ஞாயிறு, 3 மே, 2020

ஆன்மா,மனம், உடல் தொடர்புகள்: Soul, Mind and Body texture

ஆன்மா, மனம், உடல் தொடர்புகள் : Soul, Mind and Body texture

ஆன்மா  பற்றிய அறிவு அல்லது ஞானம் தான் ஆன்மிகம்.  கடவுள் சம்பந்தப்பட்டது  அல்ல.  ஆன்மா தொடர்பான அறிவின் தொடர்ச்சி தான் கடவுள் என்னும் தத்துவம். 

உடலுக்கும் ஆன்மாவுக்கும் மனதுக்கும் என்ன தொடர்பு.என்பதனைப் பற்றி இன்னும் சற்று விளக்கமாக சிந்தனையை ஓட விடலாமா!

ஆன்மாவின் இரட்டை அல்லது பிரதிநிதி தான் மனம் என்பதாக நாம் முன்னதாக  ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.

ஆன்மாவிற்கு உடலோடு நேரடி தொடர்பு கிடையாது.  மனம் மூலமாக மட்டுமே தொடர்பு. மனதிற்கு மட்டுமே உடலோடு நேரடி தொடர்பு.

உடலின் இயக்கத்திற்கு முழு உத்திரவாதி மனம் தான்.   சொந்த பந்தங்கள் உறவுகள், அவர்களுடனான தொடர்புகள் அன்பு பாசம் விருப்பு வெறுப்புகள் எல்லாம் மனதிற்கு மட்டுமே.   மனம் தாற்காலிகத் தன்மையது.  உடலோடு அழிந்து விடும் 

ஆன்மா நிரந்தரத்தன்மை உடையது.  அதற்கு அழி'வு என்பது கிடையாது.  அதன் தன்மை தான் மாறிக்கொண்டே இருக்கும்.

ஒரு தனிமத்தின் ஒரு அணுவை எடுத்துக்கொள்வோம்.   அது ஒருபொருளின்  மேலும் சிறியதாக்க இயலாத அளவிற்கு சிறிதான  அடிப்படைத் துகள்.   அதாவது ஒரு தனிமத்தின் அடிப்படைத் துகள்.   எலக்ட்ரான் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தும்பொழுது  பொருளின்  தன்மை மாறி விடுகிறது.    பொருள் வேறொன்றாக ஆகிவிடுகிறது.  ஆனால் அடிப்படையில் அது இன்னும்  அணுக்களின் ஒருகட்டமைப்பு தான்.   அதன் கட்டமைப்பினுள்  இருக்கும் பொருட்கள் மாறவில்லை.  ஆனால் அந்தப் பொருட்களின்  அளவில் அதாவது எண்ணத்தில் மாற்றம்  ஏற்படுகிறது.   அதனால் பொருள் வேறொன்றாக மாறிவிடுகிறது.  அதாவது அந்த அணுவின் தன்மையில் தான்மாற்றம் ஏற்படுகிறது..

ஒரு ஆன்மாவின் நிலையிலும் இது தான் நிகழ்கிறது.  அதன் நிலை அல்லது  தன்மை மாற்றப்படுகிறது.    அது அழிக்கப்படுவதில்லை. அழிவதும் இல்லை.

பிரபஞ்சத்தின் அணைத்து அமைப்புகளிலும் பொதுவாக ஒரு ஒற்றுமை அல்லது ஒப்புமை இருக்கிறது என்பதை நாம் விரிவாக பிண்டம், அண்டம், பிரமாண்டம் என்ற பதிவில் விரிவாக்கப் பார்த்திருக்கிறோம்.   ஞாபகத்துக்காக மீண்டும் ஒருமுறை அதனை படித்து விட்டு தொடர்வது நன்று.

எலக்ட்ரான் மற்றும் புரோட்டான், நியூட்ரான்களால்  உருவான நியூக்ளியஸ் என்னும் அணுக்கரு அல்லது அணு மையம் ஆகியவற்றால் அணு கட்டமைக்கப் பட்டிருக்கிறது.

