ஞாயிறு, 3 மே, 2020

ஆன்மா,மனம், உடல் தொடர்புகள்: Soul, Mind and Body texture

ஆன்மா, மனம், உடல் தொடர்புகள் : Soul, Mind and Body texture

ஆன்மா  பற்றிய அறிவு அல்லது ஞானம் தான் ஆன்மிகம்.  கடவுள் சம்பந்தப்பட்டது  அல்ல.  ஆன்மா தொடர்பான அறிவின் தொடர்ச்சி தான் கடவுள் என்னும் தத்துவம். 

உடலுக்கும் ஆன்மாவுக்கும் மனதுக்கும் என்ன தொடர்பு.என்பதனைப் பற்றி இன்னும் சற்று விளக்கமாக சிந்தனையை ஓட விடலாமா!

ஆன்மாவின் இரட்டை அல்லது பிரதிநிதி தான் மனம் என்பதாக நாம் முன்னதாக  ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.

ஆன்மாவிற்கு உடலோடு நேரடி தொடர்பு கிடையாது.  மனம் மூலமாக மட்டுமே தொடர்பு. மனதிற்கு மட்டுமே உடலோடு நேரடி தொடர்பு.

உடலின் இயக்கத்திற்கு முழு உத்திரவாதி மனம் தான்.   சொந்த பந்தங்கள் உறவுகள், அவர்களுடனான தொடர்புகள் அன்பு பாசம் விருப்பு வெறுப்புகள் எல்லாம் மனதிற்கு மட்டுமே.   மனம் தாற்காலிகத் தன்மையது.  உடலோடு அழிந்து விடும் 

ஆன்மா நிரந்தரத்தன்மை உடையது.  அதற்கு அழி'வு என்பது கிடையாது.  அதன் தன்மை தான் மாறிக்கொண்டே இருக்கும்.

ஒரு தனிமத்தின் ஒரு அணுவை எடுத்துக்கொள்வோம்.   அது ஒருபொருளின்  மேலும் சிறியதாக்க இயலாத அளவிற்கு சிறிதான  அடிப்படைத் துகள்.   அதாவது ஒரு தனிமத்தின் அடிப்படைத் துகள்.   எலக்ட்ரான் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தும்பொழுது  பொருளின்  தன்மை மாறி விடுகிறது.    பொருள் வேறொன்றாக ஆகிவிடுகிறது.  ஆனால் அடிப்படையில் அது இன்னும்  அணுக்களின் ஒருகட்டமைப்பு தான்.   அதன் கட்டமைப்பினுள்  இருக்கும் பொருட்கள் மாறவில்லை.  ஆனால் அந்தப் பொருட்களின்  அளவில் அதாவது எண்ணத்தில் மாற்றம்  ஏற்படுகிறது.   அதனால் பொருள் வேறொன்றாக மாறிவிடுகிறது.  அதாவது அந்த அணுவின் தன்மையில் தான்மாற்றம் ஏற்படுகிறது..

ஒரு ஆன்மாவின் நிலையிலும் இது தான் நிகழ்கிறது.  அதன் நிலை அல்லது  தன்மை மாற்றப்படுகிறது.    அது அழிக்கப்படுவதில்லை. அழிவதும் இல்லை.

பிரபஞ்சத்தின் அணைத்து அமைப்புகளிலும் பொதுவாக ஒரு ஒற்றுமை அல்லது ஒப்புமை இருக்கிறது என்பதை நாம் விரிவாக பிண்டம், அண்டம், பிரமாண்டம் என்ற பதிவில் விரிவாக்கப் பார்த்திருக்கிறோம்.   ஞாபகத்துக்காக மீண்டும் ஒருமுறை அதனை படித்து விட்டு தொடர்வது நன்று.

எலக்ட்ரான் மற்றும் புரோட்டான், நியூட்ரான்களால்  உருவான நியூக்ளியஸ் என்னும் அணுக்கரு அல்லது அணு மையம் ஆகியவற்றால் அணு கட்டமைக்கப் பட்டிருக்கிறது.

இதே கட்டமைப்பில் ஆன்மாவும் அமையுமா? ஆன்மாவைப் பற்றி சிந்தித்துப் பார்க்கலாம்.  எலெக்ட்ரோனை பாபம் என்னும் எதிரலை  சக்தி (எதிர்மை) ஆகவும் , ப்ரோடோனை நேரலை சக்தி (நேர்மை) ஆகவும் உருவகித்துப் பார்க்கலாம்.  நியூட்ரோன்  என்பது ஆன்மாவிற்குள் பல காலங்களாக பண்பட்டு உறுதிபெற்ற ஒரு அல்லது பல (பிறவிக் ) குணம் அல்லது குணங்களாகக்  கருதலாம்.   பண்பட்டு உறுதி அடைந்த குணங்கள் பல மாற்றங்களிலும் (பிறவிகளிலும்) சில மாற்றங்களுடன்  தொடர வாய்ப்பு இருக்கிறது. புரோட்டான் மற்றும்  எலக்ட்ரோன் அதாவது நேர்மை மற்றும் எதிர்மையில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு பொருளின் பிற குணம் அல்லது தன்மைகளை நிர்ணயிக்கின்றன.

ஒரு  பொருளின் அடிப்படை அணுவுக்கும் ஒரு ஆன்மாவுக்கும் எந்த அளவிற்கு ஒப்புமை இருக்கிறது என்று உணர்ந்து கொள்ள இயலும் அல்லவா?

பௌதிகம் என்பது நம் கண்களுக்கு புலப்படுகிற பொருள்.   ஆன்மா என்பது நம் கண்களுக்கு புலப்படாத அளவுக்கு நுட்பமான ஒரு பொருள்.  பொருள் என்ற தன்மையில் இரண்டும் ஒன்று தான். அடிப்படையில் இரண்டும் ஆற்றல் அல்லது சக்தியின் பரிணாமங்களே. கண்களுக்கு புலப்படுவது ஒன்று. மற்றொன்று கண்களுக்கு புலப்படுவதில்லை.  அவ்வளவு தான்.

பௌதிகப் பொருட்களில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் நம் கண்களுக்கு புலப்படும் வகையைச் சார்ந்தவை.   அதனால் அவை நம் மூளையில் உணரப்படுகின்றன.    நுட்பமான பொருட்களின் கதிர்கள் விண்வெளியில் வேறொரு தடம் வழியாக வருவதால் அது நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.  சக்தி அல்லது ஆற்றல் விண்வெளியில் வெளிப்படுத்தும் கதிர்கள் பயணத் தடங்கள் வேறுபட்டவை.   சில தடங்கள் நம் பார்வைக்கு அப்பாற்பட்டவை.

 உதாரணம்  :   சில திரைப்படங்களில் ஆவி போன்றவைகள்  இடம் பெற்றிருக்கும்.   அவற்றை நம் வெறும் கண்களுக்கு புலப்படாத மாதிரி படம் பிடித்திருப்பார்கள். அதற்கென்று ஒரு தனி கண்ணாடி தருவார்கள்.  அந்த கண்ணாடி அணிந்துகொண்டு பார்த்தால்  தான் அவை நம் கண்களுக்குப் புலப்படும்.   இது மாதிரி தான்  நுட்ப மற்றும் பௌதிகப் பொருட்களிடையே காணப்படும் வேற்றுமை.    நுட்பமான கதிர்களை அதாவது ஆன்மாவை பார்க்கிற அறிவு அல்லது ஞானம் இன்னும் நம்மிடையே கண்டுபிடிக்கப்படவில்லை.  எதிகாலத்தில் ஒருவேளை கண்டு-பிடிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒரு உடல் மரணமடைந்து ஆன்மா தனிமைப்படும்.   இவ்விதம் தனிமைப்படும்  ஒவ்வொரு முறையும் ஆன்மா அதன் நிலையில் அல்லது தன்மையில் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு வித்தியாசமான மாற்றத்தை அடைந்திருக்கும்.  இது அந்த உடலில் இருந்தபோது அந்த உடலின் நடவடிக்கைகளின்  அதாவது நேர்மை மற்றும் எதிர்மைத்  தன்மைகளுக்கு ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் அமையும்   நடவடிக்கைகளை அனுசரித்து இப்படடிப்பட்ட நேர்மை எதிர்மை மாற்றங்கள்  அவ்வப்போது தொடர்ந்து வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும்.  அந்தப் பதிவுகள் அந்தந்த சமயங்களிலேயே ஆன்மாவினுள் புகுந்து அங்கும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இறுதி மரணம் ஏற்பட்டு முக்தி அடையும்பொழுது பிறப்புக்கு அப்பாற்பட்ட இன்னொரு வித்தியாசமான ஒரு பரிபூர்ண நிலையை ஆன்மா எய்துகிறது. அதற்குமேல் மாற்றங்களை ஏற்காது என்கிற நிலைமை ஏற்படுகிறது.

