ்வாய், 4 டிசம்பர், 2018

பிரம்மச்சர்யம் - ஒரு உண்மை பொதிந்த எளிய விளக்கம் Genuine Simple and Realistic Explanation of Celibacy .


பிரம்மச்சர்யம்  - ஒரு  உண்மை பொதிந்த எளிய விளக்கம் Genuine Simple and Realistic  Explanation  of  Celibacy  .


பிரம்மம் என்பது பொதுவாக material அல்லது பொருளை குறிப்பிடும் சொல்.  இங்கே அதனை உடல் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். சர்ய (charya ) என்பதற்கு  ஒழுக்கம் அல்லது அனுசரணை என்று பொருள்.    உடலை ஒழுக்கத்துடன் பாதுகாப்பது தான் பிரம்மச்சர்யம் எனப்படும்

இதுவே இதன் எளிமையான விளக்கம்.  

ஆகவே உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பதையே பிரம்மச்சர்யம் என்கிறோம்.  பிரம்மச்சர்யம் என்கிற வடமொழி சொல்லுக்கு தமிழில் உடல் ஒழுக்கம் என்பதே பொருந்தும்.

வார்த்தைகளுக்கு அர்த்தம் எடுப்பதில்  இங்கு சிக்கல் எதுவும்  இல்லை.

 உடலை ஆரோக்யமாக பாதுகாப்பதற்கு என்னென்ன ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டுமோ அந்த ஒழுக்கங்களை கடைபிடித்து உடலை சீராக பாதுகாப்பது என்பது தான் இதனால் உணரப்படுகிறது.

இதனையே  ஆண் பெண் தொடர்பு  அறவே இல்லாமல் இருப்பது தான் பிரம்மச்சர்யம் என்று  தவறாக வியாக்யானித்து குழப்பி விட்டிருக்கிறார்கள்.  ஆண் பெண் தொடர்பே ஆகாது என்பது அதன் பொருள் அல்ல.   

மனித இனத்துக்கு அடிப்படையே ஆண் பெண் தொடர்பு  தானே.    எதற்காக ஆணும் பெண்ணும் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.    இன  வளர்ச்சிக்கு அடிப்படையே உடல் தொடர்பு தானே.    அதனை தவறான ஒன்றாக எப்படி கருத முடியும்.

ஒழுக்கம் எதற்காக கடைபிடிக்கிறோம்.    சிக்கல்கள் இடைஞ்சல்கள் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காகவே ஒழுக்கத்தை கடைபிடிக்கிறோம்.   திருமண அல்லது குடும்ப வாழ்க்கை என்பது ஆண் பெண் உறவினால் ஏற்படும் சச்சரவுகளையும் பிரச்சினைகளையும் தவிர்ப்பதற்காக ஏற்பட்ட ஒழுக்க முறைதான்.     தேவை இல்லாத நேரங்களில் பாலியல் உணர்ச்சிகள் ஏற்பட்டு அசம்பாவிதங்கள் உண்டாவதை  தவிர்க்க ஏற்பட்ட ஒழுக்கமுறை தான் ஆடை அணிவது. 

உடலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உடல்  உறுதிக்கும் எந்தவித  இடைஞ்சலும் ஏற்படாமல் இருக்க வேண்டும்.     அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் ஒழுக்கத்துடன் செய்ய வேண்டும். இவ்விதம் உடலை பேணி பாதுகாக்கவேண்டும்.   இந்தவிதமான ஒழுக்க முறைதான் பிரம்மச்சர்யம் அல்லது உடல் ஒழுக்கம்.

பஞ்ச பூதங்களால் ஆனது உடல்.    அன்றாட இயக்கத்தால் உடலில் ஐம்பூதங்களின் இழப்பு ஏற்படுகிறது.     உடலுக்கு தேவையான நேரத்தில் தேவையான அளவுக்கு அவற்றின் குறைவு  நிறைவு செய்யப்பட வேண்டும். உடலின் அன்றாட இயக்கங்களை முறைப்படுத்தி ஐம்பூதங்கள் உடலில் தேக்கமடையால் பார்த்துக்கொள்ள வேண்டும்.   தொடர்ச்சியான தேக்கம் உடலில் இறுக்கத்தை ஏற்படுத்தும்.      நாளைடைவில் உடல் இயக்கம் பாதிக்கப்பட்டு நோய் ஏற்பட ஏதுவாகும்.