இதே கட்டமைப்பில் ஆன்மாவும் அமையுமா? ஆன்மாவைப் பற்றி சிந்தித்துப் பார்க்கலாம்.  எலெக்ட்ரோனை பாபம் என்னும் எதிரலை  சக்தி (எதிர்மை) ஆகவும் , ப்ரோடோனை நேரலை சக்தி (நேர்மை) ஆகவும் உருவகித்துப் பார்க்கலாம்.  நியூட்ரோன்  என்பது ஆன்மாவிற்குள் பல காலங்களாக பண்பட்டு உறுதிபெற்ற ஒரு அல்லது பல (பிறவிக் ) குணம் அல்லது குணங்களாகக்  கருதலாம்.   பண்பட்டு உறுதி அடைந்த குணங்கள் பல மாற்றங்களிலும் (பிறவிகளிலும்) சில மாற்றங்களுடன்  தொடர வாய்ப்பு இருக்கிறது. புரோட்டான் மற்றும்  எலக்ட்ரோன் அதாவது நேர்மை மற்றும் எதிர்மையில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு பொருளின் பிற குணம் அல்லது தன்மைகளை நிர்ணயிக்கின்றன.

ஒரு  பொருளின் அடிப்படை அணுவுக்கும் ஒரு ஆன்மாவுக்கும் எந்த அளவிற்கு ஒப்புமை இருக்கிறது என்று உணர்ந்து கொள்ள இயலும் அல்லவா?

பௌதிகம் என்பது நம் கண்களுக்கு புலப்படுகிற பொருள்.   ஆன்மா என்பது நம் கண்களுக்கு புலப்படாத அளவுக்கு நுட்பமான ஒரு பொருள்.  பொருள் என்ற தன்மையில் இரண்டும் ஒன்று தான். அடிப்படையில் இரண்டும் ஆற்றல் அல்லது சக்தியின் பரிணாமங்களே. கண்களுக்கு புலப்படுவது ஒன்று. மற்றொன்று கண்களுக்கு புலப்படுவதில்லை.  அவ்வளவு தான்.

பௌதிகப் பொருட்களில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் நம் கண்களுக்கு புலப்படும் வகையைச் சார்ந்தவை.   அதனால் அவை நம் மூளையில் உணரப்படுகின்றன.    நுட்பமான பொருட்களின் கதிர்கள் விண்வெளியில் வேறொரு தடம் வழியாக வருவதால் அது நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.  சக்தி அல்லது ஆற்றல் விண்வெளியில் வெளிப்படுத்தும் கதிர்கள் பயணத் தடங்கள் வேறுபட்டவை.   சில தடங்கள் நம் பார்வைக்கு அப்பாற்பட்டவை.

 உதாரணம்  :   சில திரைப்படங்களில் ஆவி போன்றவைகள்  இடம் பெற்றிருக்கும்.   அவற்றை நம் வெறும் கண்களுக்கு புலப்படாத மாதிரி படம் பிடித்திருப்பார்கள். அதற்கென்று ஒரு தனி கண்ணாடி தருவார்கள்.  அந்த கண்ணாடி அணிந்துகொண்டு பார்த்தால்  தான் அவை நம் கண்களுக்குப் புலப்படும்.   இது மாதிரி தான்  நுட்ப மற்றும் பௌதிகப் பொருட்களிடையே காணப்படும் வேற்றுமை.    நுட்பமான கதிர்களை அதாவது ஆன்மாவை பார்க்கிற அறிவு அல்லது ஞானம் இன்னும் நம்மிடையே கண்டுபிடிக்கப்படவில்லை.  எதிகாலத்தில் ஒருவேளை கண்டு-பிடிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒரு உடல் மரணமடைந்து ஆன்மா தனிமைப்படும்.   இவ்விதம் தனிமைப்படும்  ஒவ்வொரு முறையும் ஆன்மா அதன் நிலையில் அல்லது தன்மையில் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு வித்தியாசமான மாற்றத்தை அடைந்திருக்கும்.  இது அந்த உடலில் இருந்தபோது அந்த உடலின் நடவடிக்கைகளின்  அதாவது நேர்மை மற்றும் எதிர்மைத்  தன்மைகளுக்கு ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் அமையும்   நடவடிக்கைகளை அனுசரித்து இப்படடிப்பட்ட நேர்மை எதிர்மை மாற்றங்கள்  அவ்வப்போது தொடர்ந்து வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும்.  அந்தப் பதிவுகள் அந்தந்த சமயங்களிலேயே ஆன்மாவினுள் புகுந்து அங்கும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இறுதி மரணம் ஏற்பட்டு முக்தி அடையும்பொழுது பிறப்புக்கு அப்பாற்பட்ட இன்னொரு வித்தியாசமான ஒரு பரிபூர்ண நிலையை ஆன்மா எய்துகிறது. அதற்குமேல் மாற்றங்களை ஏற்காது என்கிற நிலைமை ஏற்படுகிறது.

