சனி, 11 ஏப்ரல், 2020

மனம், பணம், சொத்து, சுகம் - வாழ்க்கை - நாம் எங்கே வாழ்கிறோம்? WHERE DO WE LIVE?

நாம் எங்கே வாழ்கிறோம்? 

இது என்ன கேள்வி?

இந்த மண்ணுலகில் தான் நாம் வாழ்கிறோம் என்பது யாருக்குத் தான் தெரியாது !

ஆனால் அது தானா  உண்மை.

இது எவ்வளவு தூரம் உண்மைக்கு உட்பட்டது அல்லது புறம்பானது என்று சிந்தனை செய்வது உசிதமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

நாம் கோடிக்கணக்கானவர்கள் பூவுலகில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும் பெரிய பணக்காரர்கள் இருக்கிறார்கள்.  மிகவும் ஏழைகள் இருக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் இருக்கிறார்கள். இந்த ஒவ்வொரு தரத்திலும் ஏற்றதாழ்வுகள் நிறைய இருக்கின்றன.

எல்லோருக்கும் நிச்சயமாக இருக்கும் பொதுவான ஒரு ஆசை.    வாழ்க்கையில் அனைத்து சௌகரியங்களையும் வசதிகளையும் இன்பங்களையும் அனுபவிக்கவேண்டும் என்பது தான் அது.

 அதற்காக  நிறைய பணம், சொத்து சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் கூடவே வரும்..  ஆசைகளை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் தான் நாம் எல்லோருமே..

ஆனால் எல்லோரும் பற்பல காரணங்களால் வெற்றி பெறுவதில்லை.  சிலர் வெற்றி பெறுகிறார்கள்.

பலமுறை தோற்றபின் சிலர் முயற்சி செய்வதைக்  கைவிட்டு எப்படி முடிகிறதோ அப்படி வாழத்  தொடங்குகிறார்கள்.     பல முறை முயன்று மீண்டும் மீண்டும் தோற்கிற சிலர்  சோர்ந்து போய் உயிரை மாய்த்துக்  கொள்கிறார்கள்.  சிலர் பல முறை மீண்டும்  மீண்டும் தோற்று மீண்டும் மீண்டும் முயன்று வயது முதிர்ந்த காலத்திலும் கூட வெற்றி பெறுகிறார்கள்.

தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே தற்கொலை செய்துகொள்பவர்கள் என்று சொல்வதற்கில்லை.     வெற்றி அடைந்தவர்களும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.    இதன்றி இன்னும் பல் வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள் பவர்களும் இருக்கிறார்கள் என்பது வேறு. 

ஒரு நாட்டினுள்ள  முதல் பத்து இடத்தினுள் இருக்கும் பெரும் பணக்காரர் களில் சிலர் கூட தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.   இப்படிப் பட்டவர்கள் மரணத்தைத் தழுவுவதற்கு முன்னர் எழுதிய குறிப்புகள் வேடிக்கையாக தோன்றலாம்.  கோடிக்கணக்கான பணம் சொத்து சேர்த்தவர்கள்,  மிக ஆடம்பரமாக பிறர் பொறாமைப்படும் அளவிற்கு பெரிய வீடுகளில்  பெருத்த வசதியுடன் மிகுந்த செல்வாக்குடனும் புகழுடனும் வாழ்ந்தவர்கள் தற்கொலைக்கு முன்னர்  தாங்கள்  வாழ்க்கையை வாழவே இல்லை வாழ மறந்து விட்டோம் என்று குறிப்பு எழுதுகிறார்கள்.

அப்படியானால் அவர்கள் இந்த பூவுலகில் வாழவில்லையா?   பின்னர் வேறு எங்கே வாழ்ந்தார்கள் !

அவர்கள் இந்த பூமியில் நல்ல நிலையில் வாழ்ந்தார்கள் என்பது நம்மைப் பொறுத்தவரையில் நிதர்சனமான உண்மை.     ஆனால் நாம் அறிய நன்றாக வாழ்ந்தவர்கள் இப்படி ஓர் குறிப்பு எழுதவேண்டிய காரணம் தான் என்ன?

