ஞாயிறு, 18 நவம்பர், 2018

மனம், எண்ணங்கள், மனதின் வேறுபட்ட நிலைகள், ஆன்மா, ஆன்மீகம், பிறவி, தெய்வங்கள்

ஆன்மீகம் என்பது என்ன.?

பலரும் பலவிதமாக விளக்குகிறார்கள்.ஒவ்வொருவரும் மாறுபட்ட விளக்கங்களை தருகிறார்கள்.  எந்த விஷயத்தையும் இது சரிதானா என்று எண்ணிப்பார்த்து முடிவெடுப்பவர்கள் குழப்பத்துக்கே ஆளாகிறார்கள்.

இதறகு சரியான விளக்கம் என்ன .

இந்த உலகத்தில் மனோ தத்துவம் முதன்முதலில் உணரப்பட்டது இந்தியாவில் தான்.   அந்த அடிப்படையிலேயே ஆதி காலம் முதலாக வாழ்க்கை முறை அமைந்து இருந்தது.

மனித உடல் ஒரு இயந்திரமா?  ஆம்.

அது உள்ளிருந்தே இயக்கப்படுகிற ஒரு இயந்திரம் தான்.  எல்லா உயரின ங்களும் அப்படித்தான்.  எல்லாவற்றிற்கும் உள்ளிலிருந்தே இயக்கப்படும் இயக்கம் இருக்கிறது.

இந்த இயக்கம் எப்படி நடக்கிறது.

மனிதனை பொறுத்தவரையில் மனம் தான் உடலை இயக்குகிறது.   உடலின் நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது.   எல்லோருடைய மனமும் ஒரே மாதிரி இயங்குவதில்லை.   ஒவ்வொருவருடைய மனமும் ஒவ்வொரு விதமாக வித்தியாசமான முறையில் இயங்குகிறது.   என்ன காரணம்?

உடலை இயக்கும் மனதை  இயக்குவது யார் அல்லது எது? 

நமது இயக்கத்தை கவனித்தால் ஒன்றை  புரிந்து கொள்ளலாம்.  எண்ணங்களே மனதை இயக்குகின்றன என்பதே அது.

எண்ணங்கள் எப்படிப்பட்டவை ?

எண்ணங்கள் இரட்டை தன்மை உடையவை.    ஒரே விஷயத்தைப்பற்றி இரண்டு விதமான சிந்தனைகள் தான் எப்பொழுதும் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.   ஒன்று உடல் அல்லது பொருள் சம்பந்தப்பட்டது.   இன்னொன்று சரி, தவறு பார்க்கும் சரியான சிந்தனை.   இது பொருட் தன்மைக்கு அப்பாற்பட்டது.   உடல் சம்பந்தப்பட்ட சிந்தனை எப்பொழுதும் பொருள் தழுவியதாகவே இருக்கும்.   இன்னொரு சிந்தனை பொருள் அல்லாது உடல் சம்பந்தப்படாதது.  அதற்கு அப்பாற்பட்டது.    அல்லது அதற்கு அதீதமானது என்று சொல்லலாம்.

இரண்டு விதமான எண்ணங்களை தோற்றுவிக்கும் மனமும் இரட்டைத் தன்மையது தான்.    ஒன்று உடல் அல்லது பொருள் அல்லது உடல் இன்பம் சம்பந்தப்பட்டு இயங்கும் மனம்.  இது உள் மனம்.     வேறொன்று இவற்றிற்கு அப்பாற்பட்ட சிந்தனைத் தன்மை  உடையது.    இது அதனுள் இருக்கும் பதிவுகளின் அடிப்படையில் இயங்குகிறது.   இது வெளி அல்லது ஆழ் மனம்.      ஒரு மனம் உடலுக்குள் இருந்து இயங்குகிறது.   மற்றொன்று உடலுக்கு வெளியில் இருந்து இயங்குகிறது. 

