மறு பிறவி உண்மையா? தூக்கம் கனவு உணர்த்துவது என்ன !
கனவு என்பது உண்மையின் மறுபுறம். அது ஒரு மாயை. கனவு எவ்வளவுக்கு மாயையோ அவ்வளவுக்கு வாழ்க்கையும் மாயை தான்.
வாழ்க்கையில் இதுவரையில் நடந்தவைகளை நினைத்துப் பாருங்கள். வாழ்க்கை எவ்வளவு மாயை என்பது புரியும். தற்போது நடப்பது மட்டுமே நிஜமாகத் தெரியும். இன்னும் சில தினங்களில் இந்த நிஜமும் மாயையாக மாறும். நீயின்றி நானில்லை என்று என்றோ சொன்னவர்களின் நம்முடனான இன்றைய உறவு எப்படி இருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள். வாழ்வின் மாயத்தன்மை புரியும்.
வாழ்க்கையின் மாயத்தன்மையை நாம் உணர்வதில்லை. அதனை நமக்கு உணர்த்துவதற்காகவே கனவுகள் வருகின்றன.
மரணம் நமது சக பயணி. இந்த உடல் உயிர் பெற்ற நாளிலிருந்து உடல், உயிர் மரணம் மூவரும் சக பயணிகள். ஒன்றாக பிறந்து ஒன்றாக வாழ்ந்து ஒன்றாகவே அழிகின்றன. நாம் அனைவரும் (உடலும் உயிருமாய்) மரணத்துடன் ஒன்றாகவே பயணித்துக் கொண்டிருக்கிறோம். எல்லா உயிரினங்களும் அப்படித்தான்.
மரணம் நம் கூடவே இருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் உணர்வது இல்லை. அதனை நமக்கு தொடர்ந்து உணர்த்துவதற்காகவே தூக்கம் நம் வாழ்வில் இடம் பெறுகிறது. தூக்கம் என்பது மரணத்தின் நிஜம்.
ஒரு பகல் முடிவடைகிறது. இரவு வருகிறது. அடுத்து வருவது தூக்கம். நாம் தூங்கியவுடன் தூக்கத்திற்குள் ஒரு அஞ்ஞான உலகில் புகுகிறோம். கனவு உண்டாகிறது. கனவு கலைந்து, தூக்கம் கலைந்து பொழுது விடிகிறது. அடுத்த நாள் தொடங்குகிறது.
ஒரு பிறவியில் வாழ்க்கை, பின் மரணம், அதன் பின் நடந்து முடிவடைந்த வாழ்க்கையை எடைபோடும் இடைப்பட்ட காலம். பிறகு அடுத்த பிறவி. இப்படி ஒரு மனிதப் பிறவியுள் நடக்கும் நிகழ்வுகளுக்கு இணையான நிகழ்வுகள் ஆத்மாவின் பயணத்தில் வேறொரு பரிமாணத்தில் நிகழ்கின்றனவா?
மரணத்திற்குப் பின் இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர்த்தும் தோற்றம் தான் கனவு.
நிஜ வாழ்வில் நமது எண்ணங்கள், நடவடிக்கைகள் இவற்றின் பிரதிபலிப் பாகவே நமது கனவுகள் அமைகின்றன. அது போலவே இந்த பிறவியில் இவ்வுலகில் நமது நடவடிக்கைகள் எண்ணங்கள் இவற்றின் பிரதிபலிப்பாகவே நமது அடுத்த பிறவி அமைகிறது.
பகல் என்பது ஒரு பிறவி வாழ்க்கை. தூக்கம் என்பது மரணம். கனவு என்பது மரணத்திற்குப்பின் அஞ்ஞான வாழ்க்கை : பொழுது விடிதல் என்பது மீண்டும் உடலெடுப்பது. அடுத்த நாள் என்பது அடுத்த பிறவி வாழ்க்கை..
உடல் அழிந்து ஒரு மனித வாழ்வில் உண்மையாக ஏற்படும் மரணம் எதைக் காட்டுகிறது ? ஆத்மாவிற்கு உடலெடுப்பதிருந்து முக்தி கிடைக்கும் என்பதை சூசகமாகக் காட்டுகிறது.
உயிருக்கு பகல், இரவு, தூக்கம், கனவு, விடிவு, ஒரு நாள் முடிந்து மறுநாள் வருகிறது பலப்பல நாட்களுக்குப் பின் மரணம் வருகின்றது.
உயிருக்கு பல நாள் வாழ்கைக்குப் பின்னர் அழிவு/மரணம். ஆத்மாவுக்கு பல பிறவிகளுக்குப் பின்னர் முக்தி.