அப்படியானால் இவர்கள் எப்படி, எங்கே தான் வாழ்ந்தார்கள் ?

இவர்களும் நாமும் எல்லோரும் இந்த பூமியில் தான் வாழ்கிறோம்.  சந்தேகமே இல்லை.   எல்லாவற்றையும் அனுபவித்து வாழ்ந்தவர்கள்   இப்படி ஒரு குறிப்பு எழுதி வாழ்க்கையை ஏன் முடித்துக்கொள்கிறார்கள்?

அப்படியானால் அவர்கள் வாழ்க்கைக்கு ஏன் அர்த்தம் இல்லாமல் போகிறது?

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உடல் இருக்கிறது.  அதற்கு இந்த பூவுலகில் இடம் தேவைப்படுகிறது. அதற்காக ஒரு தங்குமிடம் தேர்வு செய்கிறோம்.

உடலுக்கு உணவு தேவைப்படுகிறது.  அதற்காக இயற்கையை நாடுகிறோம்.  பூமியில் உணவுப் பொருட்களை விளைய வைக்கிறோம்.  அல்லது இயற்கையின் வனசம்பத்திலிருந்து நேரடியாக எடுத்து உண்கிறோம்.

இனத்தை விருத்தி செய்யவேண்டும்.  அதற்காக ஆண் பெண் என்று இருபாலர் இருக்கிறோம்.  தம்மில் உடலால் இணைந்து அதுவும் நிறைவேறுகிறது.

இந்த மூன்றும் நாம் இந்த உலகில் நிலைபெற்று வாழ அடிப்படைத் தேவைகள்.

இயற்கை சீதோஷ்ண மாற்றங்களின் பாதிப்பில் இருந்தும் நம்மை சுற்றி வாழும் பிற கொடிய உயிர்(மிருகங்க)ளில்  இருந்தும் தேவைப்படும்  பாதுகாப்புக்காக ஒரு வீடு.   நாம் விரும்பும் உணவுகளை விளைவித்துக் கொள்ள விளைநிலம்.     ஆகியவை இரண்டாம் நிலை தேவைகள்.

இந்த இரு நிலைகளையும் நிறைவேற்றிக்  கொண்டும் சுற்றுப்புற ஆபத்துக்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொண்டும் இந்த உலகில் வாழ்வது தான் வாழ்க்கை.

தங்க வீடு, உண்ண  உணவு  இவற்றுடன் வாழ்க்கை நடக்கும்போது  பிள்ளைப்பேறு, அவர்களை வளர்த்தல் என்னும் கடமைகள்.    அவர்கள் திருமணம், பின்னர் தனித்து பிரிந்து வாழ்தல்.  பிறகு அடுத்த கட்டம்.    பெயர 
ர்கள் வரவு.    இப்படியே வாழ்க்கை சுழற்சி தொடர்கிறது .

 சிலர் வயதான காரணத்தால்  இறக்கிறார்கள்.    பலருக்கு நோய்வராயப்பட்டும், விபத்துகளாலும் இறப்புகள்  ஏற்படுவது  உண்டு.   இது தான் இந்த பூவுலக வாழ்க்கையின் அடிப்படை அனுபவம்.

எத்தனையோ பத்தாண்டுகள் ஒரு மனித வாழ்க்கை காலம்.

எல்லோரும் தத்தம் தேவைகளை நிறைவேற்ற தாமே வயல் வெளிகளிலும் கட்டுமானப்பணிகளிலும் நேரடியாக வேலைகளில் இறங்கினார்கள் . வாழ்க்கைக்காலம் இதற்கே சரியாக இருந்தது.   அது ஒரு காலம்.

மக்கள் தொகை பெருகி வந்தபோது நிலைமை மாறியது. சிலர் வேலை செய்தாலே பலரின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது.   பலரும் சும்மா இருந்தே  பிறர் உழைப்பின் பயனை அனுபவித்து வாழ்ந்தார்கள்

பணம் என்ற ஒன்றை ஏற்படுத்தி அதன் பரிவர்த்தனை மூலம் கொடுத்தும் வாங்கியும் அதாவது பணம் கொடுத்து பொருள் வாங்கியும் , பொருள் கொடுத்து பணம் வாங்கியும்  எல்லோருடைய தேவைகளும் நிறைவேறின .