ஆகவே ஆன்மாவின் பௌதிகத் தொடர்புகள் அனைத்தும் தற்காலிகமானது தான் என்பதை உணரலாம்.  பூத உடல் அழிகிறபோது அந்த உடலோடு சம்பந்தப் பட்ட அனைத்து சொந்த பந்தங்களும் பிற தொடர்புகளும் மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்து போவது போல அற்றுப் போய் விடுகின்றன. அழைத்து அறியப்பட்ட பெயரும் உடலோடு நிற்கும்.  ஆன்மாவின் ஆற்றலின் தன்மையில்  ஏற்பட்ட மாற்றங்கள் மட்டுமே அதனுள் எஞ்சி நிற்கும்.

மனம் ஆன்மாவினின்றும் வேறுபட்ட தன்மையது.   அதனை ஆன்மாவின் நிழல் என்று கூட சொல்லலாம்.  அதுவும் உடலுடன் அழிந்து விடுகிறது. 

இங்கு மூளை என்பதன் முக்கியத்துவம் என்ன.    மூளைதான் மனதின் பௌதிக ஆதாரம்.  மனதின் செயலாளர், செயலி ஆலோசகர் எல்லாம்.அதனுள் மனது செலுத்தும் தகவல்கள் (மூளையில்) அலசப் படுகின்றன;    மனதுக்கு ஆலோசனைகள் தரப்படுகின்றன.    செயலாக்கப்படுகின்றன.    செயலாக்கத்தின்  பலாபலன்களை மனதும் தொடர்ந்து ஆன்மாவும் அனுபவிக்கின்றன.

ஆன்மா மாதிரி மனமும் ஒரு நுட்ப ஆற்றல் தான். நம்  கண்களுக்கு புலப்படாதது.ஆனால் இரு ஆற்றல்களும்  எப்படி வேறுபடுகின்றன.   ஆன்மா என்பது சுயமாக  இயங்கும் தன்மையது.  மனது என்பது உடலைச் சார்ந்து இயங்குவது.   அதற்கு தனித்துவ இயக்கம் கிடையாது.  காரணம்:     உடலின் அனைத்து உறுப்புகளுடைய  ஆற்றல்களின் ஒட்டுமொத்த சேர்க்கை அல்லது  இணக்கத்தால் வெளிப்படும் நிகர ஆற்றல் (நிகர அலை வரிசை) தான் மனம்.  ஆகையால் அதற்கு தனித்துவம் கிடையாது.   ஆனால் அதன் எலக்ட்ரான் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆன்மாவின் கட்டமைப்பில் நிரந்தர அதிர்வுகளுக்கு காரணமாகி மாற்றங்களை ஏற்படுத்தும்.   மனது அழியும்போதும் அது ஆன்மாவில் ஏற்படுத்திய மாற்றங்கள் அழிந்து போவதில்லை.

ஆன்மா, மனது உடல் தொடர்புகளை ஒரு உருவகம் தெளிவாக விளக்கும் முறையில் அமையும் என்று தோன்றுகிறது.

உடல்  என்பது ஆன்மாவின் உரிமைக்குட்பட்ட ஒரு வாகனம்.   இந்த உலகத்தில் தனக்கு தேவையானவற்றை தேடிக்கொள்வதற்கு  வேண்டிய பொருட்களை சம்பாதிக்கும் நோக்கத்தில்  வாங்கப்பட்டது.  இந்த வாகன இயக்கத்தின் பயனாகக் கிடைக்கும்  நேர்மை என்பது சம்பாத்தியம் அல்லது புண்ணியம்;   எதிர்மை என்பது நஷ்டம் அல்லது பாபம்.

மனது என்பது வாகன ஓட்டி   உரிமையாளருக்கு கட்டுப்பட்டு அவருக்கு அடங்கி,  அதற்கு  உரிய சம்பளம் பெற்றுக் கொண்டு செயாற்றத் கடமைப் பட்டது.    வாகனத்தை  செவ்வனே நடத்தி பராமரித்து செலவு மற்றும் வரவுகளை கணக்கு சகிதம் நேர்மை தவறாமல் உரிமையாளரிடம் ஒப்படைக்க கடமைப்பட்டது.

சிற்றின்பம் மற்றும் உலக இன்பங்களை அனுபவிப்பது தான் அதன் சம்பளம்.  அதன்  நேர்மை தவறாத உழைப்பினால் ஆன்மாவிற்கு கிடைக்கவிருப்பது தான் மோக்ஷம் என்னும் பேரின்பம்.   அதற்கு கிடைப்பது பலவிதமான சிற்றின்பம் என்னும் சம்பளம்.

மூளை என்பது நடத்துனர்.  உடலினுள் வாழும் உயிரனங்கள் தான் வாகனத்தின்  பயணிகள்.  பயணிகளை ஈர்த்து பாதுகாப்பாக அவர்களை பயணிக்கக் செய்து வாகனத்தையும் விபத்துகளுக்கு உள்ளாகாமல் காத்து  இயக்கவேண்டும்.    இந்த வேலை தான் வாகன ஓட்டியான மனதின் கடமை.  அதற்குத் தேவையான உதவியும் அவ்வப்போது தேவையான தகவல்களைக் கொடுத்தும்  வாகனத்தை நிர்வகித்தும்  இயங்குவது மூளையின் பொறுப்பு. 

உடலாகிய  வாகனம் இல்லை என்று ஆகும்பொழுது மனதுக்கும் மூளைக்கும் வேலை இல்லை என்று ஆகிறது.  மனதிற்கு உடலுடனான தொடர்பும் அத்துடன்  இல்லை என்று ஆகிறது.

வாகனப்  பராமரிப்புக்காக தொடர்பில் இருந்த வாகனப் பராமரிப்புத் தொழிலாளர்கள் தான் உடல் சம்பந்தப்பட்ட உறவினர்கள். இவர்கள் தொடர்பு  வாகன ஒட்டியுடன் மட்டும் தான். இது தவிர இவர்களுக்கு வாகன உரிமையாளருடன் எந்த விதமான நேரடி ஒட்டுதலும் ஏற்படுவதில்லை.   இந்த தொடர்புகளும்  வாகனத்தோடு சேர்ந்து
அற்றுப்போய் விடுகின்றன.

மனம் என்னும் வாகன ஒட்டிஉரிமையாளருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.  அவருக்கு அடங்கி இருக்கவேண்டும்.  வாகன சம்பந்தமான எந்த விஷயத்திலும் அவருடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக தீர்மானங்கள் எடுக்கக்கூடாது.   தனது உழைப்பிற்கு தகுந்த சம்பளம் பெற்றுக்கொண்டு அவருக்கு நேர்மையுடன் உழைக்க வேண்டும். செலவுகள் நீக்கிய வருமானத்தை அப்படியே எந்த விதமான சேதாரமுமின்றி உரிமையாளருக்கு கொடுக்கவேண்டும்.  அந்த மொத்த வருமானம் (புண்ணியம்) எவ்வளவு செலவு (பாபம்) எவ்வளவு என்ற விபரத்தையும் அவருக்கு தெரிவிக்க வேண்டும்.  நிகர வருமானம் தான் அவருடைய சம்பாத்தியம்.  உரிமையாளருடைய பதிவேட்டில் முதல் முடக்கு முதலாக வருமானமும் ஒவ்வொரு செலவும் பதிவில் இருக்கும்.

வாகன ஒட்டி தன் சுயநலத்துக்காக வருமானத்தை முழுவதும் உரிமையாளருக்கு கொடுக்காமலும் செலவுக்கணக்கில் பொய்யான விலைச் சீட்டைக் காண்பித்து செலவை அதிகரித்துக் காட்டியும் உரிமையாளரை ஏமாற்றுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  என்ன நேரும்.   வாகனத்தை பராமரிக்காமலேயே அதற்கான செலவை காண்பிப்பான்.  அரை குறையாக பராமரிப்பான்.  அதனால் வாகனம் அடிக்கடி பழுதடையும், வருமானம் குறையும்.  தொடர்ந்து சரியான பராமரிப்பு இல்லாதால் வாகனம் விரைவில் காயலான் கடைக்குப் போகும். முதலுக்கு பெருத்த நஷ்டம் உண்டாகும்.   உரிமையாளர் பெருத்த சிரமங்களை எதிர்கொள்வார்.

வாகனம் இயக்கத்தில் இருந்தபோது உரிமையாளரிடம் ஏற்பட்ட மாற்றங்கள் அவருக்கு லாபமோ நஷ்டமோ எதுவானாலும் அது அவரிடம் நிலைத்து விடும்.  அது போல மனம் அழிந்த பிறகும் அதன் இயக்கத்தால் ஆன்மாவில் ஏற்பட்ட மாற்றங்கள் நிலைத்து நிற்கும்.

இவ்வகை எலக்ட்ரான் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆன்மாவின் ஆற்றலில் நிறைவு அல்லது பூரணம் அடையும் பொழுது அது நிலையான தன்மையை அடையும்.   அதன் பிறகு அது மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாது.  அத்துடன் பிறவி மரணச்   சுழற்சியில் இருந்து விடுதலை அடையும்.

கட்டமைப்பு நிறைவு அடையாமல் மாற்றங்களை எதிர்பார்க்கும் தன்மையில் ஆன்மா இருக்கும் வரையில் அது மீண்டும் மீண்டும் உடல் எடுத்துக் கொண்டே இருக்கும்.