உடலும் உள்மனமும் ஒருமுகமாக இணைந்து இயங்குவது யோகத்தின் முதல்படி.   ஆழ் (வெளி) மனமும் உள் மனமும் ஒருமுகமாக இணைந்து இயங்குவது யோகத்தின் அடுத்த நிலை.   இன்றைய காலத்தில் யோகம் என்பது ஆங்கிலப்  படுத்தப்பட்டு  யோகா என்றும் யோகா என்பது உடற்பயிற்சி  என்றும் பரவலாக அறியப்படுகிறது.

உண்மையில் யோகம் என்பது இணக்கம் என்று பொருள்படும்.   அதாவது அனைத்தும் ஒருங்கிணைந்த நிலை.

உள்  மனம் ஆனது வெளி மனதிற்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டும்.   காரணம் உள்மனம் உடலுடன் அழியக்கூடியது.   வெளி அல்லது ஆழ் மனம் பிரபஞ்ச சம்பந்தமுடையது.   அதற்கும் அதன் பதிவுகளுக்கும்  அழிவில்லை.   அது எல்லாப் பிறவிகளிலும் தொடரும்.

அதனைத்தான் நாம் ஆன்மா என்கிறோம்.

இந்த உலகத்தில் எல்லாமே இரட்டை நிலை பெற்றிருக்கின்றன.   இரவு-பகல், ஆண் -பெண்,  இருட்டு-வெளிச்சம்.    இது போல மனதிற்கும் இரட்டைத் தன்மை இருக்கவேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடு தான் ஆன்மா  என்ற மனதின் இன்னொரு நிலை அல்லது பகுதி..   இந்த அறிவு தான் மனோதத்துவத்தின் அடிப்படை.   இதற்கு வித்திட்டதே இந்தியா தான்.

இது தான் ஆன்மீகத்தின் ஆரம்பம் .  ஆன்மாவைப்பற்றிய அறிவே ஆன்மீகம் என்பது.   இனி நாம் உள் மனதை மனம் என்றும் ஆழ் மனதை ஆன்மா என்றும் குறிப்பிடுவோம்.

நம் மனம் என்பது உடல் சம்பந்தப்பட்டது.   அது தன வழியே போனால் உடல் சுகத்துக்கான வழிகளையே தேடும்.   வாய்க்கு ருசி, உடலுக்கு இன்பம், அதற்கு தேவையான பொருள், அதைத் தேடும் வழிகள் ஆகிய வழிகளிலூடேயே அது பயணிக்கும்.   இந்த பயணத்தின் பலன் இந்த உடலுக்கு கிடைக்கவேண்டும்.    இந்த அளவிலேயே நம் மனதின் போக்கு அமையும்.

தானாக இயங்கினாலும் இந்த மனம் ஆழ் மனமான ஆன்மாவுக்கு கட்டுப்பட்டது தான்.     மனதின் செயல் பாடுகள் அனைத்தும் ஆன்மாவில் பதிவாகிக்கொண்டிருக்கும்.  ஆன்மா உடலுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளை உடையது.   அதனுள் பதிவாகும் செயல்பாடுகளை ஆன்மா தன ஆய்வுக்கு உட்படுத்தும்.

மனம் உடல் சம்பந்தப்பட்டது மாதிரி ஆன்மா பிரபஞ்சம் சம்பந்தப்பட்டது.  அதன் செயல்பாடுகள் பிரபஞ்ச நிலையிலேயே இருக்கும். 

பிரபஞ்சத்துக்கும்  ஆன்மா என்ற ஆற்றலுக்குமிடையிலான வேறுபாடு தான் என்ன? 

பிரபஞ்சம் என்பது பரிபூரணமான ஆற்றல்,   ஆன்மா என்பது குறையுள்ள , நிறைவற்ற, பலம் குறைந்த ஆற்றல். 

ஆன்மா பூரணத்துவம் அடைவதற் காகவே  ஒரு உடலெடுக்கிறது.  ஆன்மா  தனது  ஆற்றல் அதிகரிப்புக்குத் தேவையான உணர்வுகளை நம் மனதிற்கு தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கும்.