 நிலத்தின் அம்சம் உணவு.    அதில் எது தேவையோ  எப்பொழுது தேவையோ அப்பொழுது அதனை தேவைக்கேற்ப உணவாகஉட்கொள்ளவேண்டும்.

நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடைக்காமல் வெட்ட வெளியில் தேவைக் கேற்ப வெயில் கொள்ளவேண்டும்.    வெளிச்சமும் சூடும் நெருப்பின் அம்சம். 

தேவையான அளவிற்கு சுத்தமான காற்றை உட்கொள்ளவேண்டும்.  காற்றோட்டமான இடத்தில அமரவேண்டும்.      நம் உடலின் மேற்புறத்தில் காற்று தழுவிச் செல்லவேண்டும்.   அதனை நாம் அனுபவிக்கவேண்டும்.

தேவைக்கு அவ்வப்போது  நீர் அருந்தவேண்டும்.  இது உடலின் நீர்  இழப்பை சரி செய்யும்.        குளிர்ந்த நீரில் அனுபவித்து நீராடவேண்டும்.     இது உடலின் சூட்டின் தேக்கத்தை மட்டுப் படுத்தும்.

இவ்விதமாக நம் உடலில்   நிலம், நெருப்பு, காற்று, நீர் என்கிற நான்கு பூதங்களின் இருப்பை சமநிலையில் நிலை நிறுத்துகிறோம்

ஐம்பூதங்களில் இன்னும் ஒன்று மீதம் இருக்கிறது.

ஆகாயம்.   சூன்யம்.    இல்லை என்று நிற்கும் ஒன்று.    இன்னதென்று அறிய முடியாத ஒன்று.    அதன் அம்சம் தான் நம் மனம்.   அதுவும் இல்லை என்று நிற்கும் ஒன்றுதான்.   இன்னதென்று அறிய முடியாத ஒன்றுதான்.   

மனதின் இயக்கத்திற்கு சக்தி தேவை.   இயக்கத்தினால்  குறையும் சக்தி நிரப்பப்பட வேண்டும்.     அப்பொழுது தான் மனம் புத்துணர்வு பெறும்.    ஆகாயமும் சக்தியும் இணையும்போது தான்  மற்ற நான்கு பூதங்களும் பிறக்கின்றன.  சக்தியுடன்  இணையும்போது தான் ஆகாயம் ஆற்றல் பெறுகிறது.

மேற்சொன்ன அடிப்படையில் மனம் ஆற்றல் பெற்று புத்துணர்வு பெற ஆணும் பெண்ணும் இணைய வேண்டும் .    இதனையே காமம் என்கிறோம்.  

உடல் உறவின்போது இன  விருத்திக்கு அப்பாற்பட்டு,  சக்தி அடிப்படையில் என்ன நடக்கிறது ?

ஆணின் உபரிதளத்தில் எஞ்சி நிற்கும் நேர்மறை சக்தியும் பெண்ணின் உபரிதளத்தில் எஞ்சி நிற்கும் எதிர்மறை  சக்தியும் தம்மில் இணைந்து  இருவரின் உபரி தளத்திலும் சக்தி சமநிலை ஏற்படுகிறது.   அதாவது. மனதில் சமநிலை ஏற்படுகிறது.  மனதின் பலமே அதன் சம நிலைதான்.  உடல்களின் உரசலில் இந்த சக்திகள் கலப்பு நிகழ்கிறது.   அதிலே மனது புத்துணர்வு அடைகிறது.