நிகர லாபம் என்பது நிகர புண்ணியமாகும்.  அது நஷ்டமானால் பாபமாகும். புண்ணியம் என்பது நேர்மை.   பாபம் என்பது எதிர்மை.  இதில்  மரணத்தின் போது (வாகனம் அழியும் பொழுது) எது எஞ்சி நிற்குமோ அது ஆன்மாவின் தன்மையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.  அந்த மாற்றங்களின் அடிப்படையில் அடுத்த பிறவி அமையும்.

ஒரு வாகனம் அழியும்பொழுது நிகராலாபம் கிடைத்தால்  செழுமை அல்லது வளம் என்னும் மூலதனம்  வளரும்.   அதனால் இன்னும் மேம்பட்ட நிலையில் அமைந்த  புதிய வாகனம் வாங்க இயலும்.    நிகர நஷ்டம் ஆனால் முடக்கு முதலும் குறைந்து விடும்.  அதனால் புதிய வாகனம்  வாங்கும்போது முன்பு  இருந்ததை விட மோசமான வாகனத்தைத் தான் வாங்க இயலும்.  சில  சமயங்களில் எதுவேமே வாங்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு உரிமையாளர் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி விடுவார்.

இதனை இப்படியே ஒரு ஆன்மாவிற்கு ஒப்பிட்டுப் பாருங்கள்.

மனது ஆன்மாவின் கட்டுக்குள் அடங்கவில்லை.  உடலின் சுகதுக்கங்களை மனம் தான் அனுபவிக்கிறது,   ஆகையால் தன சுகத்துக்காக மூளையின் கூட்டணி அமைத்து ஆன்மாவின் கட்டுக்குள் இருந்து மீறி நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.   அதாவது (புண்ணிய) சம்பாத்தியம் என்கிற ஆன்மாவின் நோக்கத்திற்கு எதிராக அது இயங்குகிறது என்று ஆகிறது.  ஆகவே மரணம் நிகழ்திறபொழுது ஆன்மாவில் அதிக பாபம் சேர்கிறது.
அடுத்து இதுவரையில் இருந்ததை விட இழிவான அதாவது தரம் குறைந்த ஒரு உடலை எடுக்க நேர்கிறது.   அதாவது மனிதப் பிறவி எடுக்கும் தன்மையில் இருந் விடுபட்டு மிருகமாகவோ பறவையாகவோ பூச்சியாகவோ உடலெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுவிடுகிறது.

மனதின் உழைப்பிற்கு கூலியாக சிற்றின்பங்களை அனுபவிக்க ஆன்மா அனுமதிக்கிறது.      அந்த இன்பங்களை அனுபவித்து நாளைடைவில் அதற்கு அடிமைப்பட்டு  விடுகிறது.      அதற்கு மூளையும் உடன் சேர்கிறது. ஈடுபாடு அதிகமாகிறபொழுது  பலவிதமான சிற்றின்பங்கள் புதிதுபுதிதாக வரும்போது  கொஞ்சம் கொஞ்சமாக மனது அவற்றுக்கு அடிமைப்படத் தொடங்கி இறுதியில் முழுவதுமாக அடிமையாகி விடுகிறது.

மனது, நாளடைவில்,   தான்உடல் சுகத்தை  அனுபவிப்பதற்காக கேளிக்கைகளில்  உடலை  முழுவதுமாக ஈடுபட வைக்கிறது.   அதற்காக மூளையின் உதவியுடன் புதுப்புது உத்திகளை கண்டு பிடிக்கிறது.   அவற்றில் ஈடுபட்டுத்  திளைக்கிறது.   உடல் உழைப்பு சுகத்தை தராததால் உடலை உழைப்பதிலிருந்து மாற்றி நிறுத்துகிறது.  ருசிக்காக தேவை இல்லாத நேரங்களில் தேவை இல்லாத உணவுப் பழக்கங்களுக்கு ஆளாக்குகிறது.  அதனால் உடலினுள் வாழும் உயிரினங்கள் பலவிதமான சிரமங்களுக்கு ஆளாகின்றன.   அதனால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது.  ஆனாலும் மனதின் மகிழ்ச்சிக்கு குறை இல்லை.  நாளைடைவில் அது தன்னை  அமைத்த ஆன்மா என்ற ஒன்று இருப்பதையே மறந்து விடுகிறது.   தானே உடலைப் பொறுத்தமட்டில் அனைத்தும் என்கிற அகங்காரத்தை அடைகிறது.

நாட்பட உடல் ஆரோக்கியம் குறைந்து தளர்வு வருகிறது,    நோய்கள் வந்து தாக்குகின்றன,   தொடர்ந்து உடல் படுக்கையில் விழுகிறபொழுது மகிழ்ச்சி மறைந்து விடுகிறது.    இன்பம் விலகிப்போய் விடுகிறது. உடலைத் துன்பமும் வேதனை யும் வாட்டுகிறது உடலின் சுகதுக்கங்களை மனது தானே அனுபவிக்கிறது.      ஆகையால் மனது தாங்கமுடியால் துடிக்கிறது.  இன்பமும் மகிழ்ச்சியும் விலகிப்போனபோது வேதனையால் துடிக்கிறபோது உடல் தேவையற்றதாகத் தோன்றுகிறது.  எப்படியாது அது அழிந்து வேதனைக்கு ஒரு முடிவு வராதா என்று ஏங்குகிறது.      இயற்கையாக மரணம் வரும் வரையில் வேதனை தாங்கமுடியாமல்  தானாகவே சில சமயங்களில் உடலை அழித்துக் கொள்கிறது.  உயிரை மாய்த்துக் கொள்கிறது என்று நாம் சொல்கிறோம்.  உயிர் என்பது உடல் உறுப்புகளின் ஒருங்கிணைந்த இயக்கமே அன்றி வேறொன்றுமில்லை.

ஆன்மா தனிமைப்பட்டு மீண்டும் வெட்டவெளியில் இன்னுமொரு உடலுக்காக காக்கிறது.





சனி, 11 ஏப்ரல், 2020

மனம், பணம், சொத்து, சுகம் - வாழ்க்கை - நாம் எங்கே வாழ்கிறோம்? WHERE DO WE LIVE?

நாம் எங்கே வாழ்கிறோம்? 

இது என்ன கேள்வி?

இந்த மண்ணுலகில் தான் நாம் வாழ்கிறோம் என்பது யாருக்குத் தான் தெரியாது !

ஆனால் அது தானா  உண்மை.

இது எவ்வளவு தூரம் உண்மைக்கு உட்பட்டது அல்லது புறம்பானது என்று சிந்தனை செய்வது உசிதமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

நாம் கோடிக்கணக்கானவர்கள் பூவுலகில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும் பெரிய பணக்காரர்கள் இருக்கிறார்கள்.  மிகவும் ஏழைகள் இருக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் இருக்கிறார்கள். இந்த ஒவ்வொரு தரத்திலும் ஏற்றதாழ்வுகள் நிறைய இருக்கின்றன.

எல்லோருக்கும் நிச்சயமாக இருக்கும் பொதுவான ஒரு ஆசை.    வாழ்க்கையில் அனைத்து சௌகரியங்களையும் வசதிகளையும் இன்பங்களையும் அனுபவிக்கவேண்டும் என்பது தான் அது.

 அதற்காக  நிறைய பணம், சொத்து சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் கூடவே வரும்..  ஆசைகளை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் தான் நாம் எல்லோருமே..

ஆனால் எல்லோரும் பற்பல காரணங்களால் வெற்றி பெறுவதில்லை.  சிலர் வெற்றி பெறுகிறார்கள்.

பலமுறை தோற்றபின் சிலர் முயற்சி செய்வதைக்  கைவிட்டு எப்படி முடிகிறதோ அப்படி வாழத்  தொடங்குகிறார்கள்.     பல முறை முயன்று மீண்டும் மீண்டும் தோற்கிற சிலர்  சோர்ந்து போய் உயிரை மாய்த்துக்  கொள்கிறார்கள்.  சிலர் பல முறை மீண்டும்  மீண்டும் தோற்று மீண்டும் மீண்டும் முயன்று வயது முதிர்ந்த காலத்திலும் கூட வெற்றி பெறுகிறார்கள்.

தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே தற்கொலை செய்துகொள்பவர்கள் என்று சொல்வதற்கில்லை.     வெற்றி அடைந்தவர்களும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.    இதன்றி இன்னும் பல் வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள் பவர்களும் இருக்கிறார்கள் என்பது வேறு. 

ஒரு நாட்டினுள்ள  முதல் பத்து இடத்தினுள் இருக்கும் பெரும் பணக்காரர் களில் சிலர் கூட தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.   இப்படிப் பட்டவர்கள் மரணத்தைத் தழுவுவதற்கு முன்னர் எழுதிய குறிப்புகள் வேடிக்கையாக தோன்றலாம்.  கோடிக்கணக்கான பணம் சொத்து சேர்த்தவர்கள்,  மிக ஆடம்பரமாக பிறர் பொறாமைப்படும் அளவிற்கு பெரிய வீடுகளில்  பெருத்த வசதியுடன் மிகுந்த செல்வாக்குடனும் புகழுடனும் வாழ்ந்தவர்கள் தற்கொலைக்கு முன்னர்  தாங்கள்  வாழ்க்கையை வாழவே இல்லை வாழ மறந்து விட்டோம் என்று குறிப்பு எழுதுகிறார்கள்.