ஆகவே ஆன்மாவின் பௌதிகத் தொடர்புகள் அனைத்தும் தற்காலிகமானது தான் என்பதை உணரலாம்.  பூத உடல் அழிகிறபோது அந்த உடலோடு சம்பந்தப் பட்ட அனைத்து சொந்த பந்தங்களும் பிற தொடர்புகளும் மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்து போவது போல அற்றுப் போய் விடுகின்றன. அழைத்து அறியப்பட்ட பெயரும் உடலோடு நிற்கும்.  ஆன்மாவின் ஆற்றலின் தன்மையில்  ஏற்பட்ட மாற்றங்கள் மட்டுமே அதனுள் எஞ்சி நிற்கும்.

மனம் ஆன்மாவினின்றும் வேறுபட்ட தன்மையது.   அதனை ஆன்மாவின் நிழல் என்று கூட சொல்லலாம்.  அதுவும் உடலுடன் அழிந்து விடுகிறது. 

இங்கு மூளை என்பதன் முக்கியத்துவம் என்ன.    மூளைதான் மனதின் பௌதிக ஆதாரம்.  மனதின் செயலாளர், செயலி ஆலோசகர் எல்லாம்.அதனுள் மனது செலுத்தும் தகவல்கள் (மூளையில்) அலசப் படுகின்றன;    மனதுக்கு ஆலோசனைகள் தரப்படுகின்றன.    செயலாக்கப்படுகின்றன.    செயலாக்கத்தின்  பலாபலன்களை மனதும் தொடர்ந்து ஆன்மாவும் அனுபவிக்கின்றன.

ஆன்மா மாதிரி மனமும் ஒரு நுட்ப ஆற்றல் தான். நம்  கண்களுக்கு புலப்படாதது.ஆனால் இரு ஆற்றல்களும்  எப்படி வேறுபடுகின்றன.   ஆன்மா என்பது சுயமாக  இயங்கும் தன்மையது.  மனது என்பது உடலைச் சார்ந்து இயங்குவது.   அதற்கு தனித்துவ இயக்கம் கிடையாது.  காரணம்:     உடலின் அனைத்து உறுப்புகளுடைய  ஆற்றல்களின் ஒட்டுமொத்த சேர்க்கை அல்லது  இணக்கத்தால் வெளிப்படும் நிகர ஆற்றல் (நிகர அலை வரிசை) தான் மனம்.  ஆகையால் அதற்கு தனித்துவம் கிடையாது.   ஆனால் அதன் எலக்ட்ரான் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆன்மாவின் கட்டமைப்பில் நிரந்தர அதிர்வுகளுக்கு காரணமாகி மாற்றங்களை ஏற்படுத்தும்.   மனது அழியும்போதும் அது ஆன்மாவில் ஏற்படுத்திய மாற்றங்கள் அழிந்து போவதில்லை.

ஆன்மா, மனது உடல் தொடர்புகளை ஒரு உருவகம் தெளிவாக விளக்கும் முறையில் அமையும் என்று தோன்றுகிறது.