நம் மனதிற்கு பலவிதமான நிலைகள் இருக்கின்றன.   மனதின் அதிர்வுகளின் அளவிற்கேற்ப அதன் நிலைகள் மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.   அதிர்வுகள் மிக குறைந்து இருக்கும்போதுஉடல் தூக்கத்துக்கு உட்படும்.  மனம் ஒரு குறிப்பிட்ட  அலை வரிசை அதிர்வுகளின் இருக்கும்போது மட்டுமே ஆன்மாவின் உணர்வுகள் நம் மனதில் பதியும்.   இந்த நிலையில் ஏற்கப்படும் உணர்வுகள் அடிப்படையில் மனம் செயல்படும்போது தான்  அது நேரான நேர்மறையான வழியில் செயல்படும்.   இந்த செயல்பாடு உடலின் சுகத்தையோ பந்த பாசங்களையோ வளர்க்காது.   அதனால் பொருளாதார வளர்ச்சியின் வழியே செல்லாது.

மனதின் அதிர்வுகள் கூடிய அலைவரிசைகளில் அமைந்து  அதிர்வுகள்  அதிகமாகும்போது நமது மனம் எப்பொழுதும் பொருளாதார வளர்ச்சிக்கான சிந்தனைகளில் ஈடுபடும்.. 

இந்த சமயங்களில் நம் மனம் ஆன்மாவின் தொடர்பிலிருந்து  விடுபட்டு வேறுபட்ட நிலையில் செயல்படும்.   இந்த எதிர்மறையான செயல்பாடுகள் ஆன்மாவில் பதிவாகும்போது,  அங்கு இருக்கும் நேர்மறை ஆற்றலுடன் சேரும்போது, நேர்மறை ஆற்றல் குறைந்துகொண்டே வரும். 

இதன் விளைவாக  உடல் அழியும்போதுஆன்மாவின் ஆற்றல் மிகவும் குறைந்து இருந்தால்  மீண்டும்  ஒரு உடல் எடுக்கும் சக்தி அதற்கு இருப்பதில்லை.   ஆன்மாவில் நேர்மறை ஆற்றல் குறைந்த பக்ஷ அளவையும் விட குறையும்போது அது பிரபஞ்ச வெளியில் நிலை கொள்கிறது.   இந்த நிலையில் தான் ஆன்மா ஆவி என்று அழைக்கப்படுகிறது.    பிரபஞ்ச வெளியில் அது கொஞ்சம் கொஞ்சமாக சில பல காலங்களாக தனது ஆற்றலை வளர்த்து மீண்டும் உடலெடுக்கிறது.

பிரபஞ்ச வெளியில் ஆன்மா தனக்கென்று ஒரு உடலும் மனமும் அற்ற நிலையில் எப்படி தன சக்தியை வளர்க்கிறது ?

உடலுடன் வாழும் ஏதாவது ஒரு ஆன்மாவின் சக்தி மண்டலத்தில் இதற்காக தஞ்சம் புகுகிறது.  சில சமயங்களில் நமது சக்தி மண்டலத்தில் இது போன்ற பல ஆன்மாக்கள் தஞ்சம் பெற்று நிலை கொள்கின்றன.  சில சந்தர்ப்பங்களில்
நம்மில் சிலர் மனதளவில் இரட்டை ஆளுமைக்கு உட்படுவதற்கு இது தான் காரணம்.   எதாவது காரணத்தால் உள்மனம் தளரும்பொழுது சக்தி மண்டலத்தில் இருப்பவைகளில் பலமுள்ள ஓர் ஆன்மா அந்த மனதை மேலாண்மை கொள்கிறது.   தளரும் மனம் மீண்டும் வலுவடையும் போது அது பின் வாங்குகிறது.   நம் சக்தி மண்டலத்தில் நிலை கொள்ளும் ஆவிகள் ஒட்டுண்ணிகள் மாதிரி.   அண்டி இருந்து சக்தியை உறுஞ்சுவன.