வாழ்க்கையின் தேவைகள் எளிதில் நிறைவேறும்பொழுது சும்மா இருப்பவர்கள் காலத்தை எப்படி போக்குவது?

சுகத்தையும் பூவுலக இன்பங்களையும் தேடும் மன நிலை ஏற்பட்டு வளர்ந்தது.    வாழ்க்கை அடிப்படை தேவைகளையும் இரண்டாம்தர தேவைகளையும் தரப்படுத்துவதில் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

தற்காலிக பந்தல், மண் குடிசை, சிறிய வீடு , பங்களா என்று விதவிதமான  தங்குமிடங்கள். எத்தனையோ விதவிதமான உணவு வகைகள் இப்படி பலவிதமாக வாழ்க்கை தரங்கள் உருவாகி பற்பலவிதமாக உயரத் தொடங்கின.

இப்படிப்பட்ட பலவிதமான ஆடம்பர வசதிகளை மக்களிடையே தமக்குள் கைமாறுவதற்காக/வாங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு கருவி தான்   பணம். 

பணம் என்பது கற்பனையாக நிச்சயிக்கப்பட்டு எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட மாயை ஆன ஒரு மதிப்பு.

பணம் சேர்த்து வைப்பது சம்பாத்தியம். 

ஒருவரிடம் இருக்கும் ஓரு பொருளை தேவைப்படும் இன்னொருவருக்கு  பணப்பரிவர்த்தனை மூலம் கைமாறுவது விற்பனை அல்லது வியாபாரம். 

பரிவர்த்தனை ஆகும் பணத்தின் அளவுக்கு பெயர் விலை. 

வியாபாரத்தில் விற்கும் பொருளின் அடிப்படை மதிப்புக்கு அதிகமாக  விலை நிச்சயித்து விற்பது வியாபாரத்தின் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை தத்துவம்.   இது விற்பவரின் சம்பாத்யத்திற்காக.  அப்படி கூடுதலாக வாங்கும் பணம் லாபம்.  லாபம் தான் ஒருவரின் சம்பாத்தியம்.

அதை வாங்க வேண்டும், இதை வாங்க வேண்டும் என்ற வகையிலான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதற்கு பெயர் ஆசை.

எல்லை அற்று வளரும் ஆசைகள்.  அவற்றை நிறைவேற்ற தொடர்ந்து தேவைப்படும் பணம்.  அதனை சம்பாதிக்க தொடர்ந்து தேவைப்படும் 
முயற்சி .  அதற்காக வியாபாரத்தில் நிச்சயிக்கும் அதிகமான லாபம்; இன்னும் கூடுதலான வியாபாரங்கள் தொடங்குதல்.

சொந்தமாக வியாபாரம் தொடங்க முடியாதவர்கள் வியாபாரங்களில் தேவையான பலவிதமான மனித சக்திகளாக பயன்பட்டு அதற்கான ஊதியம் என்ற முறையில்  பணம் சம்பாத்தியமாக பெறுகிறார்கள்.  வியாபாரம் என்பதில் வியாபாரத்திற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்,  தேவையான மனித சக்திகளை உருவாக்கும் கல்வி நிறுவனங்கள் முதலானவைகள் அடக்கம்.

இப்படியாக வியாபாரங்களில் ஈடுபட்டும் அவற்றில் உழைத்தும்  மனிதர்கள் வாழ்க்கையின் நேரத்தை செலவிடவேண்டிய கட்டாயமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.     அடுத்த படியான அதற்கு மேலான ஆசை முன்னிற்கும்.     அதனை நிறைவேற்றும் பணியில் ஈடுபடவேண்டிய நிலை வரும்.    இது தொடரும்.    போதும் என்கிற எண்ணம் வருகிற நிலை வரும் வரையில்.

ஆனால் போதும் என்கிற எண்ணம் வருவதில்லை.