உடல்  என்பது ஆன்மாவின் உரிமைக்குட்பட்ட ஒரு வாகனம்.   இந்த உலகத்தில் தனக்கு தேவையானவற்றை தேடிக்கொள்வதற்கு  வேண்டிய பொருட்களை சம்பாதிக்கும் நோக்கத்தில்  வாங்கப்பட்டது.  இந்த வாகன இயக்கத்தின் பயனாகக் கிடைக்கும்  நேர்மை என்பது சம்பாத்தியம் அல்லது புண்ணியம்;   எதிர்மை என்பது நஷ்டம் அல்லது பாபம்.

மனது என்பது வாகன ஓட்டி   உரிமையாளருக்கு கட்டுப்பட்டு அவருக்கு அடங்கி,  அதற்கு  உரிய சம்பளம் பெற்றுக் கொண்டு செயாற்றத் கடமைப் பட்டது.    வாகனத்தை  செவ்வனே நடத்தி பராமரித்து செலவு மற்றும் வரவுகளை கணக்கு சகிதம் நேர்மை தவறாமல் உரிமையாளரிடம் ஒப்படைக்க கடமைப்பட்டது.

சிற்றின்பம் மற்றும் உலக இன்பங்களை அனுபவிப்பது தான் அதன் சம்பளம்.  அதன்  நேர்மை தவறாத உழைப்பினால் ஆன்மாவிற்கு கிடைக்கவிருப்பது தான் மோக்ஷம் என்னும் பேரின்பம்.   அதற்கு கிடைப்பது பலவிதமான சிற்றின்பம் என்னும் சம்பளம்.

மூளை என்பது நடத்துனர்.  உடலினுள் வாழும் உயிரனங்கள் தான் வாகனத்தின்  பயணிகள்.  பயணிகளை ஈர்த்து பாதுகாப்பாக அவர்களை பயணிக்கக் செய்து வாகனத்தையும் விபத்துகளுக்கு உள்ளாகாமல் காத்து  இயக்கவேண்டும்.    இந்த வேலை தான் வாகன ஓட்டியான மனதின் கடமை.  அதற்குத் தேவையான உதவியும் அவ்வப்போது தேவையான தகவல்களைக் கொடுத்தும்  வாகனத்தை நிர்வகித்தும்  இயங்குவது மூளையின் பொறுப்பு. 

உடலாகிய  வாகனம் இல்லை என்று ஆகும்பொழுது மனதுக்கும் மூளைக்கும் வேலை இல்லை என்று ஆகிறது.  மனதிற்கு உடலுடனான தொடர்பும் அத்துடன்  இல்லை என்று ஆகிறது.

வாகனப்  பராமரிப்புக்காக தொடர்பில் இருந்த வாகனப் பராமரிப்புத் தொழிலாளர்கள் தான் உடல் சம்பந்தப்பட்ட உறவினர்கள். இவர்கள் தொடர்பு  வாகன ஒட்டியுடன் மட்டும் தான். இது தவிர இவர்களுக்கு வாகன உரிமையாளருடன் எந்த விதமான நேரடி ஒட்டுதலும் ஏற்படுவதில்லை.   இந்த தொடர்புகளும்  வாகனத்தோடு சேர்ந்து
அற்றுப்போய் விடுகின்றன.

மனம் என்னும் வாகன ஒட்டிஉரிமையாளருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.  அவருக்கு அடங்கி இருக்கவேண்டும்.  வாகன சம்பந்தமான எந்த விஷயத்திலும் அவருடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக தீர்மானங்கள் எடுக்கக்கூடாது.   தனது உழைப்பிற்கு தகுந்த சம்பளம் பெற்றுக்கொண்டு அவருக்கு நேர்மையுடன் உழைக்க வேண்டும். செலவுகள் நீக்கிய வருமானத்தை அப்படியே எந்த விதமான சேதாரமுமின்றி உரிமையாளருக்கு கொடுக்கவேண்டும்.  அந்த மொத்த வருமானம் (புண்ணியம்) எவ்வளவு செலவு (பாபம்) எவ்வளவு என்ற விபரத்தையும் அவருக்கு தெரிவிக்க வேண்டும்.  நிகர வருமானம் தான் அவருடைய சம்பாத்தியம்.  உரிமையாளருடைய பதிவேட்டில் முதல் முடக்கு முதலாக வருமானமும் ஒவ்வொரு செலவும் பதிவில் இருக்கும்.