அப்படியானால் அவர்கள் இந்த பூவுலகில் வாழவில்லையா?   பின்னர் வேறு எங்கே வாழ்ந்தார்கள் !

அவர்கள் இந்த பூமியில் நல்ல நிலையில் வாழ்ந்தார்கள் என்பது நம்மைப் பொறுத்தவரையில் நிதர்சனமான உண்மை.     ஆனால் நாம் அறிய நன்றாக வாழ்ந்தவர்கள் இப்படி ஓர் குறிப்பு எழுதவேண்டிய காரணம் தான் என்ன?

அப்படியானால் இவர்கள் எப்படி, எங்கே தான் வாழ்ந்தார்கள் ?

இவர்களும் நாமும் எல்லோரும் இந்த பூமியில் தான் வாழ்கிறோம்.  சந்தேகமே இல்லை.   எல்லாவற்றையும் அனுபவித்து வாழ்ந்தவர்கள்   இப்படி ஒரு குறிப்பு எழுதி வாழ்க்கையை ஏன் முடித்துக்கொள்கிறார்கள்?

அப்படியானால் அவர்கள் வாழ்க்கைக்கு ஏன் அர்த்தம் இல்லாமல் போகிறது?

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உடல் இருக்கிறது.  அதற்கு இந்த பூவுலகில் இடம் தேவைப்படுகிறது. அதற்காக ஒரு தங்குமிடம் தேர்வு செய்கிறோம்.

உடலுக்கு உணவு தேவைப்படுகிறது.  அதற்காக இயற்கையை நாடுகிறோம்.  பூமியில் உணவுப் பொருட்களை விளைய வைக்கிறோம்.  அல்லது இயற்கையின் வனசம்பத்திலிருந்து நேரடியாக எடுத்து உண்கிறோம்.

இனத்தை விருத்தி செய்யவேண்டும்.  அதற்காக ஆண் பெண் என்று இருபாலர் இருக்கிறோம்.  தம்மில் உடலால் இணைந்து அதுவும் நிறைவேறுகிறது.

இந்த மூன்றும் நாம் இந்த உலகில் நிலைபெற்று வாழ அடிப்படைத் தேவைகள்.

இயற்கை சீதோஷ்ண மாற்றங்களின் பாதிப்பில் இருந்தும் நம்மை சுற்றி வாழும் பிற கொடிய உயிர்(மிருகங்க)ளில்  இருந்தும் தேவைப்படும்  பாதுகாப்புக்காக ஒரு வீடு.   நாம் விரும்பும் உணவுகளை விளைவித்துக் கொள்ள விளைநிலம்.     ஆகியவை இரண்டாம் நிலை தேவைகள்.

இந்த இரு நிலைகளையும் நிறைவேற்றிக்  கொண்டும் சுற்றுப்புற ஆபத்துக்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொண்டும் இந்த உலகில் வாழ்வது தான் வாழ்க்கை.

தங்க வீடு, உண்ண  உணவு  இவற்றுடன் வாழ்க்கை நடக்கும்போது  பிள்ளைப்பேறு, அவர்களை வளர்த்தல் என்னும் கடமைகள்.    அவர்கள் திருமணம், பின்னர் தனித்து பிரிந்து வாழ்தல்.  பிறகு அடுத்த கட்டம்.    பெயர 
ர்கள் வரவு.    இப்படியே வாழ்க்கை சுழற்சி தொடர்கிறது .

 சிலர் வயதான காரணத்தால்  இறக்கிறார்கள்.    பலருக்கு நோய்வராயப்பட்டும், விபத்துகளாலும் இறப்புகள்  ஏற்படுவது  உண்டு.   இது தான் இந்த பூவுலக வாழ்க்கையின் அடிப்படை அனுபவம்.

எத்தனையோ பத்தாண்டுகள் ஒரு மனித வாழ்க்கை காலம்.

எல்லோரும் தத்தம் தேவைகளை நிறைவேற்ற தாமே வயல் வெளிகளிலும் கட்டுமானப்பணிகளிலும் நேரடியாக வேலைகளில் இறங்கினார்கள் . வாழ்க்கைக்காலம் இதற்கே சரியாக இருந்தது.   அது ஒரு காலம்.

மக்கள் தொகை பெருகி வந்தபோது நிலைமை மாறியது. சிலர் வேலை செய்தாலே பலரின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது.   பலரும் சும்மா இருந்தே  பிறர் உழைப்பின் பயனை அனுபவித்து வாழ்ந்தார்கள்

பணம் என்ற ஒன்றை ஏற்படுத்தி அதன் பரிவர்த்தனை மூலம் கொடுத்தும் வாங்கியும் அதாவது பணம் கொடுத்து பொருள் வாங்கியும் , பொருள் கொடுத்து பணம் வாங்கியும்  எல்லோருடைய தேவைகளும் நிறைவேறின .

வாழ்க்கையின் தேவைகள் எளிதில் நிறைவேறும்பொழுது சும்மா இருப்பவர்கள் காலத்தை எப்படி போக்குவது?

சுகத்தையும் பூவுலக இன்பங்களையும் தேடும் மன நிலை ஏற்பட்டு வளர்ந்தது.    வாழ்க்கை அடிப்படை தேவைகளையும் இரண்டாம்தர தேவைகளையும் தரப்படுத்துவதில் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

தற்காலிக பந்தல், மண் குடிசை, சிறிய வீடு , பங்களா என்று விதவிதமான  தங்குமிடங்கள். எத்தனையோ விதவிதமான உணவு வகைகள் இப்படி பலவிதமாக வாழ்க்கை தரங்கள் உருவாகி பற்பலவிதமாக உயரத் தொடங்கின.

இப்படிப்பட்ட பலவிதமான ஆடம்பர வசதிகளை மக்களிடையே தமக்குள் கைமாறுவதற்காக/வாங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு கருவி தான்   பணம். 

பணம் என்பது கற்பனையாக நிச்சயிக்கப்பட்டு எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட மாயை ஆன ஒரு மதிப்பு.

பணம் சேர்த்து வைப்பது சம்பாத்தியம். 

ஒருவரிடம் இருக்கும் ஓரு பொருளை தேவைப்படும் இன்னொருவருக்கு  பணப்பரிவர்த்தனை மூலம் கைமாறுவது விற்பனை அல்லது வியாபாரம். 

பரிவர்த்தனை ஆகும் பணத்தின் அளவுக்கு பெயர் விலை. 

வியாபாரத்தில் விற்கும் பொருளின் அடிப்படை மதிப்புக்கு அதிகமாக  விலை நிச்சயித்து விற்பது வியாபாரத்தின் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை தத்துவம்.   இது விற்பவரின் சம்பாத்யத்திற்காக.  அப்படி கூடுதலாக வாங்கும் பணம் லாபம்.  லாபம் தான் ஒருவரின் சம்பாத்தியம்.

அதை வாங்க வேண்டும், இதை வாங்க வேண்டும் என்ற வகையிலான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதற்கு பெயர் ஆசை.

எல்லை அற்று வளரும் ஆசைகள்.  அவற்றை நிறைவேற்ற தொடர்ந்து தேவைப்படும் பணம்.  அதனை சம்பாதிக்க தொடர்ந்து தேவைப்படும் 
முயற்சி .  அதற்காக வியாபாரத்தில் நிச்சயிக்கும் அதிகமான லாபம்; இன்னும் கூடுதலான வியாபாரங்கள் தொடங்குதல்.

சொந்தமாக வியாபாரம் தொடங்க முடியாதவர்கள் வியாபாரங்களில் தேவையான பலவிதமான மனித சக்திகளாக பயன்பட்டு அதற்கான ஊதியம் என்ற முறையில்  பணம் சம்பாத்தியமாக பெறுகிறார்கள்.  வியாபாரம் என்பதில் வியாபாரத்திற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்,  தேவையான மனித சக்திகளை உருவாக்கும் கல்வி நிறுவனங்கள் முதலானவைகள் அடக்கம்.

இப்படியாக வியாபாரங்களில் ஈடுபட்டும் அவற்றில் உழைத்தும்  மனிதர்கள் வாழ்க்கையின் நேரத்தை செலவிடவேண்டிய கட்டாயமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.     அடுத்த படியான அதற்கு மேலான ஆசை முன்னிற்கும்.     அதனை நிறைவேற்றும் பணியில் ஈடுபடவேண்டிய நிலை வரும்.    இது தொடரும்.    போதும் என்கிற எண்ணம் வருகிற நிலை வரும் வரையில்.

ஆனால் போதும் என்கிற எண்ணம் வருவதில்லை.

முயற்சியும், எண்ணங்களும், அவற்றை நிறைவேற்றும் செயல்களை நிறைவேற்றுவதும் மட்டுமே வாழ்க்கையாக மாறிப்போய்விட்டது.

இது போதும் இதற்குமேல் நம்மால் பொருள் ஈட்ட இயலாது என்று  நினைக் கிறவன் தன்  தேவையை கட்டுப்படுத்தி மனைவி மக்கள் குடும்பம் என்று வாழ்கிறான்.  அதற்குள் திருப்தி அடைய முயற்சி செய்கிறான்.