முயற்சியும், எண்ணங்களும், அவற்றை நிறைவேற்றும் செயல்களை நிறைவேற்றுவதும் மட்டுமே வாழ்க்கையாக மாறிப்போய்விட்டது.

இது போதும் இதற்குமேல் நம்மால் பொருள் ஈட்ட இயலாது என்று  நினைக் கிறவன் தன்  தேவையை கட்டுப்படுத்தி மனைவி மக்கள் குடும்பம் என்று வாழ்கிறான்.  அதற்குள் திருப்தி அடைய முயற்சி செய்கிறான்.

நாள் முழுவதும் விற்றால் ஐநூறு ரூபாய் அசலும் லாபமுமாய் கிடைக்கும் பொருட்களை தெருவில் தரையில் அமர்ந்து விற்கிறவன்,  தெருவில் வண்டியில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்கிறவன், இரு கைகளில் பெல்ட்களை தொங்கவிட்டுக்கொண்டு தெருவில் நடந்து வியாபாரம் செய்கிறவன்  ஊக்கு, பாசி மாலைகள் என்று கைகளில் தொங்கவிட்டுக் கொண்டு தெருவில் இறங்கி நடந்து விற்பவன் என்று எவ்வளவோ பேர்களை பார்க்கிறோம். இவர்கள் எல்லோரும் என்ன சம்பாதித்து விடப் போகிறார்கள். லாட்டரி டிக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு ஒவொருவரிடமாக பல்லைக் காட்டி கொண்டு விற்பவர்கள் எத்தனை பேர்!   பத்து பேரிடம் பல்லைக் காட்டும்போது ஒருவர் வாங்கினால் உண்டு.  இவர்கள் யாரும் வாழ்க்கையில்  தளர்ந்து போவதில்லை.    இவர்களது  தங்குமிடம் , வாழ்க்கை தரம். சமூகத்தில் மதிப்பு இவை எல்லாம் எப்படி எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நாம் ஊகித்து உணர்ந்துகொள்ள முடியும்.   வீட்டில் ஏற்படும் பிரச்னைகள், குழந்தைகளை படிக்க வைக்க முடியாத நிலை. நோய்களுளுக்கு சிகிச்சை செய்ய முடியாத அவலம்.

இப்படி எவ்வளவு வேதனைகளை அனுபவித்தாலும் இவர்கள் தளர்ந்து போவதில்லை.

வாழ்க்கையின் அழுத்தத்தை தாங்கும் தன்மையைப்  பெற்றிருக்கும் அனுபவம் தான் காரணம். அடிபட்டுக் காய்த்து, மறைத்துப் போன உடலும் மனமும் தான் காரணம். இனி வாழ்க்கையில் இழப்பதற்கு புகழோ மானமோ ஏதும் இல்லாத நிலை.  எதைப்பற்றியும்  கவலைப்படவேண்டிய நிலையில் இல்லை.

அவர்களும் சிரித்து  வாழ்ந்து சந்தோஷத்தை அனுபவிக்கத்தான் செய்கிறார்கள்.  காரணம்   அவர்களுக்கு மனதில் சுமை இல்லை.  அழுத்தம் இல்லை.  இதற்குமேல் நம்மால் இயலாது என்று தோன்றுகிறது.   இது போதும் என்று அந்த அளவுக்கு திருப்தியையும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

அதனால் வாழ்க்கை அவர்கள் மனதில் தான் நடக்கிறது.   விற்கும் பொருள் தீரும் போது  மனதின் சுமையும் நீங்கி விடுகிறது.  யாருக்கும் கட்டுப்படவோ யாரையும் எதையும் கட்டுப்படுத்தும்  தேவையோ இல்லை.

அவர்கள் மனதிற்குள் அமைதி அடைந்து வாழ்கிறார்கள்.

குறைந்த அளவில் சம்பாத்தியம் உள்ள நிலையில் சுற்றிலும் உள்ள நம்மைவிட பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களைப் பார்த்து  நாம் அப்படி இல்லையே என்று எதிர்மறை எண்ணங்களை வளர்க்கிறவர்களும் அந்த எண்ணங்களில் மூழ்கி அமைதியை இழக்கிறார்கள்.   ஒரு வீட்டில் ஒருவருக்கு இந்த நிலை ஏற்பட்டால் கூட அந்த வீட்டில் அமைதி குலைந்து விடும்.