உணவுக்கு பசி, நீருக்கு தாகம்,   காமத்துக்கு வேட்கை.    இவை எல்லாம் இயற்கை.       ஆக இந்த இணைவு ஒரு கட்டாய தேவை.   மனம் குறைவற்ற  ஆற்றலுடன் இருந்தால் மட்டுமே பிற நான்கு பூதங்களால் அமைந்த உடல் சமநிலை பெற்று ஆற்றலுடன் இயங்க இயலும். 

மிதமான ஆண் பெண் உடலிணைவு,  உடலுறவு மனதின் ஆற்றலை வளர்த்து உடலின் பஞ்சபூத சமநிலையை மேம்படுத்தும்.  ஆகாயத்தின் அம்சமாகிய மனமே உடலில் பிற பூதங்களின்  அம்சங்களின் இயக்கத்தை கட்டுப் படுத்துகிறது.    ஆகவே  மனதின் சமநிலை அடிப்படை தேவை ஆகிறது.  

அமிதமான உணவு, அமிதமான காற்று,அமிதமான வெயில் அல்லது சூடு,
அமிதமான நீர் என்று அமிதமான அளவில் நாம் உட்கொள்ளும் அனைத்துமே நம் உடலுக்கு நோயைத்தரும்.  சமநிலைக்கு ஊறு விளைவிக்கும்.   உடல் இயங்க முடியாத ஒரு தேக்கநிலையை ஏற்படுத்தும்.

அமிதமான உடலுறவு ஈடுபாடு மனதின் ஆற்றலை அழிக்கும்.   உடலின் பஞ்சபூத சமநிலையை   தகர்க்கும் .  அதனால் உடல் இயக்கத்தில்  தேக்கம் உண்டாகும்.  மூளையின் இயக்கத்திலும் தேக்கம் ஏற்படும்.    எனவே உடலுறவு கட்டுப்பாடு ஆரோக்யமான உடலுக்கு  பிறவற்றைவிட மிக மிக முக்கியம் என்பது தெளிவாகிறது.

உட ல்  வலுவிழக்கும்  அளவிற்கு உடல் உறவில் அமித ஈடுபாடு ஆகாது என்பது தான் விளக்கம்.

நைஷ்டிக பிரம்மச்சர்யம்  என்பது குறிப்பிட்ட  சில நிஷ்டைகளுடன்  சுயகட்டுப்பாடுகளுடன்  பிரம்மச்சர்யத்தை அனுசரிப்பது என்பது பொருள்.  அதாவது குறிப்பிட்ட சில ஒழுக்கங்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்து பிரம்மச்சர்யம் அனுசரிப்பது என்பது தான் விளக்கம்.   உதாரணத்திற்கு குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்பது,      குறிப்பிட்ட இடத்தில மட்டும்  வசிப்பது,   ஏகபத்தினி தாம்பத்யம் மிதமாக அனுபவிப்பது,   அல்லது மனைவியருடன் மட்டும் தாம்பத்யம் நடத்துவது  முதலான குறிப்பிடும் படியான ஒழுக்கங்கள்.

பிரம்மா நாரதரிடம் ஸ்ரீ கிருஷ்ணர் நைஷ்டிக பிரமச்சாரி என்று  சொன்னதன் 
காரணத்தை துர்வாசர் பின் வருமாறு  விளக்குக்கிறார்.      

ஸ்ரீ கிருஷ்ணர் ராதையுடன் எவ்வளவு நெருக்கமாக பழகினாலும் அவர்களிடையே உடல் சம்பந்தமான உறவு இருக்கவில்லை.     அந்த அளவுக்கு அவரிடம்  பிரம்மச்சர்யத்தில் நிஷ்டை அல்லது ஒழுக்கம் இருந்தது என்று அவர் நாரதரிடம் விளக்குகிறார்.    

தவிர்க்க இயலாத சூழ்நிலை ஏற்பட்ட போதும்  அவர் மனைவியர் அல்லாத இன்னொரு பெண்ணிடம் நெருக்கமாக இருந்தும் கூட உடலுறவில் ஈடுபடவில்லை  என்பது சிறப்பாக குறிப்பிடப்படுகிறது.   இது ராதைக்கும் கிருஷ்ணருக்கும்  பொருந்தும்.   