நாள் முழுவதும் விற்றால் ஐநூறு ரூபாய் அசலும் லாபமுமாய் கிடைக்கும் பொருட்களை தெருவில் தரையில் அமர்ந்து விற்கிறவன்,  தெருவில் வண்டியில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்கிறவன், இரு கைகளில் பெல்ட்களை தொங்கவிட்டுக்கொண்டு தெருவில் நடந்து வியாபாரம் செய்கிறவன்  ஊக்கு, பாசி மாலைகள் என்று கைகளில் தொங்கவிட்டுக் கொண்டு தெருவில் இறங்கி நடந்து விற்பவன் என்று எவ்வளவோ பேர்களை பார்க்கிறோம். இவர்கள் எல்லோரும் என்ன சம்பாதித்து விடப் போகிறார்கள். லாட்டரி டிக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு ஒவொருவரிடமாக பல்லைக் காட்டி கொண்டு விற்பவர்கள் எத்தனை பேர்!   பத்து பேரிடம் பல்லைக் காட்டும்போது ஒருவர் வாங்கினால் உண்டு.  இவர்கள் யாரும் வாழ்க்கையில்  தளர்ந்து போவதில்லை.    இவர்களது  தங்குமிடம் , வாழ்க்கை தரம். சமூகத்தில் மதிப்பு இவை எல்லாம் எப்படி எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நாம் ஊகித்து உணர்ந்துகொள்ள முடியும்.   வீட்டில் ஏற்படும் பிரச்னைகள், குழந்தைகளை படிக்க வைக்க முடியாத நிலை. நோய்களுளுக்கு சிகிச்சை செய்ய முடியாத அவலம்.

இப்படி எவ்வளவு வேதனைகளை அனுபவித்தாலும் இவர்கள் தளர்ந்து போவதில்லை.

வாழ்க்கையின் அழுத்தத்தை தாங்கும் தன்மையைப்  பெற்றிருக்கும் அனுபவம் தான் காரணம். அடிபட்டுக் காய்த்து, மறைத்துப் போன உடலும் மனமும் தான் காரணம். இனி வாழ்க்கையில் இழப்பதற்கு புகழோ மானமோ ஏதும் இல்லாத நிலை.  எதைப்பற்றியும்  கவலைப்படவேண்டிய நிலையில் இல்லை.

அவர்களும் சிரித்து  வாழ்ந்து சந்தோஷத்தை அனுபவிக்கத்தான் செய்கிறார்கள்.  காரணம்   அவர்களுக்கு மனதில் சுமை இல்லை.  அழுத்தம் இல்லை.  இதற்குமேல் நம்மால் இயலாது என்று தோன்றுகிறது.   இது போதும் என்று அந்த அளவுக்கு திருப்தியையும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

அதனால் வாழ்க்கை அவர்கள் மனதில் தான் நடக்கிறது.   விற்கும் பொருள் தீரும் போது  மனதின் சுமையும் நீங்கி விடுகிறது.  யாருக்கும் கட்டுப்படவோ யாரையும் எதையும் கட்டுப்படுத்தும்  தேவையோ இல்லை.

அவர்கள் மனதிற்குள் அமைதி அடைந்து வாழ்கிறார்கள்.

குறைந்த அளவில் சம்பாத்தியம் உள்ள நிலையில் சுற்றிலும் உள்ள நம்மைவிட பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களைப் பார்த்து  நாம் அப்படி இல்லையே என்று எதிர்மறை எண்ணங்களை வளர்க்கிறவர்களும் அந்த எண்ணங்களில் மூழ்கி அமைதியை இழக்கிறார்கள்.   ஒரு வீட்டில் ஒருவருக்கு இந்த நிலை ஏற்பட்டால் கூட அந்த வீட்டில் அமைதி குலைந்து விடும்.

ஆகவே வாழ்க்கை மனதில் தான் நடக்கிறது என்று தோன்றவில்லையா?

ஆனால் பொருள் முதலீடு செய்து சிலர் மற்றும் பலரை  வேலைக்கு அமர்த்தி தொழில் செய்பவர்கள் நிலை வேறு.  தொழிலை நிலை நிறுத்தும் முயற்சிகள், போட்டிகளை எதிர்கொள்ளும் சிரமங்கள், பணத்தை புரட்டும் தேவைகள், ,திரட்டிய பணத்தை கவனமாகக் கையாளவேண்டிய தேவை வேலை செய்ப்பவர்களை கையாளுவதில் கவனம் இப்படி சுமைகள் இரவும் பகலும் மனதில் நிறைந்து செயல்படும்.  இவை எல்லாம் வாழ்க்கையின் அழுத்தங்கள் அல்ல.  தொழிலின் சுமையால் ஏற்படும் அழுத்தங்கள்.
வாழ்க்கையின் பெரும்பகுதி இப்படியே கழிந்து விடுகிறது.

தேவைக்கு அதிகமான பணப்புழக்கம் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளையும் ஆடம்பரங்களையும் அணுகச்செய்யும்.   மனைவி மக்கள் குடும்பம் இவற்றை கவனிக்க இயலாத நிலைமை.   அதனால் வீட்டில் தம்மில் அகன்று வாழும் நிலை.  இப்படியாக இவர்கள் பூமியில் வாழ்கிறார்கள்.

ஆனால் மனதில் , மனதளவில் வாழவில்லை. அப்படி வாழ நேரம் கிடைக்கவில்லை.  அதனைப்பற்றி சிந்திக்க நேரம் கிடைக்கவில்லை.

மேலும் மேலும் சம்பாதிக்க வாய்ப்பு ஏற்படும் நிலையில் மீண்டும் மீண்டும் அந்த வழியில் முற்படுகிறவர்கள் தான் நாம் எல்லோரும். 

 ஒரு முட்டுக்கட்டை அல்லது ஒரு வீழ்ச்சி ஏற்படும் வரையில் இந்த போக்கிலிருந்து நாம் வெளி வருவதில்லை. 

எந்த நிமிடமும்  சொல்லிக் கொள்ளாமல்  மரணம் தேடிவரும்.   எப்போது எந்த நிமிடம் எப்படி வரும் என்பது தெரியாது.      ஆனால்  அது வரும் வரையில் நாம் அமைதியை நாடுவதில்லை.    அப்படி ஒரு சிந்தனையே வருவதில்லை.

அதனால் நாம்  சம்பாத்தியத்தின் இன்னொரு புறத்தை உணருவதில்லை.    அமைதி, திருப்தி இவற்றை உணராமலே நாம் முழுவதுமாக புற  வாழ்க்கையை வாழ்ந்து விடுகிறோம்.

சில சமயங்களில் சில வீழ்ச்சியை நாம் சந்திக்கிற பொழுது அந்த வீழ்ச்சி பிறருக்கு தெரிந்துவிட்டால் அவமானமாகி விடுமே என்கிற நிலை ஏற்படுகிறபோது தான் உண்மை நிலை உணரப்படுகிறது.  இத்தனை  காலமும் நாம் உண்மையில் வாழவே இல்லை என்கிற உணர்வு ஏற்படுகிறது.

ஆனால் இத்தனை காலமும் மானம் என்ற ஒன்று இருந்தது.     புகழ் என்ற போலி சம்பாத்தியம் ஒன்று இருந்தது.  ஆனால் நிம்மதி என்ற உண்மை சம்பாத்தியம் இருக்கவில்லை. பணம், சொத்து என்பது நாம் உருவாக்கின சம்பாத்தியம்.   ஆனால் நிம்மதி என்பது இயற்கை உருவாக்கின சம்பாத்தியம்.

பண சம்பாத்தியம் அதிகமாகிறபொழுது பாதுகாப்பும் நிம்மதியும் நிறையவே இருப்பது போல உறுதியாகத் தோன்றும்.  இது மனதளவில் மேல் மட்டமான ஒரு நிலை. 

 இந்த பதிவு மனதின் அடிமட்டத்தில் எட்டுகிறபொழுது, நம்முடைய அடிமனதில் நாம் அறியாமல் வேறொரு பதிவு அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது.  அதாவது இந்த பணம் சம்பாதிப்பதற்காக நாம் எடுத்த நடவடிக்கைகள்.   அதற்காக நாம் இத்துனை  காலமும் மண்ணுடன் அன்னியோன்னியமாக இருந்த எவ்வளவு பேர்களை, அவர்களின் தொடர்புகளை நாம் நமது சுய நலத்திற்காக தவிர்க்க முற்பட்டோம்.  எப்படி அவர்களை நம் தொடர்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கினோம். எத் தனை பேரின் அறியாமையும் நம்பிக்கையையும் நமது சுயநலத்திற்காக பயன்படுத்தினோம்.  நம்முடன் தொடர்புடையவர்களை இன்னும் எப்படியெல்லாம் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோம்.  இதற்காக எல்லாம் நாம் எவ்வளவு பொய்களை சொன்னோம். இப்பொழுதும் எவ்வளவு பொய்களை சொல்லிக்கொண்டிருக்கிறோம்.  இவற்றை எல்லாம் நம்முடைய புற மனதளவில் நாம் கண்டுகொள்வதே இல்லை.  ஆனால் இவை எல்லாமே நேரடியாக நம் ஆழ் மனதில் பதிவாகின்றன.   ஆனால் இந்த இருப்பதிவுகளின் தன்மைகைஇடையில் அங்கே ஒரு போராட்டம் நிகழ்திறது.   இந்த போராட்டத்தில் நமது மனோ சக்தி வீணாகிறது.  வளரும் மனோசக்தி நமது ஆன்மாவை பலப்படுத்தும்.  தளரும் மனோசக்தியால் ஆத்மாவின் சக்தியும் குறையும்.    ஆத்மாவின் சக்தி வளருவதால் தான் உண்மையான சம்பாத்தியமான நிம்மதி நம்மில் நிறையும்.