ஆகவே வாழ்க்கை மனதில் தான் நடக்கிறது என்று தோன்றவில்லையா?

ஆனால் பொருள் முதலீடு செய்து சிலர் மற்றும் பலரை  வேலைக்கு அமர்த்தி தொழில் செய்பவர்கள் நிலை வேறு.  தொழிலை நிலை நிறுத்தும் முயற்சிகள், போட்டிகளை எதிர்கொள்ளும் சிரமங்கள், பணத்தை புரட்டும் தேவைகள், ,திரட்டிய பணத்தை கவனமாகக் கையாளவேண்டிய தேவை வேலை செய்ப்பவர்களை கையாளுவதில் கவனம் இப்படி சுமைகள் இரவும் பகலும் மனதில் நிறைந்து செயல்படும்.  இவை எல்லாம் வாழ்க்கையின் அழுத்தங்கள் அல்ல.  தொழிலின் சுமையால் ஏற்படும் அழுத்தங்கள்.
வாழ்க்கையின் பெரும்பகுதி இப்படியே கழிந்து விடுகிறது.

தேவைக்கு அதிகமான பணப்புழக்கம் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளையும் ஆடம்பரங்களையும் அணுகச்செய்யும்.   மனைவி மக்கள் குடும்பம் இவற்றை கவனிக்க இயலாத நிலைமை.   அதனால் வீட்டில் தம்மில் அகன்று வாழும் நிலை.  இப்படியாக இவர்கள் பூமியில் வாழ்கிறார்கள்.

ஆனால் மனதில் , மனதளவில் வாழவில்லை. அப்படி வாழ நேரம் கிடைக்கவில்லை.  அதனைப்பற்றி சிந்திக்க நேரம் கிடைக்கவில்லை.

மேலும் மேலும் சம்பாதிக்க வாய்ப்பு ஏற்படும் நிலையில் மீண்டும் மீண்டும் அந்த வழியில் முற்படுகிறவர்கள் தான் நாம் எல்லோரும். 

 ஒரு முட்டுக்கட்டை அல்லது ஒரு வீழ்ச்சி ஏற்படும் வரையில் இந்த போக்கிலிருந்து நாம் வெளி வருவதில்லை. 

எந்த நிமிடமும்  சொல்லிக் கொள்ளாமல்  மரணம் தேடிவரும்.   எப்போது எந்த நிமிடம் எப்படி வரும் என்பது தெரியாது.      ஆனால்  அது வரும் வரையில் நாம் அமைதியை நாடுவதில்லை.    அப்படி ஒரு சிந்தனையே வருவதில்லை.

அதனால் நாம்  சம்பாத்தியத்தின் இன்னொரு புறத்தை உணருவதில்லை.    அமைதி, திருப்தி இவற்றை உணராமலே நாம் முழுவதுமாக புற  வாழ்க்கையை வாழ்ந்து விடுகிறோம்.

சில சமயங்களில் சில வீழ்ச்சியை நாம் சந்திக்கிற பொழுது அந்த வீழ்ச்சி பிறருக்கு தெரிந்துவிட்டால் அவமானமாகி விடுமே என்கிற நிலை ஏற்படுகிறபோது தான் உண்மை நிலை உணரப்படுகிறது.  இத்தனை  காலமும் நாம் உண்மையில் வாழவே இல்லை என்கிற உணர்வு ஏற்படுகிறது.

ஆனால் இத்தனை காலமும் மானம் என்ற ஒன்று இருந்தது.     புகழ் என்ற போலி சம்பாத்தியம் ஒன்று இருந்தது.  ஆனால் நிம்மதி என்ற உண்மை சம்பாத்தியம் இருக்கவில்லை. பணம், சொத்து என்பது நாம் உருவாக்கின சம்பாத்தியம்.   ஆனால் நிம்மதி என்பது இயற்கை உருவாக்கின சம்பாத்தியம்.