மனம் முற்றிலும் ஆன்மாவின் கட்டுக்குள் வரும்போது,  இரண்டும் முற்றிலும் இணைந்து செயல்படும்போது, அதாவது நாம் யோக நிலையை அடையும்போது  ஆன்மாவில் எதிர்மறை சக்தி வெளியேறி  முற்றிலும் நேர்மறை சக்தி நிறையும்.    நேர்மறை சக்தி கூடுந்தோறும் ஆத்மாவின் எடை  குறையும்.   எடை குறையுந்தோறும் ஆன்மா பூமியிலிருந்து மேல் நோக்கி நகரத்தொடங்கும். நேர்மறை சக்தி அதிகம் பெறும்  தோறும் ஆன்மா
அந்த அளவிற்கு எடை குறையப்பெறும்.   இந்நிலையில்  உடலிலிருந்து வெளியேறும்  சுதந்திர ஆன்மாவானது பூமியின் ஈர்ப்பிலிருந்து விடுபட்டு  மேல்நோக்கி சென்று கொண்டே இருக்கும்.   ஆன்மா முற்றிலும் நேர்மறை சக்தியாகும் போது எடையே இல்லாத நிலையை அடையும்.   அப்போது பூமியின் ஈர்ப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டு பிரபஞ்சத்தில் ( அநேகமாக ஈதர் ஆக) இணையும்.   இதுவே முக்தி.

இப்படி முற்றிலும் நேர்மறை சக்தி பெற்று பூமியின் ஈர்ப்பு சக்திக்கு அப்பாற்பட்ட பிரபஞ்சத்தை   அடையப்பெற்ற ஆன்மாக்களே தெய்வங்கள் என்று நம்மிடையே அறியப்பெறுகிறார்கள்.   இவர்கள் நிலைகொள்ளும் பூமியின் ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட பிரபஞ்ச பகுதியையே நாம் விண்ணுலகம் என்று அழைக்கிறோம்.  இதுவே சமணக்  கோட்ப்பாடு.  இது தான் இன்றும் நம் பழக்கத்தில் இருந்து வருகிறது.     நாம் இறைவனையும் தெய்வத்தையும் வேறுபாடு தெரியாமல் குழப்பிக்கொண்டிருக்கிறோம்.    தெய்வங்கள் நம்மிடையே பிறந்து வளர்ந்து இறைத்தன்மையை அடைந்தவர்கள். இறைவன் பிண்ட, அண்ட , பிரம்மாண்டங்களுக்கு அப்பாற்பட்டவன்.   இதை நாம் உணர வேண்டும்.






வியாழன், 1 நவம்பர், 2018

பிண்டம், அண்டம், பிரமாண்டம் என்றால் என்ன? இவற்றுள் என்ன ஒற்றுமை ? இறைவனை எங்கே தேடுவது? Similarity between Matter, Universe and Galaxy, the presence of a God, How and where to find Him

பிரபஞ்சம் எவ்விதம் உருவானது?  நாம் எப்படி உடலெடுத்தோம்?

ஒரு ஆத்மா என்கிற சக்திக்கட்டுஅல்லது வீரியக்குவியல் (energy packet) ஒரு மனித உடலெடுக்க எண்ணுகிறது.  அது    ஒரு மனித  ஆத்மாவை    தேர்ந்தெடுத்து  அதனுள் அதாவது அந்த தேர்ந்தெடுத்த ஆத்மாவுக்குள் அதன் சக்தி மண்டலத்தில்   புகுந்து  அதன் உடலினுள் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தி ஒரு மனித விதையை  உருவாக்குகிறது.  வேறொரு உடலினுள்  விதையை  செலுத்துமாறு அந்த உடலைதூண்டுகிறது. அதன் பேரில் அவ்வுடல் வேறொரு உடலுடன் இதற்காக இணைந்துவிதையை அந்த உடலினுள் பீய்ச்சுகிறது.  வித்து மறு உடலின் கருவறைக்குள் சீறிப்பாய்கிறது.  மறு வுடலில் தன்னை ஒத்த நிலையில்  உருவான உப   வித்தான வேறொன்றுடன்  கலக்கிறது.    கற்பனைக்குஎட்டாத சக்தியடன்  இணைந்து ஒன்றுபட்டு கருவாகிறது.  ஒரு வளர்ந்து முதிர்ந்த உடலினுள் வேறொரு உடல் கருவாக உருவாகிற முறை இப்படித்தான்.