வாழ்க்கையில் இதன் வெளிப்பாடு உடன் ஏற்படுவதில்லை. அதற்கு ஒரு காலம் வரும்.  அப்பழுது தான் அது வெளிப்படும்.   அந்த வெளிப்படுதலின் விளைவே பெரிய பணக்காரர்களில் தற்கொலை போன்ற முடிவுகளுக்கு காரணமாக அமைகிறது.

தொடர் சம்பாத்தியமும் பணமும் கைவசம் இருக்கிறபோது,  அமைதியை நாடுவதற்கு நேரமோ மனதோ இருக்காது.     ஊட்டி, கொடைக்கானல் என்று சுகவாச  தலங்களுக்கு போனாலும்கூட அங்கு உடல் சுகத்தைத்தான் நாடுவோமே தவிர அமைதியை நாடுவதில்லை.   அதை சுட்டிக்காட்டும் யாரையும் ஒரு பொருட்டாக மதிப்பதும் இல்லை.   அப்படிப்பட்டவர்களின் தொடர்புகளையும் விரும்புவதில்லை.

நல்ல வயதாகி வருகிற நிலையில் ஓட்டுதல் இல்லாத குடும்பம்,  இவர்களது அதே நிலையை எய்திய பிற உறவுகளின் அற்றுப்போகும் தொடர்பு என்று வரும் நிலை.  அப்பொழுதுதான் அவர்கள் தம்  மனதிற்குள் பிரவேசிக் கிறார்கள். சம்பாதித்து சேர்த்த  பணம், சொத்து எதுவும் உதவ முடியாத நிலையை அப்போது தான் உணருகிறார்கள். 

இதெல்லாம் புற வாழ்க்கை.   இப்பூவுலக வாழ்க்கை.    மனதளவில்   அக வாழ்க்கை அனுபவிக்க மனதில் இடமில்லாமல் போனது.



வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

சொந்தங்கள் -உறவுகள் - relations

சொந்தங்கள் -உறவுகள் - relations 


உலகில் உயிர் பெற அடிப்படைக்காரணம் அப்பா.

அவர் செலுத்திய சுக்கிலம் தான் காரணம். அந்த சுக்கிலத்தை தனது சுரோணிதத்தால்  பண்படுத்தி உடல் எடுப்பதற்கு இடம் கொடுத்து வளர உதவியவர் அம்மா.

இந்த இருவர் தவிர நாம் பெற்ற  உடலால் வேறு உறவினர்  ஆவது யார்?

இந்த குழந்தையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பாக எண்ணிஎந்த அப்பாவும்  ஒரு குறிப்பிட்ட குழந்தையைப் பெறுவதில்லை.

ஒரு ஆத்மா தான் உடலெடுப்பதற்காக ஏற்கெனவே உடலெடுத்த ஒரு ஆத்மாவின் உடலை  பயன்படுத்துவது இயற்கை அல்லது கடவுள் என்னும் அடிப்படைத் தத்துவம் 

அதற்காக ஆண் பெண் தம்மில் ஈர்ப்பு இயற்கையாகவே தவிர்க்கமுடியாத வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.    ஒவ்வொரு  மனிதனிடமும் ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் எவ்வித வித்தியாசம்  இல்லாமல் உடலுறவு வேட்கை  தன்னிச்சையாக ஏற்படுகிறது.   இதற்காக எந்த தனி முயற்சியோ அல்லது அறிவுறுத்தலோ கல்வியோ ஒருபொழுதும் தேவைப்படுவதில்லை. 

ஆண்  பெண் சேர்க்கை அல்லது உடலுறவு நிகழ்கிறது.  அதனால் ஒரு கரு உருவாகிறது.   ஏதோ ஒரு ஆத்மா அந்தக் கருவினுள் புகுந்து உயிர் கொடுக்கிறது. ஒரு புது மனிதன் அல்லது ஜீவன் உருவாகிறது.

எந்த ஆத்மா எந்த ஆண் பெண் மூலம் உடல் எடுக்கிறது என்பது பூர்வ புண்ணியம்  அல்லது பாபம் சம்பந்தப்பட்டு நிகழ்கின்றது.   ஒவ்வொரு ஆத்மாவிலும் அமைந்திருக்கும் சக்தியின் நேர்மை எதிர்மையின் விகிதாசாரத்தைப் பொறுத்தது இது.   இந்த விகிதாசாரத்திற்கு இணையான அல்லது அதன் ஈர்ப்புக்கு உட்படுகிற விகிதாசாரம் அமைகிற ஒரு தாய் தந்தையருக்கு அந்த ஆத்மா குழந்தையாகப் பிறக்கிறது.

பாபம் என்பது எதிர்மறை சக்தி அலைகள்.    புண்ணியம் என்பது நேர்மை சக்தி அலைகள்.    நேர்மை, எதிர்மை என்பது சக்தியின் இருவேறு நிலைகள்.
எதிர்மை ஒன்று இருப்பதுதான் நேர்மையின் மகத்துவத்துக்கு காரணம். துன்பம் அனுபவித்த உடன் இன்பம் வரும்பொழுது தான் இன்பத்தை உணர்வுபூர்வமாக உணரமுடியும். தொடர்ந்து இன்பத்தில் திளைக்கும்
பொழுது,  அந்த இன்பத்தை முழுமையாக உணர்வுபூர்வமாக உணர இயலாது.

ஆகவே அப்பா அம்மா குழந்தை (மகன் அல்லது மகள்) என்பது முதல் நிலை உறவு.   உடன் பிறந்தோர் இரண்டாம் நிலை உறவுகள்.  முதல் நிலை உறவின் அடிப்படை வலுவானது .   இரண்டாவது நிலை உறவுகளின் நிலை விடுபட்டு நிற்பது.   பெயரர்கள் அதாவது பேரர்கள்  மூன்றாம் நிலை உறவுகள்.

நான் என்ற நிலையிலிருந்து வேறுபட்டு நிற்பது தான் உறவு என்ப
தை இங்கு  குறிப்பிடவேண்டியது அவசியமான  ஒன்று.  நான் என்பது பிரிக்க முடியாத தன்மையது  அது சிதைக்கும்பொழுது  அல்லது அது சிதைக்கப் படும் பொழுது அது வேறுபட்ட அல்லது மாறுபாடானஇன்னொரு நிலையை எய்துகின்றது .

நான் என்பது சூக்ஷ்ம ஸ்தூல தொடர்புகளின்  கலவை.      ஆனாலும் நான் என்பதுவேறு.   எனது உடல் என்பது வேறு.   உறவுகள் உடலுக்கு மட்டுமே ஆத்மாவிற்கு அல்ல.

 அப்பா அம்மா உட்பட அடுத்த நிலை உறவுகள் எல்லாமே  அற்றுப்போகும் வாய்ப்புக்கு உட்பட்டது.   

உடலுக்கு உயிர் உள்ளபோதே. இந்த உறவினர்கள் உயிருடன் இருந்தாலும் கூட எந்த நேரத்திலும் இந்த  உறவுகள் அற்றுப்போகும்  வாய்ப்புகள் மிக மிக அதிகம்.  அதாவது  இந்த உறவுகள் எல்லாமே நிலையற்றவை தான்..

 இந்த உறவுகள் அற்றுப்போவதற்கு இந்த காலத்தில் முக்கிய காரணம் பணம். பணம் நிறைய வைத்திருப்பவன் அது  இல்லாத உறவினருக்கு கொடுப்பதில்லை.    இல்லாதவர்களும்  கூட பணம் சம்பந்தமான பிரச்சினைகள் வருகிறபொழுது உறவைவிட பணத்தையே அல்லது பணக்காரனையே பெரிதாக மதிக்கின்றனர்.  உறவுகள் முறிக்கின்றன; உறவுகள் முறிகின்றன .  

உறவை விட பணம் தான் அவர்களுக்கு பெரிது என்று இரு சாராருமே ஒருவரை மற்றவர்  குற்றம் சொல்லிக்கொள்வார்கள்.  ஆனால் இருசாராருமே  உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை; பணத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பது தான் உண்மை. ஏதோ ஒரு சாரார் பணத்தைவிட உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தால் உறவுகள் முறிந்து இருக்காது.    ஆனால் உறவுகள் முறிந்து விட்டன.   ஏன்?   
இதில் வியப்பதற்கு ஏதுமில்லை .  உறவுகள் வெறும் உடல் சம்பந்தப் பட்டவையே,  ஆத்மா சம்பந்தப்பட்டதில்லை என்பது தான்  காரணம்;  வேறொன்றுமில்லை

இதற்கு அப்பாற்பட்ட உறவுகள், அதாவது உடன்பிறந்தோர் சந்ததி வழி உறவுகள்,  ரத்த சம்பந்தமற்ற கடைநிலை உறவுகள்.  இவர்களுடன்  உறவுகள் காலப்போக்கில் குறைந்து குறைந்து அற்றுப்போய் விடுகின்றன .சந்ததிகளுடன்   தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பங்கள் காலப்போக்கில் குறைந்து போவதால் நாமே அறியாதபடி அற்றுப்போகும் வாய்ப்புகள் தான் மிக மிக அதிகம்.