உயிருக்கு பகலில் உணர்வு நிலையும் இரவில் தூக்க நிலையும் தூக்கத்தில் சொப்பன நிலையும் தூக்கத்திலிருந்து விழிப்பு நிலையும் மாறி மாறி நடைபெற்று முடிவில் மரணம் ஏற்படுகிறது . உயிருக்கு முக்தி கிடைக்கிறது,
உயிருக்கு ஒரு நாள் என்பது ஆத்மாவிற்கு ஒரு பிறவி/வாழ்க்கைக்கு இணையானது. ஒரு மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஆத்ம பயணத்தில் ஒரு பரிணாம இணை அமைகிறது. உயிருக்கு தூக்கம் என்பது ஆத்மாவிற்கு ஒரு பிறவியின் முடிவு. அதாவது அந்த பிறவியின் மரணம். கனவு என்பது நடந்து முடிந்த பிறவியின் நடவடிக்கைகளின் பலனை அலசி அடுத்த பிறவியை எதிர்நோக்கி காத்திருக்கும் காலம். பொழுது விடிவு என்பது அடுத்த பிறப்பு. அடுத்த நாள் என்பது அடுத்த பிறவியில் தொடரும் வாழ்க்கை. உயிருக்கு பலப்பல நாட்கள் என்பது ஆத்மாவிற்கு பலப்பல பிறவிகள். உயிருக்கு மரணம் என்பது ஆத்மாவிற்கு முக்தி, மோக்ஷம் அல்லது
வீ டுபேறு
ஒரு மனிதப் பிறவியில் ஒரு உயிருக்கு ஏற்படும் நிகழ்வுகளுக்கு இணையாக ஆத்மாவிற்கு ஏற்படும் நிகழ்வுகளும் அமைகின்றன.
அண்டம் எனப்படும் சூரிய குடும்பத்தின் அதே அமைப்பில் நிலை கொள்ளும் பிரமாண்டம் (galaxy ) என்பது அண்டத்தின் அடுத்த பரிமாணம் . அது போல உயிரின் அடுத்த பரிமாணம் ஆத்மா. உயிரின் ஒருபகல், ஒருஇரவு, தூக்கம், மறுநாள் என்பது ஆத்மாவின் ஒரு பிறவி மரணம் மறு பிறவி என்று அமைகிறது.
ஒன்றிற்கொன்று இணையான அமைப்புகளே இந்த பிரபஞ்சத்தில் அமைந்திருக்கின்றன.
நம் வாழ்வின் புதிர்களுக்கான விடைகள் இந்த பிரபஞ்சத்திலேயே, நம் உணர்வுகளுக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன. நேரான சிந்தனை நேரான வழியைக்காட்டும். உணர்வுகள் வளரும். விடைகள் நமக்குள்ளிருந்தே நமக்கு கிடைக்கும். எங்கும் தேடி அலையவேண்டியதில்லை.
நல்லதையே நினைப்போம். நன்மையையே செய்வோம். உறவுகளை மதிப்போம். உடலால் வருந்தினாலும் மனதில் ஆனந்தம் பெறுவோம். ஆனந்தம் நம்மிடம் தான் இருக்கிறது. எங்கும் தேடவேண்டாம். யாரும் நமக்கு சந்தோசம் தரமாட்டார்கள். நமது சந்தோசத்தை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். சந்தோசம் என்பது ஒரு மன நிலை. இந்த மனநிலையை நாம் பயிற்சியினால் அடையலாம். இதற்கு நம் மனதை உறுதியான தீர்மானத்துடன் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தூக்கத்தின் பின் கனவு. விழிப்பிற்கு முன்னர் ஒரு காத்திருப்பு. பின்னர் மறுநாள் காலை விழிப்பு.
மரணத்திற்குப்பின் இனம் புரியாத ஒரு அஞ்ஞான வாழ்க்கை. அடுத்த பிறவி எடுப்பதற்கான ஆற்றலை வளர்க்கும் ஒரு காத்திருப்பு. பின்னர் அடுத்த ஜென்மம் ஆரம்பம்.
கனவுகள் அற்ற தூக்கம் நிம்மதியானதாக, அமைதியானதாக சலனமின்றி அமையும். அதனால் தூக்கம் நாம் அறியாமலேயே கடந்து போகும். புத்துணர்வுடன் உற்சாகத்துடன் அடுத்த நாள் தொடங்கும்.
அழுத்தம், இறுக்கம், துக்கம், பதற்றம் இல்லாத தெளிந்த மனம் கனவுகள் இல்லாத நல்ல தூக்கத்தை தரும். அது போல அழுத்தம் இறுக்கம் துக்கம் பதற்றம் இல்லாத தெளிந்த நன்மைகளையே செய்து நன்மையையே நாடும் வாழ்வு பிரபஞ்சத்தின் பரந்த ஆகாய வெளியில் நிம்மதியான ஒரு காத்திருப்பையும் தொடர்ந்து அதிகரித்த ஆற்றலுடன் நன்மை நிறைந்த அடுத்த பிறவியைத் தரும் என்று நம்புவோம்.
நல்லதையே நினைப்போம். நன்மையையே செய்வோம். பேதங்கள் இல்லாமல் உறவுகளை மதிப்போம். உடலால் வருந்தினாலும் உள்ளத்தில் ஆனந்தம் பெறுவோம். ஆனந்தம் நம்மிடம் தான் இருக்கிறது. எங்கும் தேடவேண்டாம். யாரும் நமக்கு சந்தோசம் தரமாட்டார்கள். நமது சந்தோஷத்தை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கு நம் மனதை பக்குவப படுத்திக்க கொள்ளவேண்டும்.