தன்னுள் உருவான கருவை சுமக்கும் உடலும் உடனே  இதை அறிவதில்லை . கருவும், தான் உருவான இடத்தையும்  அதனை சுமக்கும் உடலையும் அறியாமலேயே  உருவானது.  அது ஒரு செல் ஆக உருத்திரிகிறது. இந்த நிலையில் உடலெடுக்க முனைந்த அந்த ஆத்மாவானது அந்த கரு வளரும் (தாய்)  உடலின் சக்தி மண்டலத்தில் புகுந்து இருந்துகொண்டு செயலாற்றத் தொடங்குகிறது.  அதன் விளைவாக இணை கருவினுள் ஒரு உயிர் உருவாகிறது.  ஒரு செல் பல இணை செல்களாகவும், அவை இணைந்து பலப்பல நுண்ணுயிர்களாகவும் பெருகிவர அனைத்தையும் கோர்த்து அவற்றை  உட்கொள்ளும் அளவிற்கு உடலாக உருவாக்கி உடலை படிப்படியாக  விரிவடையச் செய்கிறது.   செயல் படுவதற்கு தேவையான உறுப்புகளையும் சாவதானமாக உருவாக்கி மேலும் உடல் விரிவடைகிறது.

இந்நிலையில் உடலெடுக்க முனையும் ஆத்மா தாயின் சக்தி மண்டலத்தில்  இருந்து இடம் பெயர்ந்து   அந்த வளரும் (குழந்தையின் )உடலில்  புகுந்து கொள்கிறது. தன பணியை மேலும் தொடர்கிறது.

அதில் ஒரு மூளையை உருவாக்குகிறது.  மூளையையும் அதன் செயல் பாட்டையும் கட்டுப்படுத்தி தன்  நோக்கத்தை நடைமுறைப் படுத்த தனக்கு நிகரானஇன்னொரு சக்தியாக மனது என்கிற  தன்  பிரதிநிதியை  உருவாக்கி தனக்கும் தன்னுடலுக்கும் இடையில் அமைக்கிறது.

உடல் முழுமை அடைந்து தேவையான அளவிற்கு பூரண வளர்ச்சி பெற்று இயங்கத்  தொடங்கியவுடன் தான் உருவான இடத்தில் இருந்து வெளியேறு கிறது.

இது தான் ஒரு மனிதன் என்கிற பிண்டம் உருவாகும்  விதம்

பற்பல ஜீவிகளாகிய பிண்டங்களும் இவ்விதமாகவே உடலெடுக்கின்றன.

இந்த மனித உடலில் மூளை ஆகாயம்.  கண்கள் நெருப்பு.  கை  கால்கள் காற்று.  தசைகள் எலும்புகள் பூமி.  இரத்தம், நிணம் இவை நீர்.   இவை உடலின் பஞ்ச பூத அம்சங்கள். 

கோடிக்கணக்கான எண்ணிக்கையில் விதவிதமான (நுண்) ஜீவிகள் இந்த உடலினுள் வாழ்கின்றன.  இவைகள் எல்லாம் இந்த உடலை பாதுகாக்கின்றன.   அதன் இயக்கங்களுக்கு உதவுகின்றன.  இவற்றிற்கும் பிறப்பும் மரணமும் உண்டு.  நம் உடலினுள் தினந்தோறும் பிறப்புகளும் மரணங்களும் நடைபெறுகின்றன.   பல ஜீவிகளுக்கும் பலவிதமான ஆயுட் காலங்கள்.  

பிண்டத்திற்குள் ஒரு மினி அண்டம் செயல் படுகிறது.