பண சம்பாத்தியம் அதிகமாகிறபொழுது பாதுகாப்பும் நிம்மதியும் நிறையவே இருப்பது போல உறுதியாகத் தோன்றும்.  இது மனதளவில் மேல் மட்டமான ஒரு நிலை. 

 இந்த பதிவு மனதின் அடிமட்டத்தில் எட்டுகிறபொழுது, நம்முடைய அடிமனதில் நாம் அறியாமல் வேறொரு பதிவு அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது.  அதாவது இந்த பணம் சம்பாதிப்பதற்காக நாம் எடுத்த நடவடிக்கைகள்.   அதற்காக நாம் இத்துனை  காலமும் மண்ணுடன் அன்னியோன்னியமாக இருந்த எவ்வளவு பேர்களை, அவர்களின் தொடர்புகளை நாம் நமது சுய நலத்திற்காக தவிர்க்க முற்பட்டோம்.  எப்படி அவர்களை நம் தொடர்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கினோம். எத் தனை பேரின் அறியாமையும் நம்பிக்கையையும் நமது சுயநலத்திற்காக பயன்படுத்தினோம்.  நம்முடன் தொடர்புடையவர்களை இன்னும் எப்படியெல்லாம் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோம்.  இதற்காக எல்லாம் நாம் எவ்வளவு பொய்களை சொன்னோம். இப்பொழுதும் எவ்வளவு பொய்களை சொல்லிக்கொண்டிருக்கிறோம்.  இவற்றை எல்லாம் நம்முடைய புற மனதளவில் நாம் கண்டுகொள்வதே இல்லை.  ஆனால் இவை எல்லாமே நேரடியாக நம் ஆழ் மனதில் பதிவாகின்றன.   ஆனால் இந்த இருப்பதிவுகளின் தன்மைகைஇடையில் அங்கே ஒரு போராட்டம் நிகழ்திறது.   இந்த போராட்டத்தில் நமது மனோ சக்தி வீணாகிறது.  வளரும் மனோசக்தி நமது ஆன்மாவை பலப்படுத்தும்.  தளரும் மனோசக்தியால் ஆத்மாவின் சக்தியும் குறையும்.    ஆத்மாவின் சக்தி வளருவதால் தான் உண்மையான சம்பாத்தியமான நிம்மதி நம்மில் நிறையும்.

வாழ்க்கையில் இதன் வெளிப்பாடு உடன் ஏற்படுவதில்லை. அதற்கு ஒரு காலம் வரும்.  அப்பழுது தான் அது வெளிப்படும்.   அந்த வெளிப்படுதலின் விளைவே பெரிய பணக்காரர்களில் தற்கொலை போன்ற முடிவுகளுக்கு காரணமாக அமைகிறது.

தொடர் சம்பாத்தியமும் பணமும் கைவசம் இருக்கிறபோது,  அமைதியை நாடுவதற்கு நேரமோ மனதோ இருக்காது.     ஊட்டி, கொடைக்கானல் என்று சுகவாச  தலங்களுக்கு போனாலும்கூட அங்கு உடல் சுகத்தைத்தான் நாடுவோமே தவிர அமைதியை நாடுவதில்லை.   அதை சுட்டிக்காட்டும் யாரையும் ஒரு பொருட்டாக மதிப்பதும் இல்லை.   அப்படிப்பட்டவர்களின் தொடர்புகளையும் விரும்புவதில்லை.

நல்ல வயதாகி வருகிற நிலையில் ஓட்டுதல் இல்லாத குடும்பம்,  இவர்களது அதே நிலையை எய்திய பிற உறவுகளின் அற்றுப்போகும் தொடர்பு என்று வரும் நிலை.  அப்பொழுதுதான் அவர்கள் தம்  மனதிற்குள் பிரவேசிக் கிறார்கள். சம்பாதித்து சேர்த்த  பணம், சொத்து எதுவும் உதவ முடியாத நிலையை அப்போது தான் உணருகிறார்கள். 

இதெல்லாம் புற வாழ்க்கை.   இப்பூவுலக வாழ்க்கை.    மனதளவில்   அக வாழ்க்கை அனுபவிக்க மனதில் இடமில்லாமல் போனது.