ஆண் பெண் உடல் உறவைத் தவிர்த்த ஒரு பிரம்மச்சர்யம் பூரணமான பிரம்மச்சர்யம் ஆகாது.      பிரம்மச்சர்யத்தில் ஆண் பெண் உறவு ஒரு தவிர்க்கக்கூடாத அம்சமே.                                                                                            

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

தெய்வம் - கடவுள் : என்ன வேறுபாடு - ஓர் விளக்கம் Deity - God : An Explanation



தெய்வம்  - கடவுள்   :   என்ன வேறுபாடு.  ஓர் விளக்கம்  Deity - God   An Explanation

ஆத்மா தன் வளத்தை அல்லது சக்தியை அதிகரித்து வலுப்படுவதற்காகவே உடலெடுக்கிறது. அது வளப்படும்பொழுது அதன் சக்தி அதிகரிக்கிறது.    ஆத்மா வலுவிழக்கிறபொழுது அதன் சக்தி குறைகிறது.   ஆத்மா வலுப்பெற வலுப்பெற அதன் சக்தி அதிகரிக்க அதிகரிக்க பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து அது கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுகிறது. 

ஜென்மம் ஜென்மமாக ஒரு ஆத்மா தான் எடுக்கும் ஒவ்வொரு உடலில் இருந்து  ஒவ்வொரு முறையும் வலுப்பெற்று   வெளியேறுந்தோறும் அது இந்த பூமியின் உபரி தளத்தில் இருந்து விலகி விலகிச் செல்கிறது.   இப்படி ஆத்மா முற்றிலுமாக பூமியின் ஈர்ப்பு சக்தியில் இருந்து விடுபட்டு அப்பால் செல்லும்பொழுது அது பிறவி எடுப்பதிலிருந்து விடுபடுகிறது .  அந்த ஆத்மா தெய்வத்தன்மை அடைகிறது.  அது தெய்வமாக மாறுகிறது.   தெய்வங்கள் வாழ்கின்ற புவி ஈர்ப்பு விசைக்கு அப்பாற்பட்ட இந்த  இடம் தான்  விண்ணுலகம். 

பூமி என்பது மண்ணுலகம்.

பிறவி எடுப்பதிலிருந்து விடுபட்ட இந்த ஆத்மாக்களைத்தான் நாம் கோவிலில் சிலைகளாக உருவகப்படுத்தி தெய்வங்கள் ஆக வழிபடுகிறோம்.

ஒன்றை கவனிக்கவும்.     நாம் கோவில்களில் தெய்வம் இருப்பதாகத்தான் சொல்கிறோமே தவிர கடவுள் இருப்பதாக சொல்கிற வழக்கமில்லை.  அதாவது இங்கு கடவுள் என்ற வார்த்தையை ப யன்படுத்துகிற வழக்கம்  இல்லை.   அதாவது கோவிலில் இருப்பது தெய்வம் என்கிற உணர்வு பழையகாலத்தில் இருந்தே நம் உணர்வில் இருந்து வந்திருக்கிறது என்பது தான் உண்மை.  தெய்வம் என்கிற வார்த்தையை நாம் இன்று பயன் படுத்தினாலும் அந்த உணர்விலிருந்து  நாம் தற்போது விடுபட்டு குழப்ப மடைந்த நிலையில் இருக்கிறோம்.      தவறுதலான புரிதலுக்கு உட்பட்டு  இருக்கிறோம்.

வழிபடுகிறோம் என்கிற வார்த்தையை நன்றாக கவனிக்கவும்.   அதன் பொருள்  என்ன?   ஆராதிக்கிறோம் என்பது வேறு.   வழிபடுகிறோம் என்பது வேறு.   நீ எவ்வழி நானும் அவ்வழி  என்பது தான் வழிபடுகிறோம் என்பதன் பொருள்.    நீ எந்த வழியில் செயல்பட்டு பூமியில்  பிறவி எடுப்பதில் இருந்து விடுபட்டாயோ  அந்த வழியை நானும் பின்பற்றி செயல்பட்டு முக்தி பெற முயல்கிறேன் என்பதுவே இதன் விளக்கம்.