நமக்கு நூறு வருடங்கள் என்றால் நம்மில் வாழும் ஜீவிகளுக்கு  ஒரு சில மணிக்கூறுகள் அல்லது நாட்கள் தான் ஆயுள்.  ஆனால் அவைகளை பொறுத்த வரையில் நமக்கு நூறு வருடங்கள் போலவே அவர்கள் உணர்வளவில் ஆயுள் அவ்வளவுக்கு நீண்டவைதான்.   இந்த உடலினுள் வாழும் எந்த ஜீவியையும் நாம் அறிவதில்லை.  அவர்களில் பிறப்பையும் இறப்பையும் உணர்வுகளையும் இன்ப துன்பங்களையும் நாம் அறிவதில்லை;  உணர்வதில்லை.  தங்களால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெரியதான ( நமது) உடலினுள்  தாம் இருப்பதை அவைகளும்  அறிவதில்லை.   தம்மை  அகப்படுத்திய உடல்  ஒரு பிரபஞ்சத்தில் பற்பல இன்பத்துன்பங்களை அனுபவித்து ஜீவனுடன் வாழும்  ஒரு இயங்கு சக்தியாக இருப்பதை அவை உணர்வதில்லை.  அந்த உடலின் ஆரோக்கியத்துக்கும், இயக்கத்துக்கும்  நிர்ணாயகமாக இருப்பதையும்  அதற்கான  அவைகளின் பங்கு என்ன என்பதையும் அவைகள் அறிய மாட்டா .  

 தன்னிச்சையாக இந்த இயக்கங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

இது தான் பிண்ட தத்துவம்.

பரவெளி மண்டலம்  அல்லது அண்டம் (galaxy )எப்படி உருவாகிறது?

பிரபஞ்சம் என்கிற பிரமாண்டத்தினுள் அண்டங்கள் உருவாகின்றன,   நிலை கொள்கின்றன,  அழிகின்றன.   அது போல அண்டத்தினுள்,  பிண்டங்கள் உருவாகின்றன,  நிலை கொள்கின்றன,  அழிகின்றன.

ஒரு பிண்டம் வழியாகவே இன்னொரு பிண்டம் உருவாகிறது. 

அது போலவே ஒரு அண்டம் மூலமாகவே இன்னொரு அண்டமும் உருவாகிறது.

அண்டத்தினுள்  அமைந்திருக்கும் ஆகாய வெளியில்  இனம் புரியாத தாக்கத்தால் வீரியத்துடன் ஈர்க்கப்பட்டு ஒரு துகள்கூட்டம்  ஒரு சுழி போன்ற குழியினுள் வந்து சீரிப் பாய்ந்து சேர்ந்து அகப்பட்டு பல மாற்றங்களுக்கு உட்பட்டு அந்தக்கரு உரு ஆகிறது.   மெதுவாக அது விரிவடையத் தொடங்கி தொடர்ந்து பல கோடிக்கணக்கான வருடங்களாக விரிவடைந்து ஆகாயமாக வளர்ந்து  பெரியதாகி தனி அண்டமாக மாறி இயங்க தொடங்குகிறது.    இதற்கான எண்ணமும் தூண்டுதலும் இதற்கு அப்பாற்பட்ட நிலையான பிரமாண்டத்தில்  உருவாகிறது.   இனம் புரியாத தாக்கத்தை ஏற்படுத்துவதும் பிரமாண்டமே.    அந்த சுழி அல்லது குழியே கருவறை.  அங்கு தான் நட்சத்திரங்களும் கிரகங்களும் பிற பூதங்களும் உருவாகின்றன.

இதனை இப்படியும் விளக்கலாம்:

பரம ஆத்மா (பிரம்மாண்டத்தில் புதைந்துகிடக்கும் சக்தி ) ஒரு கருவறை ஏற்படுத்தி ஒரு ஆகாயத்தை (உயிரை ) உருவாக்குகிறது.    நட்சத்திரங்களை (மூளையை) யும்,  சந்திரன் (மனது),  பூமி (உடல் )உட்பட்ட  கிரகங்களையும் உருவாக்குகிறது.   அவற்றை பயன்படுத்தி காற்று, நெருப்பு, நீர் என்ற பிற பூதங்களையும் உருவாக்குகிறது.    சக்தியை உபயோகித்து பூதங்களின் இயக்கங்களில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி கட்டுப்படுத்துகிறது.

தொடர்ந்து  நட்சத்திர மண்டலத்தில் ஒன்றோ அதற்கு மேற்பட்ட  கிரகங்களிலோ (நாம் அறியோம்) எத்தனையோ கோடிக்கணக்கான எண்ணிக்கையில் விதவிதமான ஜீவிகள் உருவாக்கப்படுகின்றன.  ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான ஆயுள்;   அமைப்புமுறை.   நமக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்றால் அவற்றிற்கு பல கோடிக்கணக்கான வருடங்கள்.   பிறப்பும் இறப்பும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே                  இருக்கின்றன.        இவை எல்லாமே தன்னிச்சையாக நடந்துகொண்டே இருக்கின்றன.