சமூகம் அங்கீகரித்த கணவன் மனைவி என்பது இடைநிலை உறவு. நேரடியான ரத்தசம்பந்தம் அற்றது.   இது கட்டாயத்தேவையால் ஏற்படுகிற ஒரு உறவு.  இது  பாலியல் ஈர்ப்ப்பின் அடிப்படையில்,  பிரபஞ்ச தத்துவ அடிப்படையில் அமைவது.   ஆனால் கணவன் மனைவி என்ற நிலையில் இருந்து அப்பா, அம்மா, மக்கள் என்றஎன்கிற அடுத்த நிலையை அடையும்போது இது முதல் நிலை உறவாக மாறுகிறது.

அங்கீகாரமற்ற ஆண் பெண் உடலுறவு என்பது தற்காலிக உறவு மட்டுமே. அது முதல்நிலை உறவாக மாறுவதில்லை.

இன்னும் பல நிலை உறவுகள் இருக்கின்றன.  நட்பு  நிலை உறவுகள். தொழில் (தொடர்பு) நிலை உறவுகள்.  இவை ஏதோ ஒரு காரணத்தின் அல்லது தேவையின் அடிப்படையில்  அமைபவை.  அதாவது எதிர் மறை சக்தியின் அடிப்படையில் அமைபவை.    இவை மிகவும் வலுவானவை.      அதே சமயத்தில் அந்த அளவுக்கு வலுவற்றவையும்  கூட.    தேவை அல்லது காரணம்  அடிபட்டு போகிற நிலையில் இவை வலு இழந்து போகும்.   

முதல் நிலை, இரண்டாம் நிலை மூன்றாம் நிலை உறவுகள் கூட ஒரு காரணத்தின் அல்லது தேவையின் அடிப்படையில் மிகவும் வலுப்பெறும் வாய்ப்புகளும் வாழ்க்கையில் மிக மிக அதிகம்.    அந்த காரணத்துக்கு பங்கம் ஏற்படுகிற நிலையில் முற்றிலும் அற்றுப்போகவும் வாய்ப்புகள் உண்டு.   இவற்றை எல்லாம் நம் வாழ்க்கை அனுபவங்களை அலசிப்பார்க்கும் பொழுது உணர இயலும்.

வாழ்க்கையும் உறவுகளும் ஒரு ரயில் பயணத்துக்கு ஒப்பானது.

உதாரணத்துக்கு  என்னை எடுத்துக் கொள்வோம்.  ஒரு ரயில் நிலையத்தில் நான் ஏறி ஒரு பெட்டியில் ஓர் இடத்தில அமர்கிறேன்.   யார் அருகில் அமர்கிறேனோ அவர்கள் எனது அப்பா அம்மா என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அவர்களுக்கு அடுத்தாற்  .போல் இருப்பவர்கள் எனது தாத்தா பாட்டிகள் என்று கொள்ளலாம். மேலும் பலர் பெற்றோர் வழி உறவினர்கள் அடுத்தடுத்து இருப்பார்கள். இவர்களில் யாரெல்லாமோ அவர்கள் இறங்க வேண்டிய ஒவ்வொரு இடங்களில் இறங்குவார்கள்.   இன்னும் பயணிகளில் சிலர் நம்மிடம் வந்து பழகுவார்கள்.   இவர்கள் நண்பர்கள் எனக் கொள்ளலாம்.   ஒவ்வொரு நிலையங்களில் இன்னும் ஒருசிலர் ஏறி நம் அருகில் அமர்வார்கள் அவர்கள் உடன் பிறந்தோர் என்று கொள்ளலாம்.

நான் என்னுடைய நெருக்கடியான இடத்தில இருந்து எழுந்து இன்னொருவர் அருகில் இருக்கும் காலி இடத்தில சென்று அமர்கிறேன் .  அவர் தான் என் மனைவி அல்லது கணவர்.  பின்னர் இன்னும் சிலர் எங்கள் அருகில் அமர்வார்கள்   இவர்கள் என் குழந்தைகள்.  பயணிகளில் யாரெல்லாமோ எந்தெந்த நிலையங்களிலோ இறங்கி போவார்கள்.   அவர்களில் நமது தாத்தா பாட்டிகள், அப்பா அம்மாக்கள், பிற உறவினர்கள் முதலானோர் இருப்பார்கள்.   அதனைப்பற்றி நாம் கவலைப்படுவதில்லை.  அதாவது பயணத்தில் பலரும் முன் அறிமுகம் இல்லாமல் வந்தவர்கள்  ஓவ்வொருவரும் அவரவர்கள் இறங்கவேண்டிய இடத்தில இறங்கிப் போகிறார்கள். நமக்கு பிறகு ஏறியவர்கள் கூட நாம் இறங்கும் முன்னரே இறங்கிப் போவார்கள்.  அதன் பிறகு  அவர்களில் பெரும்பாலோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை . அத்துடன் அவர்களை மறந்து விடுகிறோம்.  இது தான் இந்த வாழ்க்கையில் உறவுகளின் பிணைப்பு.

அவரவர்கள் ஒவ்வொரு காரணத்துக்காக இந்த ரயில் என்ற உலகத்துக்குள் வருகிறார்கள்.  அது முடிவடைந்தவுடன் அதில் இருந்து இறங்கிபோகிறார்கள். அவர்கள் வந்த காரணம் எதுவாக இருந்தாலும் நாம் அதனைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களையும் அத்துடன் மறந்து விடுகிறோம்.

அதே ரயிலில் அநேகம் பெட்டிகள்.  ஒவ்வொரு பெட்டியிலும் இதுபோன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.  இந்த உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் எங்கெல்லாமோ நமக்கு சம்பந்தமில்லாமல் பிறந்து வாழ்ந்து மடிகின்றனர்.

ஒவ்வொருவர் ஏறுவது ஒரு பிறப்புக்கு ஒக்கும்.   ஒவ்வொருவர் இறங்குவது ஒரு மரணத்துக்கு ஒக்கும்.

என் அருகில் அமர்ந்திருக்கின்ற ஒவ்வொருவரும் தனித்தனியே அவரவர் இடம் (நிலையம்) வரும்பொழுது இறங்கிபோகி றார்கள்.     நான் இறங்கவேண்டிய இடம் வரும்பொழுது நானும் தனியே இறங்கிப் போகிறேன்.   எதைப்பற்றியும் என் உடன் பயணம் செய்தவர்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

இது தான் இந்த பூவுலகத்தில் நம் உறவுகளில் நிலை.

ஆத்மா என்பது ஒரு நுட்ப அலைகளின் கட்டு/ கோப்பு. அதாவது ரேடியோ அலைகள்போல.  அது நிற்கும் (நிலைகொள்ளும்)இடத்திற்கு தக்கவாறு மாறுபட்டுக்கொண்டே இருக்கும். அதனால் உடலை விட்டு அகலும்போது அதற்கு உறவுகள் இல்லை. மனித உடலுக்கு மட்டுமே உறவுகள்; அவை உடலோடு அழிந்து விடுகின்றன 







ஞாயிறு, 19 ஜனவரி, 2020

" நான்" யார் - Brain and Self

மூளை - "நான்" - தொடர்பு 


நான் என்பது ஆத்மாவா!

"நான்" என்பது எது?

"நான்" என்பது மனம் புத்தி மூளை இம்மூன்றின் ஒருங்கிணைந்த இயக்கம்.

மனம் மாயை சம்பந்தப்பட்டது. புத்தியும் அப்படிப்பட்டதே.   ஆனால் மூளை பௌதிக சம்பந்தம் உடையது.  

நான் என்பது சூக்ஷ்ம ஸ்தூல தொடர்புகளின்  கலவை.  ஆனாலும் நான் என்பது பௌதிகத்திற்கு மட்டுமே சொந்தம்.   அதாவது தெளிவாக கூறினால் இந்த உடலுக்கு மட்டுமே சொந்தம்.   ஆத்மாவிற்க்கோ அல்லது மனத்திற்கோ சொந்தமல்ல.  அதனால் தான் என் ஆத்மா என் உடல் என்று சொல்கிறோம்.

உடல் அழியும்போது இந்த "நான்"- உம் அழிந்து போகிறது.

ஆத்மாவிற்கு தனி அடையாளம் கிடையாது.  உடலால் மட்டுமே அதற்கு அடையாளமும் அங்கீகாரமும் ஏற்படுகிறது.