வாகன ஒட்டி தன் சுயநலத்துக்காக வருமானத்தை முழுவதும் உரிமையாளருக்கு கொடுக்காமலும் செலவுக்கணக்கில் பொய்யான விலைச் சீட்டைக் காண்பித்து செலவை அதிகரித்துக் காட்டியும் உரிமையாளரை ஏமாற்றுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  என்ன நேரும்.   வாகனத்தை பராமரிக்காமலேயே அதற்கான செலவை காண்பிப்பான்.  அரை குறையாக பராமரிப்பான்.  அதனால் வாகனம் அடிக்கடி பழுதடையும், வருமானம் குறையும்.  தொடர்ந்து சரியான பராமரிப்பு இல்லாதால் வாகனம் விரைவில் காயலான் கடைக்குப் போகும். முதலுக்கு பெருத்த நஷ்டம் உண்டாகும்.   உரிமையாளர் பெருத்த சிரமங்களை எதிர்கொள்வார்.

வாகனம் இயக்கத்தில் இருந்தபோது உரிமையாளரிடம் ஏற்பட்ட மாற்றங்கள் அவருக்கு லாபமோ நஷ்டமோ எதுவானாலும் அது அவரிடம் நிலைத்து விடும்.  அது போல மனம் அழிந்த பிறகும் அதன் இயக்கத்தால் ஆன்மாவில் ஏற்பட்ட மாற்றங்கள் நிலைத்து நிற்கும்.

இவ்வகை எலக்ட்ரான் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆன்மாவின் ஆற்றலில் நிறைவு அல்லது பூரணம் அடையும் பொழுது அது நிலையான தன்மையை அடையும்.   அதன் பிறகு அது மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாது.  அத்துடன் பிறவி மரணச்   சுழற்சியில் இருந்து விடுதலை அடையும்.

கட்டமைப்பு நிறைவு அடையாமல் மாற்றங்களை எதிர்பார்க்கும் தன்மையில் ஆன்மா இருக்கும் வரையில் அது மீண்டும் மீண்டும் உடல் எடுத்துக் கொண்டே இருக்கும்.

நிகர லாபம் என்பது நிகர புண்ணியமாகும்.  அது நஷ்டமானால் பாபமாகும். புண்ணியம் என்பது நேர்மை.   பாபம் என்பது எதிர்மை.  இதில்  மரணத்தின் போது (வாகனம் அழியும் பொழுது) எது எஞ்சி நிற்குமோ அது ஆன்மாவின் தன்மையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.  அந்த மாற்றங்களின் அடிப்படையில் அடுத்த பிறவி அமையும்.

ஒரு வாகனம் அழியும்பொழுது நிகராலாபம் கிடைத்தால்  செழுமை அல்லது வளம் என்னும் மூலதனம்  வளரும்.   அதனால் இன்னும் மேம்பட்ட நிலையில் அமைந்த  புதிய வாகனம் வாங்க இயலும்.    நிகர நஷ்டம் ஆனால் முடக்கு முதலும் குறைந்து விடும்.  அதனால் புதிய வாகனம்  வாங்கும்போது முன்பு  இருந்ததை விட மோசமான வாகனத்தைத் தான் வாங்க இயலும்.  சில  சமயங்களில் எதுவேமே வாங்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு உரிமையாளர் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி விடுவார்.

இதனை இப்படியே ஒரு ஆன்மாவிற்கு ஒப்பிட்டுப் பாருங்கள்.

மனது ஆன்மாவின் கட்டுக்குள் அடங்கவில்லை.  உடலின் சுகதுக்கங்களை மனம் தான் அனுபவிக்கிறது,   ஆகையால் தன சுகத்துக்காக மூளையின் கூட்டணி அமைத்து ஆன்மாவின் கட்டுக்குள் இருந்து மீறி நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.   அதாவது (புண்ணிய) சம்பாத்தியம் என்கிற ஆன்மாவின் நோக்கத்திற்கு எதிராக அது இயங்குகிறது என்று ஆகிறது.  ஆகவே மரணம் நிகழ்திறபொழுது ஆன்மாவில் அதிக பாபம் சேர்கிறது.
அடுத்து இதுவரையில் இருந்ததை விட இழிவான அதாவது தரம் குறைந்த ஒரு உடலை எடுக்க நேர்கிறது.   அதாவது மனிதப் பிறவி எடுக்கும் தன்மையில் இருந் விடுபட்டு மிருகமாகவோ பறவையாகவோ பூச்சியாகவோ உடலெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுவிடுகிறது.