நாம் உட்பட்ட எந்த ஜீவியும் தன்னை உள்ளடக்கி இருக்கும் அண்டத்தின் முழுஅமைப்பை  அறிவதில்லை;  உணருவதில்லை.    அதுபோலவே அண்டம்  தன்னுள் வாழும் ஜீவிகளைப்பற்றி தனித்தனியாக எந்த அறிவையும் உணர்வையும் கவனிப்பதில்லை.   அது வகுத்த நியதிப்படி எல்லாம் இயங்கி கொண்டே இருக்கின்றன.   அவ்வளவு தான்.

இது தான்  அண்டத்தின் தத்துவம்.

ஒரு அண்டத்திற்குள் பல நட்சத்திர வெளிகளும் அதன் சுற்றும் பிறவும்   உருவாவதும் இம்முறையிலான உப தத்துவத்தின் அடிப்படையில் தான்..

அண்ட தத்துவமும்  பிண்ட (ஜீவ ) தத்துவமும்   உருவான விதத்தாலும்,  வளர்ச்சி பெற்ற முறையாலும், இயக்கத்தாலும் அடிப்படையில் ஒன்றை யொன்று  ஒத்தவை என்பது தெளிவு.

இது தான் ஆத்மா பரமாத்மா தத்துவத்தின்  அடிப்படை.  பிண்டத்தின் அடிப்படை சக்தி ஆத்மா.   அண்டத்தின்அடிப்படை சக்தி பரமாத்மா..

 பரமாத்மா வகுத்த நியதிப்படி அண்டமும்   ஆத்மா வகுத்த நியதிப்படி நாமும் (பிற பிண்டங்களும்) இயங்கி வருகிறோம்.    ஒவ்வொரு பிண்டமும்   இந்த அண்டம்  இயங்கவும்  ஆரோக்கியமாக  நிலைபெறவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

 இதே அடிப்படையில் பிரமாண்டமும் , அதற்கு மேலாக  பரப்பிரம்மாண்டமும் அதற்கும் அப்பால் இன்னும் பலவும் ஒன்றைவிட ஒன்று பிரமாண்டமாய் பெரிதாக உருவாகி நிலைபெற்று அழிகின்ற எத்தனையோஅண்டாண்டங்கள் இருக்கலாம் எனறு  சிந்திப்பதில்  தவறு இருக்க முடியாது அல்லவா?

இவ்வளவு அமைப்புகளுக்கும் இடையில்,  ஒப்பிடும்பொழுது ஒன்றுமே இல்லாத,  கணக்கிலேயே  எடுத்துக்கொள்ள இயலாத negligible அளவுக்குள்  அடங்கிப்போகும் ஒரு மனித உருவில் ஒரு இறைவனை உருவகப்படுத்தி தேடினால் எங்கே தேடிக் காணமுடியும்? 

இத்தனைக்குமிடையில் ஒன்றுமில்லாமல் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் அல்லது ஒப்பிடுகையில் காணாமல் போகும் மனித வடிவில் ஒரு இறைவன் இருக்க முடியுமா?