உடல் இல்லையேல் "நான்" இல்லை.  ஒவ்வொரு நான் -க்கும் ஒவ்வொரு தனியான அடையாளம் உண்டு.  அதில் தலையாயது தான் பெயர்.   அடுத்தது தனித்துவம் மற்றும் புகழ்  அல்லது இகழ்ச்சி.  இது உடலாலும் அதன் இயக்கத்தாலும் கிடைப்பது. 

மனது அது எது?   அது நமது ஆத்மாவின் பிரதிநிதி.  அதனுடைய இரட்டை.  மனது அல்லது மனம் தனக்கு உதவுவதற்காக ஏற்பட்ட மூளையை கட்டுப்படுத்தி வழிநடத்து வதற்காக அமையப்பெற்றது.  

உடலையும் உயிரையும் கட்டுப்படுத்துவது மனம்.  புத்தியின் வாயிலாக மூளையை இயங்கச்செய்கிறது.  ஆகவே "நான்"- ம் அதன் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது; இயங்குகிறது. 

மனம் என்பது ஆன்மாவையும் உடலையும் சமநிலையில் சீக்ச்செய்யும் ஒரு ஒரு புள்ளி.   இந்த புள்ளிக்கு நிலையான இருப்பிடம் கிடையாது.  அது ஆத்மாவிற்குள்ளும் உடலுளுக்குள்ளும் மாறி மாறி சஞ்சரிக்கும்.  பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு கஷ்டங்கள் விரும்பியது அது ஆத்மாவிற்குள் போய் விடும்   மரணத்தை பார்க்கும்போது நோயாளிகளை பார்க்கும்போது அது ஆத்மாவிற்குள் போய்விடும்.   பணம் கையில் செழிப்பாக வரும்பொழுதும்  சந்தோஷமாக இருக்கும்பொழுதும்   அது உடலுக்குள் வந்துவிடும். இப்படி மனம் நொடிக்கு நொடி சஞ்சரித்துக்கொண்டு தன இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும்  

மனதிற்கும் புத்திக்கும் உடலில் உள்ள அடையாளம் மூளை. அது தான்  அவற்றின் இயக்கங்களுக்கு அடிப்படை ஆதாரம்.  

உடலில் "நான்" என்பதின் அடையாளம்  மூளை என்றால்  உடலில் பிரதானம் அது  மட்டுமே  என்றாகிறது.  அது தான் மனதையும் புத்தியையும் பிரதிநிதானம் செய்கிறது.   உடலில் மூளைதான் முக்கியம் என்று சொல்வதைவிட உடலில் மூளைதான் எல்லாம் என்று சொல்வதே உசிதமாக இருக்கும்.   

ஆகவே "நான்" என்பதன் பௌதிக அடையாளம் மூளை.

 உடலில் மூளை தான் எல்லாம்.  மூளை இல்லையேல் நான் இல்லை.  உடல் என்னுடையது.  அதாவது "நான்" என்கிற மூளைக்கு சொந்தம்.

அப்படியானால் உடலில் இருக்கும் பிற உறுப்புகள் எல்லாம் என்ன? ஏன் ?

உணவை உட்கொண்டு சிதைத்து உடலுக்கு தேவையான வகையில் பல சத்துக்களாக பிரித்துத்தாயார் செய்வதற்காக வயிறும் வாயும் குடல் முதலான உணவு மண்டல அவயவங்களும் அமைந்தன.   சத்துக்களை சேகரித்து தேவையான எல்லா இடங்களும் கொண்டு சேர்ப்பதற்காகவும் அந்தந்த இடங்களில் இருந்து அழுக்குகளை நீக்கி கொண்டு வருவதர்கா கவும்   இதயம் மற்றும் இரத்த நாளங்கள் முதலானவைகள்.   இந்த அழுக்கு கலந்த இரத்தத்திலிருந்து அழுக்கை  நீக்கி சுத்தப்படுத்துவதற்காக நுரையீரல் கிட்னி முதலானவைகள்.  இவற்றை எல்லாம் கட்டுப்படுத்தி சீராக செயல்படுத்தும் அதிகாரம் மூளைக்குத்தான்.

கைகால்கள் உணவு மண்டல இயக்கத்திற்கு உதவுவதற்காக ஏற்பட்டவை.  கால்கள்  உணவு இருக்குமிடம் தேடி இடம் விட்டு இடம் போவதற்காக.  கைகள் விரல்கள் அவற்றை சேகரித்து எடுப்பதற்காக.  உடலைத்தூக்கி நிறுத்துவதற்காக எலும்பு மண்டலம்.  உடலுக்கு பலம் சேர்ப்பதற்காக எலும்பைச்சுற்றிலும் தசைகள். உடலின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும்  தகவல் சேகரிப்பதற்கும்  அங்கெல்லாம் கட்டளைகளை அனுப்புவதற்கும் நரம்பு மண்டலம்.   

சுற்றிலும் பார்த்து சுற்றுப்புறங்களைப் அறிந்து  தேவையானவற்றை கை  கால்களின் உதவியுடன் சேகரிப்பதற்கும் ஆபத்துகளை உணர்ந்து உடலைப்  பாதுகாப்பதற்காகவும் ஒளியின் அம்சமான கண்கள்.



உடல் மொத்தமும் பூமியின் அம்சம், அடையாளம்.  ரத்தம் நீரின் அம்சம், அடையாளம்.    நுரையீரல்,  மூக்கு வாயுவின் அம்சம், அடையாளம் .

ஐந்தாவது பூதமான ஆகாயம் தான் நமது மனது.  எல்லையற்றது.

இப்படித்தான்  பஞ்ச பூதங்களும் நம் உடலில் அடக்கம். 

மூளையைப் பாதுகாப்பதற்காகவும், நிலைநிறுத்துவதற்காகவும் அதன் செயல்பாடுகளுக்கு உதவுவதாற்காகவும் அமையப்பெற்றவையே  உடலின் எல்லா பிற அவயவங்களும் 

உடலின் அணைத்து பாகங்களின்  ஒருங்கிணைப்பும் மூளையின் கட்டுப்பாட்டில் தான்.  ஆகவே உடலில் மூளையே தலையாயது.

உடலிற்கு சரி செய்யமுடியாத சேதம் ஏற்பட்டால் மூளையால் இயங்க இயலாது; அது அழிந்து விடும்.   மூளை சேதம் அடைந்தால்  உடலும் அழிந்துவிடும்.

மூளை அழியும்பொழுது அதுவரையில் மாயையாய் நிலைபெற்றிருந்த "நான்" அழிந்து விடுகிறது.  அதன் பிறகு "நான்" இல்லை என்று ஆகிறது. 

எஞ்சி நிற்பது ஆத்மா என்கிற சக்திக்கோப்பு மட்டுமே.  அது உருவாக்கிய உடல் அழிந்தபோது,  உடலெடுத்ததனால்  ஏற்பட்ட சில மேம்பட்ட அல்லது மேலும் மாசடைந்த மாற்றங்களுடன் அது மீண்டும் முன்னர் இருந்ததுபோல்   ஆகாயத்தில் நிலை கொண்டது.   

"நான்" என்பது மூளையும் அதைச்சார்ந்த உடலு ம்.  " நான்" என்பது நமது மனதில் ஏற்படும் ஒரு உணர்வு.   மனம் எண்ணங்களாக நம் உடலைச் சுற்றிப்பற்றி அமைந்திருக்கின்றது .

பொதுவாக நாம் உணர்வுகளால்  நம் உடலில் நிறைந்து இருக்கிறோம். உடல்,  உடலைப்பற்றிய மற்றும் உடலைச்சுற்றிய எண்ணங்கள், உடல் மற்றும் அதன் உறவுகள் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் ஆகியவைகளால் மனம் எப்போதும் நிறைந்து இருக்கும்.

அதாவது சாதாரணமாக நாம் மனதளவில் உடலாகவே இருப்போம்.  அதாவது சாதாரணமாக "நான்" என்பது மனதளவில் உடல்  இந்த உணர்வுதான் நம்மில் இருக்கும்.  காரணம் நாம் மூளையையும் உடலையும் பிரித்துப் பார்ப்பதில்லை.   மூளை தான் நம்மில் தலையாயது என்பதை நாம் உணர்வதில்லை.

நம்மில் நம் உணர்வில் இருக்கும் "நான்" மனதளவில் ஆத்மாவாக மாறும் அசாதாரணமான நிலையை அடைய வேண்டும்.  இதுதான் நாம்  இந்த உடலில் சிலகாலம் நின்றதன் நல்ல விளைவாக இருக்கவேண்டும்.  உடல் அழியும் நிலையில் நாம் இந்த நிலையை எய்தி இருக்கவேண்டும்.   இந்த நிலையை எய்திய ஆத்மா மீண்டும் உடலெடுப்பதில்லை.

நம்மில் பெரும்பாலானோருக்கு"நான்" உடல் தான் என்ற நிலையிலேயே மரணம் ஏற்படுகிறது .       அந்த "நான்" என்ற நிலையிலேயே அந்த ஆத்மா மீண்டும் உடலெடுக்கிறது. "நான்" உடல் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு  
"நான்" ஆத்மா என்னும் உணர்வு நிலையை எட்டும் முயற்சியைத் தொடர்வதற்காக.

இது எப்படி?   இன்னொரு பதிவில் விளக்கமாக சிந்தனைகளை ஓடவிடுவோம்.