மனதின் உழைப்பிற்கு கூலியாக சிற்றின்பங்களை அனுபவிக்க ஆன்மா அனுமதிக்கிறது.      அந்த இன்பங்களை அனுபவித்து நாளைடைவில் அதற்கு அடிமைப்பட்டு  விடுகிறது.      அதற்கு மூளையும் உடன் சேர்கிறது. ஈடுபாடு அதிகமாகிறபொழுது  பலவிதமான சிற்றின்பங்கள் புதிதுபுதிதாக வரும்போது  கொஞ்சம் கொஞ்சமாக மனது அவற்றுக்கு அடிமைப்படத் தொடங்கி இறுதியில் முழுவதுமாக அடிமையாகி விடுகிறது.

மனது, நாளடைவில்,   தான்உடல் சுகத்தை  அனுபவிப்பதற்காக கேளிக்கைகளில்  உடலை  முழுவதுமாக ஈடுபட வைக்கிறது.   அதற்காக மூளையின் உதவியுடன் புதுப்புது உத்திகளை கண்டு பிடிக்கிறது.   அவற்றில் ஈடுபட்டுத்  திளைக்கிறது.   உடல் உழைப்பு சுகத்தை தராததால் உடலை உழைப்பதிலிருந்து மாற்றி நிறுத்துகிறது.  ருசிக்காக தேவை இல்லாத நேரங்களில் தேவை இல்லாத உணவுப் பழக்கங்களுக்கு ஆளாக்குகிறது.  அதனால் உடலினுள் வாழும் உயிரினங்கள் பலவிதமான சிரமங்களுக்கு ஆளாகின்றன.   அதனால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது.  ஆனாலும் மனதின் மகிழ்ச்சிக்கு குறை இல்லை.  நாளைடைவில் அது தன்னை  அமைத்த ஆன்மா என்ற ஒன்று இருப்பதையே மறந்து விடுகிறது.   தானே உடலைப் பொறுத்தமட்டில் அனைத்தும் என்கிற அகங்காரத்தை அடைகிறது.

நாட்பட உடல் ஆரோக்கியம் குறைந்து தளர்வு வருகிறது,    நோய்கள் வந்து தாக்குகின்றன,   தொடர்ந்து உடல் படுக்கையில் விழுகிறபொழுது மகிழ்ச்சி மறைந்து விடுகிறது.    இன்பம் விலகிப்போய் விடுகிறது. உடலைத் துன்பமும் வேதனை யும் வாட்டுகிறது உடலின் சுகதுக்கங்களை மனது தானே அனுபவிக்கிறது.      ஆகையால் மனது தாங்கமுடியால் துடிக்கிறது.  இன்பமும் மகிழ்ச்சியும் விலகிப்போனபோது வேதனையால் துடிக்கிறபோது உடல் தேவையற்றதாகத் தோன்றுகிறது.  எப்படியாது அது அழிந்து வேதனைக்கு ஒரு முடிவு வராதா என்று ஏங்குகிறது.      இயற்கையாக மரணம் வரும் வரையில் வேதனை தாங்கமுடியாமல்  தானாகவே சில சமயங்களில் உடலை அழித்துக் கொள்கிறது.  உயிரை மாய்த்துக் கொள்கிறது என்று நாம் சொல்கிறோம்.  உயிர் என்பது உடல் உறுப்புகளின் ஒருங்கிணைந்த இயக்கமே அன்றி வேறொன்றுமில்லை.

ஆன்மா தனிமைப்பட்டு மீண்டும் வெட்டவெளியில் இன்னுமொரு உடலுக்காக காக்கிறது.