பலஜீவிகள் தத்துவங்கள் ஒருங்கிணைப்பால் நாம், சில வரம்புகளுக்கு உட்பட்டு, ஒரு தனி அமைப்பாக  சுதந்திரமாக இயங்கி கொண்டிருக்கிறோம். இது போல சில பல அண்டங்கள் பிரம்மாண்டங்கள் ஒருங்கிணைந்த   ஒரு சுதந்திரமாக சுயமாக  தனித்து   இயங்குகிற,  நம்மைவிட உடல் பலத்திலும் மன, அறிவு பலத்திலும் எத்தனையோ மடங்கு உயர்ந்த ஒரு தனி அமைப்பு இருக்கலாம்.    அதற்கு அடுத்த அடுக்கிலும் அதனைவிட பல மடங்கு உயர்ந்த வேறொரு தனி அமைப்பு இருக்கலாம்.    இந்த சுற்று மென்மேலும் அடுக்கடுக்காக வளர்ந்துகொண்டே போகலாம்.     இந்த ஒவ்வொரு தனி அமைப்பும் நம்மை விட பல மடங்கு புத்தி சக்திகளில் மிக மிக உன்னத நிலையில் இருக்கலாம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலே எல்லா அடுக்குகளுக்கும் மேலாக இதற்கெல்லாம்  ஆரம்பம் குறிக்கும் ஒரு அமைப்பு நிச்சயம் இருக்கும் அல்லவா?   இதைத்தான் ஒருவேளை திருவள்ளுவர் ஆதிபகவன் என்று குறிப்பிட்டிருப்பாரோ ?

இத்தனைக்கும் இடையில் மிக அடித்தளத்தில் இருக்கும் நாம்,  நம்மை மிக உயர்வாக நினைத்து அகங்காரம் கொள்வதும்,  இறைவன் என்கிற ஒரு உன்னத நிலை பெற்ற அமைப்பை நம் கற்பனையில் நம்முடைய மிக மிக மிகச் சிறிய நிலைக்கு இறக்கி கொண்டு வருவதும்  முறையா என்பது நமது சிந்தனைக்கு உட்படுத்தி பார்க்கவேண்டிய விஷயம்.

அப்படியானால் நாம் இறைவனை எங்கே தேடுவது?    எந்த வடிவில்?    எந்த உருவில்?   எந்த அளவில்? 

எல்லாமே தன்னிச்சையாக,  எதுவும் எதைப்பற்றியும் கவலைப்படாமல், எதுவும் எதிலும் குறுக்கிடாமல் ஒரு நியதிப்படி இயங்குகிற  ஏதோ (நாம்) அறியாத ஒன்றினுள் வாழும் நாம்,  அந்த நியதிக்கு உட்பட்டு வாழ்வதை உணர்ந்த பின்னரும்  ஒரு தேடலில் ஈடுபட வேண்டுமா? அது தேவைதானா?

நாம் கடைபிடிக்கும் இறை தத்துவமும்,  அதன் பெயரில் நாம் ஏற்படுத்தும் போட்டிகளும் வேற்றுமைகளும் சண்டை சச்சரவுகளும்  வெறித்தனமான நிலைப்பாடுகளும்  நியாயமானவை தானா ?   நம் உள்ளுணர்வுக்கு இடம் கொடுத்து உணர்ச்சி வசப்படாமல் சிந்திப்போமா?

எந்த தர்க்கங்களாலும் வாதங்களாலும் நாம் எந்த  முடிவையும் எட்டப் போவதில்லை.    வாதங்களும் தர்க்களும் எந்த முடிவையும் தரமாட்டாமால் நீண்டுபோகும்.   சொல் திறமையும் மேலாண்மையும் வெற்றி பெரும். உண்மை வெற்றி பெறாது.   உணர்ச்சிகளுக்கு முன்னால் உள் உணர்வு கட்டுப்பட்டுவிடும்.   உண்மை பின்வாங்கிவிடும்.

முடிவை அவரவர் சிந்தனைக்கும் உள்ளுணர்வுக்கும்  விட்டு விடுவோம் .  எந்த முடிவையும் யாரிடமும் திணிக்க முயல்வது தவறு.  ஒவ்வொரு வருக்கும் சிந்திக்கும் சக்தி இருக்கிறது.    விருப்பையோ, வெறுப்பையோ முன்விதியாக  அடிப்படையாக்காமல் சிந்திபவர்களுக்கு  சரியான முடிவு  கிடைக்கும்.   இவ்விதம் எடுக்கும் எந்த முடிவும் யாரையும் எவ்விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. 

எல்லாமே எதையும் கண்டு கொள்ளாமல் பரமாத்மா வகுத்த நியதிப்படி நடந்துகொண்டே இருக்கும்.

பரமாத்மாவை தியானிப்போம்.   இது தான் பரம சத்தியம்.  நன்றி.