கடவுள்:  நம் கட்டுக்குள் அடங்காத ஒன்று.   

கடவுள்:  நம் உணர்வுக்கு அடங்காத ஒன்று.     

கடவுள்: நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்று. 

ஆனால்  கடவுள் என்கிற ஒரு சக்தியின் கட்டுக்குள் நாம்அடங்கி இருக்கிறோம் என்பது தான் உண்மை.

கடவுள் என்கிற சக்தியை நம்மால் பிடித்து அடக்க இயலாது.  அது இந்த பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்து இருக்கின்றது.   அதனை பார்க்க இயலாது. உணர மட்டுமே இயலும்.  அதனை உணர நாம் உள் (முகமாக )கடந்து செல்லவேண்டும். இந்த பிரபஞ்சத்தின் உள்ளே கடந்து செல்லவேண்டும். இந்த பிரபஞ்சத்தில் உள்ளடங்கியிருக்கும் ஒவ்வொன்றினுள்ளும் கடந்து செல்லவேண்டும்.   இந்த பிரபஞ்சத்தின் தனிப்பிரதியாக அமைந்திருக்கும் நம் உடலினுள் கடந்து செல்லவேண்டும்.   நம் உடலினுள் நாம் கடந்து செல்லுந் தோறும்  நாம் கடவுளை உணர்ந்து கொள்ள  இயலும்.

கட  உள் .    உட்புறமாக கடந்து சென்றால் அப்பொழுது  நாம் கடவுளை உணர்ந்து கொள்ளலாம்

கடவுளை உணர்ந்து கொள்ள தெய்வங்கள்  வழிகாட்டும்.   தெய்வங்களுடன் உணர்ச்சி பூர்வமாக  ஈடுபடாமல்  உணர்வு லயத்துடன் வழிபடுங்கள் .  உணர்ச்சிகள் வெறியூட்டும்.       உணர்வுகள் வழிகாட்டும்.   வெறும் அர்ச்சனைகள்  ஆராதனைகள் பூஜை புரஸ்காரங்கள் எல்லாம் நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடே. தெய்வங்களுக்கு திருமணம் நடத்தி  வைப்பது உட்பட.    இதனால் எல்லாம் எந்த ஆன்மீக வளர்ச்சியும் உயர்வும் ஏற்படப்போவதில்லை.

மனதை ஒருமுகப்படுத்த உடலின் உள்முகமாக பார்வையை தளராது செலுத்துங்கள்.  உங்களால் அப்பொழுது மட்டுமே கடவுளை உணர்ந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் மிக மிக பழைய காலகாலங்களில் சமண கோட்ப்பாடுகள் தான் பழக்கத்தில் இருந்தன.    அதனை ஒரு மதம் என்று கூற முடியாது.  அது அன்றைய வாழ்க்கை கலாச்சாரம்.  எப்படி வாழவேண்டும் என்ற வழிமுறைகள் தான் அவைகள்.    ஆத்மாவைப்பற்றிய அறிவு தான் அடிப்படையாக இருந்தது.     ஆத்மாவை பிறப்பு இறப்பு என்கிற சுழற்சியில் இருந்து  விடுவித்தல் என்பதுதான் நோக்கமாக  இருந்தது.    பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்ட ஆத்மாக்கள் தான் சித்தர்கள்.    சித்தர்கள் தான் வழிகாட்டும் தெய்வங்களாக கோவில்களில் சிலைகளாக உருவகப்படுத்தப்  பட்டிருக்கிறார்கள்.

சித்தர்கள் சமண வழி வந்த, ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைந்தவர்கள் மக்களுக்கு நல்வழி காட்டியவர்கள்.  மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு சொன்னவர்கள்.   அவர்களது நோய்க்கு மருந்து கண்டவர்கள்.  இவர்கள் சமணர் வழி வந்த புண்ணிய ஆத்மாக